Aran Sei

உறுதிமொழியை மீறும் நீதிபதிகளுக்கு என்ன தண்டனை? – ஏ.ஜி. நூரனி

ரசியலமைப்பு பிரச்சினைகளில் சட்டத்திற்கு எதிரான தொனியில் நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போது நீதிமன்றத்தின் விதிகளை மீறுகிறார்களா?
இந்தியாவின் 14-வது சட்ட ஆணையத்தின் 1958 அறிக்கை தனித்தன்மையுடைய முக்கியமானதொன்று. அதனால் தான், இப்போது யாரும் அதை கண்டுகொள்வதில்லை. சட்ட நடவடிக்கைகளின் தரம் சரிந்து கொண்டே வந்ததில் இருந்து, தற்போது நீதிபதிகள் முறை தவறி பேசும் நிலைக்கு வந்திருக்கிறோம்.
மேற்சொன்ன அறிக்கையில் , “ஆங்கிலேயர்களின் காலத்தின் தொடக்கத்தில் இருந்து மிகச் சமீபத்தில் வரை, ஆங்கிலேய மற்றும் இந்திய நீதிபதிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதை ஒரு பாரம்பரியமாக செய்து வந்தார்கள், தங்களுடைய தற்சார்பை காத்துக் கொள்வதில் தீவிரமாக இருந்தார்கள். எந்த அளவுக்கு என்றால், ஒரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், நீதிபதிகளும் பிரதமரின் அலுவலகம் பக்கம் கூட எட்டிப் பார்க்காத அளவு” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் இப்போது, பிரதமரிடம் இருந்து வரும் வரவேற்புகள் கூட கட்டளைகளாக பாவிக்கப்படுகின்றன. அமைச்சர்கள் நீதிபதிகளுக்கு பேட்டி கொடுக்க “அனுமதி” கொடுப்பதாக பத்திரிக்கைகள் எழுதுகின்றன. புதிதாக நியமனம் ஆகும் நீதிபதிகள் சட்ட அமைப்புகளிடம் இருந்தும், தனிப்பட்ட நபர்களிடம் இருந்தும் வரும் கேளிக்கை வரவேற்புகளை ஏற்பது வழக்கமாகிவிட்டது. பாரின் உறுப்பினர்கள், புதிதாக வரும் நீதிபதிகளை மகிழ்விப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
 “சாதாரண மக்களை விட நிறைய கட்டுப்பாடுகளோடும், அதிக தீவிரமானதொரு வாழ்க்கைமுறையும் நடத்தையும் நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும். இது எழுதப்படாமல் இருந்தாலும், கடுமையான பின்பற்றப்படுவது. நீதிபதிகள் சலுகைகள் இருந்தும், நிறைய கட்டுப்பாடுகள் உடையவர்கள்” என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.
நீதிபதிகள் உறுதிமொழியை மீறும் போது!
1985ல், தங்களை இடதுசாரிகளாக பாவித்துக் கொண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் குழு ஒன்று முளைத்தது. நீதிபதி டி.ஏ. தேசாய், “ நான் இந்த அமைப்பில் இருந்து கொண்டே, அதை அரித்து எடுத்து, அதை புதிய பகுதிகளால் நிரப்ப விரும்புகிறேன். அப்போது, இந்த அமைப்பு நீதியை முறையே வழங்க முடியும்” என்றார்.
இது ஒரு நீதிபதிக்கான பாதை அல்ல. அந்த வருடம் நடந்த இண்டோ-ஜெர்மன் ஜனநாயக குடியரசு மாநாட்டில், நீதிபதி ஓ சின்னப்ப ரெட்டி, இந்திய நீதித்துறை “உடைமைகளின் சொந்தக்காரர்களின் உரிமைகளை உயர்த்திப்பிடிக்க அதிகப்படியாக தயாராக” இருப்பதாக சொன்னார். மேலும் அவர், “ அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வராமல், சமூக அமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வருவது சாத்தியமா” எனவும் கேள்வி எழுப்பினார்.
மக்கள் மட்டுமே, அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் வழியாக இந்த அமைப்பில் ஒரு அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வர முடியும். மக்களின் கட்டளை, நீதித்துறையின் மரியாதையை கோருவதாக இருக்குமே தவிர குருட்டுப்போக்கில் தலையாட்டுவதாக இருக்காது. ஏனென்றால், நீதிபதிகள் “அரசியலமைப்பையும் சட்டங்களையும் நிலைநிறுத்த” உறுதிமொழி எடுத்தவர்கள்.
இப்படி இருக்கும் போதும், நீதித்துறைக்கு எதிரான தொனியில் சட்ட பிரச்சினைகள் குறித்து நீதிபதிகள் பேசுவது, நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறுவது. மேலும், நீதிபதிகள் அந்த குறிப்பிட்ட வழக்கில் இயங்க தகுதியில்லாதவர்களாகவும் ஆகிறார்கள்.
தாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை நீதிபதிகள் மீறும் போது அவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய கண்டனத்திற்கு உதாரணம் 1943-ல் நடந்த ஒரு வழக்கு. 1943-ல் ஒரு கிரிமினல் வழக்கில் தலையிட்டதற்காக வங்காளத்தின் முதல்வர் ஏகே ஃபஸ்லுல் ஹக்கிற்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
“ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்ட நபரோ, அல்லது ஒரு வழக்கு நடக்கும் போது உண்மையை சொல்வதாக ஒப்புக் கொண்ட நபரோ, அவற்றை மீறும் போது பொய் சாட்சி சொல்லும் குற்றத்தை செய்கிறார், இது தண்டனைக்குரியது. ஆனால், ஒரு பதவியை ஏற்க, தன்னுடைய கடமையை தவறாமல் செய்வதாக ஒருவர் உறுதிமொழி எடுக்கும் போது, அதை ‘சட்டப் பிரமாணம்’ ( promissory oath) என்கிறோம்.
இந்த உறுதிமொழி மீறல் தொடர்பான சிறப்புச் சட்டங்கள் இல்லாத நிலையில், இப்படியான உறுதிமொழிகளை மீறுபவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுவதில்லை”
 ஆனால், இந்த விதிமீறல் குறிப்பிட்ட நபர் அரசாங்கத்தில் இயங்க தகுதியில்லாதவர் என்பதை தெளிவாக காட்டுகிறது, இப்படி, அரசில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிகளை வெறும் சம்பிரதாயமாக மட்டுமே கொண்டால், நல்லாட்சிக்கு வாய்ப்பில்லை. திரு ஹக் குறித்த முடிவை அவருடைய சக அலுவலர்கள் எடுப்பார்கள்” என கல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
சர்ச்சைகளில் இருந்து விலகியிருப்பது!
நாம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு பாதையில் பயணிக்க வேண்டியதாக இருக்கிறது என்பது உண்மை. விதிமுறைகளை எல்லாம் கடினமாக்குவதனால் பெரிய நன்மைகள் எதுவும் வந்ததும் இல்லை.
கில்மூரின் பிரபுவான சர் டேனியல் மேக்ஸ்வெச்-ஃபைஃப், இங்கிலாந்து அரசியின் ஆலோசகர்,  “ இந்த நாட்டின் நீதித்துறையை , ஒவ்வொரு நாளின் சர்ச்சைகளில் எல்லாம் இருந்து காப்பாற்ற வேண்டும். ஒரு பொது விதியாக, நீதித்துறையின் உறுப்பினர்கள் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பங்கேற்பது நடக்கக்கூடாது” என்றார்.
மேலும், அந்நாட்டின் லார்டு சேன்சலர் (அதிபர்) இதில் தலையிடக் கூடாது எனவும், ஒரு நீதிபதியை பேட்டி காண அழைப்பு வந்தால், உடனடியாக அவரிடம் அதை தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
பேனிக் பிரபு, இங்கிலாந்து அரசியின் ஆலோசகர், “ நீதித்துறையின் விடுதலை  நீதிபதியின் கருத்துக் குறித்த மக்களின் விளக்கத்தால் கெடுவதில்லை. மாறாக, ஒரு நீதிபதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அவர் சட்டரீதியாக வலிமையில்லாத , மக்கள் நலனுக்கு எதிரான வழக்கங்களுக்கு இணங்கவில்லை என்றால் வெளியேற்றப்படுவார் என மிரட்டப்பட்டால் தான் நீதித்துறையின் விடுதலை குலைக்கப்படுகிறது.
ஒரு நீதிபதி, அரசியல் சர்ச்சைகளில் ஈடுபடமால், தன் பேச்சில் ஒரு சார்பு இருக்கிறதோ என நடத்தப்படும் வழக்குகள் குறித்து மக்கள் சந்தேகிக்கும்படி நடக்காமல் இருக்கும்வரை, பொதுநலன் குறித்து உரக்கப் பேசு அவருக்கு முழு உரிமை இருக்கிறது” என்று சொல்கிறார்.
1989-ம் ஆண்டு கில்மூரின் விதிகளை களைந்தாகிவிட்டது. ஆனாலும், சில விதிமுறைகள் மட்டும் நிலைத்திருக்கின்றன – அரசியல் கருத்துக்கள் சொல்லக் கூடாது, இயக்குநர்களாகவோ பங்குதாரர்களாகவோ வணிகத்தில் ஈடுபடக்கூடாது.
சர்ச்சையில்லாத விஷயங்கள் குறித்து பிபிசியில் பேசலாம் (நீதிபதிகளுக்கென உரையாடல் நிகழ்ச்சிகள்  – சாட் ஷோக்கள் – எல்லாம் இல்லை), பாடங்கள் நடத்தலாம், சட்டம் குறித்த ஆவணங்களை திருத்தலாம்.
நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு நீதிபதியை அவமரியாதை செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பு என்று இங்கே சொல்லிவிட முடியாது. நீதிபதி, குடிமக்களை போல அவதூறு சட்டத்தை வேண்டுமானால் கையில் எடுக்கலாம்.
(www.scroll.in இணையதளதில் ஏ.ஜி.நூரனி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்