Aran Sei

வலதுசாரிகள் தலித்துகள் மேல் காட்டும் கரிசனம் உண்மையானதா? – வரலாறு சொல்வது என்ன?

ந்து வலதுசாரிகள் தலித் வரலாற்றில் உள்ள அனைத்து முற்போக்கான, பார்ப்பனிய எதிர்ப்பு கூறுகளையும் நீக்கிவிட்டு அதனை பயன்படுத்த விரும்புகிறார்கள்.நாட்டின் தற்போதைய சமூகம் மற்றும் அரசியல் சூழ்நிலை பல குழப்பங்களில் உள்ளது. சாதி மற்றும் இட ஒதுக்கீடு என்ற தலைப்பில் இது போன்ற குழப்பம் நீடிக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையைப் கையாள்வதிலும், தீவிர, முற்போக்கான சாதி எதிர்ப்பு நிலையை கையகப்படுத்துவதிலும் சங்பரிவார் அதிகரித்தக் குழப்பத்தில் உள்ளது. அதன் அரசியல் கட்சியான பாஜக தடையற்ற பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருப்பதால், இயல்பான வழியில் சிக்கலை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் அவர்கள் இது போன்ற குழப்பங்களைத் கையாளும் முறையில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே ஆகஸ்ட் 10 ம் தேதி (பாஜக செய்தி தொடர்பாளர் குர் பிரகாஷ் பாஸ்வான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான இந்தியா அறக்கட்டளையின் சுதர்சன் ராமபத்ரன் ஆகியோர் எழுதிய நவீன தலித் வரலாறு என்ற புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்னதாக) ஆற்றிய உரை ஆர்எஸ்எஸின் உடல் அரசியலையும், உணர்திறன் மிக்க, சிக்கலான, சமூக யதார்த்தத்தை நோக்கிய அதன் நிலைப்பாட்டை எவ்வாறு வரையறுப்பது என்பது பற்றிய மதிப்புமிக்க உள்ளீடுகளையும்  நமக்குத் தருகின்றது.

ஹோசபாலேவின் உரை, ஆர்எஸ்எஸின் இட ஒதுக்கீடு ஆதரவு உட்பட பல பகுதிகளை கொண்டது. ஆனால் அதில் மிக முக்கியமான கூறு தலித் வரலாற்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற அவரது வேண்டுகோள் ஆகும். ” இந்திய வரலாறு மற்றும் தலித் வரலாறு ஆகியவை இரண்டு வேறுபட்ட விடயங்கள் அல்ல,” என்று கூறிய அவர்,”தலித் சமூகத்தின் பங்களிப்பைக் குறிப்பிடாமல் அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் ஆன்மீக வரலாறை கூறுவது  முழுமை அடையாத, நேர்மையற்ற மற்றும் பொய்யான வரலாறாகும்,” என்று தொடர்ந்தார்.

நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் சாதி எதிர்ப்பு வரலாற்றின் பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் சங்பரிவாரிடம் நமக்கு  ஒரு கேள்வி உள்ளது. சாதியை ஒழிப்பதற்காக அது உண்மையில் புரிந்துக் கொண்டு வாதாடுகிறதா? அல்லது இது அதன் மற்றொரு தேர்தல் வியூகமா? ‘சமூக நல்லிணக்கமும், சமூக நீதியும் ஆர்எஸ்எஸின் நம்பிக்கையின் படைப்புகள்; அவை அரசியல் செயல்தந்திரம் அல்ல’ என அவர் கூறினாலும், 1990 களுக்குப் பிறகு மண்டலுக்கு எதிரான மந்திர் இயக்கத்தின் எழுச்சியில் சமூக நீதியின் நோக்கத்தை தகர்த்தெறிந்த அந்த இயக்கத்தின் வரலாற்றை அவர் புறக்கணித்து விட்டார். சாதி எதிர்ப்பு வரலாற்றைப் புரிந்து கொள்வதில், கேள்விக்குள்ளாகி உள்ள இந்த அமைப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில்   தீண்டாமைக்கு நமது மதத்திலும், சமூகத்திலும் இடமில்லை என்று தீர்மானத்தை நிறைவேற்றிய மத ‘தீர்க்கதரிசிகளுக்கு’ 1969 ல் கோல்வால்கர் எழுதிய  கடிதத்தை சுட்டிக்காட்டி ஹோசபாலேவே வலியுறுத்துவதால், நாம் முதலில் யார், எதைச் சொல்கிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். தீர்க்கதரிசிகள் இதைக் கூறினார்கள் என்பது இங்கு முக்கியமானது என்று கூறும் ஹோசபாலே,” இவை மதப் பீடங்களை ஆக்கிரமித்து இருந்தவர்களிடமிருந்து வருவதாலும், அவை கடந்த காலத்தில் சரியாகவோ அல்லது தவறாகவோ விளக்கப்பட்டிருந்தாலும்… அவர்கள் கூறிய குறிப்பிட்ட சில நீண்ட தூரம் செல்லும்,” என்று கூறினார்

ஆனால் தற்போதைய நிகழ்வுக்கு யார், எதைச் சொல்கிறார்கள் என்பது பற்றிய நமது புரிதலை நாம் நீட்டிக்க வேண்டும் என்று சொல்லுங்கள். அவர் கூறிய முக்கிய கருத்துக்கள் அவரது சொந்த அமைப்புகளாலேயே புறக்கணிக்கப்பட்டிருக்கும் போது, தலித் வரலாறு குறித்த ஒரு தலித் எழுத்தாளரின் புத்தக வெளியீட்டு விழாவில் அந்த ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளரின் உரையை எப்படி நல்ல நம்பிக்கையுடன் நாம் எடுத்துக் கொள்ள முடியும்?  அகில பாரத பிரதிநிதி சபா மற்றும் அதில் பாரதீய கார்யகாரி மண்டல் ஆகியவற்றின் கூட்டங்கள் இருபிறப்புக்காரர்களாலேயே எப்போதும் நிரப்பப்படுகின்றன.

மறுபுறம், ஹோசபாலே கோல்வால்கரின் கடிதத்தை சுட்டிக் காட்டுவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க கருத்தை முன்வைக்கிறார்: ” அது (தலித்துகளின் முன்னேற்றம்) தற்கால அழுத்தங்களுக்கு இழப்பீடாக வழங்கப்படல் கூடாது. மாறாக,நேர்மையான உள்ளுணர்வுடன் கூடிய நமது கடந்த கால தவறுகளின் வாழ்க்கை முறை மற்றும் கொள்கைகளைக் கடைபிடிப்பதன் மூலம் தரப்பட வேண்டும்.” இதுதான் சங்பரிவாரின் சுய முரண்பாட்டை அம்பலப்படுத்துகிறது: அவர்கள் நவீன கால அழுத்தங்களால்தான்(தேர்தல் ஆதாயம் மற்றும் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை என்ற பெயரில் பார்ப்பனியத்தை மீட்டெடுக்கத்தான்) ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரம் என வாதிடுகிறார்கள். நிச்சயமாக அவர்களுடைய கடந்தகால தவறுகளுக்கு பரிகாரமாக அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, சங்பரிவார் பார்ப்பனிய இந்துமதத்தின் வாக்காளராக இருக்கிறது. எங்களுடைய சமீபத்திய புத்தகம் ‘சூத்திரர்கள் (The Shudras), ஆர்எஸ்எஸ்ஸூம், பாஜகவும் கடந்த காலத்தை புதுப்பித்தது மற்றும்   எவ்வாறு இருபிறப்பு/ சவர்னா பிராமணர்களின் மேலாதிக்கத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் நீட்டிக்கச் செய்தது என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.

தலித் வரலாறு பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் முன் அந்த நூலை எழுதியவர்களும், ஹோசபாலேவும், யார் எதைச் சொல்கிறார்கள் என்பதைப் போலவே யார், எதை எழுதுகிறார்கள் என்பது பற்றிய முக்கியத்துவத்தையும் புரிந்துக் கொள்ள முயற்சித்திருக்க வேண்டும்.  குறிப்பாக தலித் வரலாறு பற்றியும், பொதுவாக சாதி எதிர்ப்புப் புரட்சியாளர்கள் பற்றியும் தொடர்ந்து சங்பரிவார் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வாசிப்பையும், புரிதலையும் கொண்டிருப்பதால் இது மிகவும் முக்கியமாகிறது. அவர்கள் பூலே – அம்பேத்கரிய இயக்கங்களின் முக்தி நெறிமுறைகளை தங்களுக்கும் பொருத்திக் கொண்டு அதை தகர்க்க விரும்புகிறார்கள்.

சங்பரிவாரின் ஆதரவாளர்கள் தாழ்த்தப்பட்ட அல்லது தலித்துகளின் வரலாற்றை தேர்ந்தெடுத்து படிப்பது மற்றும் புரிந்துக் கொள்வது என்பது அவர்களுடைய பரப்புரை திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் மேற்கூறப்பட்ட அவர்கள் புத்தகமும் இதற்கு விதிவிலக்கல்ல. எடுத்துக் காட்டாக, பக்கம் 117 ல் சாவித்ரி பாய் பூலேவின் புகழ்பெற்ற கவிதை வரிகளை மேற்கோள் காட்டும் போது ” செல், கல்வி பெறு” என்பதை மட்டும் கூறிவிட்டு ” பார்ப்பனிய வேதங்களை வேகமாக வீசி எறி” என்ற  கடைசி வரிகளை தவிர்த்து விட்டனர்.

பக்கம் 15 ல் அவர்கள் ‘தலித்’,’அடக்கப்பட்ட வகுப்பினர்’, மற்றும்’ ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ போன்ற பல பெயர்களில்  அவர்களை அடையாளப்படுத்துகின்றனர். அவ்வாறு செய்யும் போது அவர்கள் அண்ணல் அம்பேத்கர் ” சாதியற்ற இந்துக்கள்”, “ப்ரோட்டஸ்டன்டு(எதிர்ப்பு) இந்துக்கள்”, இணக்கமற்ற இந்துக்கள்” என்று பெயரிட்டு அழைத்ததை குறிப்பிடத் தவறியது, சங் பரிவார் அவற்றை நவீன வரலாற்றில் இருந்து அழிக்க விரும்புவதன் மூலம் அவர்களுடைய  வரலாற்றில் அறிதலியலின் முரண்பாட்டைக் காட்டுகிறது.

இதேபோல, பக்கம் 143 ல், ” சாதிய அழிப்பு (Annlhilation of caste)  நூலையும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். ஏனெனில் அது வன்முறை அல்லது தண்டனை நடவடிக்கையும் இல்லாத சமூக நீதிக்கானப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது. இதுதான் அம்பேத்கரின் தனித்துவம். அவர் உபநிடதங்களின் கொள்கை அடிப்படையிலான ஒரு தனி மதத்தை தலித்துகள் நிறுவிக் கொள்ளலாம் என்று கூட வலியுறுத்துகிறார்,” என்று அதன் நூலாசிரியர்கள் கூறுகின்றனர்.

இது அவர்களின் நேர்மையின்மையையும், அம்பேத்கரின் விடுதலைத் தத்துவத்தைப் பற்றிய  முழுமையற்ற, பொய்யான வாசிப்பையும்  அம்பலப்படுத்துகிறது. ‘சாதி ஒழிப்பு’  நூலின் இரண்டாவது பதிப்பின்(1937) முன்னுரையில்,” லாகூர் ஜாட்-பட்- தோடக் மண்டல மாநாட்டிற்காக நான் தயாரித்திருந்த உரை ( இதைத்தான் சாதிய ஒழிப்பு நூலாக அவர் வெளியிடவிருந்தார்.  அந்த மாநாடு நடைபெறாததால் அம்பேத்கரே அந்த நூலை வெளியிட்டார்) யாருக்காக அதை நான் முதன்மையாக தயாரித்தேனோ அந்த இந்து பொது மக்களிடமிருந்து  வியக்கத்தக்க வகையில் வெகுவாக வரவேற்கப்பட்டது,” என்று கூறும் அவர் மேலும் கூறுகையில்,” நான் இந்துக்களை இந்தியாவின் நோயாளிகள் என்பதை உணர்த்த முடியுமானால் நான் மிகவும் திருப்தி அடைவேன். மேலும் அந்த நோய் அவர்களுடைய உடல் நலத்திற்கு மகிழ்ச்சிக்கும் ஆபத்தை உண்டாக்குகிறது,” என்று கூறியுள்ளார்.

சங் பரிவார் கூறும் நூலை முழுமையாகப் படிக்கும் எவரும் அது முதலாவதாக சாதிய இந்துக்களுக்காக எழுதப்பட்டது என்பதை தெளிவாக அறிந்துக் கொள்ளலாம். மறுபுறம், அந்தப் புத்தகம் வலியுறுத்துவது போல தலித்கள் உபநிடதங்களின் கொள்கைகள் அடிப்படையில் ஒரு தனி மதத்தை நிறுவிக் கொள்ளலாம் என்பது ஒரு உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. அது அந்த உரையில் உள்ள விடுதலைக்கான உள்ளாற்றலை குறைமதிப்பிற்கு உள்ளாக்குகிறது.

சாதி ஒழிப்பு நூலில் இடம் பெற்றுள்ள அந்த முழு பத்தியையும் இங்கு குறிப்பிடுவது பயனுடையதாக இருக்கும். சாதி இந்துக்களுக்கு அறிவுரை கூறும் அம்பேத்கர்,” நீங்கள் செய்வீர்களோ, இல்லையோ, நீங்கள் உங்கள் மதத்திற்கு ஒரு கோட்பாட்டு அடிப்படையைத் தர வேண்டும். அந்தக் கோட்பாடு சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துடன் ஒத்துப் போவதாக இருக்க வேண்டும்; சுருங்கச் சொன்னால் ஜனநாயகத்துடன் இருக்க வேண்டும். இது விடயத்தில் எனக்கு அதில் அதிகாரம் இல்லை. ஆனால் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துடன் ஒத்துப் போகும் கோட்பாடுகளுக்கு நீங்கள் வெளிநாட்டு மூலங்களிலிருந்து கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உபநிடதங்களிலிருந்து நீங்கள் அத்தகைய கோட்பாடுகளை எடுத்துக் கொள்ள முடியும்….,” என்று கூறி உள்ளார். அம்பேத்கரின் அந்த உரையின் மூலம் அவர் சாத்திரங்களை நிராகரிப்பதற்கும், சாத்திரங்களின் மதங்களை அழிப்பதற்கும் வலியுறுத்துகிறார் என்பதும் தெளிவாகிறது. அவர், தான் இந்து மதத்திலிருந்து வெளியேறுவதாகவும், அவர்கள் (சாதி இந்துக்கள்) சாதியை வேரோடு அழிக்க தொடர்ந்துப் போராட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறுகிறார். “என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களோடு இருக்க மாட்டேன். நான் என்னை  மாற்றிக்கொள்ள முடிவு செய்து விட்டேன். காரணத்தைக் கூறுதற்கான இடம் இதுவல்ல. நான் உங்கள் மதத்திலிருந்து சென்று விட்டாலும், நான் உங்கள் நகர்வை துடிப்பான  இரக்கத்துடன் உங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். மேலும் பயனுள்ள உதவியை நீங்கள் என்னிடமிருந்து பெறமுடியும்,” என்று எழுதி உள்ளார்.

மேற்கூறிய பத்திகளிலிருந்து அண்ணல் அவர்கள் சாதி ஒழிப்பு நூலில், சாதி இந்துக்களைத்தான் “இந்து மதத்தை பார்ப்பனிய நஞ்சின் பிடியிலிருந்து விடுவிக்கும்”  வழியைத் தேட வேண்டும் என அறிவுறுத்துகிறார். ‘மேக்கர்ஸ் ஆஃப் தலித் ஹிஸ்டரி’ நூலின் ஆசிரியர்களும், அதே போல முந்தைய இந்து தேசியவாதிகளும், உபநிடதங்கள் பற்றிய இந்த குறிப்பை வேண்டுமென்றே எழுப்பி, சாதி ஒழிப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள்களை எடுத்துக் காட்டி, அம்பேத்கர் உபநிடதங்களை நம்பியதாகக் காட்ட முயல்கின்றனர். அவர்களது கூற்றுப்படி, அம்பேத்கர் புத்த மதத்திற்கும் சென்று விட்டாலும், அவரது புதிய ஜனநாயகக் கோட்பாடுகள் உபநிடதங்களிலிருந்நு வந்தன என்றும், அதன் மூலம் புத்த மதம் இந்துமதத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் மேலும் பரப்புரை  செய்கின்றனர்.

சங்பரிவாரைப் போல் அன்றி, சாதியம் மற்றும் இந்து மதம் பற்றிய அம்பேத்கரின் ஆய்வு முறைகள் ஆழமான வரலாற்றுப் புலனாய்வு மூலம் வந்தவை. அவரது எழுத்துக்களை தொடர்ச்சியாக  படிக்காமல் இருப்பது மற்றும் சூழலை கருத்தில் கொள்ளாமல் படிப்பது ஆகியவை அவரது இடையறாத போராட்டத்திற்கும் புலமைக்கும் இழைக்கும் அநீதியாகும். உபநிடதங்கள் பற்றிய தனது ஆழமான ஆய்வான, ‘இந்து மதத்தின் புதிர்களில்’ (புதிர் எண் 8,9) முன்பு ஏன் உபநிடதங்கள்  வேதங்களின் ஒரு பகுதியாக இருக்கவில்லை என்பதையும், உண்மையில் அவை இரண்டும் ஒன்றிற்கொன்று முரணானவை என்றும், பிற்காலத்தில் அவை எவ்வாறு வேதங்களின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டன என்றும் கண்டுபிடித்தார்.

இதனை மேலும் ஆராய்ந்து, ‘இந்துமதத்தின் தத்துவங்கள்’ என்ற தனது நூலில், உபநிடதங்கள் “இந்துக்களின் தார்மீக மற்றும் சமூக ஒழுங்கில் எந்த விளைவையும் ஏற்படுத்தாமல், எதற்கும் திறனற்ற, பொருத்தமற்ற ஊகங்களாக மாறின,” என்று வெளிப்படுத்தினார். மாறும் சமூக இயல்பில் உண்மையின் கருத்து என்பதன் வழியாக அவர் நோக்கி, அதுவே அந்தத் திறனற்றத் தன்மைக்கு ஒரு காரணம் என்று அவர் விவாதிக்கிறார். ” உபநிடதங்களை எழுதிய தத்துவியலாளர்கள், உண்மையை அறிவது மட்டுமே போதுமானது அல்ல என்பதை  உணரவில்லை. ஒருவர் உண்மையை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறி உள்ளார். மதங்களின் பிரச்சனை அது முழுவதும் வெறும் மனோதத்துவங்களிலால் நிரம்பி உள்ளது என்று கூறும் அம்பேத்கர், மனோதத்துவங்கள் எளிய மக்களைப் பொருட்படுத்தாது, அதனால் அது செயல்படும் நெறிமுறையாக மாற முடியாது என்று உறுதிபடுத்துகிறார். இந்தக் காரணத்தினால் அவர்,” இந்து நெறிமுறைகள் இருந்தபோதிலும், உபநிடத தத்துவங்கள் இருந்த போதிலும், மனு பரிந்துரைந்ததிலிருந்து ஒரு சிறிதும், ஒரு எழுத்துக் கூட இந்து மதம் பிறழாது என்பதை மறுக்க முடியாது என்பது உறுதி.  அவர்கள் மதத்தின் பெயரால் மனு போதித்த அவலங்களை அழிக்க திறனற்றவர்கள், அதிகாரமற்றவர்கள்.  அவர்களுடைய இருப்பை பொருட்படுத்தாமல் ஒருவர் கூற வேண்டும் எனில், இந்து மதம்! அதன் மறுபெயர் சமத்துவமின்மை!,” என்று முடிக்கிறார்.

உபநிடதங்களைப் பற்றிய அம்பேத்கரின் பார்வையை படிக்கும் போது இந்நூலின் ஆசிரியர்கள் இது குறித்து நெருக்கமாக ஆய்வு செய்யவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. அவர்களது திட்டம், சாதி எதிர்ப்பு புரட்சியாளர்களை நீக்கி விட்டு,தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்பதான் என்று தோன்றுகிறது. அவர்களுடைய முந்தைய செயல்களிலும் ( 2015 ஏப்ரல்  மற்றும் 2016 ல் அம்பேத்கர் பற்றிய ஆர்கனைசர் இதழ்கள்) கூட, சங்பரிவார் அம்பேத்கரின் தத்துவங்களும் தங்களைப் பொருத்திக் கொள்ள இடையறாது முயற்சித்தனர். நாடு முழுவதும் உள்ள சாதி எதிர்ப்பு பகுஜன் அறிவுஜீவிகள்,” அம்பேத்கரை இந்துத்துவாவால்  தத்தெடுக்கவோ, கையகப்படுத்தவோ இயலாது” என அத்தகைய முயற்சிகளுக்கு எதிராக கடுமையான மறுப்பை வெளிப்படுத்தினர்.

இந்திய வரலாறும் (வழக்கத்தில் உள்ள ஆவணப்படுத்தப்பட்டு முன்னிறுத்தப்படுவது) சாதி எதிர்ப்பு வரலாறும் ( புறக்கணிக்கப்பட்டது மற்றும் சிறுமைப் படுத்தப்பட்டது) இரண்டு வெவ்வேறானவை. இயற்கையாகவே முரண்பாடுகளுடன் நீடிப்பவை என்பதை ஹோசபாலே அறிந்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் வாதிடுவது போல “தலித் பிரச்சனையை அரசியலற்றதாக்குவதற்கான” தற்போதைய தேவை புத்தகம் முழுவதும் நிறைந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இது கடந்தகாலத்தில் செய்யப்பட்ட பிறழ்வுகளை” மட்டுமல்ல”(பக்கம் எண் 14), முதன்மையாக அம்பேத்கர் சாதி ஒழிப்பு நூலில் கூறி உள்ளது போல ” இந்தியர்களின் உடல்நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்” மனிதநேயமற்ற பார்ப்பனிய சமூக ஒழுங்கிற்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் உருவாகி வரும் பார்பனிய அழிப்புப் போராட்டத்தின் ஒருங்கிணைந்த செயல்முறையை கட்டுப்படுத்துவதற்கான அறைகூவலும் ஆகும்.

(இந்தக் கட்டுரை தி வயர் இணையதளத்தில் முதலில் வெளியானது)

www.hindutvawatch.org இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

/

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்