Aran Sei

கொரோனா – தப்லீகி ஜமாத்தை பழித்த பாஜகவும் ஊடகங்களும் மகா கும்பமேளா கூட்டம் பற்றி என்ன சொல்கின்றன?

image credit : thewire.in

கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து பார்க்கும் போது, இப்போதுதான் இந்தியா தற்போது மிகக் கடுமையான கொரோனா பரவலை எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும், உலகின் மிகப்பெரிய மத ரீதியான கூட்டங்களில் ஒன்றான மகா கும்பமேளாவிற்காக, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஹரித்வாரில் கங்கைக் கரையில் திரண்டுள்ளனர். நிகழ்வில் இருந்து வரும் புகைப்படங்களும் காணொளிகளும் அங்கு கொரோனா நெறிமுறைகளான சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது போன்றவை பின்பற்றப்படவில்லை என்பதைக் காட்டுகின்றன.

மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து ஒரு புதிய அலை தொடங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தாலும், மத்திய, மாநில அரசுகள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்து திருவிழாவை நிறுத்த மறுத்துவிட்டன.

உத்தரகண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் “ரோக்-டோக் (தடைகள்) எதுவும்” இருக்கக்கூடாது என்றும் கும்பமேளா “அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும்” என்றும் கூறினார். திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யும் அமைப்பில் தீரத் சிங் ராவத் நேரடியாக பங்கேற்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட படங்களில், அவர் முகக்கவசத்தை முகத்தில் அணியாமல் கழுத்தில் அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது. “கொரோனா என்ற பெயரில் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள், ஏனெனில் கடவுள் மீதான நம்பிக்கை வைரஸின் பயத்தை வெல்லும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று மார்ச் 20 அன்று அவர் கூறியது பிரபலமானது.

காவல்துறை தலைமை ஆய்வாளர் சஞ்சய் குன்ஜால் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ யிடம் பேசும் போது, கும்பமேளாவில் சமூக இடைவெளியை உறுதி செய்ய காவல்துறை முயற்சித்தால், “கூட்ட நெரிசல் நிலைமை” ஏற்படக்கூடும் என்று கூறினார்.

“கொரோனா தொடர்பான நெறிமுறைகளை பின்பற்றுமாறு நாங்கள் தொடர்ந்து மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். ஆனால் பெரும் கூட்டம் காரணமாக, விதிமீறல்கள் தொடர்பாக அபராதம் விதிப்பது இன்றைக்கு நடைமுறையில் சாத்தியமில்லை. ஆற்றின் படித்துறைகளில் சமூக இடைவெளியை உறுதி செய்வதும் மிகவும் கடினம்” என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா நெறிமுறை மீறல்களைக் கண்காணிக்க உத்தரகண்ட் காவல்துறை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட கேமராக்கள் முகக் கவசங்கள் இல்லாத முகங்களை நெருக்கமாக குவித்து புகைப்படங்களை எடுக்கின்றன. ஹரித்வாரில் 350 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 100-க்கும் மேற்பட்டவை செயற்கை நுண்ணறிவு உணரியை கொண்டவை. கூடும் கூட்டத்தின் அளவையும், விதிமுறைகள் மீறலையும் பார்க்கும் போது காவல்துறையினர் இதை எப்படி அமல்படுத்துவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

image credit : thewire.in
image credit : thewire.in

ஏற்கனவே, ஹரித்வாரில் கொரோனா தொற்றுகள் அதிகரிப்பது பதிவாகியுள்ளது. ஹரித்வாரில் தற்போது 2,056 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை 386 பேருக்கு தொற்று இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. கடந்த வாரம், ஏப்ரல் 4-ம் தேதி, பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 837 ஆக இருந்தது என்று என்.டி.டி.வி தெரிவிக்கிறது.

கும்பமேளாவில் கலந்துகொள்ள வருபவர்கள் கொரோனா இல்லை என்ற சோதனைச் சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால் ஹரித்வாரில் நோய் தொற்றிய பக்தர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பும்போது நோய்க்கிருமியை பரப்பாமல் இருப்பதை உறுதி செய்ய எந்த நெறிமுறையும் இல்லை.

கும்பமேளாவில் ‘ஷாஹி ஸ்னான் (அரச குளியல்)’ எனப்படும் ஏப்ரல் 12, 14, 27 மூன்று முக்கிய நாட்கள் உள்ளன. கொரோனா நோய்த்தொற்று பெரு வேகத்தில் அதிகரித்து வரும் நேரத்தில், இந்த மூன்று நாட்களில் மக்கள் கூட்டத்தை தடுக்க அரசு விரும்பவில்லை. அதற்கு பதிலாக, இந்த மூன்று நாட்களில் ஹரித்வாரை பல்வேறு இடங்களுடன் இணைக்கும்25 சிறப்பு ரயில்களை பயணிகளுக்காக இயக்க இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது என்று பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

கும்பமேளாவிலும் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும், பாதுகாப்பை உறுதி செய்ய, கூட்டம் கூடுவதைத் தடுக்க அதிகாரிகள் ஏன் எதுவும் செய்யவில்லை என்பது குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்க தேர்தல்களுக்கான பிரச்சாரத்தின்போது அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் கொரோனா விதிகளை மீறியுள்ளன. மேற்கு வங்க தேர்தல் எட்டு கட்டங்களாக நடப்பதால் நோய்த்தொற்றுஉ பரவுவதற்கான அபாயம் இன்னும் அதிகமாக உள்ளது

நெருக்கமான கூட்டங்களை அனுமதிப்பதன் மூலம் “அரசியல் தலைவர்களே” கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்புக்கு பொறுப்பு என்று முன்னாள் உலக சுகாதார அமைப்பின் அதிகாரி சுபாஷ் சலுங்கே ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார். “இன்னும் இரண்டு வாரங்களுக்கு நோய்த்தொற்றின் அதிகரிப்பு தொடரும் ” என்று மகாராஷ்டிரா அரசின் ஆலோசகரான அவர் கூறியுள்ளார்

கடந்த வாரம் 11 மாநிலங்களைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்களுடன் நடத்திய ஒரு வீடியோ சந்திப்பில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், சமீபத்திய நோய்த்தொற்று அதிகரிப்புக்கு இந்திய மக்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து அவர்கள் “மிகவும் கவனக் குறைவாகி விட்டார்கள்” என்று அவர் கூறினார்.

“தேர்தல்கள், மதக் கூட்டங்கள், அலுவலகங்களை மீண்டும் திறத்தல், பலர் பயணம் செய்வது, சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வது, விதிகளைப் பின்பற்றாதது, திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளிலும் நெரிசலான பேருந்துகளிலும் ரயில்களிலும் கூட முகக்கவசம் அணியாமல் இருப்பது ஆகியவை அதிகரித்துள்ளன” என்று அவர் கூறினார். ஆனால் கொரோனா தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள அவர், தானோ அல்லது தனது அரசாங்கமும் கட்சியுமோ நோய்த்தொற்று பரவலை முன்னிட்டு பொது நிகழ்வுகளைத் தடுக்க முயற்சிக்கவில்லை என்பதை அவர் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

ஹரித்வாரில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதும் அல்லது இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் இந்தியாவில் கொரோனா தொற்றுகளில் ஏற்பட்டுள்ள கடுமையான உயர்வு தடையின்றி தொடரும் என்பதிலும் யாரும் ஆச்சரியப்பட முடியாது.

இந்த மாதத் தொடக்கத்தில், கும்பமேளா ஒரு “சூப்பர் ஸ்ப்ரெடர்” நிகழ்வாக மாறக்கூடும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் எச்சரித்திருந்தார்.

“நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னர் கும்ப மேளாவை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் முடிவு செய்யாவிட்டால், அது ஒரு கொரோனா ‘சூப்பர் ஸ்ப்ரெடர்’ ஆக மாறக்கூடும்,” என்று உயர்மட்டக் கூட்டத்தில் ஒரு உறுப்பினர் கூறியதை ஏ.என்.ஐ செய்தியாக வெளியிட்டது. ஆனால் இந்தச் செய்தி உடனடியாக நிராகரிக்கப்பட்டு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் ‘போலி செய்தி’ என்று சித்தரிக்கப்பட்டது. இந்து மத நம்பிக்கையின் வெளிப்பாடுகளை விமர்சிப்பதாக காட்டிக் கொள்வதற்கு அரசாங்கம் அவ்வளவு எதிராக உள்ளது.

கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாஅத்தின் நிஜாமுதீன் மார்க்கஸில் கொரோனா நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசு செயல்பட்டதற்கும் மஹாகும்ப மேளா தொடர்பாக அலட்சியமாகவும், மிகவும் கவனமாகவும் அரசு செயல்படுவதற்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது.

மகா கும்பமேளாவைப் போலல்லாமல், தப்லிகி ஜமாஅத்தில் சுமார் 3,500 பேர் கலந்து கொண்டனர், பொதுக் கூட்டங்கள் அல்லது வெளிநாட்டிலிருந்து பயணம் செய்வதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் விதிக்கும் முன்பு அந்நிகழ்வு நடைபெற்றது. நோய்த்தொற்றை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை பல மத்திய தலைவர்கள் கேலி செய்தபோது அது நடந்தது.

ஆனால் ஒரே இரவில், தப்லீஹி ஜமாஅத் ஒரு பொறுப்பற்ற குழுவாக வர்ணம் பூசப்பட்டு, இந்தியாவில் தொற்றுநோய் முழுவதுமாக பரவுவதற்கு அதுதான் காரணம் என்று பெரிய ஊடகங்களின் ஒரு பகுதியினரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் குற்றம் சாட்டினர். இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான மதவாத எதிர்ப்பு அலைக்கு வழிவகுத்தது; முஸ்லீம் காய்கறி விற்பனையாளர்கள் துன்புறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர். தொலைக்காட்சி சேனல்கள் “கொரோனா ஜிஹாத்” போன்ற தவறான, இழிவான தலைப்புகளில் செய்திகளை வெளியிட்டன.

ஒரு ஆண்டு கழித்து, இந்தியாவின் கொரோனா நிலைமை தப்லிகி ஜமாஅத் நிகழ்வு நடைபெற்றபோது இருந்ததை விட மிகவும் மோசமாக உள்ளது (அப்போது சில நூறு பேர் மட்டுமே நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்; இன்று 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுளனர்). இருப்பினும் தப்லிகி ஜமாஅத்தை விட பல மடங்கு பெரிய ஒரு மத நிகழ்வு ஒன்று அரசின் ஆதரவோடு நடைபெறுகிறது. “கொரோனா வைரஸ் பரப்பிகள்” என்று எல்லா முஸ்லீம்களையும் சித்தரித்த தொலைக்காட்சி சேனல்களோ அல்லது நிஜாமுதீனில் ஒரு மோசமான சதித்திட்டம் அமல்படுத்தப்படுவதாகக் கூறிய பாஜக தலைவர்களோ இதைப் பற்றி எதுவும் கூறவில்லை .

“கும்பமேளாவை மார்க்கஸுடன் ஒப்பிடக்கூடாது” என்று உத்தரகண்ட் முதல்வர் ராவத் சமீபத்தில் இந்துஸ்தான் டைம்ஸிடம் கூறினார், “… ஏனென்றால் தங்கள் கைகளை சுத்தப்படுத்த வேண்டும் முகக் கவசங்களை அணிய வேண்டும் என்று மக்களுக்கு இப்போது தெரியும்.”

கும்பமேளாவில் முகமூடிகள் பெரும்பாலும் இல்லை என்ற உண்மையை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தாலும், இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிடமுடியாது, ஆனால் வேறு காரணத்திற்காக: கும்ப மேளா நிகழ்வில் பத்தில் ஒரு பங்கு அளவிலேயே மார்க்கஸ் இருந்தது. மேலும் கொரோனா நோய்த்தொற்றின் ஆபத்துகள் மார்க்கஸ் நடந்த போது முழுமையாக அறியப்படவில்லை. மறுபுறம், கும்பமேளாவோ, இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு கொரோன நோய்த்தொற்று அபாயம் இல்லை என்பது போல, அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்களை மீறி நடைபெறுகிறது.

thewire.in தளத்தில் வெளியான ஜானவி சென் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்