Aran Sei

நினைவை வதைக்கும் வாதை – கண்ணகி முருகேசன் நினைவு நாள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புதுக்கூரைப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவரான வன்னியர் சாதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் கண்ணகி. புதுக்கூரைப்பேட்டை கிராமத்திற்கு அருகில் உள்ள குப்பநத்தம் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச்  சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன்.

கண்ணகியும் முருகேசனும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று வரும் காலத்தில் இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் சாதிக்கும் ஊருக்கும் பயந்து ரகசிய திருமணம் செய்து கொண்டு விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் தங்கியிருந்தனர்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

2003 ஆண்டு ஜூலை எட்டாம் (8)நாள் தந்திரமாக முருகேசனை மட்டும் ஊருக்கு வரவழைத்த சாதி இந்துக்கள் முருகேசனின் இரு கைககளையும் கால்களையும் பின்புறமாக கட்டி ஊரின் மையப் பகுதியில் போடப்பட்டிருந்த போர்வெல் குழிக்குள் தலைகீழாக இறக்கி இறக்கி தூக்கினார்கள்.

ஒருவழியாக கண்ணகியின் இருப்பிடத்தை கண்டறிந்த அவர்கள், கண்ணகியையும் அதே இடத்திற்கு கொண்டு வந்தார்கள். ஒட்டுமொத்த ஊரும் வேடிக்கை பார்த்த நிலையில் “நீங்கள் என்னைக் கொன்னாலும் பரவாயில்லை நான் முருகேசனுடன்தான் வாழ்வேன்” என்று கண்ணகி உறுதியாக கூறினார்.

பீமாகோரேகான் வழக்கு : நிராகரிக்கப்பட்ட பிணை மனுக்களும் ஊசலாடும் நீதியும்

முருகேசனும் வாழ்ந்தால் கண்ணகியுடன்தான் வாழ்வேன் என்று கூறினார். அதனால் கண்ணகி கண் முன்னமே முருகேசனை கொடூரமாக அடித்துச் சித்ரவதை செய்தனர்.இந்தக் கொடூரத்தை அந்தக் கிராமத்தில் இருந்த ஆண்கள், பெண்கள், பெரியவர்கள் குழந்தைகள் அனைவரும் பார்த்தனர். ஆனால் யாரும் தடுக்க வில்லை.

இறுதியாக இருவர் கையிலும் விஷப் பாட்டில் கொடுக்கப்பட்டு குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தப்பட்டனர். விஷத்தைக் கையில் வாங்கிய கண்ணகி அதைக் குடித்து விட்டார். ஆனால் முருகேசன் குடிக்க மறுத்ததனால் அவரது வாயில் கட்டையை வைத்து வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றினார்கள்.

“பறையன்மேல ஆசைப்படுற எல்லா வன்னியப் பொண்ணுங்களுக்கும் இதுதான் கதி. வன்னியப் பெண்களுக்கெல்லாம் இது ஒரு பாடமாக இருக்கட்டும்” என்ற காரணத்தினால்தான் இந்தச் சம்பவத்தை ஊர் மந்தையில் செய்ததாக அவர்கள் பெருமையாக கூறிக்கொண்டார்கள்.

போராட்ட நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் – ஸ்டான் சாமியின் கடிதம்

பிறகு ஊரே சேர்ந்து இறந்துபோன இருவரையும் தனித்தனியே கட்டையைக் கூட்டி எரித்தனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்டு விருத்தாச்சலம் காவல் உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்தார். இருவரும் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனால் எரித்து விட்டோம் என்று ஒட்டு மொத்த ஊரும் வாக்குமூலம் கொடுத்ததால் அந்த வழக்கை அப்படியே முடித்து விட்டனர். ஆனால், விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசிந்து நக்கீரனில் செய்தியாக வெளிவந்தது.

சம்பவம் நடந்து 18 நாட்கள் கழித்து, கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனு பெறப்பட்டு முருகேசன் தரப்பில் நான்கு பேர் கண்ணகி தரப்பில் நான்கு பேர் என மொத்தம் எட்டு பேர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அந்த எட்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை – கனடாவில் நடந்த இன அழிப்பின் சாட்சியங்கள்

வழக்கின் முதல் எதிரியான கண்ணகியின் தந்தை துரைசாமி ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ஒற்றை காரணத்தால் அவருக்கு 30 நாட்களுக்குள் பிணை வழங்கியது கடலூர் நீதிமன்றம். வழக்கின் பல குளறுபடிகளையும், அரசியல் தலையீடுகளையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டி இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டுமென உத்தரவை வழக்கறிஞர் அய்யா ரத்தினம் அவர்கள் பெற்றார். அதன்பிறகு அந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளில் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் குற்றவாளிகளின் மிரட்டலால் பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சிகள் ஆயினர். குற்றவாளிகளின் நேரடி மிரட்டலுக்கு அஞ்சி, செல்வராஜ் என்ற சாட்சி மறுநாள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல இருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டார். சி.பி.ஐ. மற்றும் தமிழகக் காவல்துறை இந்த உயிரிழப்பு பற்றித் துளியும் கவலைப்படவில்லை. இதில் உயர்நீதிமன்றமும் சேரும்.

எண்ணற்ற சிரமங்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் மத்தியிலும்
குற்றவாளிகளுக்குத் தண்டனைப் பெற்றுத் தர வேண்டும். அதே நேரத்தில் இரு ஒடுக்கப்பட்டவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற சவால் நிறைந்தப் பணியை வழக்கறிஞர் இரத்தினம் மற்றும் தணிகை செல்வன் தலைமையிலான வழக்கறிஞர் குழு மேற்கொண்டு வருகிறது.

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி

எந்தவித அரசியல் மற்றும் பொருளாதார பின்புலம் இல்லாத நிலையிலும் அந்த வழக்கில் சோர்வடையாமல் சட்டப் போராட்டம் நடத்திவரும் அய்யா ரத்தினம் அவர்களும், முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

லைலா-மஜூனுவை காதல் நினைவு சின்னமாக கொண்டாடும் நாம் ஏன் கண்ணகி முருகேசன் கொலையுண்ட நாளை காதல் நினைவு தினமாக கொண்டாட கூடாது ? தமிழக அரசு கண்ணகி-முருகேசன் அவர்களுக்குச் சிலை அமைத்து காதல் நினைவு சின்னமாக போற்ற வேண்டும்.

ஊரடங்கு போன்ற காரணங்களால்  ஜூலை 12 தீர்ப்பு என்னவாகும் என்று தெரியவில்லை. ஆனால் இந்த தீர்ப்பு சாதி ஆதிக்க வெறி கொண்டவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். 18 ஆண்டுகள் கடந்து முருகேசனின் தந்தைக்கு நீதி கிடைக்குமா?

 

கட்டுரையாளர்: அருள் முத்துக்குமரன்

ஓணம் பண்டிகை பௌத்தப் பண்பாட்டு வரலாறு நூலின் ஆசிரியர்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்