Aran Sei

கே.பி.எஸ்.மணி – ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல்

மிழ்நாட்டில் இன்று உருப்பெற்றிருக்கும் பெரும்பான்மையான முற்போக்கு அரசியலைத் தொடங்கி வைத்தவர்கள் தலித்துகள். 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கிறது தலித்துகளின் நவீன அரசியல் வரலாறு. கல்விக்கான போராட்டத்தையும்  வாழும் உரிமைக்கான போராட்டத்தையும் இன்று வரையிலும் தலித்துகள் நடத்தி வருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காகவும் உரிமைக்காகவும் போராடியவர் கே.பி.எஸ்.மணி. இன்று அவருடைய நூற்றாண்டு நாள்.அவரை நினைவு கூர்வதென்பது தலித் போராட்ட வரலாற்றை நினைவு கூர்வதாகும்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  பனங்காட்டான் தெருவில் 22 பிப்ரவரி 1922ம் ஆண்டு  கே.பாலசுப்பிரமணி என்கிற கே.பி.எஸ். மணி  பிறந்தார். தன்னுடைய பள்ளி பருவத்தை 1927 ஆண்டு சீர்காழியில் உள்ள  ஊழியக்காரன் தோப்பு நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை  பயின்றார். 1932ம் ஆண்டு ஆறாம் வகுப்பு முதல் சீர்காழி நகரில் உள்ள எல். எம். சி. மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பை தொடர்ந்தார்.

‘மோடியின் ஆட்சியில் சீரழிந்த ஜனநாயகம்’ – கல்வியாளர் பிரதாப் பானு மேத்தாவோடு ஓர் உரையாடல்

கே.பி.எஸ். மணி அவர்கள் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இணைந்து  இரண்டாம் உலகப்போர் மற்றும் பிரிட்டிஷ் இந்திய- ஜப்பான்  போரில் வீரராக பணியாற்றினார். குடும்ப சூழல் காரணமாக 1946ம் ஆண்டு தன்னுடைய ராணுவ பணியை துறந்தார்.

ராணுவத்திலிருந்து வந்த பிறகு  பட்டியல் சமூக மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார் அதன் தொடக்கமாக 1948ஆம் ஆண்டு அவர் சொந்த ஊராகிய சீர்காழியில் “சாதுவன் மாணவர் இல்லம்” என்ற விடுதியைத் தொடங்கினார். ஏழை குடும்பங்களைச் சார்ந்த சிறுவர்களுக்கு வசதி செய்து கொடுத்து அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் சாதி மத வேறுபாடுகள் இல்லாமல் கல்விகற்று முன்னேறவும் அந்த விடுதியை தொடங்கி நடத்தினார். தொடக்கத்தில் 120 சிறுவர்கள் அதில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பின்னர் அதன் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது.

நாம் கதைகளால் வீழ்த்தப்பட்டவர்கள் – ஸ்டாலின் ராஜாங்கம்

தன்னுடைய அரசியல் வாழ்க்கையை பேராசிரியர் என்.சிவராஜ் தலைமையில் இயங்கிய அகில இந்திய பட்டியலின கூட்டமைப்பின் தமிழ்நாடு இணைச் செயலாளராக தொடர்ந்தார். இதன் மூலம் பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்தார்.குறிப்பாக சாதிய நிலவுடைமை ஆதிக்கத்திற்கு எதிராகவும் இழி தொழிலுக்கு எதிராகவும்  குரல் கொடுத்து வந்தார். தீண்டாமை ஒழிப்பு, சாதிப் பாகுபாடுகள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு அரும்பணியாற்றினார்.

தேச விடுதலையும் சமூக விடுதலைக்கும் பின்னிப்பிணைந்து மாபெரும் போராட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் பெரும் நிலவுடைமையாளர்கள் ஏழைத் தொழிலாளர்களுக்கான பிரச்சினைகள், வறுமை உள்ளிட்ட கொடுமைகள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில். நிலமற்ற ஏழை எளிய விவசாய மக்களுடன் இணைந்து அவர் மாபெரும் போராட்டத்தை தஞ்சை மண்ணில் நடத்தினார். ஏழை எளிய மக்களுக்காக போராடிய வேளையில் ஆட்சியாளர்கள் கடுமையான ஒடுக்குமுறைகளை ஆட்சியாளர்கள் கையாண்ட பொழுதும் மக்களின் பெரும் செல்வாக்குடன் இவர் அப் போராட்டங்களில் இருந்து வெற்றி கண்டார்.

தன்னுடைய முதல் தேர்தல் அரசியலை 1952 ஆம் ஆண்டு பெடரேஷன் சார்பாக மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  இந்திய குடியரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும், 1967 இல் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு ஏராளமான வாக்குகளுடன் வெற்றி வாகை சூடினார். பின்னர்,  காங்கிரஸ் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினராகவும்  செயல்பட்டார். அடி உதை பெறுபவர்களுக்கு காவல்துறையும், அரசும் உதவாது அடி மட்டுமே உதவும் திருப்பித்தாக்குங்கள் என்று கூறியவர் மணி. தலித போராட்ட வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர்.

இராணுவவீரரான கே.பி.எஸ்.மணி அவர்கள் சாதுவன் ஏழை மாணவர் விடுதி நிறுவனர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றியபெருந்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து மக்கள் பணியாற்றியுள்ளார். இப்படியாக அரசியல் தளத்தில் தொடர்ந்து பணியாற்றிய கே.பி.எஸ் மணி 1990ம் ஆண்டு மார்ச் 16 ஆம் நாள் காலமானார்.  மக்கள் பணி செய்த போராளி கே.பி. எஸ்.மணி அவர்களின் நூற்றாண்டை சீர்காழி நகரில் வரும் 27 பிப் 2022 அன்று அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் கொண்டாட இருக்கிறது. மகத்தான போராளிக்கு அரசு உரிய மரியாதை செலுத்தும் வகையில் அஞ்சல் தலை, மணிமண்டபம் அமைத்து  நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்கிற கோரிக்கை இயல்பாகவே மக்களின் மனதில் எழுகிறது.

“நந்தனார் புராணமும், பள்ளுப்பாட்டும் பாட நூல்களில் இடம்பெறுவதால் விளைவது என்ன?”

கே.பி.எஸ்.மணி  (சட்டமன்ற உரை, 22.03.1968, விடுதலை நாளேடு)

“பாடப்புத்தகங்களிலே  இடைக்காலத்தில் செருகப்பட்ட இலக்கியங்கள் சமூகத்தின் பெயரால்,ஜாதியின் பெயரால் ஒரு வகுப்பினரை பழித்தும் இழித்தும் கூறுகின்றன. எஸ்.எஸ்.எல்.சி பாடப்புத்தகத்தில் என்ன விஷயம் வந்திருக்கிறது என்று பார்த்தால், திருநாளைப் போவார் புராணம் பாடமாக வந்திருக்கிறது…

என்னுடைய கருத்து என்னவென்றால் ஒரு தனிப்பட்ட சமூகத்தினரை பழித்தும் இழித்தும் கூறும் நிலையில் இருக்கும் திருநாளைப் போவார் கதை வேண்டாம் என்பது தான்.

கேள்வித்தாளில் என்ன கேட்டிருக்கிறார்கள்? “புலைப்பாடியின் இயல்பைத் தொகுத்து எழுதுக”என்று கேட்கிறார்கள். இது இலக்கியமாக இருக்கலாம். அதில் இலக்கணம் இருக்கிறது என்றும் சொல்லலாம். ஆனால் உண்மையிலேயே ஒரு சமூகத்தை தாக்கி எழுதியிருப்பதை நாம் பார்க்கிறோம். அதை படிக்க வேண்டுமா?

‘ஒருத்தரைக் கீழ இறக்கி மேல ஏற ஆசப் பட மாட்டேன்!’ – `கானா’ இசைவாணியின் வெளியேற்றமும், தட்டிக் கேட்காத `மய்யம்’ கமல் ஹாசனும்!

அதேமாதிரி இன்னொரு பெரிய விஷயம்  ‘பள்ளுப்பாட்டு’ என்று இருக்கிறது. அது பி.ஏ பாடம்.பி.ஏ.மாணவருக்கு அந்தப் பாடம் அவசியம்தானா? ஒரு புலையன் இரண்டு புலைச்சியை கட்டிக்கொண்டான். ஒருத்தி விஷ்ணு மதம்.இன்னொருத்தி சிவமதம்.இரண்டு பேருக்கும் சண்டை.

பி.ஏ.படிக்கிற பையனுக்கு இந்த பாடம் எல்லாம் தேவைதானா? தனிப்பட்ட பெயர்களை இழித்துப் பழித்து கூறும் பாட்டுகளும் தேவையா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்”

கட்டுரையாளர் – அருள் முத்துக்குமரன், எழுத்தாளர். 

‘ஓணம் பண்டிகை’ எனும் நூலின் ஆசிரியர்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்