Aran Sei

இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்

2020, அக்டோபர் மாதம் 5ம் நாள் தனது கணவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என தடுக்காததற்காக தன்னையே சபித்துக் கொண்டிருக்கிறார் புஷ்ரா. அன்று ஓலா நிறுவனத்தில் சவாரி-பங்கு அடிப்படையில் பணிபுரியும் ஓட்டுநர் ஆலம் கிரேட்டர் நாய்டாவில் அதிகாலையில் பணியில் இருந்தார். எட்டு மணியளவில் இரண்டு சவாரிகளை முடித்திருந்தார். அந்த நாள் முழுவதும் இரவு தொலைக்காட்சி செய்தியில் உ.பி.யில் மான்ட் என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவராக அவர் பெயரும் இருப்பதைக் காணும் வரை, புஷ்ராவும் அவரது குடும்பமும் அவரிடமிருந்து எந்தத் தகவலும் பெறவில்லை.

“செய்தியில் அவர்கள் எல்லாம் பொய்யாகக் கூறுகிறார்கள். அவரை பயங்கரவாதி, சதிகாரர் இன்னும் என்னவெல்லாமோ கூறுகின்றனர்,” என்கிறார் புஷ்ரா.

ஆலம்  காலை எட்டு மணிக்கு கொஞ்சம் அதிகம் வருமானம் வருவது போல் இருந்த  மூன்றாவது சவாரிக்காக ஓலாவில் பதிவிட்டுச் சென்றார். அவருடைய காரில் கேரள ஊடகவியலாளர் சித்திக் கப்பன், இந்திய இஸ்லாமியர் மாணவர் அமைப்பான கேம்ப்பஸ்  ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த இரு செயற்பாட்டாளர்களான ஆதிக் ரஹ்மான் மற்றும் மசூத் ஆகியோர் சென்றனர். அவர்கள் மூவரும் அத்ராசில் தாகூர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு தலித் இளப்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்தது குறித்த தகவல்களை சேகரிக்கச் சென்று கொண்டிருந்தனர். ஆனால், மதுரா சுங்கச் சாவடியில், பொது அமைதி மற்றும் அமைதியை சீர்குலைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு உ.பி. காவல்துறையினரால் வண்டியில் இருந்த  ஆலம் உட்பட நால்வரும்  குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி கைது செய்யப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து அவரும், மூன்று பிரயாணிகளும் உபா சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் பல குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அன்றிலிருந்து ஆலம், புஷ்ரா குடும்பத்தினர் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘சாதியும் வர்க்கமும் கொரோனா பேரழிவும்’ – -சத்யசாகர்

பீதியடையச் செய்யவே சட்டங்கள்

2020, அக்டோபர் 5 லிருந்தே ஆலமின் விடுதலைக்கான ஒவ்வொரு வாய்ப்பும், உ.பி. காவல்துறையின் மற்றொரு குற்றப்பத்திரிகையால் தடுக்கப்பட்டு வருகிறது. வழக்கு பல காவல் துறை பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு வருவதால் அது  விசாரணைக்கு அதிக கால தாமதத்தை ஏற்படுத்துகிறது. 2020 அக்டோபர் 7 ம் நாள் குற்றவியல் சட்டத்தின் படி கைது செய்யப்பட்ட நால்வரும் மான்ட் துணை நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் காவல்துறை உபா, குற்றவியல் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி குற்றம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு பத்திரிகையை பதிவு செய்தது.

இந்த வழக்கு மான்ட் காவல்நிலையத்திலிருந்து குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் அது 2020, அக்டோபர் 23 ல் லக்னோ சிறப்பு அதிரடிப் படைக்கு மீண்டும் மாற்றப்பட்டது. அதன் பிறகு சிறப்புக் அதிரடிப்படை  வழக்கை உடனடியாக மதுரா கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதிக்கு மாற்றிவிட்டது. ஏப்ரல் 3ம் நாள் கைது செய்யப்பட்டு 180 நாட்களைக் கடந்து விட்ட போதும்,அவர்களுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரத்தையும் தாக்கல் செய்ய இயலாத நிலையில் இயல்பாகவே அவர்கள் பிணை விடுதலைப் பெற உரிமை உண்டு. ஆனால் அந்த நாளில் காவல்துறை அவர்கள் மீது இன்னொரு குற்றப் பத்திரிகையை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்தக் குற்றச்சாட்டு பத்திரிகையில் ஆலம், கப்பன், மசூத் மற்றும் ரஹ்மானுடன் சேர்த்து எட்டு பேர் மீது அத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்குப் பின் தலித்துகளுக்கும், தாகூர்களுக்குமிடையே சாதி அடிப்படையில் கலவரத்தைத் தூண்டும் எண்ணத்துடன் அவர்கள் இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது. இதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிதி உதவி அளித்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. (இஸ்லாமிய அரசியல் அமைப்பான பிஎஃப்ஐ,  எந்த ஒரு மாநில அரசோ அல்லது ஒன்றிய அரசோ சட்டப்படி  இதுவரைத்  தடை செய்திராத போதும், அரசியல்வாதிகளும், காவல்துறையும் அந்த அமைப்பு தீவிரவாதத்தில் ஈடுபாடு கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தி வருகின்றன).

ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் கைது : அரசின் நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள் கண்டனம்

சிறப்பு அதிரடிப் படையிடம் இந்த வழக்கை உ.பி. அரசு ஒப்படைத்து குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரையும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளி இருப்பதன் நோக்கமே, அத்ராசின் உண்மை நிலவரத்தை மறைப்பதும், இந்தப் பிரச்சனையை  யோகி ஆதித்யநாத்  திறமையாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டை எழுப்பும் குரல்களை அமைதிப்படுத்துவதும்தான் என்கிறார் ஆலமின் வழக்கறிஞர் சைஃபான் ஷேக்

“சிபிஐயும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று உறுதி செய்ததிலிருந்து  தற்போது அமைதி காக்கப்படுகிறது. அவர்கள்(காவல்துறையினர்) பாலியல் வன்புணர்வு நிகழ்வை மூடி மறைக்க வேண்டுமென்றே பிஎஃப்ஐ யை இதில் சேர்த்துள்ளனர்,” என்கிறார் ஷேக்.

இந்தக் குற்றப் பத்திரிகை (செ. நீ. 600/2021) ஆலம், கப்பன், ரஹ்மான் மற்றும் மசூத் ஆகிய நால்வரைத் தவிர மேலும் ஒருவரையும்  வழக்கில் சேர்த்துள்ளது. அவர் ஆலமின் மைத்துனர் டேனிஷ் என்பவர் ஆகும். அவர் அக்டோபர் 5ம் நாள் கப்பனும் மசூத்தும் அத்ராஸ் செல்ல வாகனத்தைத் தேடிக் கொண்டிருந்த போது அவர் ஆலமின் பெயரை பரிந்துரைத்ததாக கூறுகிறது. அத்துடன் பிஎஃப்ஐ யின் தேசிய பொதுச் செயலாளர் கே. ஏ. ரவுப் ஷெரீஃப் மற்றும் வேறு இரு செயற்பாட்டாளர்களையும் குற்றப் பத்திரிகையில் சேர்த்துள்ளது. அந்த ஆவணம் 54 சாட்சிகளுடன் 5,000 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. அதில் 80% சாட்சிகள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

சாதி கடந்து காதலித்த ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்ட அவலம் – பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு

அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் மற்றும் அவர்களுடைய வழக்கறிஞர்களுக்கும்  குற்றப் பத்திரிகையின் நகலைத் தர வேண்டியது அவர்களுடைய கடமை என்ற போதும்  ஒருவருக்குக் கூட அதனைத் தரவில்லை என்கிறார் ஷேக். இது அவர்களது சட்ட உரிமைமயை மறுப்பதாகவும், அவர்களை வேண்டுமென்றே  இயன்ற வரை சிறையில் வைத்திருக்க செய்வதற்கான நடவடிக்கையே ஆகும் என்றும் அவர் கூறுகிறார். டேனிஷைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உ.பி.யின் பல்வேறு சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். டேனிஷ், சிறப்பு அதிரடிப் படைத் தன் மீது குற்றம் சாட்டியுள்ளதுடன், வழக்கில் தன்னை ஒரு சாட்சியாகவும் இருக்கக் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி மனு அளிக்காமல் இருந்திருந்தால் அவரும் சிறையிலே அடைக்கப்பட்டு இருந்திருப்பார்.

ஆலமின் சட்ட ஆலோசகரான மாதுவன் தத் சதுர்வேதி, தேசத் துரோகம் குற்றம் சாட்டி, உபாவின் கீழ் கைது செய்திருந்தாலும், இது வரை நடந்த விசாரணையில் அவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை.” பயங்கரவாதத்தைத் தடுக்கக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் மக்களை பீதியடையச் செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது,” என்கிறார் சதுர்வேதி. குற்றம் சாட்டப்பட்வர்களில் ஒருவர் கூட இந்திய அரசையோ அல்லது இந்திய அரசியலமைப்பையோ அச்சுறுத்தும் எந்த ஒரு செயலையும் செய்ததில்லை என்று அவர் மேலும் கூறுகிறார்.

மாடுகளை ஏற்றிச் சென்றதால் இஸ்லாமியர்கள் படுகொலை – நீதித்துறை விசாரணை வேண்டுமென மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

ஆலமின் பிணைக்காக 2020, நவம்பர் 13 ல்  போடப்பட்ட ஒரு பிணை மனு நிராகரிக்கப்பட்டது. நவம்பர் 7 ல் அவரது வழக்கறிஞர் ஆட்கொணர் மனுவையும் பதிவு செய்திருந்தார். அது தற்போது நிலுவையில் உள்ளது. மேலும் அது ஜூலை 26 ம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஜூன் 16 அன்று மதுரா நீதிமன்றம் ஆலம், கப்பன், ரஹ்மான் மற்றும் மசூத் ஆகியோர் மீதான பிணை விடுதலைப் பெறக்கூடிய மூன்று குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்துவிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டத்தின் படி அவர்கள் மீது போடப்பட்ட குற்றச்சாட்டுக்களை , விசாரணைக்கு உரிய காலமான ஆறு மாதங்களுக்குள் முடிக்காத தால் ஏப்ரல் 3 ம் தேதி அவை தள்ளுபடி செய்யப்பட்டன. எனினும் உபா மற்றும் தேசத்துரோக வழக்குகள் நீடிக்கின்றன.

“நாம் எல்லோரும் சமமில்லை”

ஆலமை கைது செய்ததிலிருந்து புஷ்ரா புகுந்த வீட்டிற்கும், பிறந்த வீட்டிற்கும் இடையே அல்லாடிக் கொண்டிருக்கிறார். பொருளாதாரப் பாதுகாப்பிற்காக அவரும் அவரது குழந்தைகளும் அவர்களை சார்ந்திருக்க வேண்டி உள்ளது. தனது வாழ்க்கையின் ஆதாரத்தை இழந்து நிற்கிறார் அவர்.

“ஓட்டுநராக இருப்பது குற்றமா? அல்லது இஸ்லாமியர்களுக்கு ஓட்டுநராக இருப்பது குற்றமா? ” என்று கேட்கிறார் அவர். எட்டாம் வகுப்புவரை மட்டுமே முறையான கல்வியைப் பெற்றுள்ள புஷ்ரா கடந்த ஒன்பது மாத இஸ்லாமியர்களாக இருப்பதே கூட குற்றமாக உள்ளது என்பதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்.  ஆலமின் மைத்துனர் ஆமீர் உ.பி. யின் தற்போதைய அரசியல் மற்றும் மத சூழலின் விபத்தே ஆலமின் கைதிக்கு காரணம் என்கிறார். “இத்தகைய சூழ்நிலையில் யாரையும் எளிதில் சிறையில் அடைக்கலாம்,” என்று கூறுகிறார் அவர். நிறுவனங்களை அவற்றின் தவறுகளுக்கு பொறுப்பாக்குவது இஸ்லாமியர்களுக்கு கடினமான ஒன்று என்று கூறும் அவர்,” இஸ்லாமியர்களுக்கு செல்வதற்கு இடமில்லை. யாரையும் சார்ந்திருக்க முடியாது. நாங்கள் இந்த நாட்டின் குடிமக்களாக இருந்தாலும் நாங்கள் சமமானவர்கள் அல்ல,” என்கிறார்.

‘விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையின் வன்முறைகள்’ – விசாரணையை தொடங்கிய பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு

ஆலம் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கையுடன், ஆலமுடன் ஆமீர் பலமுறை தொலைபேசி மூலம் பேசி இருக்கிறார். ஆலம் தான் ஒரு இஸ்லாமியராக இருப்பதாலேயே அவரைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ள பலவற்றை உணர்ந்திருக்கிறார் என்றும், ஆனால் ஆலம் மிக பயங்கரமான சிலவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என ஆமீர் கூறுகிறார். “இந்த வழக்கு அரசியல் தொடர்பானது. காவல்துறையினர் கூட எதுவும் செய்ய இயலாது,” என்று ஆலம் கூறியதை மேற்கோள் காட்டுகிறார் ஆமீர். ஒருமுறை,” யாராவது ஒரு இஸ்லாமியர் அல்லாதவராவது எங்களோடு இருந்திருந்தால் நாங்கள் கைது செய்யப்பட்டு இருக்க மாட்டோம்,” என ஆலம் கூறியதாக அவர் கூறுகிறார். தான் இதற்கு முன் ஒருபோதும் கேள்விப்பட்டிராத ஒரு அமைப்புடன் தனக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில், கனத்த குற்றப் பத்திரிகை கட்டுக்கள்தான் பிஎஃப்ஐ யின் விரிவாக்கத்தையே  தனக்கு கற்றுக் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார். ஆலமின் கைது அவரை மாற்றி விட்டதாக ஆமீர் கருதுகிறார். ஒரு காலத்தில் நம்பிக்கையுள்ள, நல்ல நண்பராக இருந்த ஆலம் தற்போது அச்சமுற்றவராக, இழிந்தவராக, அவநம்பிக்கையுற்றவராக மாறி விட்டார். கொஞ்சம் கூடுதல் பணம் கிடைக்கிறது என்பதற்காக ஒரு சவாரி எடுத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆலம் மீண்டும் ஒரு ஓட்டுநராக தனது தொழிலுக்குத் திரும்ப அஞ்சுகிறார்.

உ.பி. யின் ராம்பூரைச் சேர்ந்தவர் ஆலம். முன்னதாக கிராம சேவை ரிக்சா ஓட்டுநராக இருந்த ஆலம் கடந்த செப்டம்பரில் தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து இந்த காரை வாங்கினார். கைது செய்யப்படுவதற்கு  பத்து நாட்களுக்கு முன்புதான் ஓலா நிறுவன ஓட்டுநராக பணியில் சேர்ந்தார்.

‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத காஷ்மீர்’ – டேவிட் தேவதாஸ்

சிறைத்துறையிடமிருந்து  உறவினர்களுடன் வாரத்திற்கு ஐந்தாறு முறை மட்டும் ஒரு ஐந்து நிமிடமே  தொலைபேசியில் பேச கிடைக்கும் அனுமதிக்காக அவரது பெற்றோர்கள்  கவலைத் தோய்ந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அந்த ஐந்தே நிமிடத்திலும் ஆலம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்பதற்காக  கைப்பேசியை காதோடு ஒட்டி வைத்துக் கொள்கின்றனர். அவரது ஒவ்வொரு தொலை பேசி அழைப்பின் போதும் அவரது குரல் ஆழத்திலும் ஆழமாக, சோகமாக, எதிர்மறை குரலாகவே இருக்கும் என்று கூறும் அவர்கள் இன்னும் எவ்வளவு நாட்கள்தான் தங்கள் மகனை பார்க்காமல் உயிர்வாழ முடியும்?  எனத் தெரியாமல் விழிக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன் சிறிது நம்பிக்கை இருந்தது.  ஒன்பது மாதங்களுக்குப் பிறகு புஷ்ரா  முகத்தில் புன்னகைத் தெரிந்தது. ” நடாஷா நார்வால், தேவாங்கனா கலீதா மற்றும் ஆசிஃப் இக்பால் தர்ஹா ஆகியோரது விடுதலை எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.  எனது கணவர் மீது பயஙாகரவாத குற்றச்சாட்டு சாட்டப்பட்டிருந்தாலும் நான் நம்பிக்கையுடன் உள்ளேன். உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அத்துணை அப்பாவிகளின் வலியை நான் அடையாளம் காண்கிறேன்,” என்கிறார் அவர்.

ஆனால்  உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு, தில்லி உயர்நீதிமன்றம் அந்த மூவரையும் விடுதலை செய்தது முன்னுதாரணம் அற்றது என்று தீர்ப்பளித்த நாளில் அவரது புன்னகை மறைந்தது.

நிதிபங்களிப்பை காரணம் காட்டி பறிக்கப்படும் மாநில அரசின் இடஒதுக்கீடு – கேள்விக்குறியாகிறதா அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம்?

சட்ட நடைமுறைகளுக்கான  கட்டணங்களுக்கானக் கடன், ஆலமை பார்ப்பதற்காக மதுரா செல்வதற்கு போதுமான பணம் இல்லாதது, மேலும் யோகி ஆதித்யநாத்தின் உ.பி.யில் இஸ்லாமியர்கள் அன்றாட வாழ்க்கையில் பெற்று வரும் நேரடி அனுபவங்களுக்களைப் பெற்று வருவது ஆகிய நிலையில், புஷ்ரா மற்றும் அவருடைய மைத்துனர்கள் ஓரளவுதான் செய்ய முடியும் என்றாலும் மிகவும் கடினமான வழியில் மத அரசியலைத் தொடர்ந்து கற்றுக் கொள்வர்.

 

www. the wire.in இணைய தளத்தில் தரூஷி அஸ்வானி எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்