Aran Sei

உலக வெப்பமயமாதலும் நிகழ இருக்கும் பேரழிவும் – ஐ.நா. அறிக்கை

டந்த 1970ஆம் ஆண்டிற்கு பிறகு நிகழ்ந்த உலக சராசரி வெப்பநிலை உயர்வானது அதற்கு முந்தைய 2000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்று  என்று ஐக்கியநாடுகள் அவையின் காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவின் [ஐ.பி.சி.சி]  அறிக்கையில்  கூறியுள்ளது.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என்பது  இன்றைய உலகின் தவிர்க்க இயலாத சிக்கலாக உருவெடுத்துள்ளது.  வெள்ளம், வறட்சி, புயல், நிலச்சரிவு, கடல் நீர் மட்ட உயர்வு, கனமழை, காட்டுத்தீ  போன்ற இயற்கை நிகழ்வுகள் நடைபெற்று இருப்பினும் தற்போது அதன் வீச்சானது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

அந்த வகையில், உலக வெப்பமயமாதலானது அடுத்த பத்தாண்டுகளுக்குள் 1.5° செல்சியஸ் அளவிற்கு உயர்ந்து விடும். மேலும், பசுமை இல்ல வாயுக்களின்  அளவை, உடனடியாகக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிட்டால்  2° செல்சியஸ் அளவைக் கூட தாண்டும் என கண்டறிந்துள்ளது.

காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு என்பது பல்வேறு அறிவியலாளர்களை கொண்ட ஒரு குழுவாகும். இந்த ஐ.பி.சி.சி. அமைப்பானது 1988ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் உலக வானிலை அமைப்பால் இணைந்து உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் என்பது உலக நாடுகளுக்கு காலநிலை மாற்றம் குறித்த கொள்கையை உருவாக்குவதற்கான அறிவியல் பூர்வ தகவல்களை அளிப்பதாகும்.

இந்த அடிப்படையில் ஐ பி சி சி ஆனது இதுவரை 5 மதிப்பீட்டு அறிக்கைகளை (Assesment Report) தயாரித்து வெளியிட்டுள்ள நிலையில் தற்போது ஆறாவது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அறிக்கையில் முக்கியமான காலநிலை சிக்கலுக்கானக் காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளது.

அதன் படி, வெப்ப அலைகள், கனமழை, வறட்சி, புயல் போன்ற பேரிடர்களின் தீவிரத்திற்கு மனிதர்களின் நடவடிக்கை முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும், 2019ஆம் ஆண்டு வளிமண்டலத்தில் காணப்பட்ட கார்பன் டை ஆக்சைடின் செறிவானது அதற்கு முந்தைய 2 மில்லியன் ஆண்டுகளில் காணப்படாத அளவாகவும்,  மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடின் அளவானது அதற்கு முந்தைய 800,000 ஆண்டுகளில் காணப்படாத அளவாகவும் உள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதே போன்று, “1900ஆம் ஆண்டிற்கு பிறகு நிகழ்ந்த உலகின் சராசரி கடல் மட்ட உயர்வின் வேகமானது கடந்த 3000 ஆண்டுகளில் நிகழ்ந்ததை விட அதிகமாகும். மேலும்,  கடல்மட்ட உயர்வானது  2100ஆம் ஆண்டில் 2மீ அளவிற்கும் 2150ஆம் ஆண்டில் 5மீ அளவிற்கும் உயர வாய்ப்புள்ளது.  1980ஆம் ஆண்டிற்குப் பிறகு கடல் வெப்ப அலை நிகழ்வுகளின் எண்ணிக்கையானது  இருமடங்காக அதிகரித்துள்ளது” என்றும் காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த அறிக்கை வழியாக  பாரிஸ் ஒப்பந்ததின் படி உமிழ்வை குறைத்தால் கூட இனி நமது இயல்பு வாழ்க்கையானது பேரிடர்களுக்கு நடுவில்தான் அமையும் என்பதே இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தியாகும்.

தற்போது இருக்கும் உமிழ்வு அளவை குறைப்பதோடு மட்டுமில்லாமல் மிக வேகமாக நம் வாழ்விடங்களை பேரிடர்களில் இருந்து தப்பிக்கும் வகையில் தகவமைத்துக் கொள்ள நாம் முயல வேண்டும். இனி நாம் வெளியிடும் ஒவ்வொரு சிறு உமிழ்வும் இப்புவியின் எதிர்காலத்தை சீரழிக்கும் என்பதை அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.

இந்த அறிக்கைகளின் அடிப்படையில் திட்டமிடுதலை மேற்கொள்ள வேண்டிய  இந்திய அரசோ, தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டங்களையும், அனல்மின் நிலையங்களையும், நிலக்கரி மற்றும் யுரேனிய சுரங்கங்களையும் திறப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் இது போன்ற திட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களையும் திருத்தி அமைத்து நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் வேகமாக ஈடுபட்டு வருகிறது. அறிவியல் நம் இருத்தியலின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கையை கொடுத்து விட்டது. அதற்கு செவிமடுத்து செயல்பட வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உள்ளது.

source: பூவுலகின் நண்பர்கள் 

தொடர்புடைய பதிவுகள்:

பாஜகவினர் நடத்திய கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்கள் – ஜெயஸ்ரீ ராம் எனக் கூற மறுத்த பத்திரிக்கையாளரை ஜிஹாதி என மிரட்டிய இந்துத்துவவாதிகள்

மின்சார திருத்த மசோதா குறித்து ஒன்றிய அரசு மாநிலங்களோடு ஆலோசிக்கவில்லை – சிவசேனா குற்றச்சாட்டு

காவல் நிலையங்களில் மனித உரிமை அச்சுறுத்தல்கள் அதிகமாக உள்ளன – உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்