Aran Sei

ஜாமியா மாணவி குல்பிஷா பாத்திமா – சிறையில் மதரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகப் புகார்

குல்பிஷா பாத்திமா Credit : thewire.in

பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் தொடர்புள்ளதாகக் கூறி UAPA (unlawful activities prevention act) என்னும் கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் மாணவி குல்பிஷா பாத்திமா முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாகக் கூறியும் பல தருணங்களில் சிறை அதிகாரிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறியும் திஹார் சிறை அதிகாரிகள் டெல்லி நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.

முன்னதாகத் திஹார் சிறை ஊழியர்கள் தன்னை மத ரீதியாகக் கொச்சைப்படுத்துவதாகவும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும் பாத்திமா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் விசாரணையின்போது கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத் முன்பு மேற்கண்டவாறு தங்கள் வாதத்தை முன் வைத்துள்ளனர் திஹார் சிறை அதிகாரிகள்.

அக்டோபர் 15-ம் தேதி பாத்திமாவால் அளிக்கப்பட்ட மனுவிற்குப் பதிலளித்த திஹார் சிறை கண்காணிப்பாளர் “சிறை ஊழியர்களிடம் தவறாக நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டதால் அவரைச் சீர்திருத்துவதற்கான தண்டனைகள் வழங்கப்பட்டன” என்று கூறியுள்ளார்.

மேலும் “இந்தப் பெண் கைதி சிறை ஊழியர்களை தாக்க முயற்சித்து, சிறையில் தொந்தரவுகளை உருவாக்க முயற்சிக்கிறார். அவருடைய நடவடிக்கைகள் கடுமையானதாகவும் தொல்லை தருவதாகவும் உள்ளன. சிறைக் கைதிகளிடம் பணிவாக நடந்துகொள்ள வேண்டும், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது என்று சிறை ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறைப் பதிவுகளின்படி அவருடைய தவறான நடவடிக்கைகளைச் சரி செய்யவே சிறைக்கைதிக்குச் சீர்திருத்த தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன” என்று அவர் கூறியுள்ளார்.

பாத்திமாவின் தொடர்ச்சியான புகார்களைக் கருத்தில் கொண்டு, மேலும் விரும்பத் தகாத நிகழ்வுகளைத் தவிர்ப்பதற்காகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஊழியர்கள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கண்காணிப்பாளர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளார்.

“அக்டோபர் 15-ம் தேதி பாத்திமாவுடன் 48 இஸ்லாமியப் பெண்களும் மத்திய சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டனர். ஆனால், வேறு எவரும் பாத்திமா போன்று குற்றம் சாட்டவில்லை” என்றும் சிறைக் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

“விசாரணையின்போது  பாத்திமாவும் சிறை ஊழியர்களும் ஒருவொருக்கொருவர் புகார் அளித்தது தெரிய வந்ததது. எனவே இரு தரப்பினரும் விசாரிக்கப்பட்டுச் சிறை விதிகளைப் பின்பற்றவும் சிறைக்குள் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர்.” என்று கண்காணிப்பாளரின் அறிக்கை கூறுகிறது.

இந்தச் சம்பவத்தின்போது உடன் இருந்ததாகச் சொல்லப்படும் பபிதா, ஷீத்தல் ஆகிய இரு கைதிகள், “பாத்திமாவிற்கும் சிறை ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது, என்றாலும் ஊழியர்கள் எந்தவிதமான மதரீதியான வசவுகளையும் பயன்படுத்தவில்லை” என்று கூறியுள்ளனர். “6-வது வார்டுக்கான வெளியில் இருக்கும் நேரம் முடிந்துவிட்டது. ஆனால் பாத்திமா வாட்டர் கூலரிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள வெளியே இருந்திருக்கிறார். சீக்கிரம் முடித்து விடுமாறு ஊழியர்கள் பலமுறை கூறியும் அவர் இன்னொரு சிறைக் கைதியுடன் தனது உரையாடலை முடித்து விட்டுதான் சிறைக்குத் திரும்பினார்” என்று பபிதாவும் சீத்தலும் தமது வாக்குமூலத்தில் கூறியிருக்கின்றனர்.

பாத்திமா தனது வழக்கறிஞர் மெஹ்முத் ப்ராச்சா மூலம் நீதிமன்றத்தில் நேரடியாக அளித்த மனுவில் அவர் சிறை ஊழியர்களால் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

”எனக்குச் சிறையில் ஒரு பிரச்சனை உள்ளது. நான் இங்குக் கொண்டு வரப்பட்டதிலிருந்தே சிறை ஊழியர்களால் பாகுபாட்டை எதிர்கொண்டு வருகிறேன். அவர்கள் என்னைப் படித்த பயங்கரவாதி என்று அழைக்கின்றனர். மேலும் மத ரீதியான வசைகளை என்மீது வீசுகின்றனர். இங்கு நான் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறேன். நான் என்னையே காயப்படுத்திக்கொண்டால் அதற்கு இங்குள்ள சிறை அதிகாரிகள்தான் பொறுப்பு” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிராகப் போராடி வந்த பல மாணவர் செயற்பாட்டாளர்களில் பாத்திமாவும் ஒருவர். டெல்லியில் நடந்த கலவரத்தில் இவருக்குத் தொடர்புள்ளதாகக் கூறி டெல்லி போலீஸ் இவரைக் கைது செய்தது. கலவர வழக்கைப் பயன்படுத்தி அரசின் தூண்டுதலின் பேரில் அரசுக்கு எதிரான கருத்து உடையவர்களை முடக்கும் வேலையே இது போன்ற கைதுகள் என்று பல மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்