Aran Sei

ஜம்மு காஷ்மீர் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் – உண்மையில் வெற்றி பெற்றது யார்?

குப்கர் கூட்டணி - Image Credit : thewire.in

மாவட்ட மேம்பாட்டு மன்றங்களின் (DDC) அரசியல் அதிகாரம் மிகக் குறைவுதான். இருந்தாலும், தங்கள் அற்பமான செயல்பாட்டின், பொருந்தாத விகிதாச்சார அளவுகோலாக, மத்தியில் ஆளும் பாஜக அரசு, அண்மையில் ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தியது.

இதற்கான காரணங்கள் வெளிப்படையானவை. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது முதல் காஷ்மீரிகளை எதிர்த்து ‘அழித்து முன்னேறும் (scorched earth policy) கொள்கையை’ கடைபிடித்தது. இந்த பிரதேசத்தை அனைவருக்கும் திறந்து விடும் நிலைச் சட்டங்கள், தாராளமய குடியேற்றச் சட்டங்கள் ஆகியவற்றை இயற்றியதுடன், காடுகளை அழிக்கும் இயக்கங்களை நடத்தியது. புதிய சொத்து வரி, மாநில வளங்களை வெளியாட்களுக்கு திறந்து விடுவது போன்றவற்றின் மூலம் காஷ்மீரிகளின் மைய நிலையைக் குறைக்கும் நிர்வாக கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டு வந்தது. புலம்பெயர் தொழிலாளர்களை கவரும் வகையில் சட்டங்களை நிறுவியது‌. ஓய்வு பெறும் வயதைக் குறைத்தது. இந்திய ஆட்சிப் பணி(IAS), இந்திய காவல்துறை அதிகாரிகளுக்கான மத்திய ஒதுக்கீட்டை 50% லிருந்து 33% ஆக குறைத்தது.

மாவட்ட மேம்பாட்டு மன்றங்களிலும்கூட ஒன்றுடன் ஒன்று படியும் அதிகார வடிவமைப்பை உருவாக்குவதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தை குறைத்து, மத்திய அரசின் பணியில் நீடிக்கும், தேர்ந்தெடுக்கப்படாத அரசு ஊழியர்கள் கையில் அதிகாரத்தை குவித்தது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் காஷ்மீரின் அன்றாடப் பொதுவாழ்க்கையை மையமாகக் கொண்ட இயல்பானப் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது ஒரு துல்லியமான நோக்கத்தைக் கொண்டது. காஷ்மீரிகள் தங்கள் நெருங்கிய தாக்குதலை உணர்ந்து, ஒரு புதிய அரசியல் கட்டாயங்களால் தங்களைத் தாங்களே சிக்க வைத்துக் கொள்ளாவிட்டால் அவர்கள் “பிரிவினை வாதத்தைக்” கைவிட மாட்டார்கள் என்பதே அந்த நோக்கம். ஆனால் அதே நேரத்தில், இந்தக் கொள்கைகள் உருவாக்கிய எதிர்ப்புக் கூக்குரல்களும், மோடி அரசு அந்தக் கொள்கைகளை,  இந்த பிரதேசத்தில் நிறுவ மேற்கொண்ட கொடூரமான வழிகளும் (இராணுவ சட்டங்கள், பொது மக்கள் தடுப்புக்காவல், கண்காணிப்பு, அச்சுறுத்தல், இணைய முடக்கங்கள் ஆகியவற்றின் முரட்டுத்தனமான கலவையாகும்) இயல்பான நிலையில் இருப்பதைப் போன்ற தோற்றத்தைக் காண்பிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால்தானோ என்னவோ,  ஒன்றிய அரசு 2018 லிருந்தே வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் நுழைவதற்குத் தடை விதித்திருக்கும் போதும், நியூயார்க் டைம்ஸ், ஃபைனான்ஸியல் டைம்ஸ் போன்ற உயர்ந்த பத்திரிகையாளர்களை பொதித்து வைத்த பத்திரிகையாளர்கள் குழுவை காஷ்மீருக்குள் வழி நடத்தியது

‘ஒரு முழுமையான படுதோல்வி’

பாஜகவுக்கு, இந்த தேர்தல்கள், பிரிவு 370 ஐ திரும்பப் பெற்றதற்குப் பின், எதற்குள் ஜம்மு காஷ்மீரை வீசியதோ அந்த  அமைதியின்மை, அரசியல் அடக்குமுறை மூலம் அடையப்பட்ட ‘அமைதி’ ஆகியவற்றை அளவிடும் வழியாக இருந்தது.

சிறிதளவே வாய்ப்பிருந்த தனது வெற்றியை உருவாக்க, பாஜக செல்லக்கூடிய வியக்கத்தக்க எல்லையை இந்த தேர்தல்கள் வெளிப்படுத்தி உள்ளன.

ஆரம்பத்திலேயே ஜம்மு காஷ்மீரில் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி (PAGD) வேட்பாளர்களை பரப்புரைச் செய்வதை மட்டுப்படுத்தியது. லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறை மூலம், எதிர்கட்சித் தலைவர்கள் குறி வைக்கப்பட்டனர். மக்கள் ஜனநாயகக் கட்சியின் வாஹித் உர் ரஹ்மான் பாராவை, போராளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தேசிய புலனாய்வு முகமை(NIA) விசாரணைக்கு அழைத்தது. தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இப்போது தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. போட்டியிட்ட 235 தொகுதிகளில் 75 தொகுதிகளை கைப்பற்றியுள்ள பாஜக, வெற்றி பெற்று விட்டதாகக் கூறுகிறது‌. அதன் முடிவுகள் தொழில்நுட்ப ரீதியாக தவறாக வழிநடத்துகிறது. ஏனெனில் அது அறுவடை செய்ய முடிந்திருக்கும் வாக்குகள் முக்கியமாக ஜம்மு, கத்துவா, சம்பா, உதம்பூர், ரியாசி ஆகிய இந்து பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் இருந்து வந்தவை ஆகும். காஷ்மீரில் 33% பேர் வாக்களித்துள்ளதை ஒப்பிடும் போது ஜம்முவில் ஒட்டு மொத்தமாக 68% பேர் வாக்களித்துள்ளனர். உண்மையில், கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வாக்கு சதவீதத்தில், சதி செய்து பெற்ற 59% வாக்குகளிலிருந்து தற்போது சரிந்து 34% வாக்குகளையே பாஜக பெற்றுள்ளது. மேலும், கத்துவாவில் சமாஜ்வாடி கட்சி தனது கணக்கைத் திறந்திருப்பது,  சாதிய காரணி பாஜகவுக்கு தீங்கு விளைவிக்கும் பாத்திரத்தை வகிக்க தொடங்கிவிட்டதை குறிக்கிறது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பூன்ச் பகுதியில் ஒரு இடத்தைக் கூட பாஜக பெறவில்லை‌.

இதற்கெல்லாம் மேலாக, தேசிய மாநாட்டு கட்சி ஜம்முவில் 25 இடங்களை வென்று அங்கு ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது. ஜம்முவின் ராம்பன், கிஷ்ட்வார், ரஜோரி மாவட்டங்களில் முறையே ஆறு, ஆறு, ஐந்து இடங்களை வென்று, தேசிய மாநாட்டு கட்சி பலத்தை நிரூபித்துள்ளது. இந்த கட்சி 168 இடங்களில் போட்டியிட்டு 67 இடங்களையும், மக்கள் ஜனநாயக கட்சி 68 இடங்களில் போட்டியிட்டு 27 இடங்களையும் வென்றுள்ளன.

தற்போது திகார் சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கிய முகமான வாஹித் உர் ரஹ்மான், தனது புல்வாமா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். என்ஐஏ வழக்கு அந்த கட்சியை பாதிக்கும் என பாஜக நினைத்திருந்தால், அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. வாஹித் உர் ரஹ்மான் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரது கட்சி, எல்லை கிராமத்தில் உள்ள நவ்ஷெரா தொகுதியையும் வென்றுள்ளது. பாஜகவின் மாநில தலைவர் ரவீந்திர் ரெய்னாவின் சொந்தத் தொகுதியான இதில், 2904 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் ஜனநாயக கட்சி வென்றுள்ளது.

மேலும், சஜாத்லோனின் மக்கள் மாநாட்டு கட்சி (PC) மிக அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. “நாங்கள் 10 இடங்களில் போட்டியிட்டு எட்டு இடங்களை வென்றுள்ளோம். குப்வாராவில் போட்டியிட்ட ஆறில் ஐந்து இடங்களை வென்றுள்ளோம்.” என்கிறார் அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் அட்னான் அஷ்ரஃப் மிர்.

அதிகாரத்தின் நுகத்தடிகளைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அதனை தடையின்றி தனக்குச் சாதகமாக கையாள முனைப்புக் காட்டிய நிலையிலும், மாநில அரசியல் கட்சிகள், ஒரு குழுவாக இணைந்து தேர்தல் கூட்டணி அமைப்பது, சக்திவாய்ந்த தந்திரமாக மாறி, பாஜகவின் சொந்த விளையாட்டில் அதை விஞ்சி விட்டதையே இது காட்டுகிறது.

காஷ்மீர் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான கோஹன் கிலானி, “பாஜக, ஜம்மு காஷ்மீரில் அடைந்திருப்பது  படுதோல்விக்குச் சற்றும் குறைவானதல்ல. பொதுவாக காஷ்மீர் தேர்தல், மின்சாரம், தண்ணீர், சாலைகள் ஆகியவற்றைத் தருவது என்ற தளத்திலேயே நடைபெறும். இம்முறை குப்கார் கூட்டணி வெளிப்படையாக பிரிவு 370ஐ மீண்டும் நிறுவுவது என்பதற்காகப் போராடி, அவர்கள் முழுவதுமாக வெற்றி பெற்று, பாஜகவை ஓரங்கட்டி விட்டார்கள்.” என்கிறார்.

பாஜக வென்ற மூன்று இடங்களிலும்கூட,  சில நூறு வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும் உண்மை. இந்த வெற்றிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பலவேறு  அளவுகளில் நடந்த தேர்தல் புறக்கணிப்பின் மீது கிடைத்த வெற்றிதான். 67% பேர் வாக்களிக்க வரவில்லை. பாஜகவின் வெற்றிக்கு மற்றொரு காரணி குப்கார் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ‘பதிலி (proxy)’ வேட்பாளர்களை நிறுத்தியதுதான். பாஜக வென்ற புல்வாமாவின் காகபோரா  தொகுதியில், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் குப்கார் கூட்டணியைச் சேர்ந்த அதிகார பூர்வ ஜனநாயக கட்சி வேட்பாளருக்கும், அதன் கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளர் எனக் கூறப்படுபவருக்கும் பிரிந்துவிட்டன.‌ இதனால் பாஜக, மிகக்குறைவான, வெறும் 14 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

“தேர்தல் புறக்கணிப்பு உண்மையில் பாஜகவின் நலன்களுக்கு சாதகமாகி விட்டது. அவர்கள் முக்கிய கட்சிகள் புறக்கணிக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை” என்கிறார் கிலானி.

இந்த தேர்தல் முடிவுகளின்படி, ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 20 மாவட்ட மேம்பாட்டு மன்றங்களில் பதிமூன்றை குப்கார் கூட்டணி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இந்த மன்றங்கள் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக மட்டுமே செயல்பட  வேண்டிய கட்டாயம் இருந்தாலும், பெரிய அரசியலில் எதுவும் பங்காற்ற முடியாது என்றாலும், பிரிவு 370 போன்ற பிரச்சினைகளில் தங்கள் குரலை உயர்த்தக் கூடிய திறனைக் கொண்டுள்ளனர்.  அவர்களை எளிதாக, மைய நீரோட்டத்தில் உள்ள அரசியல் வாதிகளை ஓரங்கட்டுவது போல் ஓரங்கட்ட இயலாது. இது, மத்திய அரசு இந்த தேர்தல்களை வலியுறுத்தியதால் ஏற்பட்ட இரண்டாவது எதிர்வினையாகும்.

“இது வாக்கு எண்ணிக்கையை முக்கியமாக கருதும் சட்டமன்ற தேர்தல் அல்ல. ஒவ்வொரு மாவட்டமும் தன்னாட்சி அலகாக செயல்படுவதால், பாஜக எத்தனை மன்றங்களில் தலைமை தாங்க முடியும் என்பதுதான் முக்கியமானது.” என்கிறார் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த காலித் ஷா. “அவர்கள் உண்மையாக அதிகபட்சம் ஆறு மன்றங்களை எதிர்பார்க்கலாம். அந்த அளவு குறைக்கப்பட்டு விட்டார்கள். மக்கள் மீண்டும் குப்கார் கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.” என்று கூறுகிறார் அவர்.

நியூயார்க் டைம்ஸின் எமிலி ஷ்மாலின் தனது கட்டுரைத் தலைப்பாக ” காஷ்மீர் வாக்களிக்கிறது. இந்தியா அதை ஆதிக்கப் பிரதேசத்தில் இயல்பு நிலை என வாழ்த்துகிறது” என்று வைத்துள்ளார். இந்தியாவின் ஆளுங்கட்சி காஷ்மீரின் கிராம மேம்பாட்டு மன்றத் தேர்தல்களை ஒரு காட்சிப் பொருளாகக் காட்டவே வேலை செய்தது‌. ஆனால் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர்கள் “ஒரு கடும் கண்டிப்பான ஆட்சியின் கீழ் இன்னும் போராடும் ஒரு இடமாகக் தான் அதைக் காட்டினர்” என்றே அந்த கட்டுரைத் தெரிவிக்கிறது. இரண்டு செல்வாக்கான பத்திரிகைகளும் அவர்களே செய்தியாளர்கள் அரசால் ஒழுங்கமைக்கப்பட்ட கடும் கட்டுப்பாட்டுடனான பயணத்தைத் தான் அங்கு மேற்கொண்டனர் எனத் தெளிவாக கூறியுள்ளனர். “முழு பயணமும் பல உண்மைகளை வெளிப்படுத்துவதாக இருந்தது.” என்கிறார் வரலாற்றாசிரியரும், அரசியல் ஆய்வாளருமான சித்திக் வாஹித். ” அவர்கள் இவர்களை சீனா திபெத்திற்குள் எப்படி ஒரு பயணத்தை நடத்துமோ அது போல இருந்தது.” என்கிறார் அவர்.

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தின் மரணம்

இந்த தேர்தல் வெற்றி குப்கார் கூட்டணிக்கு இரண்டு வகையில் முக்கியத்துவமானதாகும். ஏனெனில் அவர்கள் பாஜகவும் பொதுவாக அதன் ‘எடுபிடி’ எனக் கருதப்படும்  அல்தாஃப் புகாரி தலைமையிலான அப்னி கட்சியையும் போல ஒரே தளத்தில் விளையாடவில்லை‌. மத்தியில் ஆளும் பாஜகவின் நிர்வாகமே தேர்தல்களை மேற்பார்வையிடுவது ஏற்கனவே சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்த தேர்தல்களின் முதல் கட்டத்தில் ட்ரால் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை ‘ தேவையற்ற முறையில்’ மாற்றுவது குறித்து, ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சுரீந்தர் சிங் சான்னி கவலைத் தெரிவித்திருந்தார். இதன்மூலம் வாக்காளர்களை வாக்களிக்க முடியாமல் தடுத்து நிறுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். ரோஷ்னி சட்டத்தின் மீதான சர்ச்சைகளைப் பயன்படுத்தி ஆதாயம் தேட முயல்வதாகவும் அரசின் மீது குற்றம் சாட்டப்பட்டது. அரசு நில ஆக்கிரமிப்புகளை முறைபடுத்துவதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன், அது ரத்து செய்யப்பட்டு விட்டது. ஜம்முவில் ‘நில ஜிகாத்’ அச்சத்தைத் தூண்டவும், முக்கிய காஷ்மீரி முஸ்லீம் அரசியல்வாதிகள் மீது   ஊழல்வாதிகள் என்ற கருத்தை உருவாக்கவும் அதை பயன்படுத்தியது.

அமலாக்கத்துறை தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவின் 11.86 கோடி ரூபாய் சொத்துக்களை, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க பண மோசடி வழக்குத் தொடர்பாக முடக்கி உள்ளது. முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு முக்கிய நீரோட்டத் தலைவர்களை அரசு கைது செய்தது. இதனால் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்டி நேற்று மாலை  ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி தானும் ஒன்றிய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்படலாம் என அறிவித்தார்.” நான் அரசியல் ரீதியாக என்னோடு மோதும்படி கேட்டுக் கொள்கிறேன். எனது உறவினர்களுக்கு எதிராக புலனாய்வுத் துறைகளை தவறாகப் பயன்படுத்த வேண்டாம். இதுவே எனது கடைசி பத்திரிகையாளர் சந்திப்பாக இருக்கலாம் என்பது எனக்குத் தெரியும்.” என்று அவர் கூறினார். இந்தத் துறைகள் எனது கொள்ளுப் பாட்டனின் சுடுகாட்டையும், எனது உறவினர்களின் சொத்துக்களையும்  தணிக்கைச் செய்து கொண்டுள்ளார்கள்.  எனது சக ஊழியர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அமலாக்கத் துறை இன்று சோதனை மேற்கொண்டுள்ளது. சர்டாஜ் மாத்னி, பீர் மன்சூர், தமீம் அக்தர் ஆகிய கட்சித் தலைவர்களை எந்தவித முறையான ஆணையும் இன்றி சிறையில் தள்ளி இருக்கிறார்கள்.” என்கிறார் அவர்.

இவற்றிற்கெல்லாம் பிறகு, பாஜக வுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகளைத் திருப்ப, ஜம்மு காஷ்மீர் காவல்துறை வாக்களிப்பதை தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை சரிபார்க்கச் சென்ற பத்திரிகையாளர்களை அனந்த் நாக் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தாக்கியிருக்கிறார்.

நேற்றும் கூட, வெற்றி பெற்ற ஒரு சுயேச்சை வேட்பாளரை தேசிய மாநாட்டு கட்சியைப் சேர்ந்தவர் ஒருவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதைத் தடுத்துள்ளனர். ” நிர்வாகம் தற்போது பாஜகவுக்காக சுயேச்சை வேட்பாளர்களை சேர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டுள்ளது. இது அண்மையில் உருவாகியுள்ள பாஜகவின் சார்பு நிறுவனம். அரசால் போதுமான அளவு செய்ய முடியவில்லை என்று தோன்றுகிறது. அதனால் இந்த வகையான வேலையில் இறங்கியிருக்கிறது.” என அவர் கீச்சகத்தில் பதிவு செய்துள்ளார். ” தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் மேலவை உறுப்பினரை, அவர் தனது மாவட்டத்தில் வெற்றிப் பெற்றுள்ள சுயேச்சை வேட்பாளர்களைத்  தொடர்பு கொள்ளவதை தடுப்பதற்காகவே காவல் துறைக் கூட்டிச் சென்று விட்டது. அதேசமயம், அந்த சில சுயேச்சையாளர்களை ‘பேச்சு வார்த்தை’ நடத்துவதற்காக ஸ்ரீ நகருக்கு அழைத்துச் செல்லும் சிக்கலான வேலையை காவல்துறையினர் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மெஹ்பூபா முக்தி தேர்தலில் வெற்றி பெற்றவரின் உறவினர் ஒருவரின் முகநூல் பதிவை பகிர்ந்துள்ளார். அதில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் உதவியுடன் அப்னி கட்சியின் அரசியல் வாதிகள் தனது தந்தையைக் கடத்திச்சென்று விட்டதாக கூறியுள்ளார். ” பாஜக வும் அதன் பதிலிகளும் படுதோல்வி அடைந்துள்ளார்கள். ஆகவே வெற்றிப் பெற்ற சுயேச்சை வேட்பாளர்களை கடத்தும் வேலையில் இறங்கி உள்ளார்கள். தங்கள் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக வெட்கப்படத் தக்க வகையில் அனைத்து வழிகளிலும் முயல்கிறார்கள். இது நாட்டியம் அல்ல. ஜம்மு காஷ்மீரில்  ஜனநாயகத்தின் மரணம்.” என்று முஃப்டி எழுதியுள்ளார்.

(தொகுதி) வரையறைக்கு  ஒரு முன்னுரை

வரப்போகும் தொகுதி வரையறைக்கு இந்த தேர்தல் முடிவுகளின் விளைவுகள் மற்றொரு அரங்கமாகும்.  இந்த மன்றத் தேர்தல்களில் வாக்களித்துள்ள முறை ஒன்றிய அரசு முன்மொழியப்போகும் தொகுதி வரையறைக்கு உதவும்.

“மாவட்ட மேம்பாட்டு மன்றத் தேர்தல்கள் தொகுதி மறு வரையறைக்கு ஒரு முன்னோடி ஆகும். ஒருவேளை பாஜக எதிர்பார்த்தது போல இதில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தால் நீங்கள் சட்டமன்ற தேர்தலை விரைவில் எதிர்பார்த்திருக்கலாம்.” என்கிறார் சட்ட வல்லுநர் ஷேக் சௌகத். ஆனால் இப்போது சிறிது கால தாமதம் ஆகலாம்‌. கண்டிப்பாக தொகுதி மறுவரையறையைப் பொறுத்தவரை சில தில்லுமுல்லுகளை  (manipulation) எதிர்பார்க்கலாம். ராம்பூர் தொகுதியை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். இதில் 83% பேர் முஸ்லீம்கள். ஆனால் முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் இருக்கக்கூடாது என்பதற்காகவே இது பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பிர்பஞ்சால், சீனாப் பகுதிகள் அருகருகே உள்ளவையாக இருந்தாலும் இரண்டும் சேர்ந்து தவிர்க்க முடியாத முஸ்லீம்கள் பெரும்பான்மை பகுதியாக இருப்பதால், இப்போது பிர்பஞ்சால் ஜம்முவுடனும், சீனாப் உதம்பூர் தொகுதியுடனும் இணைக்கப்பட்டுவிட்டது. இது போன்ற தொகுதிகளை மறுவரையறைச் செய்யும் தந்திரங்கள் முஸ்லீம்களின் வாக்குகளை (பாஜகவுக்கு) பயனுள்ள வகையில் பிரித்துவிடலாம். முந்தைய காங்கிரஸ் அரசு இவற்றை செய்திருப்பதால், பாஜகவுக்கு இதை செய்வதில் எந்த தயக்கமும் இருக்காது‌.

(www.thewire.in இணையதளத்தில் ஷாகிர் மிர் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்