Aran Sei

கொரோனாவுக்கு பாடம் புகட்டும் ஷைலஜா டீச்சர்

டந்த 2019-ஆம் ஆண்டில், தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்தியதற்கும், அதற்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்ததற்கும், மனநல மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளுக்கும் கேரள அரசிற்கு ஐநா-வின் ‘யுஎன்ஐஏடிஎப்’ விருது வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த ஜூன் 24-ல் ஐநா நடத்திய ‘ஐக்கிய நாடுகள் பொது சேவை’ நாள் மாநாட்டில் பேச அழைத்து, அவரை கவுரவித்தது.

இதற்கெல்லாம் முதற்காரணமாக சொல்லப்படுபவர் கேரள சுகாதாரத்துறை அமைச்சரான ஷைலஜா டீச்சர் என்று கேரள மக்களால் அழைக்கப்படுகிற கே.கே ஷைலஜா. ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான இவர், தொழற்சங்கத்திலும், மாதர் சங்கத்திலும் செயற்பாட்டாளராக இருந்தவர். மருத்துவ துறையோடு சம்பந்தமில்லாத இவர்தான், தொற்று காலத்தில் கேரளாவின் இந்த சாதனையை தன் திட்டமிடுதல்கள் மூலம் சாத்தியப்படுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரியில், மருத்துவ பயிற்சி பெற்ற தன் உதவியாளரிடம், சீனாவில் பரவ தொடங்கியிருக்கும் கோவிட்-19 என்கிற புதிய நோய் தொற்றை பற்றியும், அந்த நோய் கேரளாவில் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்று விசாரிக்கிறார். உறுதியாக இங்கே வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார் உதவியாளர்.

உடனே தன் குழுவுடன் தொற்று பரவலை தடுப்பதற்கான திட்டங்களை முடிவு செய்ய, ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அதன் படி, மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையும், கேரளத்தின் 14 மாவட்டங்களிலும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையும் உருவாக்கப்பட்டது. மாவட்டத்திற்கு இரு மருத்துவமனைகளும் இதற்கான ஒதுக்கப்பட்டது. மேலும் மாநிலத்தில் உள்ள பத்து மருத்துவ கல்லூரிகளிலும் 500 படுக்கைகள் ஒதுக்கப்பட்டன.

சீனாவின் ஹூஹான் மாகாணத்தில் இருந்து, ஜனவரி 27-ல் கேரளா வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் கொரோனா தொற்று நோயாளி அவர்தான்.

அதன் பின் கேரள சுகாதார துறையின் சரியான திட்டமிடுதலும், தடுப்பு நடவடிக்கைகளும் சூடு பிடித்தது. பள்ளிகள், கல்லூரிகள், மால்கள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் நடைமுறைப்படி நோய் தொற்று சோதனை, தனிமைப்படுதல், அவர்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவது ஆகிவற்றை செய்ய தொடங்கியது.

ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர் கடந்த மூன்று நாட்கள் எங்கெல்லாம் சென்றார், யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற விவரம் பெறப்படும். அவர் எந்த நாள், எந்த நேரம், எங்கு சென்றார் என்ற தகவல் போஸ்டர்களிலும், சமூகவளைதளங்களிலும், ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமும் எல்லோருக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் அந்த நோயுற்றவரோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு வரமுடியும். மேலும் அவர்களுக்கு நோய் தொற்று சோதனையும், தேவைப்பட்டால் தனிமைப்படுத்தலும் செய்யப்படும்.

தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட நோய் சோதனை முடிவுகள் வர ஒரு வாரம் ஆகும் நிலையில், 48 மணி நேரத்தில் முடிவுகள் தெரியும் வண்ணம் ஏற்பாடு செய்தார் ஷைலஜா. நோய் சோதனை கருவிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது, உடனடியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

மூன்று முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பயிலும் அங்கன்வாடிகள் தொற்று கட்டுப்படுத்தல் நடவடிக்கையால் மூடப்பட்டது. அந்த குழந்தைகளுக்கு அன்றாடம் கிடைக்கும் ஊட்டச்சத்து உணவு கிடைக்காமல் போவதால், அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைப்பாடு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் இது போல பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதால், அங்கன்வாடி குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு தயாரிப்பட்டு, குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று கொடுக்கப்பட்டது.

கேரளா மாநிலம் முழுவதும், ஒருகட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆரோக்கிய பணியாளர்களின் கண்காணிப்பில் இருந்தனர். முறையான கழிப்பறை வசதி இல்லாதவர்கள் அரசின் செலவில் தங்க வைக்கப்பட்டனர்.
மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கு  அரிசு, பருப்பு, சமையல் எண்ணெய், கொண்டக்கடலை, சோப்பு முதலான 15-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.

தமிழகம், கர்நாடகா போன்ற அண்டை மாநில தொழிலாளர்களும், மேற்கு வங்கம், பீகார் போன்ற வடமாநில தொழிலாளர்களும் விருந்தினர்களாக கருதப்பட்டனர். இந்த ஒன்றரை லட்சம் தொழிலாளர்களுக்கு ஆறு வாரங்களுக்கு மூன்று வேளை உணவும், சுகாதாரமான உறைவிடமும் வழங்கப்பட்டது. பின் அவர்கள் தனி ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.

தெலுங்கானா மருத்துவ குழு கேரளா சென்று அங்குள்ள மருத்துவ குழுக்களோடு ஆலோசனைகள் நடத்தி, அதன்படி தெலுங்கானாவில் நடவடிக்கைகள் மேற்கொண்டது.

இந்த திட்டமிடல்கள் குறித்து கேட்கயில், “ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒவ்வொரு மருத்துவ சுகாதார கொள்கைகள் உள்ளது. அதன்படி செயல்பட்டதால் தான், கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடிந்தது. மேலும் இந்த வெற்றிக்கு சுகாதார பணியாளர்களின் உழைப்பே காரணம்” என்கிறார்.

இதற்கு முன்பே ‘நிபா’ வைரஸ் பரவலின் போது ஷைலஷா டீச்சரின் தலைமையில், சுகாதார துறையும் மருத்துவ குழுக்களும் செயல்பட்டதை உலகம் முழுதும் உள்ள மருத்துவ துரையினர் பாராட்டினர்.

முறையான திட்டமிடுதல்களும் சரியான தகவல்களை பெறுவதன் மூலமே தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும். மாறாக விளக்கேற்றுவதாலோ மொட்டை மாடியில் நின்றுக்கொண்டு கை தட்டுவதாலோ ஒன்று நடந்து விடாது என்று செயலில் நிரூபித்திருக்கிறார் ஷைலஜ டீச்சர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்