Aran Sei

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி

மேக்ஸ் கார்பரேட் சர்வீசஸ் என்ற நிறுவனம் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்ப மேளாவில் ஒரு லட்சம் கொரோனா கண்டறியும் போலி பரிசோதனைகளைச் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தரகண்ட் அதிகாரிகள் அந்த நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கு முன், அதன் தரம் பற்றி தெரிந்துக் கொள்ளத் தவறிவிட்டனர் என்று தெரிவிக்கும்,  ‘தி வயர்’ நடத்திய ஆய்வின் உண்மை,  அந்த நிறுவனத்தின் பாஜகவுடனானத் தொடர்பு இந்தக் குற்றச் செயலில் பெரும்பங்கு ஆற்றியிருக்கும் என்று தெரிவிக்கிறது.

தி வயரிடம் உள்ள ஆதாரங்கள், மேக்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் சரத் பண்ட், பாஜகவின் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடன் முறைகேடாக இணைந்து இந்த ஒப்பந்தத்தை எவ்வாறு பெற்றார் என்பதை வெளிப்படுத்துகின்றன. கார்பரேட் விவகாரத்துறை அமைச்சகத் தரவுகளின் படி மேக்ஸின் நிறுவன இயக்குநர்கள் சரத் மற்றும் மல்லிகா பண்ட் ஆகியோர் ஆவர். பண்டின் குடும்பம் பாஜகவுடன் தொடர்புடையது. அவர்களுடைய மாமா பூபேஷ் ஜோஷி, முன்னாள் ஒன்றிய நாடாளுமன்ற விவகார அமைச்சர், மறைந்த ஆனந்த் குமார் அவர்களின் நெருங்கிய உதவியாளர் ஆவார்.

எதிர்ப்பிற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான “மெல்லிய கோடு” – பத்ரி ரெய்னா

தி வயர் ஜோஷியைத் தொடர்பு கொண்டு பேசியபோது, தான் ஆனந்த் குமாருடன் பணியாற்றியதையும், தற்போதும் தொடர்ந்து ஒன்றிய அமைச்சகத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்த போதிலும் தனது பதவி பற்றி எதுவும் கூற மறுத்து விட்டார். மூத்தத் தலைவர்களுடனான தனது நெருக்கம், பண்ட் இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு எதுவும் செய்யவில்லை என்றும் அவர் வலியுறுத்திக் கூறுகிறார். பண்டும், ஜோஷியும் தங்களுக்கிடையே யான நட்பை அப்பட்டமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில், தாங்கள் இருவரும் மோடி அரசின் அமைச்சர்களான துணித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி முதல் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர தோமர்,  நிதித்துறை மாநில அமைச்சர் அனுராக் தாகூர், மனிதவளத்துறை அமைச்சர் பொக்ரியால் நிஷாந்த் வரை அனைவருடனும் சந்தித்துள்ள புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டுள்ளனர்.  இருவரும் சேர்ந்து உத்தரகண்ட் முதல்வர் திராத் சிங் ராவத் சந்தித்தது குறித்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர். இந்த சந்திப்பு எப்போது நடந்தது எனத் தெரியவில்லை. தி வயரின் தொலைபேசி அழைப்பிற்கோ, அனுப்பிய குறுந்தகவல்களுக்கோ அவர்  பதில் அளிக்கவில்லை.

இந்த நெருக்கமே பண்டின் நிறுவனத்துடன் நல்லுறவை நல்ல நிலையில் வைத்திருக்க உதவியிருக்கக் கூடும். வெளிவந்துள்ள ஆதாரங்களின் படி,  இரண்டு போலி நிறுவனங்கள் மூலம் மேக்ஸ் எடுத்துள்ள 98,000 திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மூலம் மூன்று கோடி ரூபாய் வரை முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனக் தெரிகிறது. ஹரித்துவார் ஆட்சியாளர் அலுவலகம், ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும் கும்ப மேளா நிகழ்ச்சியில் கோவிட்-19  பரிசோதனை செய்ய அந்நிறுவனம் தகுதியற்றது என அறிந்து அதன் விண்ணப்பத்தை நிராகரித்திருந்த வேளையில், கும்ப மேளா நிர்வாகம் அந்த மேக்ஸ் நிறுவனத்திற்கு பரிசோதனை செய்வதற்கு ஒப்பந்தம் அளித்துள்ளது என்பதை புலனாய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

வாழப்பாடி முருகேசன் படுகொலை; தொடரும் காவல்துறை அத்துமீறல்கள் – அ.மார்க்ஸ்

இந்த நிறுவனத்தின் தவறான நடவடிக்கைகளைப் பற்றி அறிந்த போதும் அதனைத் தடுத்து நிறுத்தாமல், உள்ளூர் அதிகாரிகள் அவற்றைப் கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட்டனர் என்பதற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. களத்தில் வேலையைத் துவங்குவதற்கு முன்பே பரிசோதனைச் செய்ததற்கான விலைப்பட்டியை (bill) மேக்ஸ் நிறுவனம் அனுப்பி உள்ளதும் தற்போது நடந்து வரும் விசாரணைகள் அம்பலப்படுத்தி உள்ளன. ஆனால் இதன் பிறகும்  எச்சரிக்கையின்றி,  அந்த நிறுவனம் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என விசாரணைக்கு முந்தைய ஆதாரங்கள் கூறுகின்றன.

பண்ட் ” மிகுந்த செல்வாக்குள்ளவர்” என்றும், தற்போது நடந்து வரும் ஊழல் மீதான விசாரணைகளின் மீதும் தனது “செல்வாக்கைச் செலுத்தி அழுத்தம் கொடுத்து” வருவதாகவும் பெயரை வெளியிட விரும்பாத ஒரு உயர்மட்ட அதிகாரி தெரிவிக்கிறார். ஒப்பந்தத்தின் முன்னேற்றம் மற்றும் பண்ட்டின் முகநூல் பதிவுகளை ஒன்று சேர படிப்பது, மேற்கூறியபடிதான் நடக்கிறது என்பதை விளக்குகிறது.

இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்

ஆட்சியர் அலுவலகம் ஏன் விண்ணப்பத்தை நிராகரித்தது?

ஜனவரியில், கும்பமேளா நிர்வாகம் அரசின் சுகாதாரத்துறை மற்றும் ஹரித்துவார் ஆட்சியாளர் அலுவலகம் ஆகியவற்றிற்குத் தனித்தனியாக, அந்த ஆண்டு கும்ப மேளாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஒரே நேரத்தில் சோதனைச் செய்ய தனியார் சோதனை ஆய்வகங்களை எதிர்பார்ப்பதாக ஆவல் வெளியீட்டை (Expressions of interest) வெளியிட்டது. அப்போது உத்தரகண்ட் மாநில முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் இருந்தார்.

இந்த செயல்முறை நடந்துக் கொண்டிருக்கும் போதே  ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நட்டா, நிஷாந்த், மற்றும் இரானி உள்ளிட்ட பாஜகவின் மூத்தத் தலைவர்களையும், மோடி அரசிலிருந்த அமைச்சர்களையும் பண்ட்  சந்தித்தார். அந்த மூன்று தலைவர்களையும் மின்னஞ்சல் மூலமும், குறுஞ் செய்திகள் மூலமும் தொடர்பு கொள்ள தி வயர் பலமுறை முயன்றும் அவர்களிடமிருந்து  பதிலே வரவில்லை. இந்தச் சந்திப்புகளில் என்ன பரிமாற்றம் நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால், நட்டாவின் “வழிகாட்டுதல்” மற்றும் இரானியின் ” ஆசீர்வாதங்கள்” ஆகியவற்றைப் பெற்றிருப்பதாகக் கூறி அவர்களுடனிருக்கும் புகைப்படங்களைப் பண்ட் பதிவேற்றினார்.

நிதிபங்களிப்பை காரணம் காட்டி பறிக்கப்படும் மாநில அரசின் இடஒதுக்கீடு – கேள்விக்குறியாகிறதா அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம்?

எடுத்துக்காட்டாக, ஜனவரி 28 அன்று உள்நோக்கத்துடன் அவரது வீட்டிலிருந்தே, புன்னகைக்கும் இரானியுடன்  சேர்ந்து இருக்கும் மூன்று புகைப்படங்களை பண்ட் பதிவிட்டார். அதில் அவர் அவரை அன்று சந்தித்தைக் குறிப்பிட்டு தனது இதயத்தின் ஆழத்திலிருந்து அவரிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்களுக்காக நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். அடுத்த ஒரு வாரத்திற்குள், பிப்ரவரி 3ம் நாள், நட்டாவைச் சந்தித்து, பாஜக தலைவரால்  தான் வழிநடத்தப்படுவதாகக் கூறினார். ” உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி உத்தரகண்ட் வாழ்க! ஸ்ரீ ராம் வாழ்க!” என்று கூறினார்.

இந்த சந்திப்புகளுக்கு இடையிலும் கூட, அதிகாரிகளால் அவரது நிறுவனம் கோவிட் பரிசோதனை செய்ய சிறிதும் தகுதியற்றது என கூறிவிட்ட பின்பும், பண்ட் அந்த ஒப்பந்தத்தைப் பெற முயற்சி செய்து வந்தார். பண்ட்டின் நிறுவனத்திடமிருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு முன்மொழிவு வந்ததாக ஹரித்வார் ஆட்சியர் கூறுகிறார். ” இந்த வேலையை தர வேண்டும் எனில் ஒரு நிறுவனம் மூன்று நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். அதற்கு ஒரு ஆய்வகம் இருக்க வேண்டும். அது தேசிய ஆய்வக ஆணையத்தின் (NABL) ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்திய மருத்துவ கழகத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். இதில் எதையும் மேக்ஸ் நிறைவேற்றவில்லை. எனவே அதன் முன்மொழிவு முற்றிலும் நிராகரிக்கப்பட்டது” என்று கூறுகிறார்.

ஆட்சியர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் குழுவில் இருந்த ஒரு அதிகாரி மேக்ஸின் விண்ணப்பம் ” மிகவும் அசாதாரணமானது” என்று கூறுகிறார். ” நாங்கள் உள்ளே வரும் பக்தர்களை பரிசோதனைச் செய்ய விரும்பினோம். அதனால் ஆய்வகங்கிலிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்த்தோம். அனுபவமில்லாத, சோதனைகள் செய்யத் தகுதியில்லாத ஒரு நிறுவனத்தை நாங்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?” என்று கேட்கிறார் அவர்.

‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத காஷ்மீர்’ – டேவிட் தேவதாஸ்

மேக்ஸ் தனது  வலைதளத்தில் அது ” தேர்வர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விரிவான வலைப்பின்னலை வைத்திருப்பதுடன், பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை, வசதிகள் மேலாண்மை, சுகாதார மற்றும் பாதுகாப்பு மேலாண்மை, ஆட்சேர்ப்பு வடிவமைத்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றிருப்பதாக பட்டியலிட்டுள்ளது. ஹரித்துவார் ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கும் போது, சோதனைகளை மேற்கொள்ள சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கூறியிருந்தது. ஆனால் அதனை உறுதிச் செய்ய எத்தகைய ஆவணத்தையும் அது இணைக்கவில்லை என மேற்கூறிய அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர். ஆட்சியர் ரவி சங்கர், மேக்ஸின் இந்த விண்ணப்பம் சரியாக எப்போது நிராகரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுக் கூறவில்லை எனினும் மாநில நிர்வாகத்தின் உயர் மட்டத்திலிருந்து கிடைத்தத் தகவல்களின் படி இது மர்மமான முறையால் திரிவேந்திர சிங் ராவத் முதலமைச்சர் பதவியிலிருந்து  விலகிய மார்ச்சு 9 அன்று நடந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

அதற்கு அடுத்த நாளே, பாஜக திராத் சிங் ராவத்தை மாநில முதலமைச்சராக நியமித்தது. அதே நாளில் பண்ட் புதிய முதலமைச்சரின் புகைப்படங்களை பதிவேற்றி அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்

புதிய முதலமைச்சரால் மேக்ஸ் ஒப்பந்தத்தைப் பெற்றது. சிவப்புக் கொடி புறக்கணிக்கப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகத்தால் பண்ட்டின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதேப் போன்ற ஒரு விண்ணப்பத்தை மேக்ஸ் கும்ப மேளா நிர்வாகத்திற்கு அனுப்பியது. இம்முறை ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பாமல் நேரடியாக மாநில அரசுக்கு அனுப்பியது. அது ஏற்கப்பட்டு மார்ச்சு 26 ம் நாள் பண்ட்டின் நிறுவனத்திற்கு  ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

மேக்ஸின் ஆவணங்களை பரிசீலனை செய்த பிறகே நிர்வாகம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்கிறார் கும்ப மேளா நிர்வாகத்தின் சுகாதாரத்துறை அதிகாரி அர்ஜூன் சிங் செங்கர்.” அவர்கள் எங்களுக்கு  நால்வா ஆய்வகம் மற்றும் லால் சந்தானி ஆய்வகம் என்ற  இரண்டு ஆய்வகங்களின் கடிதங்களைக் கொடுத்துள்ளனர். அவை மேக்ஸ் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்று கூறி உள்ளனர். அந்த இரண்டு ஆய்வகங்களையும் இந்திய தேசிய மருத்துவக் கழகம் அங்கீகரித்துள்ளது. எனவே அவற்றை எங்களுக்காகச் சோதனைகளை நடத்தும் பல ஆய்வகங்களுடன் சேர்த்துள்ளோம்,” என்று விளக்கினார்.

மேகேதாட்டுவில் அணை என்பது தமிழகத்தை சுடுகாடாக்கும் செயல் – சூர்யா சேவியர்

பட்டியலில் உள்ள ஆய்வகங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிபந்தனைகளின்படி, மேக்ஸ் நிறுவனத்திற்கு நடத்தப்படும் ஒவ்வொரு நோய் எதிர்ப்பு சக்தி சோதனைக்கும் ரூ. 354 ம், ஆர்டி- பிசிஆர் சோதனைக்கு ரூ500 ம் தரப்படும். மாதிரிகள் உள்ளூர் அரசு அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டிருந்தால் நிறுவனம் நானூறு ரூபாய் பெறும். ஹரித்துவார் ஆட்சியர் அலுவலகம் நடத்தும் விசாரணையில், இந்த ஒப்பந்தத்தைப் பெற்றதில் இருந்து மேக்ஸ் எவ்வாறு முறைகேடுகள் செய்துள்ளது என்பதை வெளிப்படுத்தி வருகின்றன.

நடத்தப்படும் எல்லா சோதனைகளின் தரவுகளும் ஹரித்வார் தலைமை மருத்துவ அதிகாரியின் நிகழ்நிலை வலைவாசலில் பதிய ஒவ்வொரு முகமைக்கும் ஒரு உபயோகிப்பாளர்  பெயரும், கடவுச் சொல்லும் தரப்படும் என்கின்றனர் அதிகாரிகள். ”இந்த விவரங்களைக் கொடுத்தப் பிறகே சோதனைகளை நடத்தத் துவங்க வேண்டும். ஆனால் மேக்ஸ் வலைவாசலில் இணையும் இத்தகையத் தகவல்கள் தருவதற்கு முன்பே எங்களுக்கு சோதனைகளை நடத்தியதற்கான விலைப்பட்டியை (bills) அனுப்பியது. இதனை நம்புவது மிகவும் கடினம்,” என்கிறார் விசாரணைக் குழுவில் உள்ள ஒரு அதிகாரி.

மாநிலத்தில் தொற்று நோய் பரவலை நெருக்கமாக ஆய்வு செய்து வரும்  டேராடூனைச் சேர்ந்த “வகுப்புகளின் சமூக முன்னேற்ற அறக்கட்டளை” யின் நிறுவனர் அனூப் நவ்டியால் அதிகாரிகள் எச்சரிக்கை சமிக்ஞைகளைப் புறக்கணித்தனர் என்கிறார்.” துவக்கத்திலிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரித்துவாருக்குள் வருவதற்கு முன்பு ஹரித்துவாரில் நோய் தொற்று உள்ளவர்களின்  எண்ணிக்கை விகிதம் மற்ற மாவட்டங்களை விட 70-80 % குறைவாகவே இருந்தது. எனவே ஏதோ ஒரு தவறு நடந்துள்ளது தெளிவாகிறது,” என்கிறார் அவர்.

மைதிலி சிவராமன் (14 டிச. 1939 – 30 மே 2021) – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்

இந்த “சிவப்புக் கொடிகள்” மேக்ஸ் நிறுவனத்திற்கு பணியை கொடுப்பதற்கு முன்  கும்ப மேளா அதிகாரிகளை எச்சரிக்கைச் செய்திருக்க வேண்டும் என்கின்றனர் உள்ளூர் அதிகாரிகள். ” பட்டியலிடப்பட்ட ஆய்வகங்கள் சோதனைகள் நடத்தும் போது அதிகார பூர்வமாக மேளா அதிகாரிகள் உடன் இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆய்வகத்திற்கும் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டு, அவர்களைக் கண்காணிக்க அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருக்க  வேண்டும். ஆனால் மேக்ஸ் விடயத்தில் இது எதுவும் நடக்கவில்லை,” என்கிறார் விசாரணை அதிகாரி.  இந்த நிலையில், விசாரணைக் குழு மேக்ஸ் செய்ததாகக் கூறிய அனைத்து சோதனைகளின் தொடர்பு விவரங்களை பரிசோதனை செய்தது. ” நாங்கள் அவர்களால் பட்டியலிடப்பட்டிருந்த ஒவ்வொருவரையும் அழைத்தோம். பெரும்பாலானவர்கள் தொலைபேசி அழைப்பிற்கு பதில் கூறுவதில்லை. பல எண்கள் தவறான எண்கள்,” என்கிறார் ஒரு விசாரணை அதிகாரி.

பாஜக வேட்பாளராக விரும்புபவர்கள்

தி வயர் மின்னஞ்சல் மூலமும், குறுஞ்செய்திகள்  மூலமும், அதே போல அவரது வழக்கறிஞர் மூலமும் பண்ட்டைத் தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால் பண்ட் பதிலேதும் தரவே இல்லை. ஆனால் அவரது உறவினர் ஒருவர் தன் பெயரை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் தி வயர் செய்தியாளர்களுடன் பேசினார். அவர் பண்ட் அரசியல் குறிக்கோளுடன் உள்ளார்.  எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புகிறார்,” என்றார். பண்ட் மத்திய உத்தரகண்ட் மாவட்டமான அல்மோராவின் துவாராஹட் நகரைச் சேர்ந்தவர். அதன் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர், பாலியல் வன்புணர்வு குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக வின் மகேஷ் சிங் நேகி ஆவார். கட்சியைச் சேர்ந்த மற்றும் பண்ட்டிற்கு நெருக்கமானவர்கள் பலரும் பண்ட் அந்த இடத்தின் மீதே கண் வைத்திருப்பதாகக் கூறுகின்றனர்.

முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மதன் சிங் பிஷ்ட், சில மாதங்களாகவே பண்ட் தொகுதியில் “தீவிரமாக” இருப்பதாகவும், அரசியலில் குதிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கிறார். ” கடந்த இரு மாதங்களாக, கொரோனா ஊரடங்கு நேரத்தில் பாஜகவின் பதாகையின் கீழ் உள்ளூர் மக்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்து வருகிறார். அண்மையில்தான் அவர் மிகவும் தீவிரமாக இறங்கி இருக்கிறார்,” என்கிறார் அவர். ஆனால் இப்போது இந்த சர்ச்சை அவரது ஆசையின் மீது நிழலாகப் படிந்துள்ளது.

உபா சட்டத்தில் சிறுவன் கைது – தன் இயலாமையால் குழந்தைகளிடம் ’வீரத்தைக்’ காட்டுகிறதா அரசு?

புலனாய்வு நெருக்குகிறது

இந்த போலி பரிசோதனை ஊழல் தொடர்பாக மேக்ஸ் மற்றும்  அதனுடன் ஒப்பந்தம் செய்துள்ள இரண்டு ஆய்வகங்கள் மீதும்  ஹரித்துவார் காவல் துறை முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளது. இந்த மூவர் மீதும் 1987 ம் ஆண்டு நோய் பரவல் சட்டம், 2005 பேரிடர் மேலாண்மை சட்டம், 1860 ன் இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் பிரிவு 120 ஆ (குற்றவியல் சதி), பிரிவு 188 ( அரசுப் பணியாளரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறியதற்கான தண்டனை), பிரிவு 420 (ஏமாற்றுதல்), பிரிவு 468 ( மோசடி), பிரிவு 471( கனிணி ஆவணங்களை அல்லது எந்த ஒரு தனிப்பட்ட ஆவணத்தையும் முறைகேடாகப் பயன்படுத்துவது) ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளி அபராதத்துடன் ஏழு ஆண்டு சிறை தண்டனையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

கடந்த ஜூன் 23 அன்று, மேக்ஸின் மனுவை விசாரித்த உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்து, பண்ட்டின் பங்குதாரர் மல்லிகாவுக்கு “தன்னிச்சையாக கைது” செய்வதிலிருந்து  பாதுகாப்பு அளித்து உத்தரவிட்டுள்ளதாக நிறுவனத்தின் வழக்கறிஞர் கார்த்திகேய ஹரி குப்தா கூறுகிறார். மல்லிகா ஜூன் 25 ம் தேதி விசாரணை அதிகாரியின் முன் விசாரணைக்கு வர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹரித்துவார் நிர்வாகத்தால் நடத்தப்படும் இந்த சர்ச்சைக் குறித்த விசாரணை இந்த வார இறுதியில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

ஆனால், கிடைக்கும் தகவல்கள் அவர்கள் மூன்று நிறுவனங்களும் செய்துள்ள முறைகேடுகள் பற்றிய ” குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்களை” கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. மேக்ஸின் தொல்லைகள் எப்படியும் விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை. இரு கூட்டாளிகளான நால்வா மற்றும் லால்சந்தானி ஆகியோரும், இதனைத் தொடர்ந்து இதேப் போன்ற மனுக்களை உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர். லால்சந்தானி ஆய்வகம், தான் கும்ப மேளா நிகழ்ச்சியின் போது 12,000 சோதனைகளையே நடத்தியதாக கூறுகிறது. ஏற்கனவே நால்வா ஆய்வகம் தங்களுக்கு இதுவரை எந்தத் தொகையும் மேக்ஸிடமிருந்து வரவில்லை என்றும், மேக்ஸ் மாதிரிகளைச் சேகரிக்க எவரையும் அனுப்பவில்லை என்றும் கூறியுள்ளது. பண்ட்டின் வழக்கறிஞர் குப்தா இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து, நால்வா கூறுவது” அபத்தமானது” என்றும், மேக்ஸ்,  வெறும் ” ஏற்பாடு செய்பவர்கள்தான்”  என்றும் இது கும்ப மேளா அதிகாரிகளுக்குத் தெரியும்,” என்றும் கூறுகிறார்.

ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்

ஒப்பந்த புள்ளியின் படி தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறோம் , அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம். ஆய்வகங்கள் களத்தில் வேலை செய்ததை நிரூபிக்க எங்களிடம் தகவல் தொடர்பு உள்ளது,” என்கிறார் குப்தா.

“மேக்ஸ் ஒரு ஏற்பாடு செய்யும் நிறுவனமாக மட்டுமே இருப்பதால் தங்களது ஆட்கள் களத்தில் இருக்க வேண்டியதில்லை என்றும் ஆய்வகங்கள் தங்கள் ஆட்களை களத்திற்கு  அனுப்பி மாதிரிகளைச்  சேகரித்து சோதனைக்கு ஏற்பாடு செய்யும்,” என்று அவர் கூறுகிறார். மேலும் அவர், சோதனைகளின் போது மேளா அதிகாரிகளின் மேற்பார்வை இருந்தது என்றும் கூறுகிறார். ” சோதனைகள் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்றது. எனவே என்ன நடந்ததோ  அவை எல்லாம் பொதுவெளியில்தான் நடந்தது,” என்கிறார் அவர்.

இதுதான் மேலும்   கேள்வியை எழுப்புகிறது. தற்போது விசாரணையில் வெளியாகும் அப்பட்டமான முறைகேடுகள் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு தவிர்க்கப்படவில்லை?

www.thewire.in இணையதளத்தில் குணால் புரோகிதர் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்