`ஜெய் பீம்’ தமிழில் வெளிவந்த மிக முக்கியமான திரைப்படம். நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமாவில் இதுவரை இடம் மறுக்கப்பட்ட இருளர் சமூகத்தின் வாழ்வியலையும், அவர்கள் மீது நிகழ்த்தப்படும் சமூக ரீதியான ஒடுக்குமுறையையும், அரசு வன்முறையையும் உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையாக மாற்றியிருக்கிறது `ஜெய் பீம்’. நீட் தேர்வு எதிர்ப்பு, ஒளிப்பதிவு சட்ட எதிர்ப்பு முதலானவற்றில் நேரடியாக ஒன்றிய அரசுடன் மோதிய சூர்யா இந்தப் படத்தைத் தயாரித்து, மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
ஜெய்பீம்: வதையுறும் வாழ்வும் நீதிக்கான பயணமும் – தமிழ்ப்பிரபா
வெகுசில எலைட் விமர்சகர்களைத் தவிர அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறது `ஜெய் பீம்’. படம் தொட்டுச் சென்ற விவகாரம், அது உருவாக்கிய உணர்வு எழுச்சி ஆகியவற்றின் அடிப்படையில் நிச்சயமாக இந்தப் படத்திற்கு எழுந்திருக்கும் ஆதரவு அலை நேர்மையானது. காவல் நிலையத்தில் காவலர்களால் ராசாகண்ணு கடுமையாகத் தாக்கப்பட்ட போதும், ராசாகண்ணுவின் மனைவி செங்கேணி கணவனைத் தேடி கையறுநிலையில் அலைந்து திரியும் போதும், ராசாகண்ணுவின் அக்கா மீது காவல் நிலையத்தில் பாலியல் அத்துமீறல் நிகழ்ந்த போதும், இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மீதான காவல்துறையினரின் சாதியவாத அடக்குமுறையைப் பற்றி பேசும் போதும் நாம் இத்தகைய உணர்ச்சிப் பெருக்கை உணர்ந்திருக்க முடியும். வெளிப்படையாகவே சாதியின் அடிப்படையில் `குற்றவாளிகள்’ தேர்ந்தெடுக்கப்படும் தொடக்க காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராதது. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக இந்தப் படத்திற்குச் சூட்டப்பட்ட தலைப்பே இந்தியாவின் மிகவும் புரட்சிகரமான முழக்கமாக இருந்திருப்பது மேலும் படக்குழுவினர் மீதான மரியாதையை அதிகரிக்கிறது.
`ஜெய் பீம்’ நிச்சயம் கொண்டாடத்தக்க திரைப்படம் என்ற போதும், அது பேசும் அரசியல் சற்றே சிக்கலானது. நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கும் சூர்யாவின் `சந்துரு’ கதாபாத்திரம் மனதைக் கவர்ந்த கதாபாத்திரம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும், இந்தக் கதாபாத்திரம் பழங்குடிகளை இருளில் இருந்து மீட்கும் `மீட்பர்’ மனநிலையில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. வழக்கறிஞர் ஒருவர் மீது காவல்துறை அதிகாரி தாக்குதல் நடத்தியதால் வழக்கறிஞர்களால் நடத்தப்படும் போராட்டம் ஒன்றில் முன்னின்று பங்கேற்கிறார் வழக்கறிஞர் சந்துரு. சூர்யாவின் `சந்துரு’ கதாபாத்திரம் ஸ்பைடர்மேன் படத்தில் வருவதைப் போல, `your friendly neighborhood rebel’ என்ற ரீதியில் அனைத்து போராட்டங்களிலும் முன்னால் நின்றுகொண்டிருக்கிறார். யாருக்காவது உதவி செய்துகொண்டே இருக்கிறார். `அடுத்து யாருக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று காத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு நாள்: தமிழ் நிலத்தின் எல்லைகள் சுருக்கப்பட்ட அரசியல் வரலாறு – சூர்யா சேவியர்
இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராசாகண்ணு மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டு, லாக்கப்பில் கடும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். காவல் நிலைய லாக்கப்பில் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீதான வன்முறைக் காட்சிகள் `யாராவது இவர்களைக் காப்பாற்ற வர மாட்டார்களா’ என்ற எண்ணத்தைப் பார்வையாளர்களிடையே தொடக்கம் முதலே விதைக்கிறது. குரலற்ற ஜீவன்களுக்கான மீட்பரின் தேவையைத் தொடக்கம் முதலே வலியுறுத்துகிறது திரைக்கதை. பழங்குடியினர் மீதான காவல்துறையின் அடக்குமுறையை மேலும் ரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தும் போது, சூர்யா இவர்களைக் காப்பாற்றப் போகிறார்; இவர்களுக்கு நீதி கிடைக்கப் போகிறது எனத் திரைக்கதை பழங்குடியினர் மீதான அடக்குமுறை என்பதைக் கடந்து சூர்யா என்னும் மீட்பரைத் தேடும் நிலைக்கு நகர்கிறது.
`பாட்ஷா’ படத்தில் ஆட்டோக்காரர் மாணிக்கத்தைக் கட்டி வைத்து அடிப்பது, திரைக்கதையில் பின்னால் நிகழப் போகும் மிகப்பெரிய அதிர்ச்சி தரும் மாற்றத்திற்காகவே. `அசுரன்’ படத்தில் சிவசாமி ஊர் மக்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சிகளும், சிவசாமி வெகுண்டெழுந்து திருப்பி அடிக்கும் போது சுவாரஸ்யமான திரைக்கதை உத்தியாக மாறி விடுகின்றன. அப்படியான காட்சியமைப்புகளாகவே `ஜெய் பீம்’ படத்தின் லாக்கப் காட்சிகள் இந்தத் திரைக்கதையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
சமீப காலங்களில் வெளியான சில பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஒடுக்கப்படும் சமூகங்கள் மீதான காவல்துறையினரின் வன்முறையைத் தொட்டுச் சென்றன. தலித் இயக்குநர்களான பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகிய இருவரும் இயக்கிய `காலா’, `கர்ணன்’ ஆகிய இரு திரைப்படங்களும் ஒடுக்கப்படும் சமூகங்கள் மீதான அரசு வன்முறையைப் பேசியவை. தமிழ் சினிமாவுக்கே உரிய ஆண் மையவாதப் பார்வை, தனிநபர் சாகசவாதம் முதலானவற்றை இந்த இரு படங்களும் முன்வைத்திருந்தாலும், இவை மீட்பரைக் கொண்டு உருவாக்கப்படாத கலகங்கள். தலித், பழங்குடி சமூகங்களில் இருந்து நாயகர்கள் உருவாகும் தற்காலத்தில் மீண்டும் மீட்பர் மனநிலையில் `ஜெய் பீம்’ உருவாகியிருப்பது மிக முக்கியமான சிக்கல்.
`காலா’, `கர்ணன்’ ஆகிய இரு படங்களிலும் ஒடுக்கப்படும் மக்கள் சமூகத்தில் நிலவும் சாதிய ஒழுங்கைத் தம் உரிமை மீட்புப் போராட்டங்களின் வழியாக சீர்குலைக்கிறார்கள். `காலா’ படத்தில் தாராவி மக்கள் தம் நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்ட போராடுகிறார்கள். `கர்ணன்’ படத்தில் பேருந்து வசதி, பெண் கல்வி முதலானவை சாதிய சமூகத்தின் ஒழுங்கைக் குலைக்கும் புரட்சிகர செயல்கள். `அசுரன்’ படத்தில் நாயகனுக்கும் வில்லனுக்கு எழும் முரண் என்பது நாயகன் நிலத்தை விற்க மறுக்கும் போது, உத்தரவை மீறுவதாகவும் ஒழுங்கை மீறிச் செல்லும் விதமாக ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அளிக்கிறது.
`சர்தார் உத்தம்’ – பிற தேச பக்தி திரைப்படங்களில் இருந்து ஏன் மாறுபடுகிறது?
`ஜெய் பீம்’ திரைப்படத்தில் வரும் பழங்குடியினர் அப்படி சமூக ஒழுங்கைச் சீர்குலைக்கும் எந்த புரட்சிகர நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக காட்சிப்படுத்தப்படவில்லை. சமூக ஒழுங்கை அசைக்காமல் அதற்குள் வாழ விதிக்கப்பட்ட மக்கள் செய்யாத தவறுக்காக அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள்; அதில் தங்களை நிரபராதிகள் எனக் காட்டிக் கொள்ளவும், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் மீட்பரைத் தேடுகிறார்கள். `கால் மேல கால் போட்டு உக்காருவேன்டா!’ என்றோ, `நிலம் எங்கள் உரிமை’ என்றோ, `நாங்க நிமிர்ந்திட்டோம். இனிமே குனிய மாட்டோம்’ என்றோ `ஜெய் பீம்’ படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பழங்குடியினர் எழுவதில்லை. மாறாக சமூகத்தின் பெரும்பான்மைவாத விழுமியங்களுக்கு உட்பட்டே வாழ்கின்றனர். முதலில் சமூக ஒழுங்கைக் கூட எதிர்க்காத அப்பாவிகள் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அடக்குமுறை நிகழ்த்தப்படுகிறது; அடக்குமுறையின் காட்சிகள் அடுத்து பார்வையாளர்களுக்கு மீட்பரின் தேவையை உணர்த்துகிறது. அடுத்தடுத்து மீட்பரின் நடவடிக்கைகள் என வரிசையாகப் பெரும்பான்மை பார்வையாளர்களுக்கு எழும் கோபத்திற்கு வடிகாலாகவும், அதே வேளையில் உண்மையான நிகழ்வுகளையும் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
`ஜெய் பீம்’ படம் முன்வைத்திருக்கும் தீர்வு முழுவதும் அரசியலமைப்பின் அடிப்படையாக உருவாவது. மக்களைத் திரட்டும் புரட்சிகர முழக்கத்தை வைத்து சட்டப் போராட்டத்தை சர்வரோக நிவாரணியாக மாற்றியிருப்பதிலும் சற்றே நெருடல் இருக்கிறது. `காலா’, `கர்ணன்’ ஆகிய இரு கதாபாத்திரங்களும் தலித் இயக்குநர்களின் கற்பனையில் இருந்து உருவான நாயகர்கள். இருவரும் மக்களைத் திரட்டுவது, தலைமை தாங்குவது, மக்கள் புரட்சியை நடத்துவது என `ஜெய் பீம்’ சொல்லாமலே புரட்சியில் இறங்குகிறார்கள். அதே வேளையில், `ஜெய் பீம்’ மக்களின் போராட்ட உணர்வை மீட்பர்களிடத்திலும், நீதிமன்றத்திடமும் அளித்துவிடுமாறு கோருகிறது. `காலா’ ராமாயணத்தின் அடிப்படையிலும், `கர்ணன்’ மகாபாரதத்தின் அடிப்படையிலும் அரசு எதிர்ப்பை முன்வைத்தன. `அசுரன்’ தலைப்பு இந்து புராணங்களுக்கு மாற்றாக இதே போக்கில் உருவாக்கப்பட்டது. இந்த வரிசையில் கூட `ஜெய் பீம்’ படத்தினால் ஒழுங்கை அசையச் செய்ய முடியவில்லை என்பது துயரம்.
காந்தியின் ஆலோசனையின்படி தான் சாவர்க்கர் கருணை மனு போட்டாரா? – உண்மை என்ன?
`அசுரன்’ படத்திலும் வழக்கறிஞர் வேணுகோபால் சேஷாத்ரி என்ற வேடத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மீட்பராக நடித்திருப்பார். வழக்கறிஞர் வேணுகோபால் சேஷாத்ரியின் சற்றே இளமையான, கொஞ்சம் ஹீரோயிசம் கொண்ட கதாபாத்திரமாகவே சூர்யாவின் `சந்துரு’ கதாபாத்திரம் இதில் வருகிறது. `காலா’, `கர்ணன்’ படங்களில் காவல்துறையினரிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்ற இருதரப்பையும் திருப்தி செய்யும் போக்கு கிடையாது. `ஜெய் பீம்’ காவல்துறையினர் மீதான அழுத்தமே பழங்குடியினர் மீதான வன்முறைக்குக் காரணம் என்ற செய்தியையும், காவல்துறையினரில் பெருமாள்சாமி போன்ற நல்ல போலீஸ் இருக்கிறார்கள் என்ற செய்தியையும், நீதிமன்றம் மீதும் அரசியலமைப்பு மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்ற பிரசாரத்தையும் மறைமுகமாக முன்வைக்கிறது.
`காலா’ ஹரி தாதாவுக்கோ, `கர்ணன்’ கண்ணபிரானுக்கோ திரைப்படத்திற்குள் நிகழ்ந்த `நீதி’ என்ற அம்சம் இதில் முழுவதுமாக காணாமல் போகிறது. பழங்குடியினர் மீதான வன்முறை என்பது மீட்பரின் தேவையைக் கருதியே எழுதப்பட்டிருக்கிறது. மகத் போராட்டத்தைப் புரட்சிகரமாக நடத்திய அம்பேத்கரை காலா தாராவி மக்களுடன் போராடும் போதும், கர்ணன் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கும் போதும் நினைவுகூற முடிகிறது. `ஜெய் பீம்’ பழங்குடியல்லாத பிற சாதிகளின் குற்றவுணர்வை மட்டுமே உற்பத்தி செய்து, அரசியலமைப்பிற்குள் நீதி, சட்டத்திற்குள் ஒழுங்கு என்று சுருங்கி விடுகிறது.
`ஜெய் பீம்’ திரைப்படம் தன்னை முழுவதுமாக ஒரு அம்பேத்கரியத் திரைப்படமாக மாற்றிக் கொள்ளக் கடும் முயற்சிகளை மேற்கொள்கிறது. ரோஹித் வெமுலாவின் காட்டமான விமர்சனங்களுக்குப் பின்னரும், தேர்தல் இடதுசாரிகளை நாயகர்களாக முன்வைப்பதில் தொடங்கி, படம் முழுவதும் மார்க்ஸ், லெனின் படங்களைப் பார்க்க முடிகிறது. வெகுசில இடங்களில் அம்பேத்கர், பெரியார் படங்களும், ஒரு வசனத்தில் அம்பேத்கர் பற்றியும் பேசப்படுகிறது. பழங்குடிகள், அரசியலமைப்பு அடிப்படையிலான சட்டப் போராட்டம் என்பதால் அம்பேத்கரியத் திரைப்படம் என்று தன்னை முன்னிறுத்த முயன்று, தலைப்பில் `ஜெய் பீம்’ என்றும் சூட்டிக் கொள்கிறது இந்தத் திரைப்படம்.
அமித்ஷா கூறும் நாட்டுப்பற்றும் முன்னேற்றமும் – ஹிட்லரை நினைவு படுத்துகிறதா?
`காலா’, `கர்ணன்’ போன்ற தனிநபர் சாகசத் திரைப்படங்களைப் போல சூர்யாவுக்கு `ஜெய் பீம்’ அமைந்துவிடும் என்பதில் நம்பிக்கை இல்லை. பாலியல் உறவுக்குப் பெண்களின் ஒப்புதலைப் பெறுவது குறித்த `நேர்கொண்ட பார்வை’ படத்தில் நாயகன் ஆண் வழக்கறிஞராக வந்து மீட்கும் பணியைச் செய்து, ஆண்களின் குற்றவுணர்வை உற்பத்தி செய்வார். அதையே பழங்குடியினர் பாதுகாப்பு, காவல்துறை அடக்குமுறை என்று மாற்றி, பழங்குடி சமூகத்தைச் சேராத வழக்கறிஞர் ஹீரோ என்று மாற்றியிருக்கிறது `ஜெய் பீம்’.
`ருத்ர தாண்டவம்’, `என்னங்க சார் உங்க சட்டம்’ போன்ற திரைப்படங்கள் வெளியாகும் சூழலில், `ஜெய் பீம்’ போன்ற திரைப்படங்கள் மிக முக்கியமான விவகாரங்களை மக்களிடம் விவாதப் பொருளாக மாற்றுவதால் அவற்றிற்கு நெருக்கமான இடம் தரப்படுகிறது. இயல்பாகவே எழும் சில விமர்சனங்களோடு, `ஜெய் பீம்’ படம் கொண்டாடத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
– ர. முகமது இல்யாஸ்
ஊடகவியலாளர், தமிழின் முன்னனி பத்திரிகைகளில் எழுதி வரும் இவர் தற்போது ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.