Aran Sei

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

Image Credit : thewire.in

ல வழிகளில், 2020 ஒரு விசித்திரமான ஆண்டு. சிலர் ‘வாழ்வின் மிக நீண்ட ஆண்டு’ என்று அதனை அழைத்தனர். மற்றவர்களுக்கு, மாதங்கள் நிமிடங்களைப் போல பறந்து சென்றன.

பெருந்தொற்று உலகத்தின் எல்லா மூலைகள் மீதும் கவிந்து சென்ற போது, இந்த விசித்திரம் நம் அனைவரையும் ஒன்றிணைத்தது. முழு அடைப்புகளின் கீழ் நம்மை சுறுசுறுப்பானவர்களாக வைத்துக் கொள்வதற்கு புதிய உத்திகளை நாம் முயற்சித்துக் கொண்டிருக்கும் போது ‘சமூக இடைவெளி’ தொடங்கி ‘புதிய இயல்புநிலை’ என பல புதிய சொற்கள் ஒரே நாளில் நமது அகராதியில் இடம் பிடித்தன.

ஆனால், இந்த ஆண்டைப் பற்றி புரிந்து கொள்ள நாம் முயற்சித்துக் கொண்டிருந்தோம், இன்னும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு விஷயத்தைப் பற்றி சந்தேகப்பட இடமே இல்லை : 2020 மறுக்க முடியாதபடி இழப்பின் ஆண்டு. நேரத்தின் இழப்பு, வாய்ப்புகளின் இழப்பு, திட்டங்களின் இழப்பு, சாத்தியங்களின் இழப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக, உயிர்களின் இழப்பு.

Image Credit : thewire.in
கொரோனா சோதனை Image Credit : thewire.in

கேரளாவில் முதல் கொரோனா நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, இந்தியாவில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இந்த நோய்க்கிருமியால் உயிரிழந்திருக்கிறார்கள். நோயில் இழக்கப்பட்ட உயிர்களை மட்டும் இந்த எண் குறிக்கவில்லை, அதிக சுமையை சமாளிக்க வேண்டியிருந்த, குறைந்த அளவே நிதி வழங்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையின் போதாமையையும் அது குறிக்கிறது.

இதற்கு எதிர்வினையாக, பிரதமர் தேய்ந்து கொண்டு போகும் மருத்துவத் துறைக்கும் நொறுங்கிக் கொண்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்புக்கும் புத்துயிர் கொடுப்பதற்கோ, மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கோ எதையும் செய்யவில்லை. மாறாக, அவர் திசைதிருப்பும் தந்திரங்களில் இறங்கினார்.

பல நாட்களாக, இந்தியர்கள், பிரதமரின் வழிகாட்டல்களின்படி, கைத்தட்டினார்கள், தட்டுகளை தட்டினார்கள், தங்களது பால்கனிகளில் விளக்கு ஏற்றினார்கள், அதே நேரம் முன்னணியில் மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ ஊழியர்களும் – மோடியின் ‘கொரோனா போராளிகள்’ – தமது உயிர்களை இழந்தார்கள்.

இந்த திசைதிருப்பல்களுக்கு மத்தியில் நாம் இழந்து விட்ட இன்னொன்று பெருமளவிலான பணம், குத்துமதிப்பாக ரூ 10,000 கோடி. அது தொடர்பான விபரங்களை புதிதாக உருவாக்கப்பட்ட பிஎம்-கேர்ஸ் நிதி என்ற பாதாளத்துக்குள் நாம் தொலைத்து விட்டோம்.

“பிரதமரின் தேசிய நிவாரண நிதி” என்ற வெளிப்படைத்தன்மை உடைய ஒரு நிதி இருந்த போதிலும், பெரும்பாலும் வெளிப்படைத்தன்மையே இல்லாத பிஎம்-கேர்ஸ் நிதியத்துக்கு நன்கொடை வழங்குமாறு அரசு மக்களிடம் வலியுறுத்தியது. பல நன்கொடைகள் சுயவிருப்பத்தோடு கொடுக்கப்பட்டவை அல்ல, அவை குடிமக்களின் சம்பளப் பணத்திலிருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

பெரிய கார்ப்பரேட்டுகள் சுய விருப்பத்தோடு நன்கொடை வழங்கின என்பதில் சந்தேகமில்லை. அதன் மூலம், இந்த நிதியம் வழங்கிய வரிச் சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை இழக்காமல் உறுதி செய்து கொண்டார்கள்.

எண்ணற்ற தகவல் அறியும் உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதும் அரசாங்கம் பிஎம்-கேர்ஸ் தொடர்பான எந்த தகவலையும் வெளியிட மறுத்து, தன்னைப் பற்றிய பரிசீலனையிலிருந்து பாதுகாத்துக் கொண்டது. அதே நேரம், குடிமக்களை மேலும் தீவிரமான கண்காணிப்புக்கு உட்படுத்தியது.

புதிதாக திணிக்கப்பட்ட “தேசிய மின்னணு ஆரோக்கிய திட்டத்தின்” கீழ், வரும் எதிர்காலத்தில் குடிமக்களின் மருத்துவ பதிவுகள் கணினிமயமாக்கப்பட்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். அரசு கண்காணிப்பின் மூலமாக குடிமக்கள் தமது தனிஉரிமையை இழப்பதற்கான சாத்தியத்தை நோக்கிய இன்னொரு அடி இது.

மார்ச் மாதம், நிபுணர்களுடன் கலந்தாலோசிக்காமலே நாடு தழுவிய முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டது. பல பாஜக தலைவர்கள் மோடியின் முடிவை ‘தைரியமானது’, ‘துணிச்சலானது’ என்று பாராட்டுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தத் தவறவில்லை.

அதே நேரம் பொருளாதாரம் அதன் இயக்க விசையை இழந்தது, பல முக்கியமான துறைகள் இலாபங்களை இழந்தன. ஏராளமான மக்கள் தமது வேலைகளை இழந்தார்கள். ஆனால், இந்த கொடுமையான முழு அடைப்பின் கீழ் புலம் பெயர் தொழிலாளர்கள் இழந்தது இவை அனைத்தையும் விட மிக மோசமானது.

அன்னிய மாநிலங்களில் தொலைந்து போனவர்களாய், கையில் பணமின்றி, வேலையின்றி, தங்க இடமின்றி, உண்ண உணவின்றி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள், அவர்களுக்கு எஞ்சியிருந்த ஒரே விஷயமான தமது வீடுகளை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். வெறும் கால்களில், கையில் கிடைத்த வண்டிகளில், இரவல் வாங்கிய மிதி வண்டிகளில், பெற்றோர் தமது சிறு குழந்தைகளை சுமந்து கொண்டு, குழந்தைகள் வயதான பெற்றோரை சுமந்து கொண்டு நடந்தனர்.

Image Credit : thewire.in
புலம்பெயர் தொழிலாளர்களின் நீண்ட பயணம் – Image Credit : thewire.in

1947-ல் இந்திய பிரிவினைக்குப் பிறகு நிகழ்ந்த இந்த பெருந்திரள் மக்கள் வெளியேற்றத்தை அரசும் நீதிமன்றமும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

சில புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் தொலைந்து போனார்கள். பலர் பசியில் தொலைந்து போனார்கள். பலர் உடல் சோர்வில் தொலைந்து போனார்கள்.

எத்தனை பேர் தமது வாழ்வாதாரங்களை இழந்தார்கள் என்றும், தமது நீண்ட பயணத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிதி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்றம் கேட்ட போது, அரசு அது தொடர்பான தரவுகளை தொலைத்து விட்டதாக தோன்றியது. தரவுகள் இல்லை, இழப்பும் இல்லை, எனவே இழப்பீடும் இல்லை என்றது அரசு.

இந்த ஆண்டில்தான் நாம் சில மகத்தான தனிநபர்களையும் இழந்தோம். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல், ஷம்சுர் ரகுமான் ஃபரூக்கி, ரஹத் இந்தோரி, மங்களேஷ் தப்ரால், போன்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும், சவுமித்ரா சாட்டர்ஜி, இர்ஃபான் கான் போன்ற கலைஞர்கள் ஆகியோரையும் இழந்தோம். இவர்கள் ஒவ்வொருவரும் தமது பிரமாதமான, கருத்தைக் கவரும் மரபை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இந்த பல இறப்புகளுக்கு மத்தியில் ஒரே ஒரு இறப்பு மட்டும்தான், சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம், நாடு உண்மையிலேயே எதை தொலைத்து விட்டது என்பதைக் காட்டியது : ஒரு தார்மீக மனசாட்சி. தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் நடிகர் ரியா சக்ரவர்த்தியை அடிப்படைகள் அற்ற, இரக்கமற்ற மோசமான, பொய் பிரச்சாரத்துக்கு இலக்காக்கின. சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் எல்லா துயரங்களுக்கும் அவரது இறப்புக்கும் ரியா மீது பழி சுமத்தின.

போதை மருந்துகள், சீரழிவு, இறப்பு என்ற இடைவிடாத சத்தங்களுக்கு மத்தியில் பீகாரில் பேரழிவை உருவாக்கிய வெள்ளம், அதிகரித்து வந்த வேலையின்மை, இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது வரை இல்லாத அளவு 23.9% வீழ்ச்சி போன்ற மேலும் முக்கியமான பிரச்சனைகள் மீது கவனம் தொலைந்து போனது. மையநீரோட்ட ஊடகங்கள் இவை தொடர்பான கேள்விகளை விவாதிக்காமலே விட்டு விட்டன.

அதே நேரத்தில், சீன-இந்திய எல்லையில், முதலில் லடாக்கில் நாம் நிலத்தை இழந்தோம். பின்னர் அதை மீட்கும் முயற்சியில் நமது ராணுவ வீரர்களின் உயிர்களை இழந்தோம். இந்த எல்லை மீறல்களைப் பற்றிப் பேசும் போது, அமைச்சர்கள் சீனாவின் பெயரைச் சொல்லும் திறனைக் கூட தொலைத்து விட்டார்கள் அமைச்சர்கள், நாட்டின் “நிலப்பரப்பின் ஒருமைப்பாட்டை” மீட்பது பற்றி கேட்கவே வேண்டாம். சீன செயலிகளை தடை செய்வதற்கான சந்தர்ப்பங்களை அரசு தொலைக்கவில்லை. அது மட்டும்தான் இந்திய அரசு கொடுக்க முடிந்த ஒரே பதிலடி.

நிலப்பரப்பை மட்டுமல்ல, இந்த ஆண்டின் ஒவ்வொரு நாளும், மதச்சார்பற்ற இந்தியா என்ற பழைய பிம்பத்தில் எஞ்சியிருந்ததையும் இழந்தோம்.

Image Credit : thewire.in
அயோத்தியில் ராமர் கோயில் பூஜை – Image Credit : thewire.in

ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் கட்டப்படவிருக்கும் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையை பிரதமர் மோடி நடத்தி வைத்தார். டிசம்பர் 6, 1992-ன் இரத்தக் களறியின் ஊடாகவும் அழிவின் ஊடாகவும் வாழ்ந்த பல நேரடி சாட்சியங்களின் நினைவுகள் அவற்றின் மதிப்பை இழந்தன. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கத்தியார் உட்பட 32 பேரை உறுதியான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் விடுவித்தது. “இடிப்பு முன் கூட்டியே திட்டமிடப்படவில்லை” என்றது தீர்ப்பு. இதற்கு மாறானதை நிரூபிக்கும் வாக்குமூலங்களை புறக்கணித்தது.

நாட்கள் செல்லச் செல்ல முஸ்லீம் சிறுபான்மையினர் நாட்டின் அரசியலில் தமது உரிமையை இழந்தனர். ‘யுபிஎஸ்சி ஜிகாத்’ என்ற பெயரில் சுதர்ஷன் நியூஸ் போன்றவர்களால் வில்லன் ஆக்கப்படுவதற்கு முன்னர், கொரோனா நோய்த்தொற்றை பரப்புவது தொடர்பாக முஸ்லீம் சமுதாயம் ‘கொரோனா ஜிகாத்’ என்ற பெயரில் அவதூறு செய்யப்பட்டது. எந்த ஆதாரமும் இல்லாமல் தப்லீகி ஜமாதின் உறுப்பினர்களும், அதன் நீட்சியாக எல்லா முஸ்லீம்களும், நாடு முழுவதும் வெறுப்பு நிரம்பிய இசுலாமிய வெறுப்பு பேச்சுக்களுக்கும், வன்முறை தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.

பிராச்சரம் மூலமாகவும், உடல்ரீதியாகவும் இந்த வன்முறைக்கான முன் வழிகாட்டி ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது. பிப்ரவரி மாதம், பாஜகவின் கபில் மிஷ்ராவும் அனுராக் தாக்கூரும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய பிறகு முஸ்லீம் விரோத கலவரங்கள் வட-கிழக்கு டெல்லியில் நடத்தப்பட்டன. 50-க்கும் மேற்பட்டவர்கள், பெரும்பாலும் முஸ்லீம்கள் இந்தக் கொலைகளில் உயிரிழந்தார்கள். ஜஃபராபாத், மவுஜ்பூர் பகுதிகளில் வன்முறையிலிருந்து தப்பி ஓடிய பலர் தமது வீடுகளை இழந்தார்கள். சிலர் திரும்பி வரவேயில்லை.

கடைக்காரர்கள் தமது கடைகளை கொள்ளை அடித்தலில் இழந்தார்கள். பள்ளிக் குழந்தைகள் தமது வகுப்பறைகளை அழிவு வேலைக்கு இழந்தார்கள். மத நம்பிக்கையாளர்கள் தமது மசூதிகளை கொள்ளைக்கு இழந்தார்கள்.

டெல்லி போலீசும் அதன் பங்குக்கு ஒன்றை தொலைத்தது. சட்டப்படி பாரபட்சமற்ற, நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்ற அதன் கடமையை அது தொலைத்தது. வன்முறையைத் தூண்டி விட்டவர்களை விட்டு விட்டு, மாறாக மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்பியவர்களை அது கைது செய்தது. அதற்கு போலீசுக்கு மிகவும் பிடித்தமான சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தியது.

‘தேச துரோகி” என்றும் ‘தேச விரோதி’ என்றும், ‘துரோகிகள்’ என்றும் அழைக்கப்பட்ட ஷர்ஜீல் இமாம், காலித் சாய்ஃபி, இஷ்ரத் ஜஹான், மீரான் ஹைதர், தாஹிர் ஹூசைன், ஷிஃபா உர் ரஹ்மான், குல்ஃபிஷா பாத்திமா, ஆசிப் இக்பால் தன்ஹா, நடாஷா நார்வால், தேவாங்களணா கலீத, உமர் காலீத் ஆகிய மாணவர்களும் செயல்பாட்டாளர்களும் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான தமது சுதந்திரத்தை இழந்தார்கள்.

மகாராஷ்டிராவில் கவுதம் நவ்லக்கா, ஆனந்த் டெல்டும்டே, ஹானி பாபு, அருட்தந்தை ஸ்டான் சுவாமி ஆகியோரும் எதிர்ப்பை தெரிவிக்கும் தமது சுதந்திரத்தை இழந்தார்கள். 2018-ம் ஆண்டில் பீமா கோரேகானில் நடந்த வன்முறையில் அவர்களை தொடர்புபடுத்துவதற்காக போலீசால் புனையப்பட்ட தடயங்களின் அடிப்படையில் சிறையிடப்பட்ட சுதா பரத்வாஜ், வெர்னான் கோன்சாலஸ், அருண் ஃபெரைரா, வரவர ராவ் ஆகியோருடன் அவர்கள் இணைந்தார்கள்.

இந்த ஆண்டு உச்சநீதிமன்றமும் பல முறை தனது நிதானத்தைத் தொலைத்தது. பிரஷாந்த் பூஷணின் டிவீட்டுகள், குணால் கம்ராவின் நையாண்டி, ரசித்தா தனேஜாவின் கருத்துப் படங்கள் ஆகியவை தொடர்பாகவும், குடிமக்களின் போராடும் உரிமை தொடர்பாகவும், நேரடி விசாரணைக்கான கோரிக்கைகள் தொடர்பாகவும் நீதிமன்றம் நிதானத்தைத் தொலைத்தது.

நீதிமன்றத்தின் ஆதரவை இழக்காத ஒரு நபர் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி. ஒரு விடுமுறை நாளில் கூடி அவரை பிணையில் விடுவித்த நீதிமன்றம், தனிநபர் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான அதன் கடமையை வலியுறுத்தியது. பீமா கொரேகான், டெல்லி கலவரங்கள் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு காத்திருத்தல் தொடர்கிறது.

கோஸ்வாமியை துரிதமாக விடுவித்ததன் மூலம் அரசு பத்திரிகை சுதந்திரத்துக்கான தனது பொறுப்புணர்வை வெளிப்படுத்தியது. ஆனால், பிற ஊடகவியலாளர்கள் ஆசிப் சுல்தான், பட்ரீசியா முக்கிம் ஆகியோரைச் சென்றடைவதற்கு முன்பு இந்தப் பொறுப்புணர்வு தொலைந்து போயிருக்கலாம்.

குறிப்பாக உத்தரபிரதேசத்தில், சட்டம் ஒழுங்கு என்ற வழியில் எல்லாமே தொலைக்கப்பட்டது. தாக்கூர் ஆண்களால் கொடூரமாக கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தலித் பெண்ணைப் பற்றிய செய்தி சேகரிக்கச் சென்ற மலையாளர் ஊடகவியலாளர் சித்திக் காப்பனை உத்தர பிரதேச போலீஸ் கைது செய்தது.

அந்தப் பெண்ணின் இறப்புக்குப் பிறகு நள்ளிரவில் கட்டாயமாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டதும், அவரது குடும்பம் மிரட்டப்பட்டதும் தொடர்ந்தன. இவை அனைத்தும் யோகி ஆதித்யநாத்தின் உத்தர பிரதேசத்தில் தலித்துக்களும் குறிப்பாக பெண்கள் எதை இழந்திருக்கின்றனர் என்பதைக் காட்டின – அவர்களது கௌரவத்தையும் உரிமைகளையும்

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை குறி வைக்காமல், யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ‘லவ் ஜிகாத்’ என்ற பொய்யின் மூலம் இளம் ஆண்களையும் பெண்களையும் குறி வைத்தது. கட்டாய மதமாற்றத்தை தடுப்பது என்ற நோக்கத்தோடு உத்தர பிரதேச மாநில அரசு சட்டவிரோத மதமாற்றத் தடை அவசர சட்டத்தை பிறப்பித்த பிறகு, பாஜக ஆட்சி புரியும் மத்திய பிரதேசம், கர்னாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களும் அதை பின் தொடர்ந்தன. 2020-ல் இளம் தம்பதியினர் சமுதாயத்துக்கு வெளியில் காதலிக்கும் சுதந்திரத்தை இழந்தார்கள்.

Image Credit : thewire.in
டெல்லி – நோய்டா எல்லையில் போலீஸ் படை குவிப்பு – Image Credit : thewire.in

2020-ன் அழிவுக்கும் இருளுக்கும் மத்தியில் ஒரு விஷயத்தை நாம் நிச்சயமாக இழக்கவில்லை – எதிர்த்து நிற்கும் உணர்வு. இந்த ஆண்டு பெருந்திரள் எதிர்ப்பில் தொடங்கி பெருந்திரள் எதிர்ப்பில் முடிந்திருக்கிறது. சமீப காலங்களில் நாம் கண்ட மிக உயிர்த்துடிப்பான போராட்டங்களுடன் அது தொடங்கியது. அதை விட துடிப்பான போராட்டங்களுடன் அது முடிகிறது.

ஜனவரியின் குளிரில் ஷாகீன்பாகின் வயதான பெண்கள் திறந்த வெளியில் உட்கார்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடினார்கள். இப்போது, டிசம்பரின் இறுதியில், இளைஞர்களும் முதியவர்களும் ஆன பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதாயம் அளிக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் எல்லைப் பகுதிகளில் இரவுகளை கழித்து வருகிறார்கள்.

ஜனவரி போராட்டமும், டிசம்பர் போராட்டமும் ஒரே மாதிரியானவை. உயிர் வாழ்வதற்காக, உரிமைகளுக்காக, இந்திய ஜனநாயகத்தில் சம வாய்ப்புக்கும் சம உரிமைகளுக்கும், நியாயத்துக்காக, சுதந்திரத்துக்காக, ஆட்சியாளர்களை விட மக்களுக்கு அதிகம் சொந்தமாக இருக்கும் ஒரு நாட்டுக்காக நடக்கும் போராட்டங்கள் அவை

– சோபிய சலாம்

தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்