Aran Sei

அமெரிக்க அதிபர் தேர்தலில் இஸ்லாமிய வெறுப்புணர்வு

வெள்ளை மாளிகையில் ஒபாமா வழங்கிய ரம்ஜான் விருந்து

2008-ல் பராக் ஒபாமா வெற்றி பெற்ற போது அமெரிக்க மக்கள் பலரும் அவரது ஆட்சியில் இசுலாமியர்களை குற்றப் பரம்பரையினராக்கிய புஷ் ஆட்சிக் கொள்கைகள் மாற்றப்படும் என கனவு கண்டனர். ஆனால், ஒபாமாவின் இரண்டு பதவி காலத்திலும், அமெரிக்க இசுலாமிய வெறுப்பின் மிக மோசமான வடிவங்களான போரிடுதல், கண்காணித்தல், புலம்பெயர்தல் கொள்கை ஆகியவற்றை மாற்றுவதற்கு எதையும் செய்யவில்லை. மாறாக அவரது பதவிக்காலத்தில் அவை ஆர்வமாக விரிவாக்கப்பட்டன.

ஒபாமா அமெரிக்க தேசப்பற்று சட்டத்தை புதுப்பித்ததோடு விரிவாக்கினார். அவர் அமெரிக்க தாக்குதல்களில் கொல்லப்பட்ட இசுலாமிய பொது மக்களை “எதிரி படைவீரர்கள்” என வகைப்படுத்தினார். அவரது கடுமையான தீவிரவாதத்தை முறியடித்தல் என்ற முன்னெடுப்புக சாதாரண முஸ்லீம்களின் வாழ்க்கை மீது மிதமான கண்காணிப்பாக செயல்பட்டது.

“கொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியலை” அவர் உருவாக்கியது, உலகெங்கும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் எந்த அமெரிக்கக் குடிமகனையும், எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமலே, கைது செய்து, காலவரையின்றி சிறையிலடைக்க இராணுவத்திற்கு அனுமதி அளித்தது இவற்றின் மூலம் ஒபாமா, புஷ்- கால இசுலாமிய வெறுப்பை வரித்துக் கொண்டதோடு முனைப்புடன் விரிவாக்கவும் செய்தார்.

12 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க வாக்காளர்கள் வெளிப்படையாக இசுலாமிய வெறுப்பு குடியரசுக் கட்சி ஆட்சியை எதிர்க்கும்படி மீண்டும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால் அதேசமயம், ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிசின் வெற்றி இந்த இசுலாமிய வெறுப்பிற்கு எதிராக என்ன செய்து விடும் என்ற கேள்வியும் அவர்கள் முன் உள்ளது‌.

போர்: அமெரிக்க இசுலாமிய வெறுப்பின் அடித்தளம்

இசுலாமிய வெறுப்பு முஸ்லீம்களுக்கு எதிரான மதவெறி என தவறாக விளக்கப்படுகிறது. ஆனால் அதற்கு சரியான விளக்கம் அமைப்புரீதியான இனவாதம் என்பதுதான், அதாவது அது தனிமனிதர்களின் அணுகுமுறையை பொறுத்தது இல்லை.

இவ்வாறு முஸ்லீம்கள் மீதான அடக்குமுறைகள் அல்லது ஊடகங்களில் இசுலாமியர்கள் எதிர்மறையாக சித்தரிக்கப்படுவது இசுலாமிய வெறுப்பின் அறிகுறிகளே. அது அரசின் செயல்பாடுகளில் வேர் கொண்டுள்ளது.

இப்படி வரையறுக்கும் போது, ஒபாமா ரம்சான் விருந்தளிப்பதும் அல்லது ஹிலாரி கிளின்டன் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஒரு இசுலாமியருக்கு முக்கிய உரையாற்ற வாய்ப்பளிப்பதும் ஒரு பொருட்டே அல்ல. ஜார்ஜ் டபிள்யூ புஷ் அண்டை வீட்டு முஸ்லீம்களை மெரிக்கர்கள் நேசிக்க வேண்டும் என்று சொல்வதும் ஒரு விஷயமே அல்ல.

அமெரிக்காவின் பேரரசு உருவாக்கத்தின் மிக அதிர்ச்சியளிக்கும் அம்சங்களை வலுப்படுத்துவதில் அமெரிக்க மேட்டுக் குடி மறுக்க முடியாத வகையில் இசுலாமிய வெறுப்பாளர்களாகவே உள்ளது.
இவ்வாறு வரையறுக்கப்படும் போது 2020 தேர்தலில் போட்டியிடும் இரு சாராரும் மறுக்க முடியாத வகையில் அமெரிக்க இசுலாமிய வெறுப்பின் நீட்சியாகவே இருப்பார்கள் என்பது வெளிப்படை.

இசுலாமிய எதிர்ப்பு உணர்வு என்பது அமெரிக்காவின் போர் தொடுத்தல்களுக்குக் கொடுக்கப்பட்ட நிரப்பப்படாத காசோலை போன்றது. ஊடக ஆய்வாளர் தீபா குமார், “பேரரசின் சக்கரங்களுக்கு எண்ணெய் தடவுவதற்காக இசுலாமிய பயங்கரவாதம் தொடர்பான அச்சம், உற்பத்தி செய்யப்படுகிறது” என்கிறார்,

2003-ல் ஈராக் மீதான படையெடுப்பை நியாயப்படுத்துவதற்கு 9/11 தாக்குதலுக்குப் பிந்தைய இசுலாமிய எதிர்ப்பு உணர்வை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது. ஒட்டு மொத்த இசுலாமிய உலகையும் குற்றவாளியாக காட்டிய பிறகு அதற்கு பதிலடியாக எந்த முஸ்லீம் பெரும்பான்மை நாட்டின் மீது படையெடுக்கப்படுகிறது என்பது பொருட்டில்லை. (எந்த நாட்டின் மீதும் பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று இல்லை.)

9/11 தாக்குதலுடன் ஈராக்கை தொடர்புபடுத்துவதில் அமெரிக்கா எவ்வளவு கவனமாக இருந்தது என்றால் ஈராக்கில் ஒரு கைதிகள் முகாமுக்கு 9/11 தாக்குதலில் இறந்த ஒரு இராணுவ அதிகாரியின் பெயரை வைத்தது. ஈராக் மக்கள் மீது 2003-ல் போடப்பட்ட ஒரு குண்டிற்கு 9/11-ல் இறந்த ஒருவரின் பெயரை அமெரிக்க பாதுகாப்புத் துறை வைத்தது.

இந்த சதித்திட்டம் சரியாக வேலை செய்ததில் ஆச்சரியம் இல்லை. 9/11 தாக்குதலுக்குப் பின் பிறந்த அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஐந்தில் ஒருவர் ஈராக்கின் சதாம் உசைன்தான் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறியுள்ளனர்.

ஈராக்கை தாக்கி நாசப்படுத்துவதில் ஜனநாயக கட்சியின் அரசு மிகவும் ஆர்வமாக இருந்தது. 2016-ல் நடந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க இராணுவ அதிகாரி கிசிர் கான், ஈராக்கில் இறந்த தன் மகனின் பெயரை ஹிலாரி கிளின்டனுக்கு அளித்த ஆதரவை நியாயப்படுத்தவும், டொனால்ட் ட்ரம்ப்பின் வெளிப்படையான இசுலாமிய வெறுப்புக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பதற்கும் பயன்படுத்தினார்..

ஈராக் போரை விமர்சிப்பவர்களைப் பொறுத்தவரை, ட்ரம்பின் இசுலாமிய வெறுப்பை எதிர்க்க முஸ்லீம் எதிர்ப்புப் போரில் முஸ்லீம்கள் கலந்து கொண்டதை பயன்படுத்துவது ஜனநாயகக் கட்சி தனது அரசியல் அலங்காரத்திற்காக செய்யும் வக்கிரமான செயல் ஆகும். ஆகவே ஈராக் போரை ஆதரிப்பவர்களை மீண்டும் 2020 ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் முன்னிலைப்படுத்தியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இதன் உச்சியில் பீடன் நிற்கிறார். ஏனெனில் அவர் புஷ்ஷின் 2003 படையெடுப்பிற்கு முன்பே, ஈராக்குடன் மிக மோசமான வகையில் தொடர்பு கொண்டிருக்கிறார்.

பீடனின் துணை அதிபர் தேர்வான கமலா ஹாரிஸ், இராணுவத்தின் நெருங்கிய நண்பராக தன்னை நிரூபித்துக் கொண்டார். இந்த கொரோனா நெருக்கடி நேரத்திலும் பிரம்மாண்டமான இராணுவ நிதி ஒதுக்கீட்டை மிதமாகக் குறைப்பதைக் கூட எதிர்த்து அவர் வாக்களித்தார். அவர். தீவிர கருத்துக்களைக் கொண்ட புதிய அமெரிக்க பாதுகாப்புக்கான மையம் (Centre for New American Security) என்ற அமைப்புடன் அவர் கொண்டிருக்கும் சுமுகமான நட்பு இசுலாமிய எதிர்ப்பு உணர்வை தனது கச்சாப் பொருளாகக் கொண்ட அமெரிக்க இராணுவவாதத்துக்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட ஆதரவு கிடைக்கவிருக்கிறது என்பதை உறுதி செய்கிறது.

இசுலாமிய வெறுப்பை எதிர்த்து போராடுவதற்கான எந்த முயற்சியும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாகும். இதற்கு கட்சிபேதமின்றி அமெரிக்க தேர்தல் களத்தில் இடமே கிடையாது‌. இந்த சங்கடமான உண்மையை சரிசெய்ய இந்தத் தேர்தல் மிகக் குறைவாகவே பங்காற்றி உள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்க இசுலாமிய வெறுப்பும்:

கட்சி வேறுபாடு தாண்டி, அசைக்க முடியாமல் தரப்படும் இஸ்ரேலுக்கான ஆதரவு அமெரிக்காவின் இசுலாமிய வெறுப்பின் நீடித்த அடையாளமாக உள்ளது. இஸ்ரேலின் குடியேற்ற காலனி ஆதிக்கத்தை யூத -முஸ்லீம் காழ்ப்புணர்ச்சி அல்லது முஸ்லீம் எதிர்ப்பு வன்முறை என்று குறுக்கி விட முடியாது என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். . எனினும், அமெரிக்க நிதி உதவியுடனான ஆயுதத் தளவாடங்களுடன் கூடவே இஸ்ரேல் பயன்படுத்தும் ஆயுதத் தளவாடங்களில் முக்கியமான ஒன்று இசுலாமிய வெறுப்பு எனும் ஆயுதமே ஆகும்.

எடுத்துக்காட்டாக, 2012-ல் அமெரிக்க நகரங்களின் தெருக்களில் தொங்கிய விளம்பரங்களைப் பாருங்கள். அவை மக்களை ‘காட்டுமிராண்டி‘ ஜிஹாதிகளுக்கு எதிராக ‘நாகரீகமான’ இஸ்ரேலை ஆதரியுங்கள்’ என்று முழங்கின.

மேலும், அமெரிக்காவின் மிக வெளிப்படையான இசுலாமிய வெறுப்பாளர்கள்தான் பெரும்பாலும் இஸ்ரேலின் இராணுவவாதத்திற்கு மிக வலுவாகக் குரல் கொடுக்கின்றனர்.

2014-ல் அமெரிக்காவின் ஆதரவுடன் ‘Operation Protective Edge ‘ என்ற பெயரில் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு பச்சைக் கொடி காட்டிய கையுடன் அமெரிக்க முஸ்லீம் தலைவர்களுக்கு ரமலான் விருந்தளித்தார் ஒபாமா. எண்ணற்ற முஸ்லீம், அரபு அரசியல் செயல்பாட்டு குழுக்கள் இதை புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்தனர். இது அமெரிக்க அரசின் துணையுடன் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் வன்முறையிலிருந்து திசை திருப்புவதற்கான சதி என அவர்கள் கூறினர்.

ட்ரம்ப் ஆட்சியில் இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு தடையின்றி தொடர்ந்தது‌. அவரது முதல் ஆட்சிக்காலத்திலேயே இஸ்ரேலின் வலதுசாரி பெஞ்சமின் நதான்யாஹூ அரசுக்கு அது பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையை இணைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து ஆதரவளித்தது.

ட்ரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தது பாலஸ்தீனம் என்ற நாடு இருப்பதையே மறுக்கும் நீண்ட கால அமெரிக்கக் கொள்கையின் நீட்சி ஆகும்.

2020 அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் தேர்வு , இந்த மரபை எதிர்ப்பதற்கு எதையும் முன்வைக்கவில்லை. கமலா ஹாரிஸ் இஸ்ரேலுக்குத் தனது ஆதரவு நிபந்தனையற்றது என்று அழுத்தமாக கூறியிருக்கிறார்.

பீடனின் அரசியல் பயணமும் இதையே காட்டுகிறது. நீடிக்கும். பாலஸ்தீன எதிர்ப்புணர்விற்கு இவை போதுமான சான்றாக இல்லை என்றால், சென்ற மாதம் நடந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு, “புறக்கணி, முதலீடுகளை நிறுத்து, பொருளாதார தடை விதி” எனப்படும் இஸ்ரேலுக்கு எதிரான BDS இயக்கத்தை மிகத் தெளிவாகக் கண்டித்தது நிகழ்ந்தது.

ஒவ்வொரு அதிபர் தேர்தலும் அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை அங்கீகரிக்கத் தூண்டுகிறது.. “ஒவ்வொரு முறையும் பாலஸ்தீன விடுதலையின் ஏதாவது ஒரு அம்சம் விட்டுக் கொடுக்கப்படும். வேட்பாளர்களின் நிலைப்பாடுகள் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப்படாது. அமைப்பின் உள்ளார்ந்த பிற்போக்குத் தனம் ஒரு போதும் விட்டுக் கொடுக்கப்படாது. குடியேற்ற காலனியாக்கத்தின் வளர்ச்சி விட்டுக் கொடுக்கப்படுவதில்லை.” என்று எழுதுகிறார் பாலஸ்தீன- அமெரிக்க அறிஞர் ஸ்டீவன் சலைட்டா.

இந்துத்துவாவும் இந்திய – அமெரிக்கக் கூட்டணியும்:

ட்ரம்ப் – மோடி கூட்டணி அவர்கள் இருவருக்குமிடையிலான வெளிப்படையான பல ஒத்த அம்சங்கள் மீது கவனத்தை ஈர்க்கின்றது.. குறிப்பாக இசுலாமிய வெறுப்பு தொடர்பான அவர்களது வெளிப்படையான கொள்கைகள் மீது கவனம் ஈர்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் ட்ரம்ப் இந்தியாவுக்கு சென்ற போது மிகவும் தெளிவாக வெளிப்பட்டது. இந்து மேலாதிக்கம் என்ற அருவெருப்பான உண்மையை டெல்லி வீதிகளில் நடந்த இசுலாமியர் மீதான வன்முறை தாக்குதல்கள் வெளிப்படுத்தியது. ட்ரம்பின் வெற்றியின் மூலம் இரண்டு நாடுகளுக்கு இடையேயான வலது சாரி கூட்டணியை வளர்க்கும் என்பது உறுதி.

இரட்டை இனப் பின்னணி கொண்ட கமலா ஹாரிசை தனது துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தது மூலம் பீடன் அடையாள அரசியல் உணர்வு கொண்ட இந்தியர்களின் ஆதரவைத் தேடினார்.

கமலா ஹாரிஸ் தேர்வு அறிவிக்கப்பட்ட உடன், முஸ்லீம் – அமெரிக்க எழுத்தாளர் வஜாஹத் அலி டுவிட்டரில் ”வெள்ளை மாளிகையில் தனது மிளகாயையும் மசாலாவையும் நன்கு அறிந்த ஒருவர் இடம் பெறப் போகிறார்” என்று பதிவிட்டார்.

அதைத் தொடர்ந்து பதிவிட்ட நகைச்சுவை நடிகர் ஹரி கொண்டபோலு, “கருப்பின, இந்திய கலப்பு பின்னணி கொண்ட இரண்டு பெற்றோரும் குடியேறிகளாக உள்ள ஒருவர் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது ஒரு வகையில் முன்னேற்றத்தின் ஒரு அறிகுறிதான். இதன் பொருள் அவர் நான் விரும்பிய துணை அதிபர் வேட்பாளர் என்பதோ அல்லது அரசு வழக்கறிஞராக அவரது செயல்களை நான் ஆதரிக்கிறேன் என்பதோ இல்லை. இந்தத் தருணம் பலருக்கு மிக முக்கியமானது என்பதை அங்கீகரித்து மதிப்பதற்கானது” என கூறி உள்ளார்.

ஆனால், ஒரு இரட்டை இன பின்னணி கொண்ட வேட்பாளரைத் தேர்வு செய்தது முன்னேற்றத்தின் அடையாளம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. உண்மையில் பீடன் அதிபரானால் இந்துத்துவா செயல்திட்டமான வலதுசாரி இனவாத தேசியவாதத்தை அங்கீகரித்து மோடிக்கு வழங்கப்பட்ட ட்ரம்ப் கால ஆதரவு தொடரும் என்பதே பொருள். இந்த சித்தாந்தம் இசுலாமியர்களுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இந்தியர்களுக்கும் பேராபத்தாகவே முடியும்.

ஆதரித்து வாக்களிக்க ஏதுமில்லை:

இது தவிர்க்க முடியாததாகவே தோன்றுகிறது.: அமெரிக்க முஸ்லீம்கள் கூட்டம் கூட்டமாக வந்து, பீடன்/ ஹாரிஸ் அதிபர் தேர்வை ஆதரித்து வாக்களிப்பார்கள். 2017-ல் இசுலாமியர்களுக்கு விமான பயணத்தை தடை செய்த போது ட்ரம்புக்கு எதிராக தூண்டப்பட்டு விமான நிலையங்களில் குவிந்த போராட்டக்காரர்களின் அதே உணர்வு மீண்டும் இந்த வாக்காளர்களுக்கு தூண்டுதலாக அமையும். எனினும் அவர்கள் வாக்களிப்பது இசுலாமிய வெறுப்பு அரசியலை மாற்றுவதற்காக இருக்காது, மாறாக அதில் மேலோட்டமான சில மாற்றங்களை செய்வதற்காக மட்டுமே என்பதே உண்மை.

தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் இசுலாமிய வெறுப்பு இந்த நாட்டின் சட்டமாகவே தொடரும்.
ஒவ்வொரு தேர்தலிலும், அமெரிக்கர்கள் தொடர்ச்சியை மறைத்து, இரட்டை நிலையை பார்க்கத் தூண்டப்படுகிறார்கள். இரண்டு பெரிய கட்சிகளுக்கிடையேயான குழாயடி சண்டையையே பார்க்கிறார்கள். அவர்களுக்கிடையான பெரும்பாலான ஒற்றுமைகளை பார்ப்பதில்லை.

ஒபாமா ஆட்சியில் புலம் பெயர்ந்த குழந்தைகள் எல்லையில் கூண்டுகளில் அடைக்கப்பட்டதற்கு அடிப்படை என்ன?

எல்லையில் சுவர் எழுப்பும் ட்ரம்ப் திட்டத்திற்கு அடித்தளமிட்ட பத்தாண்டுகளுக்கு முந்தைய சட்டத்தை ஆதரித்த ஜனநாயக கட்சிக்காரர்கள் யார்? யார்?

பீடனின் காவல்துறை விரிவாக்கத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு குறித்த வாக்குறுதி அமெரிக்க முஸ்லீம்களின் வாழ்க்கையில், குறிப்பாக கருப்பின முஸ்லீம்களின் வாழ்க்கையில் அதிக சுமையை ஏற்றாதா?

இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு பீடனே பதில் கூறுகிறார்: “எனது ஆட்சியில், எதுவும் அடிப்படையில் மாற்றப்படாது”

2018-ஐ போலவே இந்த நவம்பரிலும் அமெரிக்க வாக்காளர்கள் கையில் ஒரு வலதுசாரி வேட்பாளர் பட்டியல் இருக்கும். தீர்மானகரமான ”கருப்பின எதிர்ப்பு, போர் ஆதரவு, தொழிலாளர் விரோதம்” கொண்டது அது.

ஜனநாயகக் கட்சியின் வலது சாரி வாக்காளர்களை ஈர்க்கும் கொள்கை ஆழமான வரலாறு கொண்டது. பில் கிளின்டன் முதலாவதாக, 1992-ல் ஒரு மனநோயாளியான கருப்பினத்தவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியும் பின்னர் 1996-ல் கருப்பின எதிர்ப்பு பல்லவியை பாடி அமெரிக்க நலத் திட்டத்தை உடைத்துப் போட்டும் ஒரு பகுதி குடியரசு கட்சி வாக்குகளை வென்றார்.

இருந்தாலும், சாக்சஃபோனை மனமுருக வாசிப்பது ஒன்றே அவரை இனவாத எதிர்ப்பாளராக காட்டி விட்டது. இன்று கமலா ஹாரிசுக்கு அவரை விட மேலான போர்வை ஒன்று உள்ளது, – கருப்பின மற்றும் இந்திய அடையாளங்கள் கொண்ட இரட்டை இன பின்னணி.

இந்தத் தேக்கநிலையைக் கண்டு விரக்தி அடைந்தவர்கள் , தேர்தல் அமைப்புக்கு வெளியே செயல்படும்படி காலம் அழைக்கிறது‌. வலுவான தொழிலாளர் இயக்கத்தை கட்டமைக்கும்படி அமெரிக்கர்களிடம் காலம் கோருகிறது.

தொழிலாளர் இயக்கத்தை சீர்குலைக்க இரண்டு பெரிய கட்சிகளும் முயற்சிப்பார்கள். கூட்டாகவும், போர்க்குணத்தோடும் ஒன்றிணைந்து இரு கட்சிகளும் வளர்த்து செல்லும் கடன், போர், சுற்றுச் சூழல் அழிவு ஆகியவற்றை எதிர்க்க வேண்டும்.

இசுலாமிய வெறுப்பை திரையிட்டு மறைக்க இந்திய நிறத்தை பயன்படுத்துவதை தீர்மானகரமாக நிராகரிக்க வேண்டிய நேரம் இது.

அமெரிக்கர்கள் ஏகாதிபத்தியவாதிகளின் அமைச்சரவையை பன்முகமாக்கும் முயற்சிகளைக் கண்டு மயங்காமல், இராணுவ, போலீஸ் பொறியமைவின் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க முடிவு செய்ய வேண்டும்.

இருப்பதில் குறைந்த தீங்கை தேர்ந்தெடுப்போம் அல்லது செயல்படும் ஏதோ ஒருவரை தேர்ந்தெடுப்போம் போன்ற பதில்களை நிராகரிக்க முடிவு செய்ய வேண்டும்.

மாறாக, ஒவ்வொரு தேர்தலும் நேர்மையான ஆர்வமான அமெரிக்கர்களை போராட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு அவர்களுக்கு சேவை செய்யாத அமைப்பை அங்கீகரிக்குமாறு கோருகிறது.
அமெரிக்க அரசியல் அமைப்பின் இந்த மிக மோசமான, நயவஞ்சகமான, நீடித்திருக்கும் இருண்ட சக்திகளின் மேல் ஒளியைப் பாய்ச்ச வேண்டிய நேரம் இது.

– நசியா காசி (Nazia Kazi)
நசியா காசி மானுடவியல் இணை பேராசிரியர். “இசுலாமிய வெறுப்பு, இனம், உலக அரசியல்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்

நன்றி :www.aljazeera.com

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்