Aran Sei

அநீதியை எதிர்த்து நிற்கும் குடிமகனே இந்த ஆண்டின் சிறந்த இந்தியன் – சித்தார்த் பாட்டியா

Image Credit : thewire.in

றுப்புக் குரல் எழுப்புவதே கிளர்ச்சியாளரின் செயலாக, தேசத்துரோகமாகக் கூட கருதப்படும் சூழலில், உரிமைக்காக குரல் கொடுத்தவர்களை சிறையில் தள்ளும் நிலையில், ஒரு கேலிச்சித்திரமோ அல்லது நகைச்சுவையோ கூட ஒரு அரசியல்வாதியின் கோபத்தைத் தூண்டக்கூடிய நிலையில், தன்மானம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பொறுத்த விடயம் என்றால் சில இந்தியர்கள் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் என்று காட்டுகிறார்கள்.

இந்த ஆண்டு, உலகம் முழுவதும் வேகமாக பரவி, கோடிக்கணக்கான மக்களை தாக்கி, தனக்குப் பின்னால் கோரமான மரணச் சுவடை விட்டுச் சென்று கொண்டிருக்கும் கொடூரமான கொரோனா வைரஸ் மீதே கவனம் குவிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவு உலக முடக்கம்; இந்தியாவில் முடக்கம் துவங்குமுன் உணவுக்காகவும், மருந்திற்காகவும், பிற அத்தியாவசிய பொருட்களுக்காகவும் நான்கு மணி நேரமே நமக்குத் தரப்பட்டது. அது குழப்பத்தையும், துன்பத்தையும் கொடுத்தது.

ஆனால் இவ்வாறு திடீர் பதற்றத்தை உருவாக்குவது, இதற்குள் அரசுக்கும் நரேந்திர மோடிக்கும் வழக்கமான நடைமுறை ஆகி விட்டது. இதற்கான விலையை, தொலைதூரத்தில் உள்ள தங்கள் சொந்த ஊரை அடைய நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே செல்ல புறப்பட்ட லட்சக்கணக்கான புலம் பெயர்ந்தோர் கொடுத்தனர். ஏனெனில் அவர்கள் தங்கள் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என விரும்பினர். பலர் வழியிலேயே உயிரிழந்தனர்.

மாநிலங்கள் தங்கள் மாநிலங்களைப் சோ்ந்த மக்களே எல்லை தாண்டி வராமல் இருக்க ஆன மட்டும் முயற்சி செய்தன. இதற்கிடையில் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் விரட்டப்பட்டு வரும் போது மன உறுதியை உறுதி செய்வதற்கு, தட்டுகளைத் தட்டக் கூறினார்.

அதற்குள், சிறு தொழில்கள் அழிக்கப்பட்டு விட்டன. சொந்தமாக அல்லது சேவைத் துறையில் வேலை செய்து வந்த இளைஞர்கள் வேலையை இழந்து நிற்கின்றனர். அவர்கள் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தைப் எதிர் கொள்கிறார்கள்.

Image Credit : thewire.in
பல நூறு கிலோமீட்டர் நடந்தே சென்ற தொழிலாளர்கள் Image Credit : thewire.in

தெரு வியாபாரிகள், சுய தொழில் செய்யும் பிளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள், தச்சர்கள், உணவகப் பணியாளர்கள் போன்றோர் மீண்டும் நகரத்திற்கு வந்தனர். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

சோர்வடையச் செயும் இந்த ஆண்டில், அண்மை ஆண்டுகளில் இல்லாத மிக குறைந்த பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ள நிலையில், அரசு இரண்டு வேலைகளைச் செய்தது. ஒன்று எதிர்ப்பு குரல் எழுப்புவர்களை பழி வாங்குவது, எவ்வித ஆலோசனையும் இல்லாமல் சட்டங்களை வலுவந்தமாக புகுத்துவது.

உமர்காலித் அழைத்துச் செல்லப்பட்டு இன்று வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பீமா கோரேகான் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், இன்னும் சிறையில் உள்ளனர். வரவர ராவ், பாதிரியார் ஸ்டான் சுவாமி போன்ற மிக வயதானவர்களின் மீது கூட அரசு எவ்வித மனிதாபிமானமும் காட்டவில்லை.

இருந்தாலும், உரிமைகளுக்காகவும், தன்மானத்திற்காகவும் எழுந்து நின்று எதிர்ப்புக் குரல் எழுப்புவர்களின் நெஞ்சுரம் தொடர்கிறது.

2019 டிசம்பரில் ஷாஹீன் பாகில் துவங்கிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பெண்களின் போராட்டம், அவர்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடர்ந்து, 2020-ல்தான் முழு வீச்சை அடைந்தது.

101 நாட்கள் நடந்த அந்தப் போராட்டம் கொரோனா முழு முடக்கத்தால் இறுதியாக முடிவுக்கு வந்தது. சிஏஏ திரும்பப் பெறப்படவில்லை ஆனால் அதை செயல்படுத்துவது தாமதப்படுத்தப்பட்டுள்ளது; மேற்கு வங்காளத்தில் தனது பரப்புரையில் பாஜக சிஐஏ, என்ஆர்சி பற்றி பேசுவதே இல்லை. இதை பின்வாங்குதல் அல்லது ஒரு வகையான வெற்றி என்றே கருத வேண்டும்.

Image Credit : thewire.in
சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் – Image Credit : thewire.in

இப்போது இந்த ஆண்டு முழு முடக்கத்தின் போது அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்த்த விவசாயிகளின் போராட்டத்துடன் முடிகிறது. இந்தப் போராட்டமும் கூட 2021லும் நீடிக்கும் என்றே தோன்றுகிறது.

ஷாஹீன்பாக் பெண்கள் சிறுபான்மையினருக்கு எதிரானது என்பதால், குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிரானது என்பதால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தனர். எந்த ஒரு ஆவணமும் இல்லை எனில், பலரும் இந்த நாட்டின் குடிமக்கள் அல்ல என அறிவிக்கப்படலாம் என்ற உண்மையான அபாயம் இருந்தது. அவர்கள் நாடிழந்தவர்களாக ஆக்கப்பட்டு முகாமில் அடைக்கப்படுவார்கள்.

அதே போல விவசாயிகளுக்கும் கூட இது வாழ்வா? சாவா? (உயிர்வாழ்வது பற்றிய) பிரச்சனை. விவசாய சட்டங்கள் அவர்களை அதிகாரமற்றவர்களாக்கி, தங்கள் விளை பொருட்களை வாங்க வரும் பெரும் கார்பரேட்டுகள் நிர்ணயிக்கும் விலைக்குத் தர வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கும்‌. பெரும் அளவில் வாங்குபவர்களின் தேவைக்கேற்ப அவர்கள் தங்கள் பயிர்களை மாற்ற வேண்டி வரும்.

இதில் ஏதாவது சர்ச்சை ஏற்பட்டால் சட்டரீதியான வழிமுறை எதுவும் அவர்களுக்கு இருக்காது. உள்ளூர் அதிகாரி ஒருவர் வழக்கின் சரித்தன்மையை முடிவு செய்வார். தற்போதுள்ள ஏபிஎம்சி மூலம் விற்பனை செய்யும் முறை குறைகளுடன் கூடியதுதான், ஆனால் சீர்த்திருத்தங்கள் என்று சொல்லப்படுபவை அதை விட மோசமானவை‌.

Image Credit : thewire.in
காயமடைந்த ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர் – Image Credit : thewire.in

பாஜகவும் அதன் செய்தி தொடர்பாளர்களும் இணையத்திலும் தொலைக்காட்சியிலும் விவசாயிகள் மீது அவதூறு செய்வதற்கான எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டத்தில் பிட்சா கொடுத்தது போன்ற ஒன்றில் கூட விமர்சிப்பதற்கு ஏதாவது ஒன்றை கண்டுபிடித்தார்கள்.

அவர்கள் விவசாயிகளை தேச விரோத காலிஸ்தானியர்கள் என்று சித்தரித்தார்கள். பிறகு, அது வேலைக்கு ஆகவில்லை என்பதை உணர்ந்து கொண்டு, ட்ரோல்கள், ஏன் ரவி சங்கர் பிரசாத் போன்ற அமைச்சர்கள் கூட, போராட்டத்தை வழி நடத்தியவர்களை ‘துக்டே துக்டே கேங்’ என்று முத்திரை குத்தினார்கள்.

யார் அரசுடன் உடன்படவில்லை என்றாலும், அவர்கள் மீது எவ்வளவு கேவலமானதாக இருந்தாலும், அவதூறை அள்ளி வீசுவது பாஜகவின் செயல்பாட்டு முறையாக உள்ளது. அது அர்த்தமுள்ளதா இல்லையா என்பது பற்றிய அறிவே இல்லாமல் தானியங்கிப் போல செயல்படுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. இந்த தந்திரத்தின் செயல்திறன் தற்போது தேய்ந்து போய் விட்டது, நிச்சயமாக அது விவசாயிகளிடம் வேலைக்கு ஆகவில்லை.

சிஏஏ எதிர்ப்பு போராட்டப் போராளிகளைப் பொறுத்தவரை அவர்களை ஒப்பீட்டளவில் எளிதாக புறக்கணித்து, தாக்க முடிந்தது. பல இந்தியர்கள் ஏற்கனவே முஸ்லீம்களைப் பற்றிய மோசமான கருத்தை வைத்துள்ளனர் என்பதுடன் வகுப்புவாத தப்பெண்ணத்திற்கும் பலியாகக் கூடியவர்கள்.

சில பர்தா அணிந்த பெண்கள் உட்பட பல பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றது, முஸ்லீம்கள் இன்னும் தேசிய நீரோட்டத்தில் இணையாத சமுதாயம், அவர்கள் பயங்கரவாதிகளையும் உற்பத்தி செய்கிறார்கள் போன்ற கருத்துக்களுக்கு நேரடியாக இட்டுச் சென்றது.

யாரோ ஒருவனின் துப்பாக்கிச் சூடும், அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா போன்றோரின் தீப்பற்றச் செய்யும் உரைகளும், தொலைகாட்சிகளில் இடைவிடாத பரப்புரையும், இந்த அரசுக்கும் அதன் தலைவருக்கும் பக்தர்களாக இல்லாதவர்கள் மீது கூட தேவையான தாக்கத்தை ஏற்படுத்தியது

விவசாயிகளின் கதையே வேறு. விவசாயி இந்திய மனதில் ஓர் உன்னத உருவம்- வெயிலில் வியர்வை சிந்த உழைத்து சமூகத்திற்கும் இந்த நாட்டிற்கும் உணவை உற்பத்தி செய்து தருபவர். இதற்கு ஈடாக, விவசாயி அற்பத் தொகையையே பெறும் போது இடைத்தரகர்கள் பெரும் லாபம் சம்பாதிக்கிறார்கள். எப்போதும் வேளாண்மையே பொருளாதாரத்தில் சிறப்பாக செயல்படும் துறையாக இருந்தாலும், அது அரசாங்கங்களால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகிறது.

சீக்கிய விவசாயியின் மீது இதைவிட சிறந்த நேர்மறையான தோற்றம் உள்ளது, சீக்கியர்கள் கடும் உழைப்பாளிகளாகவும் அதே நேரம் மகிழ்ச்சியானவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் உற்பத்தி செய்வது மட்டுமின்றி நாட்டிற்காக போரிடவும் செய்கிறார்கள்.

அவர்களை தேசவிரோதிகளாக சித்தரிப்பது நகைப்பிற்குரியது. பஞ்சாப் இந்துத்துவா முழுமையாக வேரூன்றாத ஒரு மாநிலமாகவும், வலுவான சமூக உணர்வும், கூட்டுத்துவ உணர்வும் கொண்ட மாநிலமாகவும் இருக்கிறது. பொற்கோவில் புனிதமான அமைதியான இடமாகப் பார்க்கப்படுகிறது. யாருக்கும், எல்லோருக்கும் இலவசமாக உணவளிக்கும் லாங்கர்களில் வெளிப்படும் சேவை உணர்வு சீக்கியர்கள் ஒரு முழுமையான ஒருங்கிணைந்த மதச்சார்பற்ற சமுதாயமாக இருப்பதைக் காட்டுகிறது.

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் விவசாயிகளை எதிர்த்து தங்கள் வசைபாடலை ஆரம்பிக்கும் முன் என்னதான் நினைத்தார்கள்.

பலவழிகளில் இந்த ஆண்டு நம்பமுடியாத ஒரு ஆண்டாக இருந்தது. இதன் முடிவில் எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறோம் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. புதிய பொதுமுடக்கங்கள் உலகின் பல பகுதிகளில் கொண்டு வரப்படுகின்றன. பரிணாம மாற்றம் அடைந்த ஒரு புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது‌. தடுப்பூசி போடுவது இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை‌. அதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம். நிலைமை சீக்கிரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு வராது.

இந்த நிலையில், போராட்டங்களுக்கு இடமில்லாதது போல் தோன்றலாம். ஏனெனில் கவனிக்கப்பட வேண்டிய பெரிய சிக்கல்கள் உள்ளன.

ஆனால், போராட்டங்கள்- இந்தியாவில் மட்டுமல்ல- குடிமக்கள் அரசு சொல்வதை எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு, எதை செய்யச் சொல்கிறதோ அதை செய்து கொண்டு, வெறுமனே விட்டுக் கொடுத்துவிட்டு இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது என்பதை நமக்கு நினைவுபடுத்துகின்றன. தட்டுகளை தட்டுவது எல்லாம் நல்லதுதான், ஆனால் பொருளாதாரம் எப்படி மீளும், வேலைகள் மீண்டும் கிடைக்குமா, மிக முக்கியமாக, குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுமா, இவை போன்ற கேள்விகளுக்கு சரியான பதில்கள் தேவை.

அமெரிக்காவில், மினியாபோலிஸில் காவல்துறையினரால் ஜார்ஜ் ஃப்ளாய்டு கொல்லப்பட்ட போது “கருப்பர்களின் உயிரும் உயிரே (Black Lives matter)” என்ற பதாகையின் கீழ் மக்கள் ஒன்று திரண்டனர். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணிகள் உலகமெங்கும் நடந்தன. டிரம்ப் நிர்வாகம் வன்முறையில் பதிலளித்தது, ஆனால் பல மாநிலங்களும் தங்கள் சட்டங்களையும் போலீஸ் துறையையும் பரிசீலித்து அவற்றை எப்படி மேம்படுத்துவது என்று பார்க்க முடிவு செய்தனர்.

இந்தியாவில் நடைபெறும் போராட்டங்கள், அது ஷாஹீன்பாகாக இருக்கட்டும் அல்லது கடுங்குளிரிலும், பல உயிர்களை தியாகம் செய்த பின்பும், விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் டெல்லிக்கு வெளியில் உள்ள நெடுஞ்சாலைகளாக இருக்கட்டும் இந்தியர்கள் எப்போதும் பாகுபாட்டிற்கு எதிராக எதிர்த்து நிற்பார்கள் என்பதைக் காட்டுகின்றன.

போராடும் விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்ப்பாளர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது போராட்டம் அவர்களுக்காக மட்டுமல்ல, அநீதிக்கு எதிராகவும்தான்.

நாம் இன்னொரு நிச்சயமற்ற ஆண்டில் நுழையும் போது, இப்போது முடியப் போகும் ஆண்டைப் போலவே நம்பிக்கை அற்றதாக இருக்கக் கூடிய புதிய ஆண்டில், இது போன்ற அறிகுறிகள் இந்தியர்கள் எப்போதும் தங்கள் விவாதித்து விடைகாணும் முறைகளை தொடர்வார்கள் என்ற நம்பிக்கையை அளிக்கின்றன.

– சித்தார்த் பாட்டியா

thewire.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்