Aran Sei

‘இசை அண்ணாமலை’ – தேனிசை தென்றல் தேவா – மலர்வண்ணன்

மிழில் புகழ்பெற்ற திரை இசையமைப்பாளர்களுக்கு அவர்களின் சேவையை, சாதனையைப் பாராட்டி நினைவுகூரும் விதமாகப் பட்டப்பெயர் வைத்து கௌரவிப்பதுண்டு. எம்எஸ்விக்கு மெல்லிசை மன்னர், ராஜாவிற்கு இசைஞானி, ரஹ்மானுக்கு இசைப்புயல்  என அவர்கள் உச்சத்தில் இருக்கும் போது வழங்கப்பட்ட இப்பட்டப்பெயர்கள் பின்னாளில் அனைவராலும் அவர்களின் செல்லப் பெயர்களாக உச்சரிக்கப்பட்டன.

திரைக்கு வருவதற்கு முன்பே தன் தம்பிகளுடன் இணைந்து சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பக்தி ஆல்பங்களை இசையமைத்து வெளியிட்டவர் தேவநேசன். ஆற்காடு அருகில் மாங்காடு கிராமத்தில் சொக்கலிங்கம் – கிருஷ்ணவேணி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த இவரின் இருநூறாவது ஆல்பத்தை வெளியிட்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அது மட்டுமல்ல தேவநேசனுக்கு ‘தேனிசைத் தென்றல்’ என்ற பட்டமும் அன்று மெல்லிசை மன்னரால் வழங்கப்பட்டு மேடையில் அவரே, “இவருக்கு யாராவது சினிமாவில் இசையமைக்க வாய்ப்பைத் தாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார். பின்னாளில் அவர் நிகழ்த்தப் போகும் சாதனைக்கான பட்டப்பெயர் அன்றே அவருக்கு அவரின் மானசீக குருவால் சூட்டப்பட்டு விட்டது.

தேனிசைத் தென்றல் 1983-ம் ஆண்டு ‘மாட்டுக்கார மன்னாரு’ என்கிற படத்திற்கு இசையமைக்கிறார். ஆனால் படம் வெளியாகவில்லை. தொடர்ந்து ஐந்தாறு வருடங்கள் ‘பனி மலர்கள்’, ‘பிள்ளைத் தாலாட்டு’ உள்ளிட்ட 14 படங்களுக்கு இசைமைக்கிறார், ஒரு படமும் வெளியாகாமல் பெட்டிக்குள் பலதரப்பட்ட காரணங்களால் படுத்துக் கொள்கிறது.  1989-ம் ஆண்டு அவர் இசையமைத்த படம் முதன் முதலாக வெளியாகிறது, படத்தின் டைட்டில் கார்டில் ‘இசை – C.தேவா’ என இருக்க, அப்படத்தின் நாயகன் ராமராஜன், “C.தேவா என்பது சொல்வதற்குச் சரியா வரல, தேவா தான் நல்லாயிருக்கு அப்படியே இருக்கட்டும்” என்று சொல்ல தேவா அறிமுகமாகிறார். அத்திரைப்படம் மனசுக்கேத்த மகராசா.

இரண்டாவது படம் 1990-ல் ‘வைகாசி பொறந்தாச்சு’ அவரின் ஏழு வருடத் தொடர்ப் போராட்டத்தின் முதல் வெற்றியாக ஜிவ்வென மேலே தூக்கிச் செல்ல ஆரம்பித்தது.  திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்த அப்படத்தின் பாடல்கள் அவ்வருடத்தின் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் பட்டத்தை தேவாவிற்குப் பெற்றுத் தந்தது. 1991-ல் கிழக்குக்கரை, வசந்தகாலப் பறவை படங்களும் அவரின் சூப்பர் ஹிட் ஆல்பங்களில் இணைந்துகொண்டன.

அப்போது கவிதாலயா இளையராஜாவிடமிருந்து விலகி மரகதமணியை வைத்து ‘அழகன்’, ‘வானமே எல்லை’ இரண்டு படங்களைச் செய்திருந்தது. இரண்டு படங்களின் பாடல்களுமே தமிழுக்குப் புதுமையாகவும் வித்தியாசமாகவும் அனைவரும் விரும்பும்படி இருந்தாலும் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே அவை கேட்கப்பட்டுக்கொண்டிருந்தன. பட்டிதொட்டி திருவிழா ஸ்பீக்கர்களில் அப்படங்களின் பாடல்கள் இடம் பெறவில்லை. அந்த நேரத்தில் தான் ஸ்டூடியோவில் இருந்த தேவாவிற்கு பாலச்சந்தரிடம் இருந்து போன் வருகிறது, “நம்ம அடுத்த படத்திற்கு நீ தான் பண்ணணும், ஹீரோ ரஜினி”.

அண்ணாமலை!! நாயகர்களுக்கான ஓப்பனிங் சாங் என்கிற கலாச்சாரம் அந்தப் படத்தில் இருந்துதான் தொடங்கியது. நசுக்கப்பட்ட நாயகன் ஒரே பாடலில் ஓஹோவென வளர்ந்து விஸ்வரூபம் எடுக்கும் காட்சியும் இப்படத்தில் இருந்துதான் ஆரம்பித்தது. இவை இரண்டும் ஆழப் பதிய காரணமாக இருந்தது தேவாவின் அந்தத் தெறிக்கும் இசையே.  அண்ணாமலைக்குப் பிறகு இன்று வரை ரஜினியின் அனைத்துப் படங்களுக்கும் ரஹ்மானிலிருந்து அனிருத் வரை யார் இசையமைத்தாலும் திரையில் ரஜினியின் பெயர் வரும் போது ஒலிக்கும் தீம் இசை, தேவா அண்ணாமலைக்கு இசையமைத்துதான் கடந்த 28 வருடங்களாக எழுதப்பட்ட விதி.

அண்ணாமலையின் அட்டகாச வெற்றிக்குப் பிறகு தேவா பல இயக்குநர்களின் தேர்வாகவும் முன்னணி ஹீரோக்களின் விருப்ப இசையமைப்பாளராகவும் மாறுகிறார். ‘சூரியன்’ படத்தில் இசையமைத்த ‘லாலாக்கு டோல் டப்பிமா’ பாடலின் மூலம் சென்னையின் கானாவை உலகத் தமிழர்களுக்கு தேவா அறிமுகப்படுத்துகிறார். இந்தக் காலகட்டத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் ‘புதுவசந்தம்’, ஆதித்யன் ‘அமரன்’ என சூப்பர் ஹிட்டுகளைக் கொடுத்தாலும் காணாமல் போகிறார்கள். ராஜா சிம்பொனி, ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டரா, ஹங்கேரி என ஒரு பக்கம் தமிழ் சினிமாவில் பெரிய கவனம் செலுத்தாமல் இருக்க, ரஹ்மான் மிக, மிகப் பொறுமையாக ஒவ்வொரு படமாகச் செய்து கொண்டிருக்க, தயாரிப்பாளர்களின் டார்லிங்காக தேவா தன்னை உருவாக்கிக்கொண்டார் அல்லது உருவாக்கப்பட்டார்.

ரஜினியுடன் மீண்டும் பாட்ஷாவில் இணைந்து ‘ஒரு தடவ சொன்னா’ வசனத்திற்கு ஹீரோ கையைச் சுழற்றும் சத்தத்தை முதன் முதலாக தமிழ் சினிமாவிற்கு தேவா அறிமுகம் செய்து வைக்கிறார். ஸ்டைல் ஸ்டைல் பாடல் ஜேம்ஸ் பாண்ட் தீம்ல் இருந்து எடுத்துக் கையாண்டது மற்றுமொரு புதுமை. எல்லாவற்றிக்கும் மேலாக சாதுவான ஹீரோ வெறி கொண்டு அசுரத்தனமாக மாறும் காட்சியில் பின்னணியில் எந்த வாத்தியங்களும் உபயோகப்படுத்தாமல் மெளனமாக விட்டு அவன் திருப்பி அடிக்கும் முதல் அடியில் ரயில் தடதடக்கும் சத்தத்தைக் கோத்துப் பார்ப்பவர்களை மிரட்டியிருப்பார் தேவா.

விஜய்யின் படங்களில் அவருடைய அப்பாவை விட தேவாவிற்கே பங்கு அதிகம்.  பிரியமுடன், நினைத்தேன் வந்தாய், விஷ்ணு, குஷி, தேவா, செந்தூர பாண்டி, நேருக்கு நேர், ரசிகன், காலமெல்லாம் காத்திருப்பேன் என அனைத்தும் ஹிட்டடித்தவை. அதே போல அஜித்திற்கு வான்மதி, வாலி, காதல் கோட்டை, முகவரி, சிட்டிசன், ஆசை எனப் பல படங்கள். இதுபோக 90-களில் சரத்குமாரின் பல படங்களுக்கும் தேவாதான் ஆஸ்தான இசையமைப்பாளர்.

மார்கழி மாத பஜனைகளை சிலாகித்து தனி ஸ்லாட் ஒதுக்கி எழுதும் ஜனரஞ்சக வாரப் பத்திரிகை ஒன்று பாஷா விமர்சனத்தில் இந்தப் படத்திற்கு யார் இசையமைத்தால் என்ன எனவும், ஆசை படத்திற்கு ரஹ்மான் இசை நன்றாக உள்ளது என்றும் வழக்கம் போல் தன் நுண்ணரசியலைக் காட்டி வன்மத்தைக் கொட்டியிருந்தது. அந்த நேரத்தில் தேவா வெறும் இரண்டே வருடங்களில் ஐம்பது படங்களுக்கு இசையமைக்கும் அளவிற்குச் சூறாவளி போல பணியாற்றிக்கொண்டிருந்தார். மேட்டுக்குடிக்கு மட்டுமே சொந்தம் என்று சாஸ்திரிய சங்கீதத்தை அனைவருக்கும் பொதுவானதென்று ராஜா எவ்வாறு கொண்டு சேர்த்தாரோ அதே போல், கர்னாடக சங்கீதத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தவர்களிடம் கானா பாடல்களைக் கொண்டு சேர்த்தார் தேவா.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிகரமான இயக்குநர்-இசையமைப்பாளர் கூட்டணி ஒன்று இருக்கும். படம் எப்படி இருந்தாலும் படத்தின் இசை பெருமளவில் கொண்டாடப்பட்டிருக்கும், பாடல்களுக்காகவே அந்தப் படங்களில் சிலவும் வெற்றி பெற்றிருக்கும். மணிரத்னம்-ரஹ்மான், செல்வராகவன்-யுவன், கெளதம்-ஹாரிஸ், சரண்-பரத்வாஜ், தரணி-வித்யாசாகர் போல அகத்தியன்-தேவா கூட்டணி. மதுமதி, வான்மதி, காதல் கோட்டை, விடுகதை, கோகுலத்தில் சீதை என அனைத்தும் அட்டகாசமான ஆல்பங்கள்.

பொதுவாகவே இங்கே தேவாவைப் பற்றி வெகுஜனத்தால் சொல்லப்பட்டு வருவது அவர் கானா பாடல்களுக்கு மட்டுமே உண்டானவர் என்று. கானாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் தேவா என்று சொல்லலாமே தவிர அவர் ஒரு மிகச் சிறந்த ஆல் ரவுண்டர் என்பது பின்வரும் ஒருசில பாடல்களைக் கேட்டாலே தெரியும்.
மனமத லீலையை வென்றார் – பஞ்சதந்திரம்
காதலி காதலி – அவ்வை ஷன்முகி
ஓ வெண்ணிலா – குஷி
திலோத்தமா – ஆசை
நிலவைக் கொண்டு வா – வாலி
இதயம் இதயம் – விடுகதை
மணி மாடத்து மஞ்சள் நிலா – விடுகதை
ஓ ராகினி என் நிலை பாரடி – மருமகன்
ஓ கிருஷ்ணா கிருஷ்ணா – உனக்காகப் பிறந்தேன்
தாழம்பூ சேலை – சூரிய நமஸ்காரம்
மாலையிலே தெற்கு மூலையிலே – வாசலில் ஒரு வெண்ணிலா
ஈஸ்வரா வானும் மண்ணும் – கண்ணெதிரே தோன்றினாள்
உன் உதட்டோர செவப்பே – பாஞ்சாலங்குறிச்சி

20 வருடங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களுக்கு தேவா இசையமைத்திருந்தாலும் இன்று வரை கொண்டாட மறக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட கலைஞனாகவே இருக்கிறார். ஆனாலும் போராடி வெற்றி பெற்றவர்களுக்கு அது ஒரு பொருட்டே இல்லை என்பதற்கு உதாரணமாகவும் இருப்பவர் தேவா!!

ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும் உனது பேர் சொல்லுதே

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்