Aran Sei

இந்திய இராணுவம் மதச் சார்பற்றதாக இருக்க வேண்டுமா? – தீபக் சேத்தி

1979 ம் ஆண்டிலிருந்து 2017 வரை,  தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெல்லிங்டன் இராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற அமெரிக்க இராணுவ அதிகாரிகளுடன் நடத்திய நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு இந்திய இராணுவத்தின் அணுகுமுறை மற்றும் மதிப்பீடுகள் குறித்து ஆய்வு செய்கிறது வாஷிங்டன் DC , ஸ்டிம்சன் மையம் வெளியிட்டுள்ள ‘வெல்லிங்டன் அனுபவங்கள்’ என்ற புதிய புத்தகம்.  லிவர்மோர் தேசிய ஆய்வகம் மற்றும் அமெரிக்க அணு பாதுகாப்பு நிர்வாகம் ஆகியவை இந்த ஆய்விற்கு நிதி உதவி செய்துள்ளன. இவர்கள் இதே போல் பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள இராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் (PACSC) 1977 முதல் 2017 வரை பயின்ற அமெரிக்க இராணுவ அதிகாரிகளுடன் நடத்திய நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு ‘ குவெட்டா அனுபவங்கள்’ என்ற ஆய்வு நூலுக்கும் உதவி உள்ளனர்.

இதனை எழுதிய அமெரிக்க இராணுவ அதிகாரி கர்னல் டேவிட் ஸ்மித், தனது 31 வருடப் பணிக் காலத்தில் 22 வருடங்களை தெற்காசியாவின் பாதுகாப்புப் படைகளின் புலனாய்வு முகமை மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவற்றின் அரசியல் இராணுவ பிரச்சினைகள் குறித்த பணிகளை மேற் கொண்டவர். பாக். இராணுவக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் பாக். கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றி உள்ளார்.

ஆய்வு முறை

இரண்டு கண்ணோட்டத்துடன் நான் இந்த ஆய்வுகளை மேற்கொண்டேன். 1981-ல்  வெலிங்டன் இராணுவப்  பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்ற நான், 22ஆண்டுக் காலம் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கல்விப்பணி ஆற்றி உள்ளேன். அந்த ஆய்வுக் காலத்தில் 63 அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இங்கு பயிற்சி பெற்று பட்டம் பெற்றுள்ளனர். அதில் 30 பேரையே என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது. இந்தப் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் அவர்களில் 26 பேருடன் நேரடியாக நேர்காணலை நடத்தியுள்ளார். மற்ற நால்வர் வெளிநாடுகளில் உள்ளனர். மேலும் மூன்று அதிகாரிகளின் அறிக்கையையும் சேர்த்திருந்தாலும் கூட, இந்த 29 என்பது ஒரு முழு அளவிலான பகுப்பாய்வுக்கு மிகக் குறைவானதுதான். பேட்டி எடுக்கப்படாத அதிகாரிகள் குடி பெயர்ந்தவர்களாகவோ, மறைந்து விட்டவர்களாகவோ அல்லது தேர்வு செய்யப்படாதவர்களாகவோ  இருக்கலாம்.

எனினும் இந்த எழுத்தாளர் அதனை அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் முன்னாள் தூதரகப் பணியிலிருந்தவர்களின் பேட்டிகளைக் கொண்டு நிறைவு செய்திருக்கிறார்.

மூன்று மட்டங்களில் அணுகுமுறை மாற்றம் பற்றி இதில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. படைத்தலைவர்கள் மற்றும் தலைமைப் பயிற்றுநர்கள், மூத்த பயிற்றுநர்கள் மற்றும் வழிகாட்டல் அதிகாரிகள்(DS) மற்றும் மாணவர்கள், எழுத்தாளர் இந்திய அமெரிக்க உறவுகளின் வரலாற்று அடிப்படையில் இதனைச் சரியான குறிப்புரைகளுடன் எழுதி உள்ளார்.

இந்த ஆய்வு சில ஆர்வமூட்டும் வரலாற்று நிகழ்வுகளை விளக்குகிறது. சில பழைய தலைமுறையினருக்கு மறந்து போயிருக்கலாம். இளைய தலைமுறையினர் அது பற்றி அறியாமலே இருந்திருக்கலாம். எடுத்துக்காட்டாகப் படைத்தலைவர் கரியப்பா, மவுன்ட் பேட்டனிடமும், இஸ்மேயிடமும் நேரு அல்லது ஜின்னாவைத் தலைமைத் தளபதியாகக் கொண்ட இராணுவத்திடம் அரசை ஒப்படைக்க ஆலோசனை கூறியதும், அதனாலேயே இராணுவத்தின் அதிகாரத்தைக் குறைக்க முயன்றதையும் கூறுகிறார்.

முக்கிய முடிவுகள்  வழக்கமான சிந்தனை முறை

படைப்பிரிவுகள் பற்றிய முக்கியப் பார்வை இதுவே ஆகும். இது வழமை மீறும் முடிவுகளை ஊக்கப்படுத்தாது. மாணவர்கள் வழக்கமான சிந்தனைகளிலேயே சிக்கிக் கொள்வர். பெரும்பாலான வழிகாட்டல் அதிகாரிகள் ஏற்கனவே பின்பற்றப்படும் கல்லூரியின்  முடிவுகளிலிருந்து விலகுவதை ஊக்குவிக்க மாட்டார்கள். இந்த முந்தைய பயிற்சி அறிவினைப் (PCK) பிடித்துத் தொங்கிக்கொண்டு கல்லூரி முடிவுகளைத் தேடும் இம்முறை பின்னடைவையே தரும்.

ஏமாற்றுதல்

இது அறிவைப் பயன்படுத்தாமல், முந்தைய பயிற்சி அறிவின் அடிப்படையிலான முடிவுகளும் கருத்துத் திருட்டுமாக வெளிப்பட்டது. எழுத்தாளர் இதனை தெற்காசிய கலாச்சாரம் எனக் குறிப்பிடப்படுகிறார். ஏனெனில் இதேபோல்தான் பாக். கல்லூரியிலும் பின்பற்றப்படுகிறது. இந்த முறை அமெரிக்கக் கல்வித்துறையில் தடை செய்யப்பட்ட ஒன்று. பல்கலைக்கழகங்களில் இந்த முறையைக் கடைப்பிடித்தால், தண்டனையாகப் பணிநீக்கம் கூட செய்யப்படுவார்கள்‌. பதவி உயர்த்துவதற்காக தங்களை, தங்கள் வழிகாட்டல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள் என்ற இந்திய மாணவர்களின்  எண்ணம் அகற்றப்பட வேண்டும். ஏனெனில் செயல்பாட்டில் காட்டப்படும் ஆர்வம் தனிப்பட்ட கற்றலை மூழ்கடித்து விடும். மேலும் இந்திய இராணுவக் கல்லூரி(DSSC) இந்தக் கருத்துத் திருட்டையும், முந்தைய அனுபவப் பாடங்களையே தேடுவதும் ஈவு இரக்கமின்றித் தூக்கி எறியப்பட வேண்டும்.

இந்து தேசிய உணர்வு

முன்னெப்போதும் இல்லாத வகையில், 2014லிருந்து அனைத்து அதிகாரிகளிடமும் இந்துத்துவா பற்றிக் கேட்கப்பட்டது. எனினும் அவர்கள் பாரம்பரிய, மக்களாட்சி, சமத்துவ மதிப்பீடுகளில் குறைபாடு இருப்பதாகக் காணவில்லை. எனினும் இந்த ஆய்வு, இந்திய இராணுவத்தில் தொடர்ந்து முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் ஒட்டு மொத்தமாகக் குறைந்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறது.

ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கை, கூட்டுப் பயிற்சியில் போதுமான அக்கறையின்மை

ஆரம்பத்திலிருந்து எடுத்துக்கொண்டால்,  படைப்பிரிவுகள், பொறியாளர்கள், பிற சேவைத்துறைகள் (பழுது பார்த்தல் போன்றவை) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள், அது போலவே, அனைத்துப் பிரிவுகளும் சேர்ந்த செயல்பாடுகள் குறித்து  கற்பித்தல் மற்றும் விவாதங்கள் ஆகியவற்றிற்கான திட்டங்கள் போதுமானவையாக இல்லை. உளவுத் துறையிலும்  கூட செயல்திட்டங்கள் குறித்து குறைவான கவனமே செலுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த முப்படைக் கட்டுப்பாட்டுத் தளங்களும், ஒருங்கிணைந்த போர்க் குழுக்களும், எல்லைகளைக் கணக்கில் கொள்வதில் உள்ள குறுகிய கண்ணோட்டத்தால் மறு சீரமைப்பு செய்யப்படாமல் வாடிக் கிடக்கிறது‌. இது தற்கால பன்முகத்தன்மை கொண்ட போர்முனையில் செயல்பாட்டுக் குறைவினை ஏற்படுத்தும்.

இந்தியக் கோட்பாட்டின் மையமான கூறு “மக்களின் மனதையும் சிந்தனையையும் வெல்வது” (Winning the hearts and minds of the people- WHAM) என்பதாகக் கூறப்பட்டாலும்,  சமீபத்தில் நடந்து வரும் எந்தக் கிளர்ச்சியையும் அடக்க முடியவில்லை என்பதை முக்கியமாகச் சுட்டிக் காட்டுகிறது அந்த ஆய்வு. “மக்கள் மனதை வெல்வது”  என்ற கோட்பாடு  பின்பற்றப்படுவதில்லை என்பதற்கு ஜம்மு காஷ்மீரையும், அடிக்கடி நடைபெறும் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளையும் ஆய்வு குறிப்பிட்டுக் காட்டுகிறது.

சீனாவை எதிரியாகக்  காட்டத் தயக்கம்

சீனாவின் அதிகரித்து வரும் போர்க் குணம், பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்வது, நமது எல்லைகளை கொரித்துக்கொண்டிருப்பது ஆகியவை இருக்கும் போதும் சீனாவை நமது எதிரியாக அறிவிக்காமல் இருப்பது புதிராக உள்ளது.

பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல் குறித்த போதிய கவனமின்மை

பாகிஸ்தானின் போர்த் தந்திர அணு ஆயுதங்களின் அச்சுறுத்தலை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியா தனது அணு ஆயுதக் கொள்கையைப் பற்றி மேலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஏனெனில் பாகிஸ்தானின் உண்மையான அபாயத்தைப் பற்றி அது தற்போது கணிக்கவில்லை.

இந்திய இராணுவம் எதிர்பார்த்தது போல் செயல்படாது

உயர்ப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் உளவுத்துறையின் தாழ்ந்த செயலாற்றல், பொருத்தமற்ற ஒருங்கிணைப்பு, நவீனப் போர் முறைக்கு ஏற்ற போர்க்கருவிகள் இல்லாமை, மற்றும் 1971 ற்குப் பிறகு முழு அளவிலான நவீன முப்படை செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் இந்த அச்சம் எழுகிறது.

விமர்சனங்கள்

இது ஒரு சரியாகத் திட்டமிடப்பட்ட விரிவான ஆய்வு. இதன் முடிவுகள் நடுநிலையானவை, குறிக்கோளுடையவை, தக்க காரணங்களை உடையவை மற்றும் அழகிய நடையில் புண்படாத வகையில் சொல்லப்பட்டுள்ளன. இதன் அனைத்து முடிவுகளையும் எல்லோரும் ஏற்றுக்கொள்வது கடினம்தான். எனினும் ஒரு தனிநபர், வெளியிலிருந்து ஒருவரின் பயனுள்ள பார்வையிலிருந்து, நடுநிலையான பகுப்பாய் விலிருந்து முடிவுகளைக்  கொடுத்திருக்கிறது‌.

இராணுவப் பயிற்சிக் கல்லூரியின் உயர்மட்ட அதிகாரிகள் இறுமாப்புடன் ஒதுக்கி விடாமல் இதனைக் கண்டிப்பாக ஆய்வு செய்து தேவையான இடங்களில் மாற்றங்களைச் செய்வார்கள். இந்த முடிவுகளை நல்ல பொருளில், ஒரு நட்புணர்வோடு தரப்பட்ட ஆலோசனையாக ஏற்க வேண்டும். ஏனெனில் இந்தியாவின் தரம் உயர்ந்த செயல்பாடு இருதரப்புக்கும் நன்மை பயப்பதாகும்.

இந்த நூல், இந்திய இராணுவக் கல்லூரியின் மீது அதிக கவனம் செலுத்தி இருந்தாலும், அதன் உண்மையான நோக்கத்தை அதன் எழுத்தாளர் சுட்டிக்காட்டியவற்றிலிருந்தே உய்த்துணர முடிகிறது. இந்திய, பாக். இராணுவக் கல்லூரிகளின் பாடத் திட்டத்தையும், கற்பித்தல் முறைகளையும் பற்றி ஆய்வு செய்வதற்காகவா இவ்வளவு உடலுழைப்பையும் பணத்தையும் இதன் நிதி உதவியாளர்கள் செலவிட்டுள்ளனர்? பாக். தரப்பில் பார்த்தால், இராணுவத்தை முற்றிலும் எதிர்த்திசையில் மாற்றி அமைக்க வேண்டிஉள்ளது. ஒசாமா பின் லாடனுக்குப் பாதுகாப்பு கொடுத்தது, தாலிபானை ஆதரிப்பது, சீனாவுடன் நெருங்கிச் செயல்படுவது ஆகியவற்றிலிருந்து இவற்றைப் பார்க்கலாம். அந்த முடிவுகள் யாவும் அமெரிக்க உளவுத்துறைக்கும், கொள்கை வகுப்பவர்களுக்கும், மட்டுமே உரியவை. இந்தப் புத்தகம் 2016 ல் உறவு முறிவுக்குப் பிறகே வெளியிடப்பட்டது.

இந்தியாவின் தரப்பில், இந்திய அதிகாரிகள் தொடர்ந்து, அரசியலற்ற, மதசார்பற்றவர்களாக இருக்கப் போகிறார்களா அல்லது எழுத்தாளர் குறிப்பிடுவது போல, எதேச்சாதிகாரத்துடன், அகநிலை கருத்துக்கோட்பாடுகள், மதச் சார்புடன், இந்து அரசை அமைப்பது என்ற பெயரில், பெரும் அளவிலான முஸ்லிம்களை ஒதுக்கித் தள்ளி விட நினைக்கும் அரசுக்குப் பணிந்து அதற்குக் கீழ்படிந்து நடக்கப் போகிறார்களா என்பதே. இதில் அதிக கவனத்திற்கு உரியது என  இந்த நூல் சுட்டிக்காட்டி உள்ளது. 2014-17 ல் எந்த அமெரிக்க அதிகாரியும் எந்தச் சார்பும் இன்றி இருந்தார்கள். தற்போது பணியிலிருக்கும் எந்த அதிகாரியும் அரசின் இந்த உணர்வுகளைக் காட்டிக் கொடுத்து தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

பாதுகாப்புப் படைகள் நாட்டின் நுண்ணுயிரிகள் போன்றவை. அவற்றை அதன் போக்கிலிருந்து பொத்தி வைக்க முடியாது. இந்து அரசை அமைப்பது என்ற நோக்கத்தில் 2014லிருந்து மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்துவதும், தடையின்றி ஊடகங்கள் வெறுப்பு அரசியலைப் பரப்புவதும் அதிகமாகி வருகிறது. ஏராளமான தலைவர்கள் சமூக ஊடகங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு விமர்சனங்களை உமிழ்வது அவர்களது முந்தைய நண்பர்களுக்கும் கூட அதிர்ச்சியைத் தருகிறது. உறுதியான, மதச்சார்பற்ற,  பாதுகாப்புப் படையில் பணியாற்றுகையில் இதனைத்தான் கற்றுக்கொண்டார்களா? என்ற கேள்வி எழுகிறது. ஆம் என்றால், இந்தச் சமூக நச்சுக் கிருமியினால் இராணுவத்தின் மேல் மட்டம் முதல் அடிமட்டம் வரை பாதிக்கப்படாதா?

இராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இராணுவத்தை அரசியலாக்குவது அதன் ஒற்றுமையையும் திறனையும் குறைத்துவிடும் எனப் பொது வெளியில் கவலைத் தெரிவிக்கிறார். அனைத்து மக்களாட்சி நாடுகளிலும், அதிலும் குறிப்பாக நமது நாட்டைப் போல் பல வேற்றுமைகளைக் கொண்ட நாடுகளில் இராணுவம் முற்றிலும் மதச் சார்பின்மையும், அரசியலற்றத் தன்மையும் கொண்டதாகவே இருக்க வேண்டும். இந்திய- பிரிட்டானிய இராணுவத்தில் கூட அவர்கள் தங்கள் “பிரித்தாளும் கொள்கையை” கடைப்பிடிக்கவில்லை. இந்துக்களும், முஸ்லிம்களும், சீக்கியர்களும் தோளோடு தோள் நின்றுதான் பல வெற்றிகளை நமக்குக் கொடுத்துள்ளார்கள். அத்தகைய ஒன்றுபட்ட போர் முகமாக நிற்க, நமது இராணுவம் மதச் சார்பற்ற மரபை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும்.

இரண்டாவதாக நமது கவனத்திற்குரியது, இந்துத்துவா தீவிரவாதிகள், இழிவு படுத்துதல், அவதூறு, வன்முறை ஆகியவற்றின் மூலமும், அரசு முஸ்லிம்களுக்கு எதிராகக் கொடூரமான சட்டங்களின் மூலமும்- குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செய்வது போல, முஸ்லிம்களை அந்நியப்படுத்தும் போக்கு வளர்ந்து வருவது ஆகும். அமெரிக்கப் பார்வையில் சீனாவை எதிர்க்க, உள்நாட்டில் அமைதி நிலவும் வலுவான இந்தியா அவசியமாகும். மத்திய கிழக்கு, ஆப்கன், பாக். பகுதிகள் இஸ்லாமியத் தீவிரவாதத்தின் பிடியில் இருக்கையில், தொடர்ந்து துன்புறுத்துவது ,17 கோடி இந்திய முஸ்லிம்களையும் திசை திருப்பிவிடுமோ என அச்சம் எழுகிறது‌. பிராமண ஆதிக்கத்தால் சாதிக் கொப்பறையைக் கிளறுவது உள்நாட்டில் உறுதியற்றத் தன்மையை வேகமாக வளர்த்து வருகிறது.

பிரிவு 370 ஐ  “மனதை வெல்வது”  (WHAM) என்ற அடிப்படையில் இன்றி, அதிகார பலத்தால் நீக்கியிருப்பது காஷ்மீரில் எதிர்ப்புக் கிளர்ச்சிகளை மீண்டும் உசுப்பி விட்டுள்ளது. இதனை பாக்‌. பயன்படுத்திக்கொள்கிறது‌. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் தாக்குதல் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. எந்த ஒரு பெரிய நிகழ்வும் நிலைமையை மோசமாக்கிவிடும்‌. பாக். தனது அணு ஆயுதம் பற்றிக் கூறுவது பொய் எனத் தளபதி ராவத் கூறுவதை அமெரிக்கா ஏற்கவில்லை. பாக். அபாயம் பற்றிய இந்தியாவினுடைய கணிப்பு மிகப் பெரும் தவறான கணிப்பாகும். இது விரிவான விவாதத்திற்குரியது.

மூன்றாவதாக எழுத்தாளர் குறிப்பிடுவது:

“இந்திய இராணுவத்தால் இந்தப் பங்கை (சீனாவின் வளர்ந்து வரும் இராணுவம் மற்றும் பொருளாதாரத்தை எதிர்ப்பது) படைபலம் கொண்டு நிறைவேற்ற முடியுமா? எதிர்காலத்தில் சீனாவுடன் மோத நேர்ந்தால் இந்தியா அமெரிக்காவிற்குப் போர்த் தந்திர ரீதியாகப் பயன்படுமா அல்லது போர்த்தந்திர மைல் கல்லாக இருக்குமா? ”

உறுதியான வார்த்தைகள்! இந்தக் கேள்விகள் எழுவதற்கான காரணம்:

  • வளர்ந்து வரும் , இந்தியச் சீன படை பலத்தில் உள்ள மிகப் பெரும் வேறுபாடு‌
  • சீனா தனது இராணுவத்தை முழுமையாக நவீனமயமாக்கிவிட்டது. இதில் இந்தியா பின்தங்கி உள்ளது.
  • சீனா இராணுவத்திற்கு ஒதுக்கும் நிதி இந்தியாவை விட பல மடங்கு அதிகம். நமது அரசு செலவைக் குறைத்து வருவதுடன், நவீனப்படுத்தலில் பெரும் இடைவெளி உள்ளது.

இந்தப் புத்தகம் கால்வான் தாக்குதலை முன் தேதியிட்டுக் கூறுகிறது. மேலும் இந்தியா சீனாவை எதிரி நாடாக அறிவிப்பதில் தயக்கம் காட்டுவதை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கச் சிந்தனையாளர்கள், சண்டைக்குப் பின், மோடி சீனாவுக்குக் கண்டனம் தெரிவிக்காததுடன், சீன ஊடுருவலை மறுத்தது கண்டு திகைத்துப் போயினர். பயனற்ற பேச்சுவார்த்தைகள், கைப்பற்றிய இடங்களைத் திரும்பப் பெறாமல், எதிர் வினையாற்றி பேரம் பேசுவதில் வலுவான நிலையில் இல்லாமலிருப்பது கோழைத்தனத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது எனக் கருதுகின்றனர்.

இந்தியா தனது கைக்கூலியாக ஒரு போதும் இருக்காது என்பது அமெரிக்காவுக்கும் தெரியும். ஒரு நட்புறவின் கீழ் கணிசமான அளவு உதவ முடியாதா? தனது சொந்த நிலத்திலிருந்து சீனாவை வெளியேற்ற இயலாத, உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சாதி மத பூசல்களைத் தடுக்க இயலாத, தெற்காசியாவில் அமைதி உறுதிப்படுத்த இயலாத நண்பன் எந்த அளவு அமெரிக்காவுக்குப் பயனுடையவனாக இருக்க முடியும்?

(www.thewire.in இணையதளத்தில், ஓய்வு பெற்ற இந்திய இராணுவ பிரிகேடியர் தீபக் சேத்தி எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

 

https://thewire.in/books/the-wellington-experience-indian-armed-forces-book-review-attitudes

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்