Aran Sei

இந்தியர்களின் சிக்ஸ் பேக்ஸ் கலாச்சாரம்- நேற்றும் இன்றும்

அரை நூற்றாண்டுக்கு முன், ஜெர்மனியை சேர்ந்த யூகன் ஷாண்டோ ‘உலகின் அழகான ஆண்’ என்ற பிம்பத்துடன் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டார். சில மாதங்களிலேயே, இந்திய இளைஞர்கள் அவரின் உடற்பயிற்சி செய்முறைகளையும், அவர் பயன்படுத்திய நிறுவனங்களின் பொருட்களையும் வாங்கிக் குவிக்க தொடங்கினர். சிலர் அவரை போல மீசை வைத்துக்கொண்டனர்.

இந்த கதையின் சாயலை மிச்சியல் பாஸின் ‘Muscular India: Masculinity, Mobility and the New Middle Class’ என்ற புத்தகத்தில் அழகாக கையாண்டுள்ளார். இது இந்திய மேஜிக் துறையில் ’ஹர்ரி ஹைடினி’ ஏற்படுத்திய தாக்கத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது. 1900 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ’ஹைடின்’ கை விலங்குகளுடன் ஸ்காட் லாண்ட் யார்ட் காவல்துறையிடம் இருந்து தப்பினார். இதை தொடர்ந்து, இந்திய மெஜிஷியன்களும் அவரை பின்பற்றி, கைகால்களில் சங்கிலியை கட்டிக்கொண்டு பாலத்தில் இருந்து குதிப்பது, பெட்டிக்குள் நுழைந்துக்கொண்டு மறைவது போன்ற வித்தைகளை செய்ய தொடங்கினார்கள்.

Michiel Baas Muscular India: Masculinity Mobility and the New Middle Class Context, 2020

அதன் பின் 2007-ல் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ என்ற இந்தி திரைப்படத்தில், நடிகர் சாருக் கான் ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டுடன் தோற்றமளிக்கிறார். இது இந்திய மத்தியதர இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை நிகழ்த்துகிறது. தங்கள் தொப்பைகளுக்கு மாற்றாக கட்டு மஸ்தான உடல், அதற்கு ஏற்றார் போல உணவு பழக்கம் என்று பெரும் சிரத்தை எடுத்துக்கொள்ள துவங்கினார்கள்.

அதே வருடம், ’மென்ஸ் ஹெல்த்’ (Men’s Health) இதழின் இந்திய பதிப்பு வெளிவந்தது. இதன் அட்டை படங்களில் உடல் கட்டுமான ஈர்பை பிரதானப்படுத்தும் விதமாக, கட்டு மஸ்தான உடல்களை கொண்ட ஆண்களை அதில் இடம் பெற செய்தனர். அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உள்ள சிறு நகரங்களில் உடற்பயிற்சிக்கூடங்கள் முளைக்க தொடங்கின. எல்லா மாநிலங்களிலும் பாடி பில்டர்ஸ் அசோசியேஷன் தொடங்கப்பட்டன. அதையடுத்து மிஸ்டர். டெல்லி, மிஸ்டர். இந்தியா, மிஸ்டர். நார்த் இந்தியா, மிஸ்டர். ஹரியானா போன்ற போட்டிகள் பிரபலம் அடைந்தன.
மேஜிக் துறையை போல பாடி பில்டிங் துறையும் மத்திய தர குடும்ப இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது.

நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்த இரண்டும் துறையும் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் வழியுறுத்துவதாக இருந்தது. ஆனால் இப்போது இதன் முகம் முற்றிலுமாக மாறியுள்ளது. உடற்பயிற்சி கூடங்களில் உறுப்பினராக சேர்வதற்கு அதிக பணம் செலவழிக்கப்படுகிறது. மேலும் செயற்கையாக உடற்தசைகளை வளர்க்க, ப்ரோட்டீன் பவுடர்களையும் மாத்திரைகளையும் உபயோகிப்பது பரவலாகியுள்ளது. ஆனால் மேற்குலக நாடுகளில், பாடி பில்டிங் என்பது ஒரு நெறிப்படுத்தப்பட்ட விளையாட்டாகவுள்ளது.

நன்றி : National University of Singapore website

இது குறித்த மிச்சியல் பாஸின் ஆய்வு முடிவில் முக்கியமான ஒன்றை காட்டுகிறார். முன்பு கட்டுமஸ்தான உடற்வாகு கொண்டவர்கள் அடியாட்களாகவும், பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இது வன்முறை, அடாவடித்தனம் போன்றவற்றோடு தொடர்புப்படுத்தியே பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று அதன் நிலை வேறாக உள்ளது. கட்டுமஸ்தான உடல் என்பது இப்போது வெற்றியையும் சுயகட்டுப்பாட்டையும் தீர்மாணிக்கும் ஒன்றாக ஆகியிருக்கிறது.

இப்புத்தகத்தில் மிச்சியல் பாஸ், இதன் பின்னால் உள்ள அரசியல் காரணங்களையும் பேசியிருக்கிறார். யூகன் ஷாண்டோ தன் இந்திய ரசிகர்களை குறைத்து மதிப்பிட்டிருக்கிறாரென்றும், அதற்கு பின்னால் ‘இந்துக்கள் உடற்திறனில் பலவீனமானவர்கள்’ என்ற மெக்காலேயின் கூற்று இருந்ததாகவும் கூறுகிறார். இதில் ஆச்சரியமான இன்னொன்று, இந்து ஆணாதிக்க மனோபாவத்தை மீட்டுருவாக்கம் செய்வதை, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகள் தங்களின் முக்கிய திட்டங்களாக வைத்துள்ளன.

மிச்சியல் பாஸ் சிங்கப்பூரை சேர்ந்த மானுடவியலாளர். இந்த புத்தகத்திற்காக பத்து ஆண்டுகள் உழைத்திருக்கிறார். தன் கல்விசார் தரவுகளையும் ஆய்வு முடிவுகளையும் இதற்கு பயன்படுத்தியுள்ளார்.

ஒரு அத்தியாயத்தில் விக்டர் என்ற தமிழ் பிராமணரை சந்திக்கிறார். ஐடி துறையில் வேலை செய்யும் இவர், முன்னால் ’மிஸ்டர். ஒலிம்பியா’ பட்டம் பெற்ற டொரியன் யாட்ஸ் என்பவரின் புகைப்படங்களை பார்த்து ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார். தான் ஒரு சைவம் உண்ணும் பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால், புரத சத்துக்களை எடுக்க கொள்வது எளிதாக இல்லை என்கிறார். மேலும் அசைவம் சமைத்து உண்பதற்காகவே, தன் வீட்டுக்கு பின்னால் மின் அடுப்பை வைத்திருந்திருக்கிறார்.

உடன் வேலை செய்யும் பிராமண நண்பர்களை சங்கட்டப்படுத்த கூடாது என்பதற்காகவும், தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்ப்பதற்காகவும், நல்ல உடற்பயிற்சி ஆசிரியரிடம் உடற்பயிற்சி முறைகளை பயிலவும் விக்டர் தன் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.

பாஸ், பாடி பில்டர்களின் தற்பாலின ஈர்ப்பு குறித்தும் பேசியுள்ளார். சிலர் தங்களின் தற்பாலின ஈர்ப்பை பொதுவெளியில் மறைக்காதவர்களாக இருக்கிறார்கள். தங்கள் சமூக வலைதள பக்கங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளனர்.

இந்திய ஆண்மை மனோபாவம் என்பது பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அடிப்படையாக இருப்பதை மிச்சியல் பாஸ் கவனிக்க தவறுகிறார். பெண்களுக்கு பொது இடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகளில் இருந்து, தங்களை காத்துக்கொள்ள அவர்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல தொடங்குகிறார்கள். சில இடங்களில் பெண்களுக்கு சுய பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இப்போது இருக்கும் இந்த சுய உடல் பேணும் மோகத்துக்கு பின்னால், பிஷ்னு சரன் கோஷ் போன்ற யோகா பயிற்சியாளர்களின் பங்கும் இருக்கிறது. 1920களில் கோஷ் சில பாடி பில்டர் குழுக்களை ஒருங்கிணைத்து, வங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் யோகா வகுப்புகளை நடத்தினார். ஜெரோமே ஆம்ஸ்ட்ராங் எழுதிய ‘Calcutta Yoga: How Modern Yoga Travelled to the World from the Streets of Calcutta’ என்ற புத்தகத்தில் கோஷின் பங்களிப்புகளை குறிப்பிடுகிறார்.

1930களில் ஜிம்னாஸ்ட்டிக் மற்றும் உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுக்கும், பயிற்சிக்கூடங்கள் நிறைய தொடங்கப்பட்டன என்றும், ‘வன்முறைகளை பயன்படுத்துவன் மூலம் ஆங்கிலேயர்களை தோற்கடித்து, விடுதலை பெற முடியும்’ என வங்கத்தை சேர்ந்த பாடி பில்டர்களின் சங்கமான ’அனுஷிலன் சமீதி’ சங்கம் நம்பியதாகவும் ஆம்ஸ்ட்ராங் அப்புத்தகத்தில் கூறுகிறார்.

சில குறைபாடுகள் இருந்தாலும், பாஸின் இந்த புத்தகம் முக்கியமான ஒரு ஆய்வு நூலாக உள்ளது.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான ஜான் John Zubrzycki எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்