Aran Sei

கும்பமேளா 2021: மக்கள் வாழ்க்கை மீது தலைவர்கள் காட்டிய அலட்சியம்

கும்பமேளாவை  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது வழக்கம். கடந்த ஹரித்துவார் கும்பமேளா 2010 ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது நடந்து வரும் கும்பமேளாவை உண்மையில் 2022 ல் தான் நடத்தியிருக்க வேண்டும், 2021 ல் அல்ல. கொரோனா இரண்டாவது அலையை எதிர்பார்த்திருந்த வேளையில், அதுவும் தொற்று நோய் ஆய்வுகள் முதல் அலையை விட இரண்டாவது அலையில் தொற்று மிக மோசமாக இருக்கும் என குறிப்பிடும் நிலையில், ஒரு முழு ஆண்டு முன்னதாக ஏன் கும்பமேளா நடத்தப்படுகிறது?

ஒரு ஆண்டு முன்னதாக   கும்ப மேளா நடத்தப்படுவதற்கான காரணத்தை நான் சொல்கிறேன். ஏனெனில் ‘ சோதிட கணக்கின்படி மேஷ ராசிக்குள் சூரியனும், கும்ப ராசிக்குள் வியாழனும் நுழையும் நிகழ்வு இம்முறை  2021 ம் ஆண்டு நடக்கிறது. இது 83 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் நிகழ்வு. ஆங்கில ஆண்டுகளுக்கேற்ற வகையில் சோதிட உள்ளமைவு அட்டவணைகளைச் சரி செய்ய வேண்டியிருப்பதால் இது நிகழ்ந்துள்ளது. இந்த மர்மமான கணக்கீடு எனது சக்திக்கு அப்பாற்பட்டது. உங்களுக்கு தலைவலி வேண்டாம் என்றால் நீங்களும் அதற்கான முயற்சியில் இறங்காதீர்கள் என நான் பரிந்துரைக்கிறேன்.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்யுங்கள் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

எனவே, கொரோனா தொற்று நெருக்கடியில் அதன் அதிவிரைவு பரப்பியான ஒரு நிகழ்வை நடத்துவதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் மிக எளிதாக இந்திய அரசும், உத்தரகண்ட் மாநில அரசும் கும்பமேளாவை ரத்து செய்வதன் மூலம் தடுத்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.

கடந்த கும்பமேளா நடந்து  இது 11வது ஆண்டு, 12 வதுஆண்டு அல்ல என்ற எளிதான காரணத்திற்காக இந்த ஆண்டு நடக்க அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. கும்பமேளா போன்ற ஒரு நிகழ்வை 2022 ல் நடத்துவது ஒருவித அர்த்தத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடிய நிலைமைகளை உருவாக்க இந்த நேரத்தை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம். இதற்குப் பதிலாக அவர்கள் மிக மோசமான ஒன்றை செய்தார்கள். தொற்று நோயின் அபாயத்தை முற்றிலும் அறிந்திருந்த போதும், அகில பாரத அகாதா பரிசத்துடன் ஆலோசித்து, அவர்கள் ஏதோ சில சோதிட மூடநம்பிக்கைகள் இதுதான் விரும்பத்தக்கது என்று  கூறுவதை ஏற்று கும்ப மேளாவை ஒரு ஆண்டு முன்னதாக 2021 ல் நடந்தக் கூறியதை அரசு ஏற்றுக் கொண்டது. ஏனென்றால் உங்களுக்குத் தெரியும், “ஆஸ்தா/ நம்பிக்கை” என்ற மிகவும் விரும்பத்தக்கப் பொருள், உச்சநீதிமன்றத்தை ஒரு சட்டவிரோத கட்டிட திட்டத்தினை பரிசாக‌ அளிக்க வைத்ததால், அதுவே இந்திய அரசையும், உத்தரகண்ட் மாநில அரசையும் மிகப்பெரும் அளவில் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை தரும் ஒரு செயலையும் செய்ய வைக்கிறது.

கொரோனா இரண்டாவது அலை பரவலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – எண்ணிக்கையை குறைத்து காட்டும் நிர்வாகம்

தொற்று நோய்களின் வரலாறு

கும்ப மேளா என்பது வரலாற்று ரீதியாக தொற்று நோய் பரவுவதை ஆவணப்படுத்திய தளமாகும்.

கும்பமேளாவைப் போன்ற ஒரு நிகழ்வின் அதிர்ச்சியூட்டும் பொது சுகாதாரப் பிரச்சனைகளை திறமையாக மற்றும் இரக்கமுடன் மேலாண்மை செய்வதிலிருந்து  இந்திய அரசாங்கங்கள் சில சமயங்களில் விலகியே நின்றிருக்கின்றன.

2013 ல் நடைபெற்ற, அது போன்ற மிகப்பெரிய அளவிலான மக்கள் கூடிய நிகழ்வு வரலாற்றில் இல்லை எனுமளவு நடந்த கும்பமேளா நிகழ்ச்சி எந்த ஒரு மோசமான‌ விளைவையும் ஏற்படுத்தாமலே நடந்து முடிந்தது. அந்த நிகழ்வு, தொற்று நோயியல் பிரச்சனைகள் பற்றிய ஆழமான ஆய்வு மற்றும் அத்துடன் பேரழிவுகள் மற்றும் பேரழிவுகளைத் தடுப்பதற்கான ஆயத்தங்கள்  ஆகியவற்றுடன் சான்றளிக்கப்பட்டது. இந்த ஆய்வுகள் ஹார்வர்ட் பொது சுகாதாரப் பள்ளியால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போது பொங்கி எழும் தொற்று நோய் இல்லை.

2020 ம் ஆண்டிலிருந்தே கொரோனா பரவி வரும் போது கும்பமேளாவில் புனிதக் குளியல் போன்றவை இரண்டாவது தொற்று அலையின் மையப்புள்ளியாக இருக்கலாம் என்பதைக் கூற பெரிய ஆராய்ச்சிப் படிப்புத் தேவையில்லை. அதிலும் தற்போதைய நிலையில் இந்த கும்பமேளா  பெரும்பாலும் நோய்களின் சுனாமியாக மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மிகச் சரியாக அதுதான் கடந்த சில நாட்களாக நடந்தது.

தில்லி மற்றும் டேராடூனில்  உள்ள சில அறிவற்ற‌ மனிதர்களின் சில முட்டாள்தனமான முடிவுகளால் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும், வெளிப்படையாக கூறுவதானால் உலகம் முழுவதும் உள்ளவர்கள் இப்போது ஆபத்தில் உள்ளனர். நரேந்திர மோடியின் தாமதமான, அரை மனதுடன் கூடிய மீதமுள்ள நாட்களில் கும்ப மேளா “குறியீடாக” இருந்தால் போதும் என்று கூறியதை நோக்கும் போது மேற்கூறியவை எதுவும்  நமக்கு ஆச்சரியமாக இருக்காது. சின்மய் டம்பேவின் சமீப கால புத்தகமான ,” தொற்று நோய்களின் காலம் : அவை இந்தியாவையும், உலகையும் எவ்வாறு வடிவமைத்தன? ” தொற்று நோய் மற்றும் அடுத்தடுத்த கும்ப மேளாக்கள் பற்றிய விவாதத்தையும் உள்ளடக்கி உள்ளது. டேவிட் அர்னால்டின்,” காலராவும், ஆங்கிலேய இந்தியாவில் காலனியமும்” என்ற கட்டுரையும், காமா மேக்லீனின் 2008 ல் வெளிவந்த ‘புனித யாத்திரைகளும் சக்தியும்: அலகாபாத் கும்பமேளா, 1765-1954’ ஆகியவையும் அதற்கு உதவியாக இருக்கும். கும்பமேளா மற்றும் நோய்கள் பற்றிய வரலாறு  பல ஆண்டுகளாக நன்கு ஆவணப் படுத்தப்பட்டுள்ளது.

‘இந்தியாவிற்கு வெண்டிலேட்டர்கள், எக்ஸ்ரே இயந்திரங்கள், பிபிஇ கவச உடை வழங்க பாகிஸ்தான் முடிவு’ – தொற்றுக்காலத்தில் துணை நிற்பதாக உறுதி

உலக சுகாதார அமைப்பிடமுள்ள காலரா பற்றிய தனிக்கட்டுரையில் கும்ப மேளாவிற்கு ஒரு பிரிவு உள்ளது. 1895 லிருந்து இந்திய மருத்துவ இதழில் கூட ” ஹரித்துவார் காலராவின் இயற்கை வரலாறு” என்ற கட்டுரை உள்ளது. மேலும் சமீப கால ஆய்வறிக்கையான ,” கும்பமேளா குறித்த விரிவான ஆய்வு” , தொற்றாகப்பரவும் நோய்களை பாதிப்பை அடையாளம் காட்டுகிறது. இது 2015 ல் கிளினிக்கல் மைக்ரோபயாலஜி மற்றும் தொற்று,” என்பதில் வெளியிடப்பட்டது.

எனவே  இது பற்றிய பிரதமர் மற்றும் அவரது ஆலோசகர்களின் அறிவின்மைதான் இந்த ஆபத்தான பாதையை மேற்கொள்ள வைத்ததா? அல்லது வேண்டுமென்றே  தெரிந்தே எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவா?

அரசுக்கு  ஆபத்துகள் பற்றி தெரியும் என்கிறது காலக்கோடு

பொது சுகாதார அபாயங்கள் குறித்த விழிப்புணர்வின் ஒரு அறிகுறியாக, உத்தரகண்ட் அரசு கடந்த ஆண்டு கும்பமேளாவை வைத்திருக்கலாம் என்பது குறித்தும், அதை நடத்தும் விதம் குறித்தும் முன்னரே சிந்தித்தது. அப்போதைய முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அகில பாரத அகாதா பரிசத்திடம் திட்டமிட்டபடி ஹரித்துவாரில் கும்ப மேளா வழக்கம் போல நடக்கும் என உறுதி அளித்தார். ( எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றிய முன் யோசனை செய்யும் நிலையில் இல்லாமலும், அதனால் அத்தகைய உறுதிமொழிகளைக் கொடுக்கும் நிலையில் இல்லாத போதும்) ” எனினும், பாரம்பரியமாக அதை எப்படி நடத்த வேண்டுமோ அதில் கொரோனா வைரஸ் சூழலைப் பொறுத்து சில மாற்றங்கள் அப்போது செய்யப்படும்,” என்று கூறியதாக பிடிஐ தெரிவிக்கிறது.

குஜராத் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு – அதிகரித்து வரும் உயிரிழப்புகள்

2020, செப்டம்பரில் ராவத் வருகையில் சில கட்டுப்பாடுகள் இருக்கும் எனக் கூறினார்.  2020 டிசம்பர் மாதத்தில் அகாதா பரிசத்தின் ‘சாமியார்கள்’ அரசின் கும்பமேளா ஏற்பாடுகளில் ‘அதிருப்தி’ தெரிவித்தனர். இறுதியில் பேரழிவில் முடியும் என்பதை உணர்ந்து உத்தரகண்ட் அரசு முன்னேறத் தயங்கியதாகவும், தயாரிப்பின்மையை  பயன்படுத்தி அதையே உரிய காரணமாகக் காட்டி கடைசி நேரத்தில் முன்னேறாமல்  இருந்ததாகவும் கூற வாய்ப்பு இருந்தது‌. இருப்பினும் பரிசத் தங்கள் சொந்த வலுவில் மேளாவை நடத்தப் போவதாக மிரட்டியது.  மார்ச் 9 ம் நாள் ராவத் பதவி விலக, அவருக்கு அடுத்து பதவி ஏற்ற திராத் சிங் ராவத் உடனடியாக  யாத்ரீகர்களுக்கு எந்த ‘ரோக்-தக்( தடையும்) ‘ இல்லை என்றும், கங்கா தேவியின் அருளால், நம்பிக்கை நோயை வெற்றிக் கொள்ளும் என்று அறிவித்தார்.

பதவி விலகியபின் ராவத் கும்பமேளாவில் கட்டுப்பாடுகள் தொடர்பான  திருப்பம் குறித்து ஐயங்களை வெளிப்படுத்தினார். ” இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் மகா கும்ப மேளா போன்ற  மிகப் பெரிய மத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறியதை இந்துஸ்தான் டைம்ஸ் மேற்கோள் காட்டுகிறது. அவர் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டதற்கு, கும்ப மேளாவை எவ்வாறு கையாள்வது என்பதில் மத்திய பாஜக தலைமைக்கும், உத்தரகண்ட் மாநில பாஜக குழுக்களுக்குமிடையே இருந்த மாறுபட்ட கருத்துக்கள் ஒரு கூறாக இருந்திருக்கலாம் என்பதை இது பரிந்துரைக்கிறது.

ஆக்ஸிஜன் தாருங்கள் நன்றியோடு இருப்பேன் – அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்

ஏப்ரலில் அந்த நிகழ்வு துவங்கிய பின்னரும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் கூட கலவையான செய்திகளை அனுப்பியது. ஏப்ரல் 6 ம்தேதி அரசு ஆதரவு செய்தி நிறுவனமான ஏஎன்ஐ,  கும்பமேளா ஒரு அதிவிரைவு நோய் பரப்பி நிகழ்வாக மாறுவது குறித்து  அரசு மூத்த அதிகாரிகள் கவலை தெரிவித்ததாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்தியா டுடே  உட்பட பல இணைய தளங்கள் இந்த செய்தியை சிறிய மாறுதல்களுடன் வெளியிட்டன. இருந்தாலும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம், இந்தியா டுடே வில் வெளியான செய்தி ” போலியான செய்தி” என தனது கீச்சகத்தில் பதிவிட்டது. இந்த மறுப்பு கடுமையானது. இது ஒரு அரசு அதிகாரியின் கூற்றுத் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதா? இல்லையா? என்று கூட சொல்லவில்லை. இதனால் இதன் மூலம் மத்திய அரசு கும்பமேளா ஒரு தீவிர பொது சுகாதார நெருக்கடியாக மாறும் வாய்ப்புள்ளது என்பதை முற்றிலும் மறுக்கும் நிலையில்தான் இருக்கிறது என்பதையும், மத்திய அரசு மூத்த அரசு அதிகாரியின் கூற்றை ரத்து செய்யும் அளவிற்கே கூடச் செல்லும் என்பதையுமே நமக்கு வெளிப்படுத்துகிறது.

அரசியல் குற்றம்

கொரோனாவின்  ஆரம்பக் காலத்தில் சீனா தொற்று எண்ணிக்கையை குறைத்துக் காட்டியதற்கு பொறுப்பேற்கலாம். ஆனால் அவர்கள் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். நிச்சயமாக அவர்கள் அதை பெருக்க எதுவும் செய்யவில்லை. ஆனால் அதேசமயம், இந்தியாவை ஆளும் அரசாங்கம் மிக அதிக அளவில் தொற்று பரவுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. இதனை தவிர்த்திருக்கலாம். சீன அரசு போலின்றி, இந்த முறை இந்திய அரசு நோய் தொற்று வெடிப்புக் குறித்து அறிய இயலவில்லை என நடிக்க முடியாது. இரண்டாவது அலை வரும் என்பது குறித்து அனைத்துத் தேவையான அறிவையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது மட்டுமல்ல, கும்பமேளாவை  நடத்தி இருப்பதுடன்-அது உண்மையில் நடத்தத் ‘தேவையற்ற’ நேரத்தில் நடத்தி இருப்பதுடன்- அது உற்சாகமாக இரண்டாவது அலைக்கான நிலைமைகளை உருவாக்கியும் உள்ளது.

பல்வேறு அரசு முகமைகளும், தலைமைகளும்  முரண்பாடான செய்திகளை அனுப்புவதன் மூலம், குறுக்கு நோக்கங்களில் வேலை செய்ததே நிலைமை நாசமாக போதுமானது.  (எடுத்துக்காட்டாக,பிரதமரே ஒருபக்கம் மிகவும் தாமதமாக, மீதமுள்ள மதச் சடங்குகளை ” குறியீடாக” நடத்தலாம் எனக் கூறிய அதே வேளையில், மேற்கு வங்காள தேர்தல் பேரணிகளுக்கு பெருமளவில் வெளியே திரண்டு வருமாறு அறிவுறுத்துகிறார்). இதில் மேலும் மோசமானது என்னவெனில், ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டிய நிலையில் எதுவும் செய்யாமலிருப்பது அல்லது எதுவும் செய்யத் தேவையில்லாத நேரத்தில் மிக அதிகமாகச் செய்வது அல்லது தரவுகளில் ஏமாற்றி நேரடியாகப் பொய்களைச் சொல்வது. (கடந்த சில நாட்களாக உ.பி.யில் உள்ள இறப்பு விகிதம் குறித்த தகவல்களைப் போல) இந்திய அரசும், உத்தரகண்ட் மாநில அரசும் மிகப்பெரிய அளவில் குழப்பிவிட்டதாக அனைவரும் கூறுகின்றனர். எவ்வாறாயினும், அவர்கள் செய்ததோ, செய்யாதததோ, கடந்த சுற்று கும்பமேளா நடந்து 83 ஆண்டுகள் கடந்து விட்டதோ இல்லையோ, இந்த கும்பமேளாவை ஒரு ஆண்டு முன்னதாக நடத்துவதற்கு எந்த நியாயமும் இல்லை. இவை அனைத்திலும், தடுப்பூசிகள் திட்டம் பெயருக்கு நடந்து வரும் இந்த சமயத்தில், மிகப்பெரிய அளவில் மக்கள் கூடுவதற்கு ஏதுவாக இருக்கும் கும்பமேளாவை நடத்துவதை எந்த வகையிலும் எவரும் நியாயப்படுத்த முடியாது. இதுவே தேர்தலுக்கும் பொருந்தும். மூளையுள்ள/ முதுகெலும்புள்ள தேர்தல் ஆணையாளர் இருந்தால் மிக எளிதாக தேர்தலை ஒத்தி வைக்க வலியுறுத்தி இருக்கலாம் அல்லது மிகப் பேரும் கூட்டம் கூடுவதற்கும் பேரணிகளுக்குமாவது தடை விதித்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை.

பொது சுகாதாரத்திற்கு ஏன் சோதிடம் துருப்புச் சீட்டாக இருக்க வேண்டும்?

இதற்குமுன் கும்பமேளாக்கள் ஒரு ஆண்டு முன்னதாக நடத்தப்பட்டு உள்ளனவா? ஆமாம் நடத்தப்பட்டுள்ளன.1938 லும், 1855 லும் இதே போன்ற ‘சோதிட உள்ளமைவுக்காக’  முன்னதாக நடத்தப்பட்டுள்ளன. நாம் இப்போது 1855 ல் அல்லது 1938 லா வாழ்கிறோம்? 1938 ல் இப்படி ஒரு காற்றில் பரவும் தொற்று நோய் இருந்ததா? உண்மையில் 1855 ல் காலரா நோய் இருந்தது. கும்பமேளா அதனை மேலும் மிக அதிக அளவில் பெருகச் செய்தது. இன்றைக்கு இருப்பதை விட தொற்று நோய்கள் பற்றி குறைவான புரிதலே  அப்போது மக்கள் பெற்றிருந்த போதும், அவர்களுக்குத் தெரிந்திருந்தது. கும்பமேளா சுற்றுவட்டாரத்திலிருந்து நோய் பரவியது குறித்த அறிக்கைகளை 1866 ம் ஆண்டு சுகாதாரத்திற்கான உலக மாநாடு குறிப்பாக கவனித்தது. கங்கை ஆற்றின் கரையில் உள்ள யாத்திரைத் தளங்களில் காலரா வளர்ந்து, அங்கிருந்து முதலில் மெக்காவிற்கும், பிறகு எகிப்து மற்றும் முக்கிய பெரிய ஐரோப்பிய நகரங்களுக்கு பரவும் முன் ஐரோப்பிய மத்தியதரைக் கடல் துறைமுகங்களுக்கு பரவியதை அந்த 1866 பிப்ரவரியிலிருந்து செப்டம்பர் வரை ஏழு மாதங்கள்,  அப்போதைய ஆட்டோமன் பேரரசின் தலைநகரான கான்டான்டிநோபிள்/ இஸ்தான்புல்லில் நடந்த உலக சுகாதார மாநாடு ஆவணப்படுத்தி உள்ளது.

ஹரித்வார் கும்பமேளா: ‘இது தப்லிக் ஜமாத் அல்ல; கங்கை மாதாவின் ஆசிர்வாதத்தால் நமக்கு கொரோனா வராது’ – பாஜக முதல்வர்

1938 லோ அல்லது 1855 லோ நோய்கள் பற்றி நாம் அறிந்திருந்ததை விட 2021 ல் அதிகமாக அறிந்திருக்கும் போது, ஒரு பகுத்தறிவுள்ள, விவேகமான அரசாங்கம் தனது இணக்கம் செய்யும் வலிமை அனைத்தையும் பயன்படுத்தி தங்களை சுயமாக நியமித்துக் கொண்ட ” புனித சாமியார்கள்’ கூட்டத்தை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும். குறைந்தது இம்முறை ‘சோதிடத்தை’ தற்காலிகமாக ஒதுக்கி வைத்து, மிக எளிதான இரண்டு கும்பமேளாக்களுக்கும் இடையே 12 ஆண்டு இடைவெளி என்ற கால கணக்கீட்டை ஏற்றுக் கொள்ளச் செய்திருக்கலாம்.

சாதாரண காரணத்திற்கும், நம்பிக்கைக்கும் இடையேயான ஒரு பகுத்தறிவுமிக்க, விவேகமான விவாதம் நடந்தி, அதன் மூலம் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்க வேண்டிய நிகழ்வில்லையா இது? இந்தியாவில் உள்ள அனைத்து சோதிடர்களையும் ஒன்றாக சேர்த்து அவர்களது விதிமுறைகளின் படி  கேட்டால் கூட, இத்தகைய ஒரு தொற்று நோய் நெருக்கடி ஏன், எப்படி வெடித்தது என்பதற்கான விளக்கத்தைக் கொடுக்க முன்வர இயலாத ஒன்றே, சிறிது காலத்திற்கு மட்டுமாவது, அதிலும் குறிப்பாக ஒரு அதிவிரைவு நோய் தொற்று பரப்பி நிகழ்வை அரசு ஆதரிக்கலாமா வேண்டாமா என்ற கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை வரும் போதாவது, ஓரளவு சோதிடத்தைக் கொஞ்சம் பின்னே வைக்கலாம் என்பதற்கு இது ஒரு சிறிய காரணமாக இருக்கலாம் அல்லவா?

1942: கும்பமேளாவைத் தடுத்து நிறுத்திய போர்

  இறுதியாக, கும்பமேளா நிகழ்வை எப்போதாவது அரசு முகமைகள் தடுத்து நிறுத்தியதுண்டா? ‘இந்த ஆண்டு வேண்டாம்’ என்று கூறியதற்கான முன்னுதாரணம் இருக்கிறதா? ஆமாம். இருக்கிறது.

1942 ல் அகமதாபாத்தில் நடைபெறவிருந்த மகா கும்பமேளா நிகழ்வுக்கு இந்திய அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. அலகாபாத் கும்பமேளா நடக்கும் முன்பும், நடைபெற்ற நாளும் தொடர்வண்டி கட்டணச் சீட்டு விற்பனை செய்யப்படவில்லை. இது தானாகவே அலகாபாத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைத்தது. இது, செப்டம்பர் 1940 ல் ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் நுழைந்ததால், எந்த நேரமும் ஜப்பானிய விமானப்படை தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக அறிந்ததால் எடுக்கப்பட்ட நடவடிக்கை. மேலும் விழா நடக்கும் இடத்தில் கூட்டத்தைக் கையாள எந்தவித திட்டமிட்ட ஏற்பாடுகளையும் அரசு செய்யவில்லை. இதனால் 1942 கும்பமேளாவில் மிகக் குறைவானவர்களே கலந்து கொண்டனர். அப்போது அரசு கும்பமேளாவிற்கு ஆதரவை விலக்கிக் கொண்டதற்காக எந்த ஒரு விரிவான எதிர்ப்பையும் அகாதாக்கள் தெரிவிக்கவில்லை. சூழ்நிலை மாறுபட்ட பதிலைத் தர வேண்டி கட்டாயப்படுத்தியது என்பதை அனைவரும் புரிந்து கொண்டிருந்தனர்.

அதிகாரத்தின் பொய்களுக்குப் பின்னால் இருக்கும் பெரும்பான்மை மனநிலை – அஜய் குடாவர்த்தி

இந்த முறை தொடர்வண்டிகளை ரத்து செய்வதற்கு பதில் இந்திய தொடர்வண்டித் துறை ஹரித்துவார் கும்பமேளா யாத்ரீகர்களுக்காக ரிஷிகேஷ்/டேராடூனுக்கு சிறப்புத் தொடர்வண்டிகளை இயக்கியது. மிக அதிக அளவில் மக்களைக் கூட்ட நாளிதழ்களிலும், வானொலியிலும், தொலைக்காட்சியிலும் அரசு விளம்பரம் செய்தது.

மரணம் தவிர்க்க முடியாதது. ஆனால் மரபுகள் தொடர் வேண்டும்

மிக எளிதாக தொடர்வண்டிகளை இயக்க வேண்டாம் என்றும், விளம்பரம் செய்ய வேண்டாம் என்றும் முடிவெடுத்து இருந்தாலே அது மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் இல்லை. அது எப்படி அவ்வாறு இருந்திருக்க முடியும்?

தேர்தல்களில் வெற்றி பெற வேண்டி உள்ளது, மேலும் ‘புனித சாமியார்களின்’ ஆதரவு எப்போதும் போல மிகவும் முக்கியமானது, அது போலவே, ஒப்பந்தங்கள் மூலமும், விளம்பரங்கள் மூலமும் பணம் ஈட்டுவதற்கும் பல லட்சக்கணக்கான மக்களை நோயின் பிடியிலும் பணப்பேய்களின் பிடியிலும்  சிக்க வைக்கவும் இது வாய்ப்பைத் தருகிறது. இந்திய அரசு மற்றும் உத்தரகண்ட் மாநில அரசின் தலைமையில் இருப்பவர்கள் ஒரு மரணப் பொறியை வைத்துள்ளனர். தாங்கள் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும். ‘புனித சாமியார்களுக்கும்’ என்ன நடக்கிறது என்பது முழுமையாகத் தெரியும்.

2021, ஏப்ரல் 17 அன்று  ஜூனா அகாதாவின் சாமியார் நாராயண் கிரி, தானும் பிற சாமியார்களும் ஏன் கும்ப மேளாவில் கூடுவதற்கு தடை சொல்லவில்லை என்பதற்கும், அவருக்கு ஹரித்துவாரில் அது வழக்கமான தொழில் என்பது பற்றியும் பேசிய போது  “மரணம் தவிர்க்க முடியாதது. ஆனால் நாம் நமது மரபுகளை பாதுகாக்க வேண்டும்,” என்று  கூறினார்.  

குறிப்பாக,  இதைவிட குறைவாக கூறியதற்காக தப்ளிக் இ ஜமாத்தை பகிரங்கமாகத் தாக்கிய போது, இந்த மரணத்திற்கான அழைப்பு ஏன் அனைத்து தளங்களிலும் எதிர்க்கப்படவில்லை என குறைந்த நுட்பமுள்ள மனம் கேட்கும்.  உண்மையிலேயே நுண்ணறிவுள்ள ” சனாதனியின்” மனம் ஏன் என்று புரிந்துக் கொள்ளும். கர்மாவாலும், மறுபிறவி கோட்பாட்டாலும் துணிச்சல் பெற்றுள்ள ஒரு நல்ல இந்துக்கள், வாழ்க்கை விளையாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகளைப் பெறலாம். மரணம் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால் புகழ் பெற்ற ஜூனா அகாதாவின் புனிதர்களுக்கு இது மீட்டமைக்க முடியாதது. நீங்கள் இன்று இறந்து போகலாம், ஆனால் நரேந்திர மோடிக்கு வாக்களித்ததன் மூலம் நீங்கள் பெற்ற கர்மவினை, உங்களை மீண்டும் நாளை கொண்டு வரும். அதுமேலும் வலிமையாக வேண்டும் என விரும்பினால் நீங்கள் கும்பமேளா குளத்தில்  இதைவிட ஒரு நீண்ட முழுக்குக் கூட ஏன் போடக் கூடாது. நீங்கள் உயிர் வாழுங்கள், நீங்கள் மடியுங்கள், நீங்கள் வாழுங்கள், நீங்கள் ஒரு தொற்று நோயை கடத்துங்கள், நீங்கள் மேலும் சிலரை கொலை செய்யுங்கள், நீங்கள் மடியுங்கள், நீங்கள் வாழுங்கள், நீங்கள் மடியுங்கள், இப்படியே தொடருங்கள்.

சிறுநீர் கழிக்கக்கூட உரிமை மறுக்கப்படும் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் – கைவிலங்கிடப்பட்டு கொரோனா சிகிச்சையளிக்கப்படும் அவலம்

நம்மில் சிலர் ஆசிர்வதிக்கப்படாமல் இருக்கலாம். ஏனென்றால், நம்முடைய  நம்பிக்கை அமைப்புகளில், அல்லது நம்பிக்கையற்ற அமைப்புகளில் நமக்கு உயிர் வாழ ஒரே ஒரு வாய்ப்புத் தான் கிடைக்கிறது. அதன்படி நம்மால் இயன்ற வரை நமக்கு கொடுத்த வாழ்நாளை நீட்டிக்க முயல்கிறோம், நமது உயிரை பாதுகாக்க முயல்வதுடன் மற்றவர்கள் உயிரையும் பாதுகாக்க முயற்சிக்கிறோம். முகக்கவசம் அணிவதன் மூலமும், கூட்டமாகக்  கூடுவதைத் தவிர்ப்பதன் மூலமாகவும், இயன்ற வரை இந்த நோயால் பாதிக்கப்பட்வர்களிடமிருந்தும், மதவாதத்திடபிருந்தும், அரசாங்க ரீதியாக நமது உயிரை பறிப்பவர்கள், மரணத்தைக் கொடுப்பவர்கள், மற்றும் பாதிப்பை ஏற்படுத்துபவர்களிடமிருந்தும் சமூக இடைவெளியைக் பின்பற்ற முயற்சி செய்வோம்.

அன்பு இந்தியர்களே, அன்பு இந்துக்களே, இவர்கள்தான் உங்கள் தலைவர்கள், இவர்கள்தான் உங்கள் புனித சாமியார்கள். அவர்கள் உங்கள் பிரதிபலிப்பு மற்றும் மணரண ஆசை. அவர்களை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களைப் பார்க்கப் போவதில்லை.

உங்களை அலட்சியமாகப் பார்க்கும் மேலே உள்ள நட்சத்திரங்கள் உங்களைப் பார்த்து சிரிக்கத் தேவைப்படுவதாக உணர்வதில்லை.   வெளிப்படையாக, நீங்கள் அவைகளைப் பற்றி என்ன நினைத்தாலும் அவைகள்  உங்களுக்காக சிறிதும் கவலைப்படுவதில்லை.

 

www.thewire.in இணைய தளத்தில் சுத்தப்ரதா சென்குப்தா எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்