Aran Sei

ரவீந்திரநாத் தாகூர் இந்துத்துவத்தை ஆதரித்தாரா? – ஹிமாத்ரி கௌஷ்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவம் இசையமைத்த” ஜனகணமன” பதிப்பு தேசிய கீதத்தில், சில சொற்களை மாற்ற வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியம் சுவாமி டிசம்பர் 1 ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த பதிப்பை, ‘சுப் சுக் செயின்’ என்கிறார்கள். (நேதாஜியின் தேசியகீதம் ‘சுப் சுக் செயின்’ என்றுதான் தொடங்கும்) அதில், ரவீந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதம் யாருக்காக எழுதப்பட்டது என்பது குறித்தத் தேவையற்ற ‘சந்தேகங்களை’ எழுப்பி உள்ளது என்றும் சுவாமி எழுதியுள்ளார்.

“1947 க்குப் பிந்தைய சுதந்திர இந்தியாவுக்கு இது பொருத்தமற்றது- எடுத்துக்காட்டாக, தேசிய கீதத்தில் உள்ள சிந்து என்ற சொல்லைப் பற்றிய குறிப்பு” என்று அவர் எழுதியுள்ளார்.

டிசம்பர் 12 ம்தேதி சுவாமி தனது கடிதத்தையும் பிரதமரின் ஒப்புதல் கடித நகலையும் தனது டிவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் ‘சுப் சுக் செயின்’ தேசிய கீதத்தின் இரண்டாவது வரியிலேயே, சிந்து என்ற சொல் வந்துள்ளது சுவாமிக்குத் தெரியாமல் போனது இங்கு கவனிக்கத்தக்கது. வங்காளிகளின் ஒரு பகுதியினர் இந்த வேண்டுகோள் தாகூரை அவமதிப்பதாகும் என்று கருதுகின்றனர்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, சுவாமிக்கு பதில் தரும் வகையில் பிரதமருக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், “சுவாமி எழுதியுள்ள கடிதத்தின் ஆன்மாவும், புரிதலும் மிகவும் குறுகிய மற்றும் பிளவுபடுத்தக் கூடியதுமாகும். அது, பேசுபொருளில் உள்ள பாடலின், ஆழமான தேசிய உணர்வை மீறுவதாகும். ஜனகனமன பற்றிய சுவாமியின் புரிதல் மிக சிறிய எல்லைக்குட்பட்டதாகவும், மிகக் குறுகியதாகவும் உள்ளது. ஏனெனில் அவர் வெறும் தற்போதைய இந்தியாவின் நிலப்பரப்புப் பற்றிய புரிதலுடனே அதனை  அணுகி உள்ளார். எனவே ‘ சிந்து’ என்பதை 1947 க்கு பிந்தைய இந்தியாவிற்குத் தவறான பொருத்தமாகக் கருதுகிறார். ஆனால் இந்தியா என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல. எல்லையற்ற பன்முகத்தன்மையை, கச்சிதமான இணக்கத்துடன், எல்லையற்ற திறனுடன் ஒன்றொடொன்றைப் பின்னும் கலாச்சாரங்களும், கருத்துக்களும் கொண்ட பெருங்கடலாகும். குருதேவர் என்று நேசிக்கப்படும், நினைவுகூரப்படும் ரவீந்திரநாத் தாகூர் நமது நாட்டின் பெருமை மற்றும் உலகளாவிய அடையாளம். அவர் முதலில் ஒரு மனிதநேய சிந்தனையாளர். அவரது ஜனகனமன மனிதநேயத்தின் சாரத்தை மட்டுமே சித்தரிக்கிறது” என்று சௌத்ரி எழுதி  உள்ளார்.

சுவாமியின் கடிதம் சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கலாம். ஆனால் அவர் சார்ந்திருக்கும் பாஜகவும், அதனுடன் ஒத்த கருத்தியலையே கொண்டிருக்கும் அமைப்புகளும் தாகூரைப் பற்றியும் அவரது கருத்துக்களையும் எப்போதும் விமர்சிப்பவர்களாகவே இருக்கின்றனர்.

2017 ஆம் ஆண்டு, ஆர்எஸ்எஸ் உடன் இணைந்த சிக்சா சங்க்ருதி உத்தான் நியாஸ் என்ற அமைப்பின் தலைவர் தினநாத் பாட்ரா என்பவர், தாகூரின் எண்ணங்களை குறிப்பாக தேசியவாதம் குறித்த எண்ணங்களை என்சிஇஆர்டி (NCERT) புத்தகதங்களிலிருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

அதுபற்றி  நாடாளுமன்றத்தில் பல விமர்சனங்கள் எழுந்த பின்னர் அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அது போல் எதுவும் நடக்கப் போவதில்லை என உறுதி அளித்தார்.

2017 ஆம் ஆண்டு, நாக்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், 1913 ஆண்டு, முதல் நோபல் பரிசை பெற்ற பின், தாகூர் கீதாஞ்சலியுடன் உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்றும், 1916 ல் அவர் ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாடவிருந்தார்  என்றும், ஆனால்” மாணவர்கள் யாரும் வரவில்லை” என்றும் பேசினார். மேலும் அவர்  “ஒரு தனிநபர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் பலவீனமான நாட்டிலிருந்து வந்தவர் என்றால் போதுமான மரியாதையைப் பெற மாட்டார்” என்றும் கூறினார்.

மூத்த, தாகூர் அறிஞரும், இந்தோ – ஜப்பான் உறவுகளை வளர்க்கத் தாகூரால் துவங்கப்பட்ட நிப்பான் பாவனாவின் முன்னாள் இயக்குநருமான அமித்ராசூடன் பட்டாச்சார்யா, பகவத்தின் கருத்துக்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்கிறார். ” தாகூர் தனது ஜப்பான் பயணத்தை விரிவாக ஆவணப்படுத்தி உள்ளார். அவற்றில்  இந்த சம்பவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவர் எப்போதும் தனது வெளிநாட்டு தொடர்புகள் குறித்து மிகவும் உண்மையாக இருந்தார். ஜப்பானிய  அறிவுஜீவிகளுடன் அவர் கொண்டிருந்த கனிந்த உறவின் காரணமாகவே, அவர் சாந்திநிகேதனில் நிப்பான் பவனைத் துவக்கினார். எனவே இது போன்ற மறுப்புப் பற்றிய கேள்வியே எழவில்லை” என அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் அவர் கூறினார்.

இந்துத்துவா ஆதரவாளரா தாகூர்?

கடந்த சில ஆண்டுகளாக, பல மேற்கு வங்காள பாஜக தலைவர்கள் தாகூரை மறுவடிவமைப்புச் செய்து, அவரை இந்துத்துவா பிரதிநிதியாகக் காட்ட முயன்று வருகின்றனர். அவர்கள் 1905 ஆம் ஆண்டு, வங்கப்பிரிவினையின் போது தாகூர் எழுதிய ‘ஸ்வதேசி சமாஜ்’ என்ற கட்டுரையை மேற்கோள் காட்டி, தாகூரை இந்து ராஷ்டிர ஆதரவாளர் என கூறுகின்றனர்.

2019 ஆம் ஆண்டு, வரலாற்றாசிரியர் திப்தேஷ் சக்கரவர்த்தி டெலிகிராப் நாளிதழில், “மேற்கு வங்காளத்தில், இந்துக்களிடையே இருக்கும் முஸ்லீம் எதிர்ப்பு என்ற காட்டுத் தீயை மேலும் அதிகமாக்கும் காற்றாக தாகூரின் உருக்குலைந்த, கேலிச் சித்திரங்களைக் வைத்து அவர்களை அணிதிரட்டுவது கண்டு, திகைத்துப் போனேன்” என்று கூறுகிறார் “இவை அனைத்தும் மக்களவைத் தேர்தலில் மேலும் சில இடங்களை அறுவடை செய்வதற்காக மட்டுமே செய்யப்படுகின்றன” என்கிறார் அவர்.

மேலும், தாகூர் எந்த அளவு இஸ்லாம் மீது விமர்சன பார்வையோடு இருந்தார் என்பதை அவர் அனுப்பி உள்ள அந்த மின்னஞ்சலில், தாகூரின் பல்வேறு மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி, உண்மையில் தாகூர் குறித்து கூறியவை,  சிதைவாகவும், பொய்யாகவும் உள்ளது என்றும் அவர் காண்பிக்கின்றார்.

அனுப்பப்பட்ட அந்த செய்தியில் “ஒவ்வொரு நாளும் கீழ்த்தட்டு இந்துக்கள்,  முஸ்லீம்களாகவும், கிறித்துவர்களாகவும் மாறிக் கொண்டிருக்கிறார்கள். (ஆனால்) பட்பாரா(பண்டிட்கள்) அதுபற்றி அக்கறையின்றி இருக்கிறார்கள்” என்ற  தாகூரின் மேற்கோள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் அந்த சொற்றொடரின் துவக்க வார்த்தைகள் முற்றிலுமாக விடுபட்டுள்ளது. ‘ ஒவ்வொரு நாளும் கீழ்த்தட்டு இந்துக்கள் தங்களை சமூக அவமதிப்பிலிருந்து காத்துக் கொள்ள…..’ என்பதே அந்த வார்த்தைகள். ஆகவே “அந்த முழு வாக்கியம் இந்து சமூகத்தின் சாதி அடக்குமுறையைக் குற்றம் சாட்டுவதாக உள்ளதே அன்றி, இஸ்லாமை அல்ல.” என்கிறார் சக்கரவர்த்தி.

ஜனகனமன பாடல் உண்மையில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைப் வாழ்த்திப் பாடப்பட்டதாக ஒரு  கட்டுக்கதையை ஆர்எஸ்எஸ் அதிகாரபூர்வமற்ற முறையில் பரப்பி வருகிறது. மேலும் முஸ்லீம்கள் இந்த தேர்வை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்காகவே ‘வந்தே மாதரம்’ பாடலுக்குப் பதிலாக  ஜனகனமன தேசிய பாடலாகத் தேர்வு செய்யப்பட்டதாகவும் அது கதை கட்டி பரப்பி வருகிறது.

இந்துத்துவா எதிர்ப்பாளர் தாகூர்

சமூக ஊடகங்களில் வலதுசாரிகளால் பரப்பப்படும் போன்மிகள்(மீம்ஸ்) தாகூரை, ‘பண்பற்றவராகவும்’, ‘இந்துமத எதிர்ப்பாளராகவும்’, ஆங்கிலேயருக்கும், மதச்சார்பற்றவர்களுக்கும் கூட்டிக் கொடுக்கும் வேலையைச் (பேச்சு வழக்கில் மாமா வேலை- pimp) செய்பவராகவுமே எப்போதும் அழைக்கின்றன. ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதிய பக்கிம் சந்திர சட்டோபாத்யாயாவை முன்னிறுத்தி, தாகூரைவிட அவரே நோபல் பரிசு பெறத் தகுதியானவர் என்ற பரப்புரையையும் வெளிவருகிறது.  இன்னொரு வங்காளியை, இன்னொரு ‘உண்மையான இந்துவை’ கதாநாயகனாகக் காட்டி வங்காளிகளை திருப்திபடுத்துவதற்காகவே இந்த பரப்புரைச் செய்யப்படும் போது,  கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், சட்டோபாத்யாய் 1894 ம் ஆண்டே இறந்து விட்டார். அதாவது முதல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட 1901 ற்கு,  ஏழு ஆண்டுகள் முன்பே இறந்துவிட்டார்…

சமீப காலமாக, திரிணாமுல் காங்கிரஸ் முன்வைக்கும் “வெளி நாட்டவர்” என்ற வாதத்தை எதிர் கொள்ள தங்களை வங்காளிகள் எனக் காட்டிக் கொள்வதற்கு சான்றாக பாஜக தாகூரை அதிகமாக பயன்படுத்துகிறது.

இந்த காவிக் கட்சி,  நாய்டா மாவட்டத்தில் நடத்திய தனது உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தில், சுதந்திர போராட்ட இயக்கத்தின் உற்சாகமான நாட்களில், தாகூர் எழுதிய பிரபலமான பாடலான “ஒ அமர் தேஷர் மாத்தி, தோமர் போர் தக்கை மாதா (ஒ, என் தாய் மண்ணே! நான் உன்னை வணங்குகிறேன்) பாடலை பயன்படுத்தும் அளவுக்கு அது உள்ளது.

மோடி அடிக்கடி (நம்) கவியின் வரிகளை தனது உரைகளில் மேற்கோளாகக் காட்டி வருகிறார். அந்த வகையில் அண்மையில், டிசம்பர் 10 ம் நாள் நடந்த, புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் மோடி, ” ஒற்றுமையின்  உற்சாகத்துடன் தொடருங்கள். ஒவ்வொரு குடிமகனும் முன்னேற வேண்டும். மற்றும் இந்தியா உலகம் முழுவதும் பாராட்டப்பட வேண்டும்”  என்று தாகூர் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு முன்னர், இந்திய வர்த்தக அவையின்(ICC) 95வது ஆண்டு விழாக் கூட்டத்தில் (plenary session) மோடி  தாகூரின் “ஓரே நூதன் ஜுகர் போரே” (புதிய நூற்றாண்டின் விடியல்) என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டினார்.

தாகூருடனும் அவரது வரிகளுடனும் ஒட்டு மொத்தமாக பாஜக தலைவர்களுக்கு அறிமுகமில்லாததை கருத்தில் கொண்டு, வேண்டுமென்றே மோடி தாகூரை மேற்கோள் காட்டுவது, தேர்தல் நேரத்தில் வங்காளிகளை கவர்ந்திழுக்கும் முயற்சியே என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது.

“ஆங்கிலேயருக்கு எதிராகவே ரவீந்திரநாத் தாகூர் தனது நோபல் பரிசை திருப்பிக் கொடுத்தார்” என பாஜக தலைவரும் திரிபுரா முதலமைச்சருமான பிப்லப் தேப், 2018 ஆம் ஆண்டு நடந்த தாகூரின் பிறந்தநாள் விழாவில் கூறினார். ஆனால் தாகூர் அவ்வாறு செய்யவே இல்லை. அவர் ‘வீரத்திருத்தகை’ எனப்படும் நைட்வுட் (Knighthood)’  பட்டத்தைத்தான் மறுத்தார்.

மேற்கு வங்க மாநில பாஜக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலீப் கோஷ் ஒருமுறை ஆரம்பப்பள்ளிப் பாட புத்தகத்தில் உள்ள தாகூரின் ‘சஹாஜ் பாத்’ பாடலை, ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் எழுதிய பாடல் என தவறாக கூறி, அவரைப் பாராட்டினார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, பிர்பூம் தொகுதியில்  ஒரு பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “ரவீந்திரநாத் தாகூர் சாந்தி நிகேதனில் பிறந்தார்” என்று கூறினார். பாஜகவின் மேற்கு வங்க பிரிவு ‘தாகூர் பிறந்தது விஸ்வபாரதியில்’ என்று டிவிட்டர் பதிவின் மூலம் இந்த தவற்றை தானே சுயமறுப்பு செய்து கொண்டது. அந்த பதிவும் சில மணி நேரத்திற்குள் நீக்கப்பட்டுவிட்டது.

(www.thewire.in இணையதளத்தில் ஹிமாத்ரி கௌஷ் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்