Aran Sei

ஜம்மு காஷ்மீர் – உரிமையை இழந்த மக்களின் கதை

தனது சமீபத்திய ஒற்றை அரசிதழ் வெளியீட்டின் மூலம், ஜம்மு காஷ்மீரின் நிலங்களை வாங்கவோ விற்கவோ இருந்த அனைத்து முன் நிபந்தனைகளையும் நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம் துடைத்தெறிந்து விட்டது.

இதனை காஷ்மீரின், குப்கார் பிரகடன மக்கள் கூட்டணி (People’s  Allience for Gupkar Declaration-PAGD) ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தீங்கு விளைவிக்கக் கூடியது என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஜம்முவும் கூட மத்திய அரசின் இந்தச் செயலை மிகவும் கவலைக்குரியது எனத் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா “இது மக்கள் தொகையியலில்                       (demographic) மாற்றத்தை ஏற்படுத்தும். இன்றைய ஆணையின் மூலம் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலம் என்ற பண்பை மாற்றுவதற்கு முயல்வதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். ஜம்முவைச் சேர்ந்த மக்கள் இதனால் மிகவும் கவலையான நிலைக்குத் தள்ளப்படுவர். காஷ்மீர் மக்களைப் பாதிக்கும் முன் ஜம்மு மக்களைத்தான் முதலில் பாதிக்கும்” என்று கூறியுள்ளார்.

1938, ஜம்மு காஷ்மீர் அந்நிய நிலச் சட்டத்தையும், 1950 பெரும் நில தோட்டங்கள் நீக்கச் சட்டத்தையும், 1960 நில மானியச் சட்டத் திருத்த அறிவிப்புகளையும் திரும்பப் பெற்றதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் நிலத்தை வாங்கவோ விற்கவோ ” நிரந்தரக் குடிமகனாக” இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி உள்ளது இந்த ஆணை. ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற இந்தியாவிலேயே மிக முன்னேறிய நிலச் சீர்த்திருத்த சட்டமாகக் கருதப்பட்ட பெருநிலத் தோட்டங்கள் நீக்கச் சட்டத்தை ( Big Estates Abolition Act) திரும்பப் பெற்றிருப்பது முரண்பாடான ஒன்றாகும்.

நிலத்தை வாங்கவும் விற்கவும் ‘மாநில குடிமகனாக’ இருக்க வேண்டும் என்பது காஷ்மீர் மக்களின் நீண்ட நாளைய அவசியமான‌ கோரிக்கை ஆகும். முன்னாள் அரசரும்கூட, சமூக – பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ள இந்தப் பகுதி மக்களுக்கு, அதன் அவசியத்தை உணர்ந்து, அதனை ஏற்றுக்கொண்டார். இந்தச் சட்டத்தை நீக்கியதன் மூலம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி இருக்கிறது மத்திய அரசு.

இந்தக் கோரிக்கை எப்படி எழுந்தது

ஜம்மு காஷ்மீர் தன்னாட்சி பெற்ற அரசாக விளங்கியபோது பெரும்பான்மையான முஸ்லிம்களை விட அதிகக் கல்வி அறிவு பெற்றவர்களாகவும், அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்களாகவும் இருந்த காஷ்மீர் பண்டிட்டுகள் எனப்படும் பிராமணர்கள், இத்தகைய பாதுகாப்புத் தேவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நடத்திய போராட்டத்திலிருந்துதான் இது தொடங்கியது.

காஷ்மீரின் முதல் அரசர் குலாப் சிங், திவான் சவாலா சகாய் என்ற ஒரு பஞ்சாபியிரை  அரசின் முக்கியப் பதவியில் அமர்த்தியதைத் தொடர்ந்து அன்றைய  காஷ்மீர் பிராமணர்கள் நிர்வாகத்தில் பஞ்சாபியர்களை வைத்துக்கொள்ளும் போக்கை எதிர்த்தனர். அந்த சகாய், பின்னர் டோக்ரா ஆட்சியில் பிரதம அமைச்சராகவும் இருந்தார்.

இந்தக் காலகட்டத்தில் மிக அதிக அளவிலான பஞ்சாபியர்கள் காஷ்மீருக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் டோக்ரா அரசாங்கத்தில் அனைத்து முக்கிய உயர் பதவிகளையும் பிடித்துக்கொண்டனர். நிர்வாகத்தில் அவர்கள் ஆதிக்கம் அதிகமானதால், பெரும்பாலான அறக்கட்டளைகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இதன்மூலம் ஏராளமான நிலங்களை பஞ்சாபியர்கள் மானியமாகப் பெற்றனர். அதிகாரத்திலும், நில ஆக்கிரமிப்பிலும் காலூன்றி விட்ட பஞ்சாபியர்கள் வணிகத்திலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கினர்.

இவ்வாறு குடிபெயர்ந்தவர்களால், தாங்கள் ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தால் காஷ்மீர் பிராமணர்கள் கலகத்தைத் தொடங்கினர். இந்தக் கலகத்தை இந்து டோக்ராக்கள் ஆதரித்தனர். ஏனெனில் அவர்கள்தான் முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, நவீனக் கல்வி முறையின் பயனை முதலில் அறுவடை செய்தவர்கள்.

ஜம்முவில் இந்தப் போராட்டங்கள், டோக்ராவுக்கும் பஞ்சாபிகளுக்குமான தீவிரப் போராட்டமாக வெடித்த நிலையில், காஷ்மீரில், காஷ்மீர் பிராமணர்கள் “வெளியாட்களை எதிர்ப்பது” என்ற அடிப்படையில் பிரிட்டிஷ் அதிகாரிகளின் நுட்பமான உதவியைப் பெற்றனர். மிக நீண்ட போராட்டத்திற்குப் பின், மகாராஜா ஹரிசிங், 1927 ஏப்ரல் 20 ல் மாநில மக்கள் சட்டத்தை அறிவித்தார். “மாநில மக்கள்” என்ற சொல்லுக்கான விளக்கம் விரிவானது. அது காஷ்மீரிகளாகவோ, டோக்ராக்களாகவோ, பஞ்சாபியர்களாகவோ யாராக இருந்தாலும் சமப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தது.

இந்த மாநில மக்கள் சட்டம்தான், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த போது “நிரந்தரக் குடிமகன்கள்” என்ற வடிவில் தொடர்ந்து உள்ளூர் மக்களின் நில மற்றும் வேலை வாய்ப்பைப் பாதுகாத்து வந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் மக்களைப் புதிய சவால்கள், முரண்பாடுகளில் சிக்க வைத்து, கலவர பூமியாக, “வெடிக்கான தீப்பொறி” என்ற தேவையற்ற புனை பெயரை ஏற்கச் செய்துள்ளது.

இந்தப் பிரச்சினைகளின் தொடர்ச்சி, இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பாதுகாக்க, இந்தப் பின்தங்கிய மக்களின் நலனுக்காக அரசரால் தரப்பட்ட நிலம் மற்றும் வேலை பாதுகாப்புச் சுவரை இடிக்க வழி கொடுத்தது. தற்போது அந்த மக்களின் நில உரிமைப் பாதுகாப்பை நீக்கியிருப்பது அழிவிலேயே முடியும். ஜம்மு காஷ்மீருக்கு வெளியே இருந்து வரும் பெரும் நில முதலைகளிடமிருந்து தங்கள் நிலங்களை உள்ளூர் மக்கள் பாதுகாக்க இயலாமல் போகும்.

பிற மாநிலங்களில் நிலப் பாதுகாப்பு

உள்ளூர் மக்களுக்கான வேலை மற்றும் நிலப் பாதுகாப்பு என்பதை ஜம்மு காஷ்மீர் மட்டும் அனுபவிக்கவில்லை. பிற, பல மாநிலங்களும் இது போன்ற பாதுகாப்பை அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலமும் பிற சட்டங்கள் மூலமும் பெற்றுள்ளன.

இமாசலப் பிரதேச மாநிலம், மாநிலத்திலேயே 20 வருடங்கள் வாழும் தங்கள் மாநிலக் குடிமக்கள், நிலத்தை விற்பதையும், பெயர் மாற்றம் செய்வதையும் தடுக்கப் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி உள்ளது. எனினும் பெயர் மாற்றம் செய்வதில், தனித்தனியாக நிலைமைக்கு ஏற்ப சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

2019 ல் மேகாலயா மாநில அரசின் மனு மீதான விசாரணயில் உச்ச நீதிமன்றம், உள்ளூர் மக்கள் தங்கள் நிலத்தையும், வளத்தையும் விற்பதற்கு முழு உரிமை உடையவர்கள் என்றும், சுரங்கத் தொழிலுக்கு அனுமதி வழங்குவது அவர்களது தனி உரிமை என்றும் தீர்ப்பளித்துள்ளது. மேகாலயாவைப் போலவே, பல மாநிலங்களும், அரசியல் அமைப்பின் ஆறாவது அட்டவணைப்படி இது போன்ற பாதுகாப்பை அனுபவித்து வருகின்றனர்.

அதே போல, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 371-F பிரிவு சட்டத்தின்படி, சிக்கிம் மக்கள் தங்கள் நிலத்தை விற்பதில் தனி உரிமையைப் பெற்றுள்ளனர். சிக்கிமின் மலைவாழ் மக்கள் பகுதியில் இந்தச் சட்டம் இன்னும் கடுமையாக உள்ளது. இந்தப் பகுதி நிலங்களை மலைவாழ் மக்கள் மட்டுமே வாங்க முடியும். எனினும் தொழிற்சாலைப் பகுதிகளில், தொழில்மயமாக்கலின் நலனுக்காகக் குறிப்பிட்ட தொழிற்சாலைகளை அமைப்பதில் சில தளர்வுகளை இச்சட்டம் கொடுத்துள்ளது‌.

அரசியல் சாசனம் 371-A பிரிவு, நாகாலாந்து மக்கள், உள்ளூர் மக்களைத் தவிர மற்றவர்களில் யார்யார் நிலத்தை வாங்கலாம் அல்லது நிலத்தை பெயர் மாற்றம் செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு அளித்துள்ளது. இதைப் போன்றே, 371-G படி மிசோராம் மாநில சட்டமன்றம் மாநிலத்தின் நிலங்களின் உரிமையாளர்களை, ஒழுங்கு படுத்தவும் பெயர் மாற்றம் செய்யவும் சில சிறப்பு உரிமைகளைப் பெற்றுள்ளது‌.

உள்ளூர் மலைவாழ் மக்களின் நலனை முன்னிறுத்தி, அருணாசலப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையின் கீழ் வரும் பிற பத்து மாநிலங்கள், நிலங்களை வாங்குவதற்கும் பெயர் மாற்றம் செய்வதற்கும் தடைகளை விதிக்க தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக, புதிதாக அமைக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசப் பகுதிக்குக் கூட ஆறாவது அட்டவணைப்படி சிறப்புத் தகுதி தரப்பட்டுள்ளது. அதன்மூலம், அதன் கலாச்சார, வேலைவாய்ப்பு, நில உரிமை ஆகியவை பாதுகாக்கப்பட்டுள்ளன.

மேலே சுட்டிக் காட்டிய அனைத்தும் உரிமைகளை மற்றவர்கள் தடையின்றி அனுபவிக்கும் போது, தங்களுக்கு மட்டும் மறுப்பது, மத்திய அரசு பாகுபாடுடன்தான் நடந்துகொண்டுள்ளது என்ற காஷ்மீர் மக்களின் குற்றச்சாட்டில் உண்மை உள்ளதைப் புலப்படுத்தும்.

கைவிடப்பட்ட உறுதிமொழிகள்

ஜம்மு காஷ்மீரின் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் இந்தப் பாதுகாப்புகள் தடையாக இருப்பதாக மத்திய அரசு வாதிடுகிறது. இவற்றை நீக்கியதன் மூலம் முதலீடுகள் பெருகும் எனக் கூறும் மத்திய அரசு, 371 சட்டப்பிரிவின்படி பல மாநிலங்கள் இந்தப் பாதுகாப்புகளைப் பெற்றுள்ளதை ஆதரிப்பது ஏன்? இதே மத்திய அரசு முன்னதாகப் பலமுறை ஜம்மு காஷ்மீர் மக்களின் வேலைவாய்ப்பும் நில உரிமையும் என்ன விலை கொடுத்தேனும் பாதுகாக்கப்படும் என்றும், நாட்டின் எந்தப் பகுதியிலும் இல்லாத மேலான உள்ளூர் கொள்கையைப் பின்பற்றும் என்றும் உறுதி அளித்திருந்தது.

370வது பிரிவை நீக்கிய உடனே, மோடி ஜம்மு காஷ்மீர் மக்கள் புதிய அரசியலின் விடியலை, செழுமையான வளர்ச்சியை, முன்னேற்றத்தையும் காணப்போவதாகவும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவரும் இதில், தான்உறுதியுடன் இருப்பதை நம்ப வேண்டும் என்றும் கூறினார். சொத்துரிமை மற்றும் மாநிலத்திற்கே உரிய அடிப்படையான  கோரிக்கைகளையும் பிற தேவையான உடனடி நடவடிக்கைகளையும் புறக்கணித்து விட்டு, தன் சொந்த வடிவிலான முன்னேற்றத்தைப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசங்களில் திணிப்பது மீண்டும் நிலையற்ற தன்மைக்கே வழிவகுக்கும். மாறாக, மத்திய அரசு சட்டமன்ற தேர்தலை நடத்தி மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக்  கூற வழி வகுக்க வேண்டும்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன், 1846 ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, மகராஜ் குலாப் சிங் எழுபத்தைந்தாயிரம் (நானாக்ஷாஹி) ரூபாய்களுக்கு இந்த காஷ்மீரை வாங்கி ஜம்மு காஷ்மீர் தன்னாட்சி அரசை உருவாக்கினார். அந்த ஒப்பந்தம் மறைமுகமாக காஷ்மீர் “விற்பனைப் பத்திரம்” என்று கூறப்படுகிறது. தங்கள் நிலத்தைப் பற்றிய நடவடிக்கைகளில் எதுவும் சொல்ல முடியாத, தங்கள் சொந்த வாழ்வை வடிவமைக்க உரிமையற்ற காஷ்மீர் மக்கள் இந்த மறு விற்பனையை எப்படி பார்க்கிறார்கள் என்பதை மத்திய அரசு பரிசீலனை செய்யும் என நம்புவோம்.

(www.thewire.in இணையதளத்தில், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாசித் அமின் மக்தூமி எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்