ஒரு வருடத்திற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் நமது இந்தியர் என்ற அடையாளத்தில், ஏதோ ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இதுவரை அரசியலமைப்பு மற்றும் அது தொடர்பான சட்டங்கள் அனைத்தின் அரசியல் தன்மையும், மதசார்பற்ற ஜனநாயகம்தான் என்று நாம் பொதுவாக உறுதியாக இருந்தோம். நமது சமூக அரசியல் நடைமுறைகள் சாதி, மத, இன, பாலின, வகுப்புவாத படிநிலைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட போதும் கூட, நமது அரசியலமைப்பு, அரசு நிறுவனங்கள், அவற்றிற்கிடையேயான தடைகளும் உரிமைகளும் (checks and balances), அவற்றின் மீதான மீறல்களும், முரண்பாடுகளும் கூட ஒரு ஜனநாயக நெறிமுறை எல்லைக்குள்ளேயே நடைபெற்றன.
நாம் எப்போதும் ஒரு குழப்பமான ஜனநாயகமாகவே இருந்தோம் என்பதையும், காலப்போக்கில் நமது மதச் சார்பற்ற போர்வை, அதீத உதட்டளவு வாய்வீச்சால் பிரிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அனைத்து மோசடிகளும், சிக்கல்களும் இருந்த போதிலும், அதை நமது அரசியலமைப்பு சட்டகம் ஒன்றாக வைத்திருந்தது. இந்த சட்டகம் குடியுரிமையில் சமத்துவத்தை உறுதி செய்தது. எந்த ஒரு குடிமகனுக்கும் இன, மத, பாலின அடிப்படையில் பாகுபாடு காட்ட முடியாது.
சமமான குடியுரிமையின் உண்மையான நடைமுறை, அதை நடைமுறைப்படுத்துதல் எவ்வளவு தவறானதாக இருந்தாலும், அதன் மீறல்கள், அதில் கூறப்பட்ட சமத்துவ லட்சியத்தின் நாட்டத்தை அடிப்படையாகக் கொண்டே அளவிடப்பட வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் உறுதி அளிக்கிறது.
இதன்படி, 1962 சீனப் போரில் இந்தியா தோல்வியுற்ற பின்னர், தியோலி முகாமில் ஏறத்தாழ 3000 சீன- இந்தியர்களை அடைத்து வைத்திருந்ததை (மறந்து போன வரலாற்றிற்கான தியோலிவாலாக்களும், சிறை துன்பங்களும்) நாம் அநீதி என தீர்ப்பளிக்க முடிந்தது. ஏனெனில் நமது அரசியலமைப்பு மரபுவழி பரம்பரைகளுக்கிடையே மற்றும் வம்சாவளிகளுக்கிடையே பாகுபாடு காட்டவில்லை. அரசின் மதச்சார்பற்ற மற்றும் வகுப்புவாத நோக்கங்களை நம்மால் வேறுபடுத்திப் பார்க்க முடிந்தது. ஏனெனில் இந்த வேறுபாடு, மதம் வழிகாட்டும் கொள்கைகளால் அழிக்கப்படவில்லை.
2019, டிசம்பர் 11 ஆம் தேதி, சிஏஏ நிறைவேற்றப்பட்ட உடனேயே முழுமையற்ற – ஆனால்- செழிப்பான சமய சார்பற்ற மக்களாட்சியைத் தொங்க விட்டிருந்த ஆணி பிடுங்கப்பட்டு விட்டது. இந்திய குடியுரிமை குறித்து தீர்ப்பளிக்கும் கொள்கையாக அதிகார பூர்வமாக, முறையாக, அரசியலமைப்பு சட்ட ரீதியாக மதத்தை ஏற்றுக் கொண்டு விட்டோம். இந்தச் சட்டமே, குறைந்தபட்சம் முறையாக சட்டபூர்வமான குடிபெயர்ந்த முஸ்லீம்களை விலக்கிவிட்ட (என்று கருதப் படுகிறது) போதிலும், இந்தியாவின் சட்டபூர்வமான செல்லத்தக்க முஸ்லீம் குடிமக்களுக்கிடையே சந்தேகத்தின் ‘கோடித்துணியை’ நயவஞ்சகமாகவும், குழப்பமாகவும் (elliptically) போர்த்தி உள்ளது. அது முஸ்லீம்களை தகுதியற்ற குடிமக்களாகவும், சமமற்ற போட்டியாளராகவும் தனிமைப்படுத்துகிறது. கிடைக்கக்கூடிய ஒவ்வொரு மன்றத்திலும், தளத்திலும் வெறுப்பு மற்றும் தவறான எண்ணங்களின் தீயை மேலும் கொழுந்து விட்டு எரியச் செய்யும் சட்டபூர்வமான காற்றை வீசுகிறது. நாடாளுமன்றத்தில் எதுவெல்லாம் நடைமுறையோ (Kosher) அதுவே வீதியிலும், மக்களிடத்திலும் நடைமுறை ஆகிறது. சரியா!
வங்கதேச முஸ்லீம் பரம்பரைக் கொண்ட ஒவ்வொரு மண் வீடும், ஒவ்வொரு மக்கள் கொத்தும், ஒவ்வொரு தனிநபரும் சட்டவிரோதமாக வங்கதேசத்திலிருந்து வந்து குடியேறியவராக இருக்க சாத்தியக்கூறு உண்டு; மாறுபட்ட கருத்துடைய ஒவ்வொரு முஸ்லீமும் பாகிஸ்தானின் “இயற்கையான” ஆதரவாளராகி விடுவார்; முஸ்லீம்கள் உண்ணும் ஒவ்வொரு துண்டு இறைச்சியும் மாட்டிறைச்சியாகவே இருக்கும்; எல்லா முஸ்லீம் கால்நடை வியாபாரிகளும் பசுவை வெட்டுபவர்கள்; இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் (மட்டும்), முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஒரு பையனும் (மட்டும்) செய்து கொள்ளும் எல்லா மத மறுப்பு திருமணங்களும் ‘காதல் ஜிகாத்’ தான்.
சந்தேகத்தின் மாயத் தோற்றம் வலுவாகவும், பரவலாகவும், குற்றத்தைத் திணிப்பதாகவும், மோசமானதாகவும் உள்ளது. அரசியலமைப்பு நமது மதச்சார்பற்ற அறிவுடைமையின் கோட்டையாக இனியும் இல்லை என்கிற அளவுக்கு குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டுவிட்டது. இப்பொழுது நாம் நம்மை விவரித்துக் கொள்ள புதிய சொற்களும், அத்துடன் புதிய மொழியும் நமக்குத் தேவைப் படுகிறது. அரசியல் கோட்பாட்டாளர்கள் சர்வாதிகார- மக்களாட்சி, பெரும்பான்மை-பாசிசம், பாசிச-தாராளவாதம், இன்னும் இது போன்ற சொற்களுக்கு விளக்கங்களை பயன்படுத்தலாம். ஆனால் ” அறிவு மிக்க எந்த ஒரு அரசியல் கோட்பாட்டாளருக்கும், இரண்டு மேற்கோள் குறிகளால் இணைக்கப்பட்ட கடந்த வருட எதிர்முரண் நண்பர்கள் ஒழுங்கின்மையின் இயல்பை கருத்து ரீதியாக புரிந்துகொள்ள போதுமானவர்கள் அல்ல என்பது தெரியும். “இந்தமுறை இந்தியா ஒரு “அரசியலமைப்பு தேவராஜ்யமாக” (constitutional theocracy) மாறும் திசையில் ஒரு அடி எடுத்து வைத்திருக்கலாம் என ஒரு துணிச்சலான ஆலோசனையை முன்வைக்கிறேன். மதத்தலைவரே அரசியல் தலைவராக இருக்கும் தூய தேவராஜ்யம் போல இல்லாமல், அல்லது குறைந்தது மதத்தலைவர் அரசில் முக்கிய பங்காற்றும், அரசியலமைப்பின் எல்லைக்குள் செயல்படும் அரசியலமைப்பு தேவராஜ்யமாக இருக்கலாம். நீங்கள் கேட்பதற்கு முன் நான் விளக்கி விடுகிறேன். அரசியலமைப்பு தேவராஜ்யம் என்பது, சிலசமயங்களில் அரச மதத்தின் வெளிப்படையான அறிவிப்புக்குப் பதிலாக அரசியலமைப்பு மாற்றத்திற்கான நுட்பமான வழிமுறைகள் மூலம் தோன்றும் பாகிஸ்தான், எகிப்து, லிபியா போன்றில்லாமல், அரசியலமைப்பு ரீதியாக அரச மதத்தைப் பின்பற்றுவதாக அறிவிக்கும் பாகிஸ்தானைப் போலவோ அல்லது ஆப்கானிஸ்தானைப் போலவோ நாம் இருக்க வேண்டாம். அந்தந்த நாடுகளில் அரசியலமைப்பாக்கப்பட்ட இஸ்லாமை சட்டத்தின் தோற்றுவாயாக ஆக்கி உள்ள அரபு வசந்தத்திற்குப் பிந்தைய எகிப்து, லிபியா, துனீசியா போலவும் இருக்க வேண்டாம்.
ஆனால் நமது சொந்த சுயமத நெறிமுறைகளின் கொள்கைகளைத் தூய்மைப்படுத்தும் இடத்தில் நாம் இருக்கிறோம். இந்திய மாறுபாடுகளின் மதத் தன்மைகள் குறைவான வெளிப்படைத்தன்மைக் கொண்டவை. குறைவாகவே கண்ணுக்கு புலப்படுபவை. இது பொது வெளியில் குறிப்பாக இரண்டு வழிகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது, வருந்தத்தக்க வகையில் இரண்டும் அரசியலமைப்பு மூலமாகத்தான்.
முதலாவது: அதிகமான மத ஒழுங்கை நோக்கிய அரசியலமைப்பு அடையாளங்களில் அடிப்படை மாற்றங்கள் முறையான அரசியலமைப்பு நடவடிக்கைகள் மூலம் நிகழ்கின்றன. சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட வழியை (2019) சிந்தித்துப் பாருங்கள். முன்மொழியப்பட்ட, நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சரால் உடனடியாக என்று அறிவிக்கப்பட்ட, தேசிய குடிமக்கள் பதிவேட்டை சிந்தித்துப் பாருங்கள். இரண்டையும் சேர்த்துப் படித்தால் சட்டவிரோதமாக குடியேறிய முஸ்லீம்களின் பட்டியல் மட்டுமே இருக்கும். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலமான ஜம்மு காஷ்மீரில் மக்கள் தொகைப் பிரிவு விவரங்களை மாற்றும் பிரிவு 370, பிரிவு 35(அ) ரத்து செய்தது குறித்து சிந்தித்து பாருங்கள். சட்டவிரோத செயல்கள் தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தை (UAPA) நினைத்துப் பாருங்கள். உமர் காலித், ஷர்ஜீல் இமாம், பைசான்கான் அல்லது பத்திரிகையாளர் சித்திக் கப்பன் போன்ற இன்னும் பல சிஏஏ எதிர்ப்பு செயற்பாட்டாளர்களைக் குறிவைக்க அது பயன்படுத்தப்பட்டு வரும் ஆர்வத்தை நினைத்துப் பாருங்கள். இந்து பெண்ணுக்கும், முஸ்லீம் ஆணுக்கும் இடையிலான திருமணத்தைத் திறம்பட தடை செய்யவும், ஒழுங்குப் படுத்தவும் கொண்டு வரப்பட்ட உத்தர பிரதேசத்தின் மத மாற்ற எதிர்ப்புச் சட்டத்தைப் பற்றி சிந்தித்து பாருங்கள்.
ஒன்றாகச் சேர்த்துக் கூறினால், இந்த திருத்தங்கள் நமது அரசியலமைப்பின் அடையாளத்தை மாற்றி அமைக்கக் கட்டாயப்படுத்துகின்றன. அதை ஒரு மதத்தன்மைக்கு ஊக்குவிக்கின்றன. இந்த திருத்தங்கள் மூலம், நமது மதச்சார்பற்ற உணர்வின் கோட்டையான இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே மதக் கொள்கையின் ஆளுகைக்கு சேவை செய்ய வைப்பதற்கான இணக்கமான கருவியாக மாறுகிறது.
அரசியல் அமைப்பின் மதத்தன்மை வெளிப்படும் இரண்டாவது வழி, சட்டங்களை உருவாக்குவது அல்லது திருத்துவதைவிட மிகவும் நுட்பமானதும், குறைவான வெளிப்படைத் தன்மை கொண்டதும் ஆகும். அரசியல் மற்றும் நீதித்துறை ஆட்கள்/நடிகர்கள் மூலமாக அரசியல் அமைப்பு அடையாளத்தின் அடிப்படை மாற்றங்கள் அதிக அளவிலான மத ஒழுங்கை நோக்கி இரகசியமாகச் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு சில அண்மை எடுத்துக்காட்டுகள்: சிஏஏ
சட்டத்தின் அரசியல் அமைப்புத் தன்மையை எதிர்த்து 144 க்கும் மேற்பட்ட மனுக்கள் இருந்த போதும் உச்சநீதிமன்றம் ஜனவரி 2020 ல் சிஏஏ வுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது; சிஏஏ தொடர்பான எந்த ஒரு மனுவையும் விசாரிப்பதற்கு அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் தடை உத்தரவு பிறப்பித்தது. கட்டாய நான்கு வாரங்களுக்குள் (ஜனவரி 22,2020 லிருந்து) அரசு பதில் அளிக்கத் தவறிய போதிலும், ‘சபரிமலை வழக்கு’ மற்றும் பிற நிலுவையில் உள்ள மனுக்களுக்குப் பிறகும், சிஏஏ மீதான தன் சொந்த விசாரணையைக் கூட ஒத்தி வைத்தது. ” இந்துத்துவா ஒரு வாழ்க்கை முறை” என்ற முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்தது. மேலும் மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க/ கேட்க அனுமதித்தது. வழக்கறிஞர்களின், ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்திற்கிடையில், சர்ச்சைக்குரிய முழு நிலத்தையும் இந்து மனுதாரர்களுக்கு வழங்கி, உச்சநீதிமன்றம் அயோத்தியா- பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பை வழங்கியது. இங்கு குறிப்பிடத்தக்கது என்னவென்றால், பொது ஒழுங்கில் ஒரு மதத்திற்கு மட்டும் சலுகை வழங்குவதில் நீதிமன்றங்கள் வகிக்கும் முக்கிய பங்குதான்.
ரான் ஹிர்ஷல் அரசியல் அமைப்பு தேவராஜ்ஜியங்கள் குறித்த தனது ஆரம்ப படைப்பி,” நீதிமன்றங்கள் மதச்சார்பின்மையின் “கோட்டைகளாக” விளங்கி, மதத்தன்மைகள் பரவுவதைத் தடுக்கும் கேடயங்களாக இருக்கின்றன.” என்கிறார். ஆயினும், மேற்குறிப்பிட்ட பல சூழல்களில் நீதிமன்றங்கள் அரசியல் அமைப்பு ஒழுங்கில் மதத்தை விரிவுபடுத்தவே செயல்பட்டன, கட்டுப்படுத்த அல்ல.
அரசியல் மற்றும் பகுதி அரசியல்வாதிகளின் செயல்கள் பற்றிய மற்றொரு எடுத்துக்காட்டு தொகுப்பு: 1967 ஆண்டு உபா சட்டத்தில் 2019 ம் ஆண்டு கொண்டு வந்துள்ள திருத்தம் பயங்கரவாதி என வடிவமைக்கப்பட்ட ஒரு தனிநபர், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டிய சுமையை அவர் மீதே மாற்றி உள்ளது. கொலைக்கான வெறுப்புக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. அதற்கு பதிலாக, வகுப்புவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் (communal lynching) மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது; தடயவியல் பகுப்பாய்விற்காக கொலைசெய்யப்பட்ட அக்லக்கின் உடலை அல்ல, இறைச்சியை அனுப்புகிறது. கர்ப்பிணியான சிஏஏ எதிர்ப்புப் போராளியையும், “கூண்டை உடை (Pinjra Tod)” இயக்க செயற்பாட்டாளர்களையும் கைது செய்தது: ஆனால் வெளிப்படையாக வன்முறையைத் தூண்டிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஸ்ரா, நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் மீதோ அல்லது காவலர்களின் கண் முன்னே சிஏஏ எதிர்ப்புப் போராளிகளை நோக்கித் துப்பாக்கியால் சுட்டவன் மீதோ முதல் தகவல் அறிக்கைக் கூடப் பதிவு செய்யவில்லை. 2020 தில்லி கலவரத்தில் (சிஐஏ எதிர்ப்பு போராட்டத்திற்கும் பின் நடந்தது) ஒரு பக்க வகுப்புவாத சார்பான விசாரணையை காவல்துறை நடத்தி வருகிறது. அதில் மோசமானத் தாக்குதலுக்கு ஆளான முஸ்லீம் சமூகத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, இலக்கு வைக்கப்பட்டு, கலவரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டனர். சட்டத்தின் நிழலான கைகள் விழிப்புணர்வின் தண்டனையை நயவஞ்சகமாக ஆதரிப்பதுடன் இந்து- முதல் தேசத்தின் பாதுகாவலர்கள் என சுய அறிவிப்பு செய்து கொள்பவர்களுக்கு உதவியதற்கு எண்ணிலடங்கா எடுத்துக்காட்டுகள் உள்ளன.
முஸ்லீம்களைத் தடை செய்து விழிப்புடன் துன்புறுத்தும் அதிகாரத்தின் நடத்தை எவ்வாறு தன்னை “மதசார்பற்றது” என்று அழைத்துக் கொள்ள முடியும்? பாப்ரி மஸ்ஜித்தின் எலும்புக் கூட்டின் மீது ராமர் கோவில் கட்ட அனுமதிக்கும் நீதியின் நடத்தை (மஸ்ஜித்தை இடித்தது ஒரு கிரிமினல் செயல் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தாலும் கூட) தன்னை தாராளவாத ஜனநாயக அமைப்பின் ஒரு பகுதி என எவ்வாறு கருதிக் கொள்ள முடியும்? தேசத்துரோகம், சட்டவிரோத செயல் மற்றும் தேசப்பாதுகாப்பிற்கு எதிரானவர் ஆகிய குற்றச்சாட்டுகள் வழக்கமாக மதக் கொள்கை நிர்வாகத்திற்கு எதிரானவர்கள் மீது சுமத்தப்படும் போது எவ்வாறு நம்மை ஜனநாயகவாதியாக அல்லது தாராளவாதியாக அழைத்துக் கொள்ள முடியும்? நிலத்தின் சட்டம் அதிகாரத்தில் உள்ள ஆட்சியின் அரசியல் விருப்பமாக மாறும் போது நாம் எவ்வாறு நம்மை ஜனநாயகம் என்று கூறிக் கொள்ள முடியும்? அரசியலமைப்பு, தானே குடியுரிமைக்காக ஒரு மத அளவுகோலை அறிமுகப்படுத்தும் போது நம்மை எவ்வாறு மதச்சார்பற்ற வர்கள் என்று அழைத்துக் கொள்ள முடியும்? நீதிமன்றங்களும், சட்டமன்றங்களும், நிர்வாகத்துறையும், சிவில் சமூகம் உள்ளிட்டவை நமது அரசியல் தளத்தில், ஜனநாயக விழுமியங்களை பெரும்பான்மை மத அடையாளங்களை எந்த அளவிற்கு அதிகமாக வெற்றிகரமாக கலக்கின்றோமோ, அந்த அளவிற்கு வேகமாக நாம் அரசியலமைப்பு தேவராஜ்ஜியத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறோம். அவர்கள் கூறுவது போல வாத்து போல் நடந்தால், வாத்து போல் சத்தமிட்டால் அநேகமாக அது வாத்துதான்.
(www.thewire.in இணையதளத்தில், ராஜ்ஸ்ரீ சந்திரா எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.