Aran Sei

வேலை இழந்தால் கொலை செய்வது தீர்வல்ல : ஷியாம் சுந்தர்

கொலை செய்யப்பட்ட நந்தக்குமார்

தூத்துக்குடியில் உள்ள பிரபல பர்னிச்சர் கடையில் நந்த குமார் என்பவர் வேலை செய்து வந்தார். அவருடன் ஜார்ஜ் என்பவர் அதே பர்னிச்சர் கடையில் பணிபுரிந்து வந்தார். அவர்கள் இருவருக்கும் பணிபுரியும் காலத்திலேயே பல கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன.

இந்நிலையில் அந்த பர்னிச்சர் நிறுவனம் ஜார்ஜை பணியிலிருந்து நீக்கி உள்ளது. அதன் காரணமாக ஜார்ஜ் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்துள்ளார். தான் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு நந்தகுமார்தான் காரணம் என்று அவர் எண்ணி உள்ளார். அதனால் நந்தகுமார் மீது மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நந்தகுமார் நேற்று அதிகாலை 5 மணி அளவில் தனது மோட்டார் வாகனத்தில் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றுள்ளார். ஜார்ஜ் அவரது வாகனத்தை வழிமறித்து அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிச் சென்று விட்டார். படுகாயம் அடைந்த நந்தகுமாரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் நடு வழியிலேயே நந்தகுமார் பரிதாபமாக மரணம் அடைந்து விட்டார்.

இந்த கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள் தமது ஊழியர்களை எந்தக் காரணமும் கூறாமல் பணியில் இருந்து நீக்குவது தொடர்கதையாகி விட்டது. இந்த ஆறுமாத காலத்தில் தமிழகத்தில் மட்டும் பல லட்சம் தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இவ்வாறு நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யக் கூடாது என்று அரசு வலியுறுத்தியுள்ளது. என்றாலும் பொருளாதார தேக்க நிலையாலும் அதிக லாப நோக்கத்தோடும் பல நிறுவனங்கள் தமது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் முறையிடுவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிலாளர் அலுவலகங்கள் உள்ளன. அதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சட்ட ரீதியாக இந்த தொழிலாளர் அலுவலகங்களில் முறையிடுவதுதான் அவர்களுக்கு சரியான தீர்வை பெறுவதற்கான வழியை ஏற்படுத்தும்

இதுபோன்ற பல நிகழ்வுகள் கடந்த ஆண்டுகளில் பிற நிறுவனங்களில் நடைபெற்றுள்ளன. சென்னையில் உள்ள ஒரு பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்த மணிகண்டன் என்னும் ஊழியர் பணி நீக்க நடவடிக்கை உட்படுத்தப்பட்ட பிறகு அதற்குக் காரணம் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரி அஸ்வின் தான் என்று எண்ணி அவரை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதேபோல டெல்லியில் உள்ள பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஜோகிந்தர் என்னும் தொழிலாளி தன்னுடன் பணிபுரிந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரி பினேஷ் ஷர்மா என்பவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது போன்ற செயல்கள் எந்த விதத்திலும் பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட தொழிலாளிகளுக்கு தீர்வாக அமையாது. இந்த அனைத்து சம்பவங்களிலும் குற்றமிழைத்த தொழிலாளர்கள் சிறைக்குச் செல்லும் அவலத்தை தான் கொண்டுவரும்.

அவர்களை நம்பியுள்ள குடும்பத்தையும் பெரிய அளவு பாதிக்கும். ஏற்கனவே பணிநீக்க நடவடிக்கையால் அவர்களின் குடும்பம் பொருளாதார ரீதியில் பெரிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கும். இந்த நிலையில் கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு செல்வது மிகப்பெரிய பிரச்சனைக்கு அந்தக் குடும்பத்தை கொண்டு செல்லும்.

அதனால் இதுபோன்ற பணிநீக்க நடவடிக்கைக்கு ஒருவர் உட்படும் பொழுது, அது  சட்டவிரோதம் என்று அவர் கருதினால் தொழிலாளர் அலுவலகத்தில் முறையிட்டு தொழில் தாவா எழுப்ப வேண்டும். உடனடியாக வேறு வேலை வாய்ப்புகள் தேடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

மாறாக, தமது தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு சட்டத்தை தனிநபராக ஒருவர் கையில் எடுக்கும் பட்சத்தில் அது அவருக்கு பேராபத்தாக முடியும் என்பதே ஜார்ஜ், மணிகண்டன் மற்றும் பினேஷ் சர்மா போன்றோர் நமக்கு உணர்த்தும் உண்மை.

– ஷியாம் சுந்தர்

கட்டுரையாளர் ஐ.டி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உடையவர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்