Aran Sei

டெல்லி கலவரத்திற்கு ஓராண்டுக்குப் பின் – மதவாத பதற்றத்தை நீட்டிக்க முயற்சிக்கும் பாஜகவின் கபில் மிஸ்ரா

Image Credit : thewire.in

நாட்டின் தலைநகரில் பல பத்தாண்டுகளில் இல்லாத அளவு முஸ்லீம் விரோத படுகொலைகள் நடந்த முதலாம் ஆண்டு நிறைவுறும் நாட்களில் இரண்டு தெளிவான போக்குகளை காண முடிகிறது.

ஒரு புறம், இறப்புகளையும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான சொத்துக்களின் இழப்புகளையும் எண்ணி வருந்தும், வெறுப்பு பிரச்சாரத்தின் சுமையை தாங்க வேண்டியிருந்த வட-கிழக்கு டெல்லி மக்களும் சிவில் சமூகத்தின் பெரும்பகுதியினரும். மறுபுறம், இந்துத்துவ செயல்பாட்டாளர்களும் தலைவர்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறுபான்மையினருக்கு எதிரான தங்கள் பல அடுக்கு பரப்புரையை முடுக்கி விட்டுள்ளனர்.

வடக்கு டெல்லி வெறுப்பு கலவரம் – தம் வாழ்வையும் பிறர் வாழ்வையும் மீட்ட பாதிக்கப்பட்ட பெண்கள்

டெல்லி கலவரத்தில் இறந்த 53 பேரில் ( டெல்லி காவல்துறையின் தகவல்) நான்கில் மூன்று பங்கினர் முஸ்லீம்கள். நாசமாக்கப்பட்ட சொத்துக்களில் மிகப்பெரும் பகுதி முஸ்லீம்களுடையது. எனினும், வன்முறை செயல்களை செய்த முதன்மையான குற்றவாளிகளாக பரவலாகக் கருதப்படும் இந்துத்துவா குழுக்கள் கடந்த ஓராண்டாக வெளிப்படுத்தும் நம்பிக்கையும், ஆதிக்க வேகமும் நரேந்திர மோடி அரசின் கீழ் அவர்கள் இதுவரை இல்லாத அளவு தண்டனையிலிருந்து பாதுகாப்பை அனுபவிக்கின்றனர் என்பதை காட்டுகின்றன.

சிவில் சமூகக் குழுக்கள் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிக் கூட்டங்களை நடத்துகின்றனர். முஸ்லீம்கள் அதிகமாக வாழும் வடகிழக்கு டெல்லி பகுதிகளில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது, இந்துத்துவா குழுக்கள் திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்திய அந்த மூன்று நாட்களில், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்த கொடூரமான சோகத்தை வெளிப்படுத்தும் வகையிலும், டெல்லி காவல்துறை நடத்தி வரும் அரைகுறையான, சர்ச்சைக்குரிய விசாரணை பற்றிய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் வகையிலும் நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

சாலைகள் முடக்கப்பட்டால் மீண்டும் குரல் கொடுப்பேன் – பாஜக முன்னாள் எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா மீண்டும் சர்ச்சை கருத்து

இதற்கு நேர்மாறாக, இந்துத்துவா சக்திகள் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பை நிலைநாட்ட இதனை மீண்டும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தக் குழுக்கள், கடந்த ஒரு வாரமாக புத்தக விவாதங்கள், ஆவணப் படங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். இவை அனைத்தும், ‘சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களே வகுப்புவாத கலவரத்தை உச்சநிலைக்குக் கொண்டு சென்றன’ என்ற கருத்தை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

இப்படி செய்வதன் மூலம், இந்துத்துவா குழுக்கள் கலவரத்திற்கான பொறுப்பிலிருந்து மிகவும் தந்திரமாகத் தப்பித்துக் கொள்வதற்கான ஒருங்கிணைந்த முயற்சியை மீண்டும் மேற்கொள்கின்றன. அதே நேரம், சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராடிய முஸ்லீம் சமூகத்தினர் மட்டுமே, வன்முறைக்கு பொறுப்பு என நிரூபிக்க முயல்கின்றனர். இந்துத்துவா தலைவர்களும் அதன் ஆதரவாளர்களும் வன்முறையை பெருமையாக நியாயப்படுத்தப்படுத்த இந்த பரப்புரையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு, டெல்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா. உடந்தையாக இருந்த காவல் துறையினர் முன்பே அவர் நடத்திய வெறுப்பு பேச்சுதான், ஜாஃப்ராபாத் பகுதியைச் சேர்ந்த மௌஜ்பூரில் முதன்முதலில் கலவரம் வெடிக்கக் காரணமாக இருந்தது.

டெல்லி போராடும் விவசாயிகளை தாக்கிய ‘உள்ளூர்’ நபர்கள் – உண்மை முகங்களை காட்டும் ஊடக புலனாய்வு

கலவரத்திற்குப் பின் தி வயர் இணையதளத்திடம் பேசிய முன்னாள் டெல்லி காவல்துறை ஆணையர் அஜய்ராஜ் சர்மா, வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்காக கபில் மிஸ்ரா உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவர் அருகில் நின்று அதைக் கேட்டுக் கொண்டிருந்த மூத்த காவல் துறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

கடந்த ஓராண்டில் அப்படி எதுவும் நடந்து விடவில்லை. மேலும், ஓராண்டிற்குப் பிறகும் கபில் மிஸ்ரா மீண்டும் ஆத்திரமூட்டும் பேச்சுக்களை பேசி வருகிறார்.

கபில் மிஸ்ரா தி வயர் இணையதளத்திற்கு அளித்துள்ள நேர்காணலில், ஜாமியா, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரான “கோலி மாரோ சாலோன் கோ (வேசி மகன்களை சுட்டுத் தள்ளுங்கள்)” என்ற முழக்கத்தில் தவறேதும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், 2020, பிப்ரவரி 23 அன்று, தான் செய்த செயல்களுக்காக “பெருமைப்” படுவதாகவும் கூறி இருக்கிறார். “அது போன்ற ஒன்று மீண்டும் நடந்தால் நான் அதையே மீண்டும் செய்வேன்,” என்று உறுதியாகக் கூறுகிறார்.

இப்படி அவர் கூறுவது இது முதல் முறை அல்ல. இதனை ஒரு பொது நிகழ்விலும், பிற நேர்காணல்களிலும் வலியுறுத்தி உள்ளார்.

“நான் தேவைப்பட்டால், பிப்ரவரி 23-ல் செய்ததை மீண்டும் செய்வேன். புலனாய்வு அதிகாரி அங்கித் குமாரையும் காவலர் ரத்தன்லாலையும் காப்பாற்ற முடியவில்லை என்பதைத் தவிர, எனக்கு வேறு எந்த வருத்தமும் இல்லை,” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இது எதைக் குறிக்கிறது? அரசியல் உத்தியைப் பொறுத்தவரையில், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதான பாரபட்சமான அணுகுமுறையின் மூலம், வன்முறையில் நேரடியாக பங்கெடுத்துக் கொண்டாலும் அச்சப்படத் தேவை இல்லை என்ற செய்தியை, இந்துத்துவா செயல்பாட்டாளர்களுக்கு அவர் கடத்துகிறார் என்றே தோன்றுகிறது.

இந்தக் கருத்துக்களை தெரிவிக்கும் அவரது உறுதியும் அவரது அறிக்கைகளும், சென்ற ஆண்டு கலவரங்களின் பாதிக்கப்பட்டவர்கள் இப்போதுதான் தமது இழப்புகளிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நிலையில், டெல்லியில் மதவாத பதட்டத்தை மறுபடியும் பற்ற வைக்கக் கூடும் என்பதை தெளிவாக்குகிறது.

வெறுப்பை நிரந்தரமாக்கும் குற்றத்துக்கான தண்டனையில் இருந்து அவருக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பாதுகாப்புத, அவரது நேர்காணல் முழுவதும் தெளிவாக வெளிப்பட்டது. பரப்புரை, போலியான தவறாக வழிநடத்தும் சித்தரிப்புகள் ஆகியவை அடங்கிய அவரது பதில்கள் பொய்களும் அரை உண்மைகளும் கலந்த கலவையாக இருந்தன. அவை, டெல்லியை மதவாத அச்சத்தின் பிடியில் வைத்திருப்பதற்கானவை என்பதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக நேர்காணலின் போது ஒரு இடத்தில் நிவாரணப் பணிகளை வக்ஃப் வாரியத்திடம் மட்டும் ஒப்படைத்திருப்பது தொடர்பாக டெல்லி அரசாங்கம் மீது குற்றம் சாட்டுகிறார். அவரது நோக்கம் வெளிப்படையானது. அதாவது ஆம் ஆத்மி கட்சி பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் பற்றி மட்டுமே கவலைப் படுகிறது. பாதிக்கப்பட்ட இந்துக்களைப் பற்றி யாரும் கவலைப்படவே இல்லை என்று காட்டுவதே அவரது நோக்கம். அவரது இந்தச் சித்தரிப்பு நிச்சயமாகத் தவறானது. கலவரம் வெடித்த 2020 பிப்ரவரியிலிருந்து, இரு சமுதாயங்களையும் சேர்ந்த, பாதிக்கப்பட்ட 2,200 பேருக்கு 26 கோடி ரூபாய் இழப்பீடாகக் கொடுத்துள்ளது, டெல்லி அரசு. இதன் விநியோகம் மாநில முதல்வர் கெஜ்ரிவாலின் நேரடி கண்காணிப்பில் நடைபெறுகிறது.

“அதைப் பற்றி என்ன சொல்றீங்க” என்று கேட்கும் வலதுசாரிகளின் முன்மாதிரியின் ஒரு வெளிப்பாடாக, அவர் “கோலி மாரோ சாலோன் கோ” என்று முழங்கியது பற்றியும், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் அரசியல் பற்றியும் கேட்டபோது, “உங்க பாரதம் சிதறுண்டு போகும்”, “அஃப்சல் குரு, நாங்கள் வெட்கப்படுகிறோம், உனது ஆன்மா உயிரோடு உள்ளது” போன்ற முழக்கங்களை எழுப்பியவர்கள்தான் அதற்கு பொறுப்பு” என்று பிரச்சனையை திசை திருப்பினார்.

இந்த முழக்கங்கள் 2016-ல் ஜேஎன்யூவில் அடையாளம் தெரியாத நபர்களால் எழுப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கும் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மையில், ஷாஹீன்பாக்கில் இந்த முழக்கங்களை எழுப்பியதாக யாரும் எப்போதும் குற்றம் சாட்டவில்லை. ஜேஎன்யூ வில் கூட இந்த முழக்கங்கள் எழுப்பட்டதாகக் கூறப்படும் புகார் இன்று வரை நிரூபிக்கப்படவில்லை.

மிஸ்ரா, சில கேள்விகளுக்கு தெளிவாக பதில் சொல்ல முடியாத போது, தி வயர் நெறியாளரும், மூத்த ஆசிரியருமான ஆர்ஃபா கானும் ஷெர்வானி டெல்லி கலவரம் பற்றி செய்தி வெளியிட்டதன் மீது கவனத்தைத் திசை திருப்ப முயற்சித்தார். ஆர்ஃபா கானும் ஷெர்வானி தற்செயலாக ஒரு முஸ்லீம், இந்துத்துவா வாதிகளால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குறி வைக்கப்பட்டு வருகிறார்.

கலவரம் செய்தல், சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றங்களின் கீழ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் வார்டு உறுப்பினர் தாஹீர் உசைனை, ஷெர்வானி “ஒரு மசூதியில்” பேட்டி எடுத்ததாகக் கூறுகிறார், மிஸ்ரா. ஷெர்வானி உசைனுக்கு “அடைக்கலம்” கொடுத்தார் என்று மிஸ்ரா கூறுவது ஒரு அப்பட்டமான பொய்; உசைனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முதலில் வெளியான போது, மற்ற செய்தியாளர்களைச் போலவே ஷெர்வானியும் உசைனை பேட்டி காண முயற்சித்தார். அந்தப் பேட்டியோடு எந்த மசூதிக்கும் தொடர்பு கிடையாது.

சமீபத்தில் டெல்லியில் ரிங்கு சர்மா என்பர் கொல்லப்பட்டதற்கு மதவாத சாயம் பூச முயன்றார், மிஸ்ரா. ஆனால் டெல்லி காவல்துறை ஏற்கனவே இந்தக் கொலையில் எந்த மதவாத பின்னணியும் இல்லை என அறிவித்து விட்டதை தெரிவித்ததும் மிஸ்ரா வாயை மூடிக் கொண்டு விட்டார்.

டெல்லி காவல்துறையின் செயல்பாடுகளை சந்தேகத்திற்கிடமின்றி நியாயப்படுத்த முயன்ற போது மிஸ்ராவின் குழப்பம், முற்றிலும் தெளிவாக வெளிப்பட்டது. டெல்லி காவல்துறை, சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் டெல்லி வன்முறைக்கான “சதித்திட்டக்காரர்களாக” இருக்க வாய்ப்புள்ளதாக கைது செய்ததை அவர் உறுதியாக நியாயப்படுத்தினார். அதே காவல்துறைதான், ரிங்கு சர்மா கொலை மதவாத கொலையல்ல என்று அறிவித்தது என்று கூறியபோது மிகவும் சங்கடத்திற்கு ஆளானார்.

மிஸ்ராவும், பாஜக தலைவர்களும் தமது சொந்த ஊடகவெளியில் பொய் தகவல்களை தீவிரமாக பரப்பி வரும் நிலையில் சுயேச்சையான ஊடகங்கள் “பொய் செய்தி” வெளியிடுவதாக அடிக்கடி குற்றம் கூறுகின்றனர். இந்த உத்தி மக்களை குழப்புவதுடன், ஊடக வெளியின் நம்பகத்தன்மையை குலைத்து விடும் என்று அவர்கள் நம்பக் கூடும்.

அதனால்தான் உண்மை அடிப்படையிலான கேள்விகளை எதிர்கொள்ளும் போது மிஸ்ரா நெளிகிறார்.

தன்னை மகாத்மா காந்தியைப் படுகொலைச் செய்த நாதுராம் கோட்சேவின் சீடரென அறிவித்துக் கொண்ட, முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக அறை கூவல் விடுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்துக்களால் மாற்றி எழுதப்பட வேண்டும் என்றும் வாதாடும், தீவிர வன்முறை ஆதரவாளரும், அதிதீவிர வலதுசாரியுமான யதி நர்சிங்கானந்த் சரஸ்வதி போன்றவர்களுடனான அவரது தொடர்பு பற்றிய பல கேள்விகளுக்கு மிஸ்ரா பதிலே கூறவில்லை. உண்மையில் அவர் நர்சிங்கானந்த் சரஸ்வதிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள் நிரூபிக்கப்படும் போது அவரால் அதை மறுக்க முடியவில்லை.

சில சமயங்களில் எளிய கேள்விகள்தான் பதிலளிக்க மிகவும் கடினமானவை என்பதை மிஸ்ரா உணர்ந்தார். டெல்லி கலவரத்தின் போது முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு இந்துத்துவா தொண்டர்களை பொறுப்பாக கருதுகிறாரா என்று கேட்டால் அவர் “இல்லை” என்று திட்டவட்டமாக மறுக்கிறார். ஆனால் பிறகு வேறு யார் அவர்களைக் கொன்றார்கள் எனக் கேட்டதற்கு கொல்லப்பட்ட முஸ்லீம்கள் “பாதிக்கப்பட்டவர்கள்” அல்ல என்று சொல்வதைத் தவிர அவரிடம் வேறு பதில் இல்லை.

“ஹிட்லர் இரண்டாம் உலகப் போரின் போது இறந்தார். அவரை ‘பாதிக்கப்பட்டவர்’ என்று கூற முடியுமா?,” என்று அபத்தமான பதிலை கூறுகிறார்.

கடந்த ஒரு வாரமாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது மிஸ்ரா நேர்காணலில் சுட்டிக் காட்டியது போல, சங் பரிவார் டெல்லியில் மிகச் சரியாக மதவாதத் தீயை தொடர்ந்து பற்றி எரிய விடும் முயற்சியையே ய்து வருகிறது என்பது வெளிப்படை.

சிவில் சமூகம் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றுவதற்கும், அவர்களுக்கு சிறிதளவாவது நீதி கிடைக்கிறது என்ற தோற்றத்தையாவது உறுதி செய்யவும் முயற்சிக்கும் வேளையில், பாஜக தன் அரசியல் தேவைக்காக தனது சொந்த பாதையை பின்பற்றுவதாகத் தோன்றுகிறது.

(www.thewire.in இணைய தளத்தில் அஜோய் ஆசிர்வாதம், மகாப்ரசாஸ்தா எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்