Aran Sei

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கு – அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமா?

image credit : thewire.in

2004-ம் ஆண்டு நடந்த போலி என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகளையும் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் விடுவித்த நாளில், அந்த போலி என்கவுன்டரில் கொலை செய்யப்பட்ட இஷ்ரத் ஜஹானின் அம்மா ஷமீம் கவுசர், இது தான் எதிர்பார்த்தது ஒன்றுதான் என்று கூறியுள்ளார்.

“கடந்த 17 ஆண்டுகளாக இதுதான் நடந்து வருகிறது” என்கிறார், அவர்.

2004, ஜூன் 15-ம் தேதி போலி என்கவுன்டரில் இன்னும் மூன்று பேருடன் கொலை செய்யப்பட்ட போது மும்ப்ராவைச் சேர்ந்த இஷ்ரத் ஜஹானுக்கு வயது 19.

கள்ளக்குறிச்சியில் அறிஞர் அண்ணாவின் சிலைக்கு தீ வைப்பு – காவல்துறை விசாரணை

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி.எஸ். சிங்கால், தருன் பாரோட் மற்றும் அனாஜூ சவுத்ரி ஆகிய மூன்று பேரை விடுவிக்கும் விண்ணப்பங்களுக்கு சிறப்பு மத்திய புலனாய்வு மைய நீதிமன்ற நீதிபதி வி.ஆர். ராவல் அனுமதி அளித்துள்ளார். தங்கள் அதிகார ரீதியான கடமையை ஆற்றும் எல்லைக்குள்ளேயே அவர்கள் மூவரும் செயல்பட்டுள்ளனர் என்று சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.

மும்ப்ராவில் உள்ள பெரும்பாலும் முஸ்லீம்கள் வசிக்கும் ரஷீத் காலனியில் உள்ள ஜஹானின் வீட்டில் ஒரு புதிய இருள் சூழ்ந்துள்ளது. காலையில் தீர்ப்பு வெளியானதும் அந்த வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஜஹானின் குடும்பத்திற்கு இது போன்ற செய்திகள்தான் கடந்த 17 ஆண்டுகளின் கதையாக உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இது ஒரு வெற்றியாகத் தெரியலாம், ஆனால் ஜஹானின் குடும்பத்திற்கும், அவரது நண்பர்களுக்கும் இது ஒன்றும் புதிதல்ல. அவரது அம்மா மட்டுமே அவரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருகிறார். அவரது மற்ற உறவினர்களுக்கு இஷ்ரத் ஜஹான் வெறும் நினைவாகவே எஞ்சியுள்ளார்.

“யாரும் அவரைப் பற்றிப் பேசுவதில்லை. நாங்கள் இதே வளாகத்தில் வசித்து வந்தாலும் இங்கு ஒரு பெண் இருந்தாள். அவள் என்கவுன்டரில் கொல்லப்பட்டு விட்டாள் என்ற அளவில்தான் எங்களுக்குத் தெரியும். அவருடைய அம்மாவும் நெருங்கிய உறவினர்களும் தவிர மற்ற எல்லோராலும் அவர் மறக்கப்பட்டு விட்டாள்,” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு பக்கத்து வீட்டுக்காரர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம்: மூன்றாவது மாநிலமாக குஜராத்தில் நிறைவேறியது

அப்துல் அஹத் என்ற மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர், ஜஹான் அவரது ஆசிரியர்களால் புத்திசாலியான மாணவியாக நினைவு கூரப்படுவதாக சொல்கிறார். “நான் பள்ளியில் படிக்கும் போது எங்கள் ஆசிரியர்கள் அவரைப் பற்றி வழக்கமாகப் பேசுவார்கள். அவரைப் பாசத்துடன் நினைவு கூர்வார்கள்,” என்று அவர் சொல்கிறார். இஷ்ரத் மீதான பயங்கரவாதம் பற்றிய குற்றச்சாட்டு சரியா இல்லையா என்று தனக்கு தெரியாது என்கிறார்.

என்கவுன்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் என்கிற பிரனேஷ் பிள்ளை, அம்ஜத்அலி அக்பர் அலி ராணா, ஜீஷன் ஜோஹர் ஆகிய நால்வரும் லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்றும், அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டிருந்ததாகவும் காவல்துறை கூறுகிறது. குஜராத் காவல்துறைக்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்ததாகவும் அந்த அடிப்படையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் குஜராத் காவல்துறை கூறுகிறது.

“புலன் விசாரணையை பாதிக்கும்” – பிரேதப் பரிசோதனை அறிக்கையை தர மறுக்கும் ஜம்மு & காஷ்மீர் காவல்துறை

இதைத் தொடர்ந்து மறுத்து வரும் இஷ்ரத் ஜஹானின் குடும்பத்தினர், அவர் நிரபராதி என்றும் போலீசின் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே சம்பந்தப்பட்ட காவல்துறையினரால் அவர் கொல்லப்பட்டார் என்றும் கூறுகின்றனர். குஜராத் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு இந்த என்கவுன்டர் ஒரு நாடகம் என நிறுவியது. உச்ச நீதிமன்றம் பின்னர் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தது.  மத்திய புலனாய்வுத் துறை இந்தக் குற்றத்தில் தொடர்பு கொண்டதாக, பல குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

விசாரணை ஆரம்பத்திலிருந்தே ஒரு பக்க சார்பாகவே நடந்தது என்று கூறும் ஷமீம் கவுசர், “சிறப்பு புலனாய்வுக் குழு அந்த என்கவுன்டரை போலியானது என தனது அறிக்கையைப் பதிவு செய்தபோது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு நடந்தவற்றால் நான் அதிர்ச்சியடைந்து உடைந்து போனேன்” என்கிறார்.

“எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இது ஒன்றும் புதிதல்ல. இவர்கள் எல்லாம் அவர்களின் ஆட்கள். இவை எல்லாம் அவர்களின் சட்டங்கள், அவர்களின் தீர்ப்பு. வேறு எதை எதிர்பார்க்க முடியும்?” என்று கேட்கிறார், அவர்.

இப்போது என்கவுன்டர் உண்மையானது எனக் காட்டுவதற்கான களம் உருவாக்கப்படுகிறது என்று ஷமீம் கவுசர் கூறுகிறார். தி வயர் தனது செய்தியில் கூறியிருந்தது போல், “ஒரு போலி என்கவுன்டர் என்பது சட்டவிரோதமானது. யாருக்கு எதிராக அது நடத்தப்பட்டது என்பது ஒரு பொருட்டல்ல. மேலும், காவல்துறைஅதிகாரிகள் மீதான கொலைக் குற்றம், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைச் சார்ந்தது அல்ல. அதாவது அவர்கள் பயங்கரவாதிகளா இல்லையா என்பதை பொறுத்ததல்ல.”

“அவர்கள் அவரைப் பயங்கரவாதி என்றார்கள். இப்போது அவர்கள் அந்த என்கவுன்டரே உண்மையானது என்கிறார்கள். அப்படியானால், ஏன் சிறப்பு புலனாய்வுக் குழு, அது ஒரு போலி என்கவுன்டர் என்று முன்பு கூறியது? சிறப்பு புலனாய்வுக் குழு தனது அறிக்கையில் அது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை எனத் தெளிவாகக் கூறியுள்ளது. இந்த அறிக்கையை அரசு நிராகரிக்க முடியுமென்றால், அப்போதே கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது தெளிவாகி விட்டது,” என்கிறார் ஷமீம்.

2019-ல் அகமதாபாத் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு உறுதி மொழி பத்திரத்தில், தான் வழக்கைத் தொடர்ந்து நடத்துவதில் சோர்வடைந்து விட்டதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கப் போவதாகவும் ஷமீம் கவுசர் கூறியிருந்தார்.

“நான் இந்த வழக்கை ஒருபோதும் விட்டுவிடவில்லை. பல முறை பயணம் செய்து செய்து நான் களைத்துப் போனேன். யாரும் நாங்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்கவில்லை. ஒரு நியாயமான விசாரணை எங்களுக்கு வழங்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது அகமதாபாத் வரை அவ்வளவு தூரம் பயணம் செய்து நீதிமன்ற விசாரணையில் பங்கேற்பதில் என்ன பலன்? எனக்கு இப்போது வயதாகி விட்டது. உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன. அதனால்தான் நான் நீதிமன்ற நடைமுறைகளிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டேன்,” என்கிறார் ஷமீம் கவுசர்.

இந்தப் போராட்டத்தை மீண்டும் தொடரத் தயாராக இருப்பதாக ஷமீம் கவுசர் கூறுகிறார்.

“இப்போதைக்கு இவை எல்லாவற்றையும் குறித்து நான் மிகவும் பாதிப்படைந்துள்ளேன். ஆனால் நான் இதை மீண்டும் கையில் எடுப்பேன். நான் எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து தேவையானவற்றைச் செய்வேன். இன்னும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. நான் இதை ஒரு போதும் கை விடுவதாக இல்லை,” என்கிறார் ஷமீம்.

www.thewire.in இணைய தளத்தில் நசியா சாயேத் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்