ஜுலை 11 ம் தேதி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பைடன், செனட் அவை உறுப்பினர் கமலா ஹாரிஸைத் தனது துணை அதிபர் வேட்பாளராக அறிவித்தார். சிலர், ஒரு கறுப்பினப் பெண் துணை அதிபராக வருவதை எண்ணி பெரு மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு ஒரு வடிகால் எனக் கருதி பைடன் – ஹாரிஸ் பரப்புரையை ஆதரித்தனர். ஹாரிஸும் தனது முந்தைய வழக்கறிஞர் வாழ்க்கையில் இருந்த சிலவற்றில் “முற்போக்கு” என்று கூறப்பட்ட மூகமூடியைப் போர்த்திக்கொண்டு பரப்புரை ஆற்றினார்.
எனினும், நீங்கள் உண்மையில் சுதந்திரத்தை விரும்பும் மக்களாக இருந்தால், இந்த உணர்வுகளை நிராகரித்து விடுங்கள். கமலா ஹாரிஸ் ஏற்கனவே நவீனக் காலனியவாதத்திற்கு விற்கப்பட்டவர். காலனிய ஆதிக்க நாட்டின் உறுப்பினராகத் தன் வேலையைக் கச்சிதமாகச் செய்தவர்.
வழக்கறிஞராக, மாவட்ட அரசு வழக்கறிஞராக, மத்திய அரசு தலைமை வழக்கறிஞராக, அமெரிக்க செனட் அவை உறுப்பினராக, தனது அரசியல் வாழ்வில் பங்குபற்றிய அனைத்திலும் காலனியவாதத்தையும், ஒட்டுண்ணி முதலாளித்துவத்தையும் கறுப்பின உழைக்கும் மக்களின் செல்வாக்கில் உயர்த்திப் பிடித்தவர்.
கமலா ஹாரிஸை எதிர்ப்பதற்கான எட்டுக் காரணங்கள்:
1. கமலா ஹாரிஸ் கலிபோர்னியாவின் ” தலைசிறந்த காவலர்”
ஆப்பிரிக்க மக்களின் செலவில் வெள்ளையின மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நலன்களைப் பாதுகாக்க ஏகாதிபத்தியவாதிகளால் அமர்த்தப்பட்டவர்கள்தான் காவல்துறையினர். அடக்கப்படுவோருக்கும் அடக்குவோருக்கும் இடையிலான உறவே ஆப்பிரிக்க (கறுப்பின) மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே உள்ள உறவு. அடக்குவதும், ஆதிக்கம் செலுத்துவதும், சிறையில் தள்ளுவதும் இறுதியாகக் கொல்வதும்தான் அவர்களுக்கு இடப்பட்ட வேலை.
இந்தப் புரிதலுடன்தான், தன்னை கலிபோர்னியாவின் “தலைசிறந்த காவலர்” (Top Cop) என முத்திரை குத்திக்கொண்டுள்ள கமலா ஹாரிஸை ஆதரிப்பது முரணானது என்பதை உணர வேண்டும். தான் வழக்கறிஞராகப் பணியாற்றிய 1994 – 2011 வரை 23 லட்சம் மக்கள் அமெரிக்காவில் சிறை செல்லக் குறிப்பிடத்தக்க அளவு காரணமாக இருந்தார்.
- ஹாரிஸ் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப இயலாத கறுப்பினப் பெற்றோர்களைச் சிறையில் தள்ளினார்.
சான்ஃபிரான்சிஸ்கோவின் மாவட்ட அரசு வழக்கறிஞராக இருந்த போது, ஹாரிஸ், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வராததால் அவர்களைச் சோம்பேறிகள் எனக் கூறி, அதற்காக அவர்களின் ஆப்பிரிக்கப் பெற்றோர்களைக் குற்றம்சாட்டி, குற்றவாளிகளாக்கி, சிறைக்கு அனுப்பினார். 2011 ல் அரசு வழக்கறிஞரானதும், அவர் பள்ளிக்குத் தொடர்ந்து வராத குற்றத்திற்குக் கடுமையான தண்டனைகளையும், அபராதமும் விதிக்கும் சட்டங்களை நிறைவேற்ற சட்டமன்றங்களைச் சம்மதிக்கச் செய்தார். புதிய சட்டப்படி பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோர்களுக்கு 2500 டாலர் அல்லது அதற்கு மேலும் அபராதத் தொகை அல்லது பெற்றோர்களுக்கு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தனது பதவி ஏற்பு விழாவில் “நீங்கள் உங்கள் குழந்தைகள் மீதான பொறுப்பை உணரவில்லை எனில் நாங்கள் முழு வலுவுடன் அதை நிறைவேற்றுவோம். அதற்கான சட்டரீதியான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும்.” என மிக அக்கறை கொண்டவர் போல் முழங்கினார்.
எனினும், பெற்றோர்களைச் சிறையில் அடைப்பது, ஒட்டு மொத்தமாகக் கறுப்பின மற்றும் பிற காலனிய நாடுகளின் மக்களுக்கும் மேலும் துன்பத்தைத் தருவதாகவே இருந்தது. முதலாவதாகக் குழந்தைகள் பள்ளிக்கு வராமலிப்பதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து ஏன் அதைத் தீர்க்கவில்லை.
ஹாரிஸின் இந்தச் சட்டம் (truancy law) ஆப்பிரிக்க மற்றும் பிற காலனிய மக்கள் மீது காலனியவாதமும், ஒட்டுண்ணி முதலாளித்துவமும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதைக் கண்டுகொள்ளவே இல்லை. தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு வர இயலாமல் இருப்பதற்குக் காரணமான வறுமை, உடல்நலம் மற்றும் பிற சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அவர் பேசவே இல்லை. இந்தச் சட்டம் உண்மையில் ஆப்பிரிக்க மக்கள் எதிர்ப்புச் சட்டமாகும் அது அரசுக்குப் பணத்தையும் எங்கள் சகோதர சகோதரிகளுக்குச் சிறையையுமே தந்தது.
- கமலா கஞ்சா கடத்தல்காரர்கள் எனச் சிறையில் அடைத்தது
மாவட்ட அரசு வழக்கறிஞராக, கடந்த ஏழாண்டுகளில் 8,000 பேர் கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 2,000 பேர் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர். 2019, பிப்ரவரியில் ஒரு காலை சிற்றுண்டி விடுதியில் பேட்டி கொடுத்த கமலா, கல்லூரி நாட்களில் தானே கஞ்சா புகைத்திருப்பதாகச் சிரித்துக்கொண்டே கூறினார்.
வெள்ளை இன முதலாளிகளின் நிறுவனங்கள் இதே கஞ்சாவை விற்றுக் கோடிக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டிருக்கும் போது, எங்கள் சகோதர சகோதரிகள் சிறைச்சாலையில் நாறிக்கொண்டிருக்கிறார்கள்.
கஞ்சா வழக்கில் எங்கள் மக்களுக்குச் சிறைத் தண்டனை கொடுப்பது எங்களுக்கு மேலும் வேதனை அளிக்கிறது.
- மூன்று அடி சட்டச் (3Strikes Law)சீர்த்திருத்தத்தை ஹாரிஸ் எதிர்த்தார்
துணை அதிபர் வேட்பாளர் வழக்கமான குற்றவாளிகள் சட்டம் என்று அழைக்கப்படும் மூன்று அடி (3 Srikes Law) சட்டத்தை ஆதரித்தார். அதனைச் சீர்திருத்துவதை எதிர்த்தார். இந்தச் சட்டத்தின் படி ஒருவர் மூன்று முறை தண்டனை பெற்றால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம்.
இந்தச் சட்டம் 1994ல் கொண்டு வரப்பட்டது. 2001 வரை 50,000 பேர் இந்தச் சட்டத்தின்படி ஆயுள் தண்டனை அடைந்திருக்கிறார்கள். 12,000 பேர் குறைந்தது 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கிறார்கள். இந்தச் சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை பெற்றவர்களில் வெள்ளை இனத்தவரை விட 12 மடங்கு கறுப்பின மக்கள் அதிகம்.
வெறும் 7% மட்டுமே கறுப்பின மக்களைக் கொண்ட கலிபோர்னியாவில் சிறையிலிருப்போர் 30 சதவீதம். மூன்று அடி சட்டக் குற்றவாளிகளில் ஆயுள் தண்டனை பெற்றவர்களில் 45% பேர் கறுப்பினத்தவர்கள்.
இந்தக் கறுப்பின எதிர்ப்புச் சட்டத்தை ஆதரித்தார் ஹாரிஸ். இந்தச் சட்டத்தால் ஏராளமான கறுப்பினக் குடும்பங்களில் மனைவியை விட்டுக் கணவன் பிரிக்கப்பட்டார். தந்தை, பிள்ளைகளிடமிருந்து பிரிக்கப்பட்டார். இது சிறைகளில் குறைவான கூலியில் வேலையாட்கள் கிடைக்கவும் உதவியது.
5.கமலா சிறை வேலைக்காரர்கள் நிலையை ஆதரித்தார்
கலிபோர்னியாவின் அரசுத் தலைமை வழக்கறிஞராக இருந்த கமலா, ஒரு குழுவிற்குத் தலைமை தாங்கி, கலிபோர்னியா காட்டுத் தீயை அணைக்க அதிகமானவர்களைச் சிறையில் அடைத்தார். இவர் மத்திய அரசு முன்னரே பரோலில் விடுவிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த போது, அவ்வாறு செய்வது ஒரு மணி நேரத்திற்கு ஒரு டாலரோ அல்லது அதற்கும் குறைவாகவோ கூலி கொடுத்து வரும் சிறை வேலைக்காரர்களைக் குறைக்கும் எனக் கூறி, அந்தச் சட்டத்தை பின்னோக்கி இழுத்தார்.
இதன் மூலமும் கமலா எங்கள் மக்களைப் பயன்படுத்தி, ஒட்டுண்ணி முதலாளித்துவ அமைப்பிற்கு உதவினார். எங்கள் சகோதர சகோதரிகள் ஒரு சில டாலர்களுக்குத் தங்கள் உழைப்பை விற்று அதன்மூலம் முதலாளிகள் கோடிக்கணக்கில் சுருட்டிக்கொள்ள வழிவகை செய்தார்.
6.மரண தண்டனையை ஆதரித்தார் கமலா
கமலா மரண தண்டைனையை ஆதரித்ததன் மூலம் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரை விடுவதற்குக் காரணமாக இருந்தார். இவர்களில் பெரும்பாலானோர் கறுப்பின மக்களே. இதனால் அடக்குமுறை காலனிய அரசுக்குத் தன் ஆதரவை மேலும் உறுதி செய்தார். இந்த மரண தண்டனைகளே காலனியவாதிகளின் இனப் படுகொலைக்கும், அதன்மூலம் அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க இன கிளர்ச்சியாளர்களின் தொகையைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் அரசுக்கு உதவின.
கமலா, மரண தண்டனை பெற்ற அப்பாவி ஆப்பிரிக்கர்கள் தூக்கிலிடப்படுவதற்கு வாதாடினார். இதற்கு கெவின் கூப்பர் தக்க சான்றாகும். அந்த 35 வயது ஆப்பிரிக்க இளைஞன் மீதான கொலை வழக்கில், மரபணு அறிக்கைகள் அவர் நிரபராதி எனக் கூறிய போதும் அவரது மரணதண்டனையை நிறைவேற்ற வாதாடியவர் கமலா.
7.ஆப்பிரிக்க மக்களைப் படுகொலை செய்த காவலர்களை விசாரிக்க மறுத்தவர் ஹாரிஸ்
பியோன்னா டெய்லர் மற்றும் ஜார்ஜ் ஃப்ளாய்ட் ஆகியோரின் காவல்துறை படுகொலைக்கு எதிராக ஆப்பிரிக்க உழைக்கும் மக்கள் கிளர்ந்தெழுந்ததே காவல்துறையினர் எங்கள் மக்களை படுகொலை செய்வதைக் கண்டு நாங்கள் வெறுத்துப் போனோம் என்பதையே காட்டுகிறது. ஆனால் கமலா வெறுத்துப் போகவில்லை. ஏனெனில் அவர் கறுப்பின மக்களை கொலை செய்த காவலர்களை விசாரிக்கப் பலமுறை மறுத்திருக்கிறார்.
கலிபோர்னியாவின் தலைமை அரசு வழக்கறிஞராக இருந்தும் காவல்கள் செய்த படுகொலை வழக்குகளில் தலையிட மறுத்துவிட்டார். 2015ல் காவலல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்த வழக்கில் அவரை வாதிடக் கோரும் மசோதாவை அவர் எதிர்த்தார். கடந்த ஜுனில் ஒரு போலீஸ் வன்முறையின் எதிர்ப்புப் போராட்டத்தில் அவரே நேரில் கலந்துகொண்டது மிகவும் நகைப்பிற்குரியது. கொலை செய்த காவலர்களைச் சிறையில் தள்ளும் அதிகாரம் கொண்டவர் என நாங்கள் எண்ணி இருந்த போது, அவர் அவர்களுக்கு எதிராக விரலையும் அசைக்கவில்லை.
- மாணவர்களைப் பிரித்த சட்டத்தை ஆதரித்தவர் ஹாரிஸ்
தற்போது ஆளுநராக உள்ள காவின் நியூசம், சான்ஃப்ரான்சிஸ்கோ மேயராக இருந்த போது 2008 ஆம் ஆண்டு கொண்டு வந்த ஒரு நகரக் கொள்கையால், நூற்றுக்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த இளைஞர்கள் தேர்வில் தோல்வி அடைந்தனர் அல்லது நாடு கடத்தப்பட்டனர். இதனை அப்போது நகர தலைமை அரசு வழக்கறிஞராக இருந்த கமலா ஆதரித்தார்.
சான் ஃப்ரான்சிஸ்கோ புலம் பெயர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பான நகரம் எனக் கூறப்பட்டாலும், இந்தப் புதிய கொள்கைப்படி (ICE) குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள், சில சமயம் மிகச் சிறிய குற்றங்களே செய்திருந்தாலும் ஆவணங்கள் இல்லாத இளைஞர்கள் பற்றிய விவரங்களைக் காவல்துறை தெரிவிக்க வேண்டும். இதன்படி அவர்கள் குற்றவாளிகள் அல்லது நிரபராதிகள் என நிரூபிக்கப்படும் முன்பே ஒப்படைக்கப்பட்டனர். இளைஞர்களாக இருந்தாலும் சிறிய வயதுடைய குழந்தைகளுக்கு காவல்துறை கைது என்பதே மிகப் பெரும் மனக் கலக்கத்தை உண்டாக்கி விடும். அவ்வாறிருக்க அவர்களை நாடு கடத்தி அவர்களை குடும்பத்திலிருந்தும் பிரித்தது அதை அனுபவிக்கும் ஒவ்வொருவருக்கும் மிகுந்த வேதனைக் தரக் கூடியது.
இந்த நிலம் இந்த மண்ணின் பூர்வீகக் குடிமக்களுக்கும் சொந்தமானது. அமெரிக்க அரசு இதனை தங்கள் சொந்த நிலமாகக் கொண்டாட முடியாது. மேலும் இந்தச் சட்டவிரோதமான எல்லையிலிருந்து மக்களை நாடு கடத்தும் உரிமையும் அவர்களுக்குக் கிடையாது. உண்மையில் சொல்லப் போனால் வெள்ளை இனத்தவர்தான் இங்கே சட்டவிரோதக் குடியேறிகள்.
கமலா, பிடேன் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நிராகரியுங்கள்
கமலா ஹாரிஸ் கறுப்பின மக்களுக்கு எதிராக எண்ணற்ற குற்றங்களைச் செய்திருக்கும் போதும், அவர் கறுப்பினப் பெண் என்பதாலேயே அவருக்கு “பாதுகாப்பு” தேவை என்பதாலேயே பலரும் அவரை ஆதரிக்கின்றனர்.
இது அருவெறுக்கத்தக்கது. ஏனெனில் அவர் கறுப்பின மக்கள் பாதுகாப்பில் விருப்பம் இல்லாதவர். எங்கள் பொருளாதார வளர்ச்சியில் விருப்பம் இல்லாதவர். மாறாக அவர் எங்கள் மீதான அடக்குமுறையை அதிகரிக்கச் செய்திருக்கிறார்.
நாம் கமலா ஹாரிஸ் மீது விமர்சனங்களை வைப்பது போலவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்தையும் முழுமையாக எதிர்க்க வேண்டும். ஏனெனில் அமெரிக்காவே சட்டவிரோதக் குடியேற்ற நாடுதான். ஆகவே அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளும் சட்டவிரோதமானவையே. அமெரிக்கா, அதன் அரசு, அதன் சட்டங்கள் அனைத்தும் பூர்வீகக் குடிகளின் பிணங்கள் மீதும் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க மக்களின் முதுகின் மீதுமே கட்டப்பட்டுள்ளன.
சுதந்திரத்தை நேசிக்கும் மக்களாகிய நமது போராட்டம், எந்த அதிகாரமும், சுய நிர்ணய உரிமையும் இல்லாத ஆப்பிரிக்கா மற்றும் பிற காலனிய மக்களின் மீது அடக்குமுறையை ஏவி விடும் காலனிய அரசமைப்பைத் தூக்கி எறிவதாகவும், அந்த இடத்தில் சோசலிச சமுதாயத்தை நிறுவுவதாகவும் இருக்க வேண்டும்.
(நியூயார்க் நகரத்தில் வசிக்கும் கறுப்பினச் செயல்பாட்டாளரான காலோன்டா முலாம்பா தனது வலைத்தளத்தில் எழுதியுள்ள கட்டுரை)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.