Aran Sei

இன்று ஹத்ராஸ், 2006-ல் கயர்லாஞ்சி – சாதியத் தாக்குதல்களின் கொடூரம்

த்ராஸ் இன்று சமூக வலைதளக் காலத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் பெயர். 2006-ம் ஆண்டு இன்றைக்குப் போலவே சமூக வலைதளங்கள் இருந்திருந்தால், #Justiceforpriyanka, #JusticeforSurekha, #JusticeforBotmanghe போன்ற பெயரில் டிரெண்டிங்கில் மக்கள் இறங்கியிருக்கக் கூடும்.

credits:indianexpress.com
ஹத்ராஸ் வன்கொடுமை photo credit : indianexpress.com

கெடுவாய்ப்பாக அன்று அந்த வாய்ப்பில்லை. தாயையும் மகளையும் கிராமமே கூட்டாகப் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கி கொன்ற அந்தச் சம்பவம் நடந்த கிராமத்தின் பெயர் கயர்லாஞ்சி. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டே தன்னுடைய Persistence of Caste என்ற நூலில் எழுதியுள்ள பகுதியின் சுருக்கத்தை மொழியாக்கம் செய்து இங்கே தருகிறோம்

ஞ்சிக் கலையம், என்று பொருள்படும் பண்டாரா மாவட்டத்தைச் சார்ந்தது கயர்லாஞ்சி கிராமம். கிராமப்புறமே பெருவாரியாக (85%) இருக்கும் மாவட்டம் அது. மும்பைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமான நாக்பூருக்கு நெருக்கமான மாவட்டம். பண்டாரா மாவட்டத்தின் கிராமங்கள் தங்கள் எல்லைக்கு வெளியே நகர்ப்புற வாழ்க்கைக்கு அறிமுகமானவைதாம். கல்வி அறிவிலும் 77.27 விழுக்காடு, தேசிய சராசரியை விட அதிகம் இது.

அம்பேட்கரிய இயக்கத்தின் கோட்டை இந்த மாவட்டம், அதனால்தான் அம்பேட்கர் 1954-ம் ஆண்டு இடைத்தேர்தலில் இந்த மாவட்டத்தைத் தனது தொகுதியாகத் தேர்ந்தெடுத்தார். இந்த மாவட்ட தலித்துகள் கலாச்சார ரீதியாக அம்பேட்கரிஸ்டுகளாகவும் அரசியல் தளத்தில் பௌத்தர்களாகவும் தங்களை அறிவித்துக்கொள்கின்றனர். சுயேச்சையான குரல் இல்லாத நிலையில், பெரும்பாலும் ஆளும் வர்க்க கட்சிகளிலேயே வேலை பார்க்கும் சூழல். தற்காலத்தில் பாஜகவும், தேசியவாத காங்கிரஸும் அங்கே ஆதிக்கம் செலுத்துகின்றன. வடக்கே சத்தீஸ்கர், நாக்பூர், சந்திராபூர், கட்சிரோலி உள்ளிட்ட நக்சல் நடவடிக்கைகள் அதிகம் கொண்ட மாவட்டங்களை எல்லையாகக் கொண்டுள்ள பண்டாரா மாவட்டம், தன்னளவிலும் நக்சல் நடவடிக்கைகள் பரவலாக்கத்தைக் கண்டு வருகிறது.

வன்கொடுமைகளை எதிர்த்து தலித்துகள் போராட்டம்
வன்கொடுமைகளை எதிர்த்து தலித்துகள் போராட்டம்

தொழிற்சாலைகள் பரவலாக இல்லை. பித்தளை நகரம் என்று சொல்லத்தக்க அளவில் பித்தளைத் தொழிற்சாலையும், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஆட்டோமொபைல் தொழிற்சாலையும், மேலும் சில இரும்பு, உருக்காலைகள் இருக்கின்றன.

வன்முறை நடந்த காலகட்டத்தில், கயர்லாஞ்சியில் மக்கட்தொகை 181 பிற்படுத்தப்பட்ட (OBC) மற்றும் பழங்குடி குடும்பங்களைச் சேர்ந்த 787 பேர். பிற்படுத்தப்பட்ட குனாபி, தேடி, கலார், லோதி, திவார் மற்றும் வாதை சாதியினர் மொத்தமாக 720 பேர் இருந்தனர், 10 பழங்குடியினர் குடும்பங்கள் இருந்தன.

தலித்துகளைப் பொறுத்தவரை போட்மாங்கே குடும்பத்தைத் தவிர மூன்றே மூன்று குடும்பங்கள்தான். அவர்களில் இரண்டு குடும்பங்கள் மகர் சாதியைச் சார்ந்தவர்கள், ஒரு குடும்பம் மாங்க் சாதியைச் சார்ந்தது.
போட்மாங்கே உள்ளிட்ட மகர் குடும்பத்தினர், விதர்பாவின் இதர மகர்களைப் போலவே 1956-ம் ஆண்டு அம்பேட்கரின் மதமாற்ற இயக்கத்தினூடாகப் பௌத்தம் தழுவியர்கள். போட்மாங்கே குடும்பத்திற்கு, கயர்லாஞ்சியின் இதர மகர்களோடு குடும்ப உறவு உண்டு. ஒரு குடும்பத் தலைவரின் பெயர் வினோத் மேஸ்ராம், மற்றொரு குடும்பத் தலைவரின் பெயர் துர்வாஸ் கோபர்கடே.

மக்கட்தொகையில் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் சாதி இந்துக்களுக்கு அஞ்சி வாழ்வதாகவே இந்த மூன்று குடும்பங்களின் வாழ்க்கை இருந்தது.

கயர்லாஞ்சி வன்கொடுமை நடப்பதற்கு சரியாக 9 மாதத்திற்கு முன்பு, துர்வாஸ் கோபர்கடேயின் மகன், ஆஷிஷ் 28 பிப்ரவரி 2006 அன்று கயர்லாஞ்சியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கால்வாயில் பிணமாகக் கிடந்தான். பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஆஷிஷின் மர்ம மரணம் குறித்து காவல்துறையினர் இன்று வரை துப்பு துலக்கவில்லை.

பூர்வீகமாக கயர்லாஞ்சியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்பாகாட் கிராமத்தைச் சார்ந்த போட்மாங்கே குடும்பத்தில் போட்மாங்கே பையாலால் (55), அவரது மனைவி சுரேகா போட்மாங்கே (40), அவர்களது மகன் சுதிர் (21), ரோஷன் (19) மகள் ப்ரியங்கா (17) ஆகியோர்தான் குடும்ப உறுப்பினர்கள்.

சுரேகாவின் தந்தை, பையாலாலின் தந்தைக்குத் தன்னிடம் கயர்லாஞ்சியில் இருந்த நிலத்தை, சில காலத்திற்கு முன் விற்று விட்டிருந்தார். ஆகவே, பொருளாதார நெருக்கடி காரணமாக 1989 வாக்கில் போட்மாங்கே குடும்பம் திருமணத்திற்கு முன்பு சுரேகாவின் சொந்த ஊரான கயர்லாஞ்சி வந்து சேர்ந்தனர். அந்த நிலத்தின் அளவு 4.79 ஏக்கர். நீண்ட காலமாக அது தரிசாகக் கிடந்தது. ஆனால், சிறிது, சிறிதாகப் பையாலாலும், சுரேகாவும் சேர்ந்து தங்கள் உழைப்பைக் கொட்டி, அந்த நிலத்தை சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றினர்.

போட்மாங்கேயின் நிலம் வாய்க்காலுக்கு அருகே இருந்ததால், நீர்ப்பாசனத்திற்கு வசதியான நிலமாக இருந்தது. ஆனால், சாதி பாகுபாடு காரணமாக நீரைப் பயன்படுத்துவது அவர்களுக்கு எளிதானதாக இருக்கவில்லை. பிரச்சினையைத் தவிர்க்க, மதிய இடைவேளையிலோ, இரவு வேளைகளிலோ தங்கள் நிலத்திற்குத் தேவையான நீரை இரைத்துக் கொள்வர்.

அதுவரை காலமும், பஞ்சாயத்துக்குச் சொந்தமான நிலத்தில் கூரை குடிசையில் வசித்த போட்மாங்கே குடும்பம், போதுமான பணம் சேர்த்த பின்னர், தங்களுக்கென வீடு கட்டிக் கொள்ள முயற்சி எடுத்தனர். பஞ்சாயத்து தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அதன் காரணமாக வீடு கட்டுவதற்கென வாங்கி வைத்திருந்த செங்கலை சிமெண்ட் பூசாமல் சுவர் போல அடுக்கி வைத்திருந்தனர்.

பொருளாதார ரீதியான முன்னேற்றம் வந்துவிட்டாலும், தலித்துகளின் வாழ்க்கையில் நவீனம் நுழைவதை, கிராமப் பொது மனசாட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வீடு கட்ட பஞ்சாயத்து நிர்வாகம் அனுமதி வழங்காததால் மின்சார வசதி என்பது வீட்டிற்குக் கிடைக்கவில்லை. குடிநீருக்கெனத் தண்ணீர் பயன்படுத்துவதிலும் சாதி குறுக்கே நின்றது.

சுரேகாவைப் பொறுத்தமட்டில் பையாலாலை விட துடுக்கானவராக, எதிலும் முன் நிற்பவராக இருந்தார். கல்வியில் தன் கணவனைவிட (4ம் வகுப்பு), அதிகமாகக் கற்றிருந்தார் (9ம் வகுப்பு). அம்பேட்கரிய சிந்தனை முறை அவரிடமிருந்த காரணத்தினால் தன் பிள்ளைகளில் கல்வி மீது அவருக்கு தீராத தாகம் இருந்தது.

அவருடைய மூத்த மகன் சுதீர் கண்பார்வை கோளாறு காரணமாக மூன்றாவதற்கு மேல் தொடர முடியவில்லை. ஆகையால், தன் பெற்றோர்களுக்கு விவசாய வேலைகளில் துணையாக இருந்தான். ரோஷன் கல்லூரி முதலாமாண்டு படித்துக்கொண்டே, மொஹதி கிராமத்தில் கணினிப் பயிற்சிக்குச் சென்றுகொண்டிருந்தான். மகள் ப்ரியங்கா தன்னுடைய பள்ளி இறுதி ஆண்டில் இருந்தாள், 10-ம் வகுப்பு பள்ளியில் முதலாவதாக வந்தாள். அது மட்டுமல்லாமல், NSS உள்ளிட்ட விவகாரங்களிலும் ஆர்வமாகப் பங்கெடுத்தாள்.

ப்ரியங்காவும், ரோஷனுக்குத் தங்கள் கல்விக்காகக் கயர்லாஞ்சிக்கு வெளியே பயணித்துச் சென்றனர். 2005 வாக்கில் தன் மகளுக்காக சுரேகா சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். கிராமத்தின் தரத்தை ஒப்பிடும் போது சுயமரியாதையான வாழ்க்கையையே அவர்கள் வாழ்ந்தனர். சைக்கிளோடு சேர்ந்து மொபைல் போன் இருந்தது. பொருளாதார நெருக்கடி அண்டிவிடாமல் இருக்க குடும்பமே சேர்ந்து, மாலையில் பீடி சுற்றியது.

இந்த முன்னேற்றங்கள், புது அம்சங்கள், எல்லாம் கிராமத்தினர் கண்ணை உறுத்துகின்றன. இந்த மகர்களின் ‘திமிரை’ அடக்க வேண்டும் என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.

போட்மாங்கே குடும்பத்தினரிடம் குடியிருந்த பகுதி பிற்படுத்தப்பட்ட மக்களின் (OBC) நிலத்திற்கு நடுவில் இருந்தது. தங்கள் நிலத்திற்குச் செல்லும் வழியை போட்மாங்கே குடும்பத்தினர் தடுப்பதாகவும், தங்கள் நிலங்களுக்குச் செல்வதற்கெனப் பிரத்யேகமான பாதை அமைப்பதற்கு நிலம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

இந்தக் கோரிக்கை போட்மாங்கே குடும்பத்தினர் கயர்லாஞ்சிக்கு இடம்பெயர்ந்த காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது. இது அவ்வப்போது வாய்த்தகராறாகவும் வெடித்திருக்கிறது. பல தருணங்களில், சாதி இந்துக்கள் தங்கள் கால்நடைகளைப் பயிர்களை மேய விடுவதும், மாட்டு வண்டிகளையும், டிராக்டர்களையும் வயலின் வழி ஓட்டிச் செல்வதுமாக விளைந்த பயிர்களுக்குச் சேதம் விளைவித்தனர்.

பையாலால் இந்த ஒடுக்குமுறைகளை சிரந்தாழ்ந்து ஏற்றுக்கொண்டாலும், சுரேகாவின் போர்க்குணம் அவற்றை ஒருபோதும் அனுமதித்தில்லை. அவர் எதிர்த்து அவர்கள் பாணியிலேயே அவர்களுக்குப் பதில் சொல்ல எத்தனித்தார்.

2001 வாக்கில் சிவசங்கர் அதில்கர் என்பவன் தன்னுடைய கால்நடைகளை போட்மாங்கேயின் வயல்களில் மேயவிட்டுவிட, சுரேகா அதை எதிர்த்துக் கேட்டார். அதற்கு சிவசங்கர் தகாத வார்த்தைகளாலும், சாதிய வசவுகளாலும் சுரேகாவை இழிவுப்படுத்தியிருக்கிறான். இதனால் ஆத்திரமடைந்த சுரேகா காவல்துறையினரை நாட, அவர்கள் 448, 294, 506 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். ஆனால், நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

ஆனாலும், என்மீதே வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு திமிரா? என்ற எண்ணம் சிவசங்கரை ஆத்திரமூட்ட, போட்மாங்கே வீட்டிற்கு ஆட்கள் திரட்டி வந்து வசைபாடியதோடு மட்டுமல்லாமல், கொன்று விடுவதாக மிரட்டியிருக்கிறான். இந்த அச்சுறுத்தலை அடுத்து, மீண்டும் காவல்துறையினரிடம் செல்ல, ஏற்கனவே அளித்த புகாரை நீதிமன்றத்திற்கு அனுப்பிவிட்டதாகவும், ஆதாரம் இல்லாததால் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

2002-ல், அம்பிலால் குர்பே மற்றும் ஈஸ்வர் அதில்கர் ஆகியோர் போட்மாங்கேயின் நிலத்தை நடைபாதையாகப் பயன்படுத்துவது தொடர்பான தகராறு எழுந்துள்ளது. போட்மாங்கே குடும்பம் கயர்லாஞ்சிக்கு வந்ததிலிருந்தே இந்தப் பிரச்சினையும் இருந்துள்ளது. ஆனால், 2004-ம் ஆண்டில் அது உச்சம் பெற்றது. விவகாரம் முற்றி ஈஸ்வர் அதில்கரும், சுரேகாவும் பரஸ்பரம் புகார் கொடுத்து வழக்கு Subdivisional துணை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈஸ்வர் அதில்கர் தரப்பில் போட்மாங்கே குடும்பத்தினர் வருவதற்கு முன்பே சாலை இருந்தது என்று வாதிடப்படுகிறது, சுரேகா தரப்பில் அதில்கர் அத்துமீறி நுழைந்ததாக வாதிடப்படுகிறது.
அங்கிருந்து விவகாரம், உள்ளூர் வருவாய்(Revenue) நீதிமன்றத்திற்குச் செல்கிறது, 30 ஜுன் 2004 அன்று, நில அளவீடு விவரம் இல்லாமலேயே, போட்மாங்கே குடும்பத்தினரின் நிலத்தின் நடுவே சாலை அமைக்க உத்தரவிடப்படுகிறது. நில அளவீட்டு ஆவணங்களில் போட்மாங்கே பெயரில் இருந்த நில அளவை விட குறைவான அளவே, அவருக்கு உரிமையானது என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

பையாலால் நில அளவீட்டு ஆய்வாளருக்கு விண்ணப்பித்து, தன் நிலத்தை அளக்கக் கோரினார். பையாலாலின் கோரிக்கையை ஏற்று ஆய்வாளர் நிலத்தை அளக்க உத்தரவு பிறப்பித்தார். உத்தரவை 23 ஜூலை 2004-ல் Sub-divisional அதிகாரி உறுதிப்படுத்தினார்.

இந்தச் சட்டப் போராட்ட காலக்கட்டத்தில் சித்தார்த் மஹாதேவ் காஜிபியே என்ற சுரேகாவின் சகோதரர் (Cousin) போட்மாங்கேயின் போராட்டத்திற்கு முழுமையாக துணை நின்றார். நில ஆய்வின் முடிவில் போட்மாங்கேக்குச் சாதகமான முடிவு வந்தாலும், மேற்கொண்டு விரோதத்தை வளர்க்க கூடாதென்று மஹாதேவ், சாதி இந்துக்களோடு சமரசம் செய்ய முயற்சி செய்தார். அதன் படி, பத்து அடி அகலத்திற்குச் சாலை அமைக்க உத்தரவிடப்பட்டது.

சாலை அமைக்கும் நோக்கத்திற்குக் குறுக்கே வந்தது மட்டுமல்லாமல், சமரசத்திற்குச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்திய சித்தார்த் மீது சாதி இந்துக்களின் கோபம் குவிந்தது.

இந்தச் சூழல் போட்மாங்கே குடும்பத்தை மேலும் அந்நியப்படுத்தியது. சுரேகாவுக்கும் சித்தார்த்துக்கும் கள்ள உறவு இருப்பதாக ஊருக்குள் புரளி பரப்பப்பட்டது. ப்ரியங்கா பள்ளிக்கூடம் செல்லும் வழியில் பாலியல் ரீதியான சீண்டல்களைச் சந்திக்க நேர்ந்தது. குறிப்பிட்ட காலம் வரை பொறுமை காத்த பிரியங்கா, மே 2006-ல் தன்னுடைய மாமா சித்தார்த்திடம் இது குறித்து புகார் கூறினாள். அதே நாள் மாலை, யோகேஷ் புருசோத்தம் திடர்மாரே என்பவன் ப்ரியங்காவிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சி செய்திருக்கிறான்.

இதையும் கேள்விப்பட்ட சித்தார்த் நேரடியாக யோகேஷின் வீட்டிற்குச் சென்று எச்சரித்துவிட்டு வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த, யோகேஷ் தனது ஆட்களோடு வந்து போட்மாங்கே வீட்டில் மிரட்டல் விடுத்துவிட்டுச் சென்றிருக்கிறான். அப்போது வீட்டில் சித்தார்த் இருந்ததால், நேரடியாக வன்முறையில் இறங்கும் துணிச்சல் அந்தக் கூட்டத்திற்கு வரவில்லை.

பின்னர், அங்கிருந்து கிளம்பிய சித்தார்த் , காவல்துறையினரிடம் புகாரளித்து வன்முறையைத் துண்டிவிட வேண்டாம் என்று எச்சரித்துவிட்டுச் சென்றார். ஆனாலும், இந்த சமரச எண்ணம், அந்த வெறியர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வரவில்லை. தொடர்ந்து போட்மாங்கே குடும்பத்தை ‘தீர்த்துக் கட்டும்’ அச்சுறுத்தல் வந்த வண்ணம் இருந்தது.

செப்டம்பர் 1, 2006-ல் மீண்டும் அசிங்கமான வார்த்தைகளால் வசைபாட, சுரேகா அந்தல்காவ்ன் காவல்நிலையத்தில் புகாரளித்தார். காவல்துறை வழக்கம் போல எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சித்தார்த் கஜிபியேயைப் பொருத்தமட்டில், வட்டாரத்தில் முக்கியமான புள்ளி. அவரிடம் 50 ஏக்கர் நிலமிருந்தது. மேலும் மண்ணெண்ணெய் ஏஜென்சியும் வைத்திருந்தார். சிறு அளவிலான அரசியல் லட்சியங்களும் அவருக்கு உண்டு. கயர்லாஞ்சியைச் சார்ந்த சாதி இந்துக்கள் உட்பட பல சாதி இந்துக்கள் சித்தார்த்தின் வயலில் விவசாயக் கூலிகளாக வேலை பார்த்தனர்.

போட்மாங்கே விவகாரத்தில் ஆரம்பம் முதலே கிராமத்தினரோடு முரணை வளர்த்துக்கொள்ள வேண்டாம் என்று சித்தார்த்தும், அவரது இளைய சகோதரர் ராஜேந்தரும் தொடர்ந்து ஆலோசனை சொல்லி வந்தனர். சுரேகா குடும்பத்தினரும் அதைப் பின்பற்றவே முயற்சி செய்தனர். ஆனால், தன் பயிர்களுக்குப் பாதகம் நேர்ந்த போது சுரேகாவல் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சித்தார்த் அவ்வாறான தருணத்தில் சுரேகாவோடு உடன் நின்றார். இது சாதி இந்துக்களுக்கு மேலும் ஆத்திரத்தை மூட்டியது.

ஊருக்குள் திருடர்கள் நுழைந்து விட்டதாக ஜூன், ஜூலை 2006 மாதங்களில் புரளி பரவியது. அந்தச் சூழலைப்பயன்படுத்தி சித்தார்த்தைக் கொன்றுவிட திட்டம் தீட்டினர். இதை முன்னறிந்த சுரேகாவின் மகன் ரோஷன் தன் மாமா சித்தார்த்துக்கு எச்சரிக்கை விடுத்து வைத்தான்.

நாட்கள் நகர்ந்தன. சாதி இந்துக்கள் வன்மத்தை விடுவதாய் இல்லை. வேறொரு திட்டம் தீட்டினர். 3 செப்டம்பர் அன்று பையாலால் வீட்டுக்கு சித்தார்த் வந்தார். அந்நேரம் பார்த்து, சித்தார்த்தின் வயலில் விவசாயக் கூலியாக வேலை பார்க்கும் பெண்ணின் கணவன், சக்ரு தன் மனைவியின் சம்பளத்தைத் தருமாறு தகராறு செய்தான். கோபத்தில் சித்தார்த் அவனை அடித்து விடுகிறார்.

மாலை 6 மணிக்குப் பையலால் வீட்டிலிருந்து கிளம்பிய சித்தார்த்தை வழிமறித்து சுக்ரு உட்பட பலரும் தாக்கினர். இதை சுரேகாவும், ப்ரியங்காவும் பார்த்துவிட அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டது. கடுமையாகக் காயம்பட்ட சித்தார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, அந்தல்காவ்ன் காவல் நிலையத்தில் ராஜேந்திர புகாரளித்தார். வழக்குப் பதிய காவல்துறை மறுத்துவிட்டது.

பின்னர் காம்ப்டீ என்ற காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. ஆனாலும், தாக்குதல் அந்தல்காவ்ன் காவல்நிலைய எல்லைக்குள் நடந்ததால், அந்தக் காவல்நிலையத்திற்கே வழக்கை காவல்துறை மாற்றிவிட்டது.

சம்பவம் நடந்து 11 நாட்கள் கழித்து, 14 செப்டம்பர் அன்று, அந்தல்காவன் காவல்நிலையத்திலிருந்து தலைமை ஏட்டு பேபன் மேஸ்ராம் மற்றும் ஏட்டு காவ்லே ஆகியோர் அடங்கிய குழு, சுரேகா மற்றும் ப்ரியங்காவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வந்திருந்தது.

அப்போது ஒரு டீக்கடையில் கயர்லாஞ்சி கிராமப் பஞ்சாயத்து தலைவர் உபாஸ்ராவ் கண்டாடே, அவருடைய உதவியாளர்கள், அம்பிலால் குர்பே, பாஸ்கர் காதவ் (பாஜகவின் உள்ளூர் வட்டார தலைவர்) ஆகியோர் போட்மாங்கே குடும்பத்தைக் கொல்லப்போவதாக விடுத்த மிரட்டலைக் கேட்டும், அவர்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் பின்னர் சித்தார்த் மீது தாக்குதல் தொடுத்த நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த நபர்களைக் கைது செய்யவில்லை. அந்தல்காவ்ன் காவல்நிலையத்தில் பொறுப்பாளர் (PSI) சோமேஸ்வர் பரணே, தாக்குதல் தொடுத்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ச்சுவதற்கான வாய்ப்பு இருந்தும், அதைத் தவிர்த்துவிட்டு, குற்றவாளிகளிடம் லஞ்சம் வாங்கிப் பிழைப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்.

விளைவு மோசமாகிக்கொண்டிருந்தது. தங்களது தாக்குதல் திட்டத்திற்கு ஏற்ப சாதி இந்துக்கள் புரளிகளைக் கிளப்பி விட்டனர். அதன்படி, சித்தார்த் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்குவதற்கு ராஜேந்திர துடிக்கிறான் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் சாதி இந்துக்கள்.

காவல்துறை அமைதியாக வேடிக்கை பார்த்தது. போட்மாங்கே, கஜ்பியே குடும்பங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது மேலும் அது சாதி பிரச்சினையாகவும் மாற வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்தும் காவல்துறையும் சிவில் நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அக்டோபர் 21-ம் தேதி ராஜேந்திர மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது, மயிரிழையில் உயிர் தப்பினார்.

இந்தத் தாக்குதல்கள் பதற்றத்தை உருவாக்கி வந்த நிலையில், காவல்துறையினர் சித்தார்த்த மீதான தாக்குதலுக்கு 324, 147, 148 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜாமீன் கோர ஆலோசனையும் சொல்கின்றனர். எல்லோரும் எதிர்பார்த்தபடி அவர்களுக்கு எவ்வித தடையுமின்றி ஜாமீனும் கிடைத்தது.

குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் ஜாமீன் கிடைத்த உற்சாகத்தில் டிராக்டர் ஒன்றில் ஏறி ராஜேந்திராவை மீண்டும் தாக்க முயற்சி செய்ய, இப்போது அவர் தப்பிக்கிறார்.

பின்னர் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராமக் கூட்டம் கூடி, போட்மாங்கே குடும்பத்தினருக்குப் பாடம் கற்பிப்பது என்று முடிவெடுக்கப்படுகிறது. ஜாமீன் கிடைத்த மகிழ்ச்சியைவிட, வழக்குக் கொடுக்கும் திமிரை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இந்த நடவடிக்கைகளை அடுத்து, போட்மாங்கே குடும்பத்தினர் ஏதோ பாதகமாக நடக்கப் போகிறது என்று முன் கணித்திருந்தனர்.

அன்றைய நாள் கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த போது, ஒரு சாதி இந்துப் பெண், கீழ்ச்சாதிக்குக் கண்டிப்பாகப் பாடம் கற்றுக் கொடுக்கப்படும் என்று சொல்வதைக் கேட்கிறாள். அச்சத்தில் தன் தாயிடம் தெரிவிக்கிறாள். சுரேகா தன்னுடைய சொந்தக்காரர் நர்ணாவரேக்குத் தொடர்புகொண்டு விசயத்தைச் சொல்ல, அவர் காலம் தாமதிக்காமல் கிளம்பி வரச் சொல்கிறார். ஆனால், சுரேகா முடிவெடுக்கக் கொஞ்சம் நேரமெடுத்துக்கொள்ளலாம் என்று தாமதிக்கிறாள். கடந்த கால அனுபவம் காரணமாக, காவல்துறையிலும் புகார் கொடுக்க அவள் விரும்பவில்லை.

ப்ரியங்காவுக்குத் தன் மாமன்மார்கள் மீதும் தாக்குதல் நடந்துவிடக்கூடும் என்று நினைத்து, சித்தார்த்த, ராஜேந்திராவுக்கும் கவனமாக இருக்க சொல்லிவிட்டு, மாலை 6 மணி வாக்கில் வீடு திரும்பினாள்.
சரியாக அதே நேரத்தில், டிராக்டரில் குற்றவாளிகளையும், அவர்களது ஆதரவாளர்களையும் ஏற்றியபடி டிராக்டர் ஒன்று நேரடியாக போட்மாங்கே வீட்டை நோக்கி வந்தது. அவர்களோடு மேலும் சிலரும், பெண்களும் உடன் வந்தனர்.

அந்த நேரத்தில் ‘மாரோ சாலோன் கோ’ (அவர்களைக் கொல்லுங்க) என்ற சத்தம் கேட்டு பையலால் போட்மாங்கே ஓடி வந்து பார்க்க, தன் வீட்டில்தான் தாக்குதல் நடக்கிறது என்பதை அறிந்துகொண்டார். அறுபது, எழுபது நபர்கள் கைகளில் கம்பு, சைக்கிள் செயின், மேலும் பல ஆயுதங்களோடு தன் குடும்பத்தினர் தாக்குதலுக்கு உள்ளாவதைக் கண்டு, துசாலாவுக்குச் சென்று சித்தார்த்திடம் உதவி கேட்க ஓடினார். விவரமறிந்த சித்தார்த் காவல்நிலையத்திற்கு அழைத்து, எதிர்முனையில் கான்ஸ்டபர் ராஜ்குமார் டோங்ரே என்பவரிடம் சொல்ல, அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாலை 6:20 வாக்கில் ராஜேந்திர சுரேகாவுக்கு போன் செய்ய, உதவிக்காகக் கதறியபடியே அவளது போன் அணைந்து போனது. தாக்குதல் நடக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட ராஜேந்திர கயர்லாஞ்சிக்குச் சென்று, வெறிபிடித்த கும்பல் தன் உறவுகளைத் தாக்குதவதைப் பார்க்கிறான். ஆனால், நேரில் சென்று தட்டிக் கேட்க அவனுக்குத் துணிச்சல் வரவில்லை. தன் சகோதரன் சித்தார்த்திடம் மீண்டும் ஓடினான்.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளின் விவரணையின்படி,

பெண்கள் இந்தத் தாக்குதல் முன்னணியாளர்களாகப் பங்கெடுத்தனர். எல்லோருடைய கையிலும் கத்தி, கம்பு, கோடரி, சைக்கிள் செயின், இரும்பு ராடு என ஆயுதங்கள் இருந்தனர். நாள் முழுக்க சுரேகாவும், ப்ரியங்காவும் அஞ்சிய ஆபத்து, இத்தனை கொடூரமாக இருக்குமென அவர்கள் கணித்திருக்கவில்லை.

குடிசைக்குள் சென்ற கும்பல் முதலில் ப்ரியங்காவை இழுத்து வந்து மாட்டுக் கொட்டகையில் பலரும் சேர்ந்து வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியது. இதற்கிடையில் சுதிரும், ரோசனும் கடுமையாகத் தாக்கப்பட்டு தன்னுடைய தாய், மற்றும் சகோதரியோடு உறவு கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். அவர்கள் மறுக்கவே, அவர்களது ஆணுறுப்பு சிதைக்கப்பட்டனர். கேட்பாரற்றுக் கிடந்த நால்வர் மீதும், விரும்பியபடி வக்கிரங்கள் அரங்கேற்றப்பட்டன. பெண்கள் சாகும் வரை வன்புணர்ச்சிக்கு ஆளாயினர். இரண்டு மணி நேரம் இந்தக் கொடூரம் நீடித்தது.

முடிந்ததும், எதுவுமே நடக்காததைப் போல, எல்லாமே அமைதியாகிவிட்டிருந்தது.
சிலர் மாட்டு வண்டியில், நான்கு உடல்களையும் ஏற்றி, போட்மாங்கேயின் வயலுக்கு நீரிறைத்த அதே வாய்க்காலின் கரையில், வீசியெறிந்தனர்.

அதன்பிறகு, கிராமத்தினர் கூடி, ரகசியக் காப்பு உறுதி மொழி எடுக்காத குறையாக ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடித்தனர்.

photo credits : ndtv.com

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்