Aran Sei

விவசாயிகளை பாதிக்கும் பசு வதை தடுப்புச் சட்டம் – அமைதிக்கு காரணம் சாதியப் படிநிலையே

“தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தில் மாடுகள் மற்றும் காளைகளின் வணிக அம்சங்களுக்கு முன்னுரிமைத் தரப்படவில்லை…முதலிடம் தரப்பட்டிருப்பது அவற்றின் கலாச்சார மதிப்பு. பசு நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதால்தான் கர்நாடகாவில் தற்போதைய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.” என்று என்டிடிவி -யின், ‘கர்நாடக மாட்டிறைச்சித் தடைச் சட்டத்திற்குப் பின்னால் பிளவுபடுத்தும் அரசியல்’ என்ற ‘ரியாலிட்டி செக்’ நிகழ்ச்சியில், டிசம்பர் 10-ம் நாள் ஒரு மூத்த பாஜக செய்தி தொடர்பாளர் பேசினார்.

வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ, கர்நாடகாவில் பாஜக அரசால் இயற்றப்பட்டுள்ள, விலங்குகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு (slaughter) எதிரான சட்டத்தின் உண்மையான நோக்கத்தை இது வெளிப்படுத்துகிறது.

கர்நாடக பசுவதை தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்புச் சட்டம் 1964, (கர்நாடக சட்டங்கள் 1966-ன் 24, 1975-ன் 26 ஆகியவற்றில் திருத்தப்பட்ட) என்ற முந்தைய சட்டத்தின் கீழ் ஏற்கனவே பசுவதை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை இங்கே கோடிட்டு காட்டுவது அவசியமாகும். பழைய சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ், பெண் எருமைக் கன்றைத் தவிர, பசு அல்லாத எல்லா எல்லா விலங்குகளையும் (காளை, ஆண்- பெண் எருமைகள், ஆண் கால்நடைகள், பெண் எருமையின் கன்று என வரையறுக்கப்பட்டுள்ள) அவை 12 வயதுக்கு மேற்பட்டதாக அல்லது காயங்களாலோ, உடல் குறைபாடுகளாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ, இனப்பெருக்கம் செய்வதற்கு நிரந்தரமாக திறனற்று போனதாலோ, பால் வற்றிப் போவதாலோ உரிய அதிகாரிகளின் சான்றிதழ் பெற்று இறைச்சிக்கு அனுப்பலாம்.

இந்த புதிய சட்டம் கூடுதலாக,  இறைச்சிக்காக ஆண் கால்நடைகளையும் எருமைகளையும் கொல்வதையும் தடை செய்கிறது. இறைச்சிக்காக கொல்வதையும் மாட்டிறைச்சி சாப்பிடுவதையும் எவ்வித பிழையுமின்றி குற்றமயமாக்கலை உறுதி செய்வதற்காகவும், நாடு முழுவதும் சீரான, விலங்குகளை வெட்டுவதற்கு எதிரான மாநில சட்டங்களை தரப்படுத்தி, உருவாக்கி, விரிவுபடுத்தும் வகையில், கர்நாடகாவின் புதிய சட்டம், கொல்வதற்காக விலங்குகளை எடுத்துச் செல்லப் பயன்பட்டதாகக் கூறப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரத்தையும் கூடுதலாக வழங்குகிறது.

2015-ம் ஆண்டில் திருத்தம் செய்யும் வரை மகாராட்டிர அரசும் கர்நாடக அரசு போலவே விலங்குகள் வதைச் சட்டங்களை வைத்திருந்தது. 2015-ல் அது கொண்டு வந்த திருத்தத்தின் படி, ஆண் கால்நடைகளை இறைச்சிக்காக கொலை செய்வது, மாட்டிறைச்சி சாப்பிடுவது, கால்நடைகளை மாநிலத்தை விட்டு வெளியே ஏற்றுமதி செய்வது ஆகியவற்றிற்குத் தடை விதித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு கால்நடைகள் கணக்கெடுப்பு, இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் எந்த அளவிற்கு கால்நடைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளன என்பதை காட்டுகிறது. குறிப்பாக, உள்ளூரின் மதிக்கத்தக்க நாட்டுவகை ஆண்- பெண் இனக் கால்நடைகளின் எண்ணிக்கை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதையும், மகாராட்டிரம் மற்றும் பிற மாநிலங்களில் மிகவும் கட்டுப்பாடான கால்நடை சட்டங்களாலும் பரவலான கண்காணிப்பு மூலமும் தவறான இன கால்நடைகள் அதிகரித்துள்ளதையும் தெளிவாகக் காட்டுகிறது. விலங்குகளை இறைச்சிக்காக கொலை செய்வதில் உள்ள தடைகளின் தொடர்ச்சியாக, கால்நடை சந்தைகளின் சரிவும், பயன்தராத கால்நடைகளின் விலை வீழ்ச்சியும் விவசாயிகளுக்கு பயன்தராத கால்நடைகள் அப்புறப்படுத்துவதற்கான வழிகளை மறுத்துள்ளன. இதற்கு பதில் தரும் வகையில் அவர்கள் கால்நடை வளர்ப்பை விட்டுவிட்டார்கள்.

வியக்கத்தக்க அமைதி

விலங்குகள் உற்பத்தி சுழற்சியை சீர்குலைக்கும் இத்தகைய சட்டமன்ற முடிவுகளை, இந்த சுழற்சியின் பொருளாதார பிழைப்பில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொருவரும் எதிர்க்க வேண்டும் என ஒருவர் நினைக்கலாம். இந்த தடைச் சட்டங்களால், உணவு மற்றும் ஊட்டச்சத்து உரிமைகள் நசுக்கப்படுவது குறித்து, விலங்குகள் வியாபாரம் செய்பவர்கள், இறைச்சி விற்பனையாளர்கள், கசாப்புக்கடைக்காரர்கள் மற்றும் தோல் தொழிலாளர்கள் ஆகியோர் பேசியது போலவே இதனால் பாதிக்கப்பட்ட தலித்துகள், பூர்வீக குடிகள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள் மற்றும் பிற மாட்டிறைச்சி உண்ணும் குடிமக்கள் ஆகியோரும் பேசி உள்ளனர். எனினும் இந்த சுழற்சியில் முதன்மையாக உள்ள விவசாயிகள் இந்த விஷயத்தில் அவ்வாறு இல்லை. இந்தத் தடைச் சட்டத்திற்கு எதிராக கர்நாடக விவசாயிகள் மற்றும் தலித் இயக்கங்கள் இணைந்து நடத்திய போராட்டங்களை ஒரு விதிவிலக்காகக் கொள்ளலாம். உண்மையில், யார் இந்த விலங்குகளுக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்களோ, யார் மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்களோ அந்த மிகப் பெரும்பான்மையான விவசாயிகளிடம் பேரமைதி நிலவுவதும், கால்நடை உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக ஒன்றுபட்டு குரல் எழுப்பாததும் வியப்பூட்டுகிறது.

இந்த விருப்பமின்மை போன்ற தோற்றத்திற்கு என்ன விளக்கம்?

தங்கள் பயன்தராத கால்நடைகளின் மறுவிற்பனை மதிப்பின் மையமாக உள்ள, இந்த விலங்குகளை கொலை செய்வதற்கு எதிரான கட்டுப்பாடுகள், மிகப் பெரும் பொருளாதார இழப்பிலேயே முடியும் என அறிந்தும் அதற்கு எதிராக வெளிப்படையாக குரல் எழுப்பாமல், காளைகளுக்குப் பதில் டிராக்டர்களுக்கும் அல்லது பிற கால்நடைகளுக்குப் பதில் எருமைகளுக்கும் அல்லது தங்களைத் தற்காத்துக் கொள்ள அவற்றை கைவிட்டுவிடுவதற்கும் மிக எளிமையாக அவர்கள் மாறுவதற்கு காரணம் என்ன?

பார்ப்பனியத்தின் தர்க்கம்

இந்த அறிவுபூர்வமற்ற பதிலின் வாதம், சாதி மேலாதிக்கத்திலும், அதன் அடிப்படை சித்தாந்தமான பார்பனியத்திலும் வேரூன்றி உள்ளது என்பதை அண்ணல் அம்பேத்கர் தெளிவாகக் வெளிப்படுத்தி உள்ளார்:

“…பார்ப்பனியம் எனும் போது, ஒரு சமூகமாக பார்ப்பனர்களின் அதிகாரம், சலுகைகள், நலன்கள் என்பதை நான் குறிப்பிடவில்லை. அந்த பொருளில் நான் அந்தச் சொல்லைப் பயன்படுத்தவில்லை. பார்ப்பனியம் எனும் போது, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை மறுக்கிறது என்பதாக நான் பொருள் கொள்கிறேன். இந்த பொருளில் இதனைத் தோற்றுவித்தவர்கள் பார்ப்பனர்களாக இருந்தாலும், இது அவர்களுக்கு மட்டுமே உரிய ஒன்றல்ல, இது அனைத்து வகுப்புகளிலும் பரவலாக வேரூன்றி உள்ளது. இந்த பார்ப்பனியம் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது என்பதும், அனைத்து வகுப்பினரின் சிந்தனைகளையும் செயல்களையும் ஒழுங்குப் படுத்துகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பார்ப்பனியம் சில வகுப்புகளுக்கு ஒரு சலுகைப் பெற்ற நிலையை அளிக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அது குறிப்பிட்ட பிற வகுப்புகளுக்கு வாய்ப்பின் சமத்துவத்தைக்கூட மறுக்கிறது.”

ஒருவரின் இருப்பை சீர்குலைப்பதை, எதிர்ப்பதற்கான எந்த உந்துதலும் முற்றிலும் இல்லாத நிலை- இந்த விடயத்தில்- பசுக்கள் மற்றும் காளைகளுடன் இணைக்கப்பட்ட வாழ்வாதாரங்கள்- சாதியே வேலைப் பிரிவினை என்ற அம்பேத்கரின் உன்னத பகுப்பாய்வு, நிச்சயமாக ஒரு சமகால வாழும் அடிப்படையான எடுத்துக்காட்டு ஆகும்.

” …எந்த ஒரு நாகரீக சமுதாயத்திலும் வேலைப் பிரிவினை இது போல் வேலையாட்களைப் பிரிக்கும் இயற்கைக்கு மாறான, இறுக்கமான‌ பிரிவுகளோடு இணைந்திருக்கவில்லை. சாதி அமைப்பு என்பது வெறும் வேலை செய்பவர்களை பிரிப்பது மட்டுமல்ல இது வேலைப் பிரிவினையிலிருந்து வேறுபட்டது- இது உழைப்பாளர் பிரிவுகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக தரப்படுத்தும் படிநிலையாகும். எந்த ஒரு நாட்டிலும் வேலைப் பிரிவினை உழைப்பவர்களை தரப்படுத்துவதோடு இணைக்கப்படவில்லை.”
என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

பார்ப்பனிய சித்தாந்தமும், விதிகளும், இன்றிருப்பது போல, இந்த கால்நடை உற்பத்தி சுழற்சி, உற்பத்தி உறவுகள் மற்றும் உற்பத்தி வழிமுறைகள் ஆகிய எல்லா அம்சங்களையும் வரையறுக்கின்றன: பசு புனிதமானது, எருமை அழுக்கானது என்பதிலிருந்து உள்நாட்டு மாட்டுப்பால் மிகவும் தூய்மையானது, மாட்டிறைச்சியை நுகர்வது சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவது மற்றும் தீட்டுப் படுத்தும் செயல், எந்தவித அருவெறுப்புமின்றி எருமை இறைச்சியை ‘காரா பீஃப் (cara-beef) என்று நாசூக்காக கூறுவது வரை இது நீள்கிறது.

முற்காலத்தில் ஆதிக்கச் சாதியினர் மாட்டிறைச்சியை உண்ட வரலாறு கூட பார்ப்பனிய மேலாதிக்கத்தையும், காலப்போக்கில் விதிகளைக் தீர்மானிக்கும் ஆதிக்கச் சாதியினரின் அதிகாரத்தையும் மீண்டும் உறுதிபடுத்துகிறது. அதாவது “மாசுபடுத்தும் விளைவுகள்”, மாட்டிறைச்சியையும் அதனை உண்பவர்களையும் “தீண்டுதல்”, “தீண்டாமை” அதன் நுகர்வு, நமது உணவு பட்டியலில் அதற்கான இடம், பசு வணங்கத் தக்கதா, இல்லையா ஆகிய அனைத்தையும் தீர்மானிப்பது அவர்களே.

இந்தியாவின் 70% எருமைகள் உள்ளிட்ட கால்நடைகள், விளிம்பு நிலை, சிறு, நடுத்தர நிலை விவசாயிகளுக்கு சொந்தமானவை. அவர்கள் பெரும்பாலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC). தலித்களின் 71% பேர் நிலத்திற்கோ, கால்நடைகளுக்கோ உரிமையாளர்களாவதிலிருந்து விலக்கி வைக்கப்படுள்ள, நிலமற்ற விவசாய கூலிகள். ஒரு பசு இறந்து விட்டால் அதன் சடலம் உடனே தீண்டத்தகாததாக ஆகிவிடும். தீண்டத்தகாத வேலையான அதனை அகற்றுவதை தீண்டத்தகாதவர்கள் என பார்ப்பனிய படிநிலையில் வைக்கப்பட்டுள்ள அடிமைப்படுத்தப்பட்டுள்ள தலித்கள் செய்ய வேண்டும்.

விலங்குகளை வெட்டிய பிறகு அதனோடு தொடர்புடைய இறைச்சி, தோல் மற்றும் அதன் உறுப்புகளை பதப்படுத்தும் தொழிலில் மிக அதிகமான தலித்கள் இருப்பதற்கான காரணத்தை இது தெரிவிக்கிறது. மேலும் இது விலங்குகளை வெட்டுமிடங்களிலும், மாட்டிறைச்சி மற்றும் தோல் தொழிற்சாலைகளிலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஆதிக்கச் சாதியினர் ஆகியோர் இல்லாததையும், அவர்கள் பெரும்பாலும் மாட்டிறைச்சியை உண்ணாதவர்கள் அல்லது இரகசியமாக உண்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்கிறது.

பார்ப்பனியமும், மாட்டிறைச்சி மீதான அதன் களங்கமும், மாட்டிறைச்சி உண்பதில், பாசாங்கு, நேர்மையின்மை, அவமானம் மற்றும் குற்ற உணர்வு ஆகிய விதிகளை திணித்துள்ளன. பயன்தராத விலங்குகளின் மறு விற்பனை மதிப்பு, அதனை கொல்வதிலும், மக்கள் மாட்டிறைச்சியை உண்பதிலும்தான் அச்சாகக் கொண்டு சுழல்கிறது என்ற உண்மையை மறுப்பதை பார்ப்பனியம், தலைமுறை தலைமுறையாக கால்நடை உரிமையாளர்களின் மனதில் ஆழப் பதியச் செய்துள்ள்ளது. இது இயல்பாகவே, பிற பிற்படுத்தப்பட்ட பகுஜன் சாதியில் உள்ள கால்நடை உரிமையாளர்கள், விலங்குகளை வெட்டுமிடங்கள், தோல் தொழிலில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாட்டிறைச்சி நுகர்வோர் மீதான தங்கள் நம்பிக்கையையும், தாங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதையும் அறிவிப்பதைத் தடுக்கிறது: தலித்கள், பூர்வீக குடிகள், முஸ்லீம்கள் ஆகிய இந்த தொழிலில் உள்ள, உண்ணும் கலாச்சாரம் கொண்டவர்களை “தீண்டத்தாகாதவர்களாக”வும், மேலும் மாசு படுத்துபவர்களாகவும் ஆதிக்கச் சாதி குழுக்களால் பார்க்கப்படுகின்றனர்.

இது உடல்/ பொருள் யதார்த்தத்திற்கும், மத நடைமுறைக்கும் இடையே உள்ள அசாதாரண விலகலை விளக்குகிறது. பசு வழிபாடு என்பது பிரச்சினை அல்ல; வழிபாடும், பசு பாதுகாப்பும், இறைச்சிக்காக வெட்டுவதை தடை செய்வதுடன் சமன்படுத்தும் போது பிரச்சினை ஆகிறது. ஏனெனில் விவசாயிகளின் யதார்த்த வாழ்க்கை என்பது அவர்களின் பொருளாதார நலன்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. பார்ப்பனியத்தால் அடிமைப்படுத்தப்பட்டு இருப்பதால், பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் பார்ப்பனியம் தங்கள் வாழ்வாதாரத்தை அழிப்பதை எதிர்த்து குரலெழுப்ப முடியவில்லை. அவர்கள் இந்தத் தடைகளை எதிர்த்தும், தங்கள் மாட்டிறைச்சி உண்பதற்காக அடிப்படை உரிமைக்காகவும் போராடும் தலித், முஸ்லீம்கள், பூர்வீக குடிகளுடன் இணைவதையும் அது தடுக்கிறது. முரண்பாடாக இது அவர்களுக்கு பயனளிப்பதாகவே இருக்கும். அதற்கு மாறாக, பார்ப்பனியம், கோழைத்தனமான, கொடூரமான சமரசங்கள் மூலம் விவசாயிகளுக்கிடையே வெளிப்படையான வினோதமான சண்டைகளுக்கு வழிவகுப்பதுடன், முன்னர் அவர்களுக்கு சொந்தமாக இருந்த கால்நடைகளுக்கு தடை விதிக்கவும் வழி செய்கின்றது.

அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 48 அரசு கொள்கைகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளில், அறிவியல் ரீதியாக கால்நடைகளை பராமரிக்கவும் மற்றும் குறிப்பாக, இனங்களை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுப்பதை முன்நிபந்தனையாகக் கொண்டு, அரசுகள் விலங்குகளை இறைச்சிக்காக கொல்வதை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறுகின்றது. இதை அரசுகள் தவறாக எடுத்துக் கொண்டு விட்டன.

நாட்டுவகைக் கால்நடைகளின் பல்நோக்கு பங்கான, கால்நடைகள் பால், இனப்பெருக்கம், உரம், மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றை வழங்குபவையாக உள்ள நிலையை மறுதலித்து, பால் பண்ணை உற்பத்திக்கான, இயந்திரத்தனமான கொள்கைகள் மூலம் பசுமை, வெண்மைப் புரட்சிகளையும், கால்நடைகள் புரட்சிகளையும் கொண்டு வந்த செயல், வரலாற்று ரீதியாக பல்வேறு வகையான கால்நடை உற்பத்தியில் முக்கியப் பங்காற்றி வந்த பகுஜன் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அவர்களின் உள்நாட்டு இனப்பெருக்க வகைகளிலிருந்து விரட்டியதன் விளைவாக கால்நடைகளின் எண்ணிக்கை படுவீழ்ச்சி அடைவதில் முடிந்துள்ளது.

தனது படுகொலை (lynching) கலாச்சாரத்தின் ஆதரவின் மூலம் 2014-க்குப் பிந்தைய அரசியல் சூழல் தீவிரமாக அதிவிரைவு கால்நடை அழிவுக்கு வித்திட்டுள்ளது.

பொருளாதார கோணம்

இந்தத் தடைகளுக்கு நடுவே ஒரு தெளிவான பொருளாதார லாப நோக்கம் உள்ளது. உற்பத்தி சுழற்சியுடன் இணைக்கப்பட்ட குடிமக்களிடையே உள்ள ஆழ்ந்த அச்சம் மற்றும் அதிகாரத்தில் உள்ள தங்கள் எசமானர்களை திருப்திப்படுத்த வேண்டிய ஆர்வத்தில் உள்ள அதிகாரிகளின் வஞ்சகத்தாலும், உண்மையில் இதில் ஒரு பிடி கிடைப்பது கடினமாக உள்ளது.

கலப்பின பசு மற்றும் எருமை மாடுகளால் நங்கூரமிடப்பட்டுள்ள இந்தியாவின் பால் உற்பத்தி, வளர்ந்து வரும் அதிக மூலதனமாக்கப்பட்ட மற்றும் தொழில்மயமாக்கப்பட்ட பால்பண்ணை உற்பத்தி அமைப்பால் வழிநடத்தப்படுகிறது‌. அங்கு கால்நடைகள் மிகப் பெரிய பண்ணைகளில் ஓரளவு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களைக் கொண்டு வளர்க்கப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் உற்பத்தி அடித்தளத்திலிருந்து அமைதியாக விரட்டப்பட்டு விட்டனர். இந்தத் தடைகள் இந்த வெளியேற்றத்தை கண்களுக்கு முன்பே விரைவுபடுத்துகின்றன. குறைந்த நபர்களிடம் உற்பத்தியை மையப்படுத்துவது என்பது அதன் தொடர்ச்சியாக சந்தை மையத்தையும் குறைவான கார்பரேட்டுகள்/ கூட்டுறவு நிறுவனங்களின் கைகளில் கொடுப்பதாகும்.

பயன்தராத ஆண், பெண் எருமை மாடுகள் இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி, உள்நாட்டுச் சந்தை ஆகியவற்றில் பங்களிப்பை தருவதால், எருமை மாடுகளின் நிலை இதில் சிக்கலற்றது.

இந்தத் தடை சட்டத்தை வைத்துக் கொண்டு, இந்திய பசு மாட்டுப் பண்ணைகளில் உள்ள வயதான, பயன்தராத பசுக்களை என்ன செய்வது? அவை எங்கே போகும்? ஏற்கனவே குறிப்பிட்டது போல எண்ணிக்கை பெருகாது என்பதுடன் இந்தத் தடைகளை ஏற்படுத்தியவர்களே பயன்பெறும் வகையில் மாட்டிறைச்சி, தோல் மற்றும் பிற பொருட்களின் மறைமுகமாக கள்ளச் சந்தை விற்பனை நடைபெறும்.

கர்நாடக பகுஜன் விவசாயிகளின் கலப்பின கால்நடைகளால் நிரப்பப்பட்டுள்ள மாட்டுப்பண்ணைகளைச் சார்ந்த வாழ்வாதாரத்தில் உள்நாட்டு இன பசுக்கள் மற்றும் எருமைகளின் உயிர் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது.

இந்தத் தடைச் சட்டங்களை ரத்து செய்யவும் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளவும் தங்கள் முக்கிய பொருளாதார தேவைகளுக்காக இந்த தருணத்தை அவர்கள் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்.

ஹல்லிகார், அம்ரித், மஹால், கில்லார், பர்கூர், மல்நாடு, கிட்டா மற்றும் எருமை மாடுகள் போன்ற மீதமுள்ள பல்வேறு வகையான உள்நாட்டு இன கால்நடைகளின் நீடித்த, இனப்பெருக்கமும் இதில் அடங்கி உள்ளது.

கால்நடைகளுடன் பிணைக்கப்பட்டுள்ள அவர்களுடைய பண்ணை மற்றும் வறண்ட வாழ்வாதாரத்தின் மையம் இறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவது மற்றும் மாட்டிறைச்சி உணவு கலாச்சாரத்தின் அச்சாக இருப்பதை ஏற்று, பகுஜன் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பின் விவசாய சமூகத்தினர் பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்த வேண்டும். இதன் மூலமே இந்த விலங்குகளை பாதுகாக்கப்படும் பராமரிக்கவும் முடியும்.

( www.thewire.in இணையதளத்தில், சாகாரி ஆர்.ராமதாஸ் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்