Aran Sei

“கொண்டாட ஏதுமில்லை, ஜிடிபி வளர்ச்சி மோசமாகவே உள்ளது” – பொருளாதார நிபுணர் சென்

ப்ரொனாப் சென் Image credit : thewire.in

டந்த வெள்ளியன்று வெளியான இரண்டாம் காலாண்டுக்கான (ஏப்ரல், மே மற்றும் ஜூன்) பொருளாதார வளர்ச்சி பற்றிய முடிவுகள் உண்டாக்கியிருந்த நம்பிக்கையை முற்றிலுமாக தகர்க்கும்படி பல கருத்துக்களை சொல்லியிருக்கிறார் இந்தியாவின் பிரதான பொருளாதார நிபுணர் ஒருவர்.  உற்பத்தித் துறை மதிப்பு சேர்க்கை இரண்டாம் காலாண்டில் 0.6% உயர்ந்திருப்பதாக சொல்வது எப்படி சரியாகும் என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்திய ஜிடிபி வளர்ச்சி – மீண்டு விட்டதா, இன்னும் தேக்கத்திலா?

இந்தியாவின் முன்னாள் தலைமை புள்ளியியலாளரான ப்ரொனாப் சென், முழுத் தகவல்களையும் தரவுகளையும் வைத்துப் பார்த்தால் உற்பத்தி சுருங்கியிருக்கிறதே தவிர, வளரவில்லை என்பது தெரியும் என்கிறார். மூன்றாம் காலாண்டில் உற்பத்தி எதிர்மறை வளர்ச்சியே பெறும் என்றும் சொல்கிறார்.

சர்வதேச வளர்ச்சி மையத்தின் இந்தியா இயக்குநரும், பொருளாதார புள்ளிவிவரங்களுக்கான அரசாங்கத்தின் நிலைக்குழுவின் தலைவராகவும் இருக்கும் சென், மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டாவது காலாண்டில் சுருங்கியதை விட அதிகளவு மூன்றாவது காலாண்டில்  சுருங்கும் என்று சொல்கிறார். நான்காம் காலாண்டும் எதிர்மறையாகவே இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 10%-ற்கு அதிகமாகவே மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) சுருங்கும், அது “இரட்டை இலக்கங்களில் ஒரு சிறிய எண்ணாக இருக்கலாம்” என்று சொல்கிறார்.

மேலும், அடுத்த 4-5 ஆண்டுகளில் இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிப் பாதை 5% மட்டுமே இருக்கும் என்றும் அவர் கவலையோடு தெரிவித்தார். 8-10% வளர்ச்சியை மட்டுமல்ல 7%, 6% வளர்ச்சியை கூட நம்மால் கண்டிப்பாக அடையவே முடியாது. அடுத்த சில ஆண்டுகளுக்கு 5% வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்றார்.

தி வயர் தளத்திற்கு அளித்த 45 நிமிட பேட்டியில், இந்தியாவின் நிதி நெருக்கடியை குறித்து கவலை தெரிவித்த ப்ரொனாப் சென், இந்தச் சிக்கலை அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், இதைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சொன்னார்.

அடுத்த ஆண்டு இந்தியா முதலீட்டு நெருக்கடியை சந்திக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் சொல்லியிருக்கிறார். இப்போது, முழு அடைப்புக்கு முன் தீர்மானிக்கப்பட்ட முதலீடுகள் எல்லாம் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு பிறகு புதிய திட்டங்கள் எதுவும் இல்லை.

அதை விட மோசம் என்னவென்றால், முதலீட்டாளர்களையும் அவர்களுடைய செயல்துடிப்பையும் ஊக்கப்படுத்த அரசு எதுவுமே செய்யவில்லை என்கிறார் சென். இது ஒரு முதலீட்டு நெருக்கடிக்கு இட்டுச் செல்லும் என்றும், அந்த நெருக்கடி இப்போது இருக்கும் வேண்டல் குறைபாட்டின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை விட மோசமானதாக இருக்கும் என்றும் அவர் சொல்கிறார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர்பான புள்ளிவிபரங்களில் உற்பத்தித் துறை வளர்ச்சி 0.6% என காட்டப்படும் போது, தொழில்துறை உற்பத்தி குறியீடு (ஐ.ஐ.பி) வேறொன்றை எப்படி காட்டுகிறது என்பது குறித்து பேசும் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி, செய்து முடிக்கப்பட்ட தயாரிப்புகளை மட்டுமே கணக்கில் எடுக்கிறது. ஆனால், ஐ.ஐ.பியோ உள்ளீடுகளையும், மூலப்பொருட்களையும், முடிக்கப்பட்ட தயாரிப்புகளையும் கணக்கில் எடுக்கிறது என்கிறார்.

ஜி.டி.பி மற்றும் ஐ.ஐ.பியின் புள்ளிவிபரங்களை இணைத்துப் பார்க்கும் போது, கார்ப்பரேட்கள் புது மூலப்பொருட்களையும், உள்ளீடுகளையும் வாங்காமல், முழு அடைப்புக்கு முன் சேர்த்து வைத்திருந்தவற்றை மட்டுமே பயன்படுத்துவது தெரிகிறது என்கிறார். இந்தக் கையிருப்பு தீர்ந்ததும் அவர்கள் பிரச்சினையை சந்திப்பார்கள் என்றும் சொல்கிறார்.

ஜிடிபிக்கான உற்பத்தி புள்ளிவிபரங்களில் 75%, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் நிறுவனங்கள் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கைகள் வழியே கார்ப்பரேட் துறை எப்படி செயல்பட்டிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் சென். இந்த நிதி நிலை அறிக்கைகள் அதிகப்படியான லாபத்தை காண்பிக்கக் காரணம், சம்பளங்களிற்கும், உள்ளீட்டிற்கும், மூலப்பொருட்களுக்குமான செலவுகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது தான். அதாவது, லாபம் உயர்ந்திருக்கலாம் ஆனால் உண்மையில் உற்பத்தியும் விற்பனையும் சுருங்கியிருக்கிறது.

இரண்டாம் காலாண்டின் 0.6% சதவீத உற்பத்தி வளர்ச்சியை மேலும் ஆழமாக ஆய்வு செய்து பார்க்கும் போது, பண்டிகை காலத்திற்கு எனக் குறிப்பாக சரக்கு கையிருப்பு அதிகரித்தது தெரிகிறது, அதற்கு பிறகு அது நடக்கப்போவதில்லை என்கிறார், சென். கடந்த ஆண்டு, இதே காலாண்டில் உற்பத்தி 0.6% சுருங்கியதனால் உண்டான குறை அடித்தளத்தின் (low base effect) விளைவாகவே இந்த ஆண்டு உற்பத்தி வளர்ச்சியை காட்டியிருக்கிறது என்கிறார் சென்.

உற்பத்தியில் 45% எம்.எஸ்.எம்.இ (குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்) துறையினால் உண்டாவதாகவும், இத்துறையின் பாதி நிறுவனங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதனால் இரண்டாவது காலாண்டின் உற்பத்தியில் இவற்றின் இயக்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று சுட்டிக் காட்டினார், சென்.

கார்ப்பரேட் துறையை விடவும் இந்நிறுவனங்கள் மோசமாக செயல்பட்டிருக்கும் வாய்ப்பே அதிகமாக இருக்கிறது. இவற்றை எல்லாம் வைத்து கணக்கிடும் போது, இரண்டாம் காலாண்டின் உற்பத்தி நேர்மறையாக இல்லாமல் எதிர்மறையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார், சென். மூன்றாம் காலாண்டின் உற்பத்தியும் எதிர்மறையாக இருக்கும் என்றே எதிர்பார்ப்பதாக சொல்கிறார்.

முதல் காலாண்டை விட இரண்டாம் காலாண்டில் மோசமாக செயல்பட்ட நிதித்துறை குறித்தும் சென் கவலை தெரிவித்தார். நிதித்துறைக்கு இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, நிறைய கடன்கள் – முத்ரா கடன்கள் மட்டுமின்றி பல வங்கிக் கடன்களுக்கு வட்டி செலுத்துவது நின்று போயிருக்கிறது. இவை வாராக் கடன்களாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கடன்களை வாராக் கடன்களாக அறிவிப்பதற்கான தடை இருப்பதால் அல்லது இதை கவனிக்க வங்கிகளுக்கு விருப்பம் இல்லாததால் மட்டுமே இந்த கடன்கள் வாராக் கடன்கள் என்று அறிவிக்கப்படாமல் உள்ளன. இந்தக் கடன்களுக்கு வட்டி செலுத்தப்படாததால், வங்கிகளுக்கு இவற்றினால் வருவாய் இல்லை.

நிதித்துறையின் இரண்டாவது பிரச்சினை, கடன் வாங்குதல் குறைந்து கொண்டிருப்பது. தற்போதைய பொருளாதார நிலை காரணமாக, கடன் வாங்குவது குறைந்துள்ளது. இதன் விளைவாக, ஏற்கனவே இழக்கும் வட்டியை வங்கிகளால் ஈடு கட்ட முடியவில்லை; அதாவது, புதிய கடன்களின் வட்டியின் வழியே ஏற்கனவே இருக்கும் கடன்களினால் ஏற்படும் இழப்பை ஈடு கட்ட முடியவில்லை நிகர வட்டி அளவு குறைந்து கொண்டே வருவதாக சொல்கிறார் சென்.

இந்த இரண்டு பிரச்சினைகளுமே ஏற்கனவே வங்கிகளை தாக்கிவிட்டன. அடுத்த ஆண்டு, வாராக் கடன்களாக வகைப்படுத்துவதற்கு வங்கிகளுக்கு போடப்பட்டிருக்கும் தடை முடிந்து, இதை அங்கீகரிக்க வேண்டிய நிலை வரும் போது, நிறைய வங்கிகள் திவால் நிலைக்கு அருகில் இருக்கும். வங்கிகளை மீட்கவே அரசு லட்சக்கணக்கான கோடிகள் அளிக்க வேண்டியதாக இருக்கும் என்கிறார். ஒரே முறையில் அளிக்க முடியாத அளவு மிகப் பெரிய தொகையாக அது இருக்கும். எனவே, இப்போதே அரசு அதற்கு பணத்தை தயார் செய்ய வேண்டும். ஆனால், அரசு அதைச் செய்யவும் இல்லை, இப்படி ஒரு பிரச்சினை இருப்பதாக கண்டுகொள்ளவும் இல்லை என்று சொல்கிறார்.

இரண்டாம் காலாண்டின் முடிவுகளால் உருவாக்கப்பட்ட உற்சாகம், அதை ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் போது நிலைத்து இருக்காது. உற்பத்தித் துறையில் வளர்ச்சி, சேவைத் துறையிலும் தொழில்முறை (Professional) சேவைத் துறையிலும் வீழ்ச்சி, நிதித்துறை, முதலீடுகள் என எதை எடுத்து ஆராய்ந்து பார்த்தாலும் இந்த உண்மை வெளிப்பட்டுவிடும்.

இந்தியப் பொருளாதாரம் ஒரு V வடிவிலான வளர்ச்சிப் பாதையில் இருப்பதாக தற்போது நம்பப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டு முடிவுகளில் இது W வடிவிலானது என்பது தெரியும்.

இது தொடர்பாக பிரதமருக்கு என்ன அறிவுரை சொல்வீர்கள் எனக் கேட்ட போது, ஒரு பெரிய உடனடியான நிதித்தூண்டுதல் வேண்டும் எனக் கேட்பேன் என்கிறார்.

மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் பற்றாக்குறை 15% உயர்ந்தாலும் கூட பிரச்சினை இல்லை, இந்தக் காலகட்டத்தில் இப்படியொரு நிதித்தூண்டுதல் புரிந்து கொள்ளப்படும், ஏற்றுக் கொள்ளப்படும். இப்போது அதை செய்யவில்லை என்றால் ஒரு ஆண்டிலோ இரண்டு ஆண்டுகளிலோ இதைப் போல ஒன்றை செய்ய அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும், அப்போது அந்த நடவடிக்கை விமர்சனம் செய்யப்படும் பொறுப்பற்ற நிதி மேலாண்மை என்று கருதப்படும் என்கிறார்.

இதன் வழியே, நிதித்தூண்டுதல் குறித்தும் அது எப்போது செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் அரசின் மதிப்பீட்டை தான் கேள்விக்குள்ளாக்குவதாக சென் ஏற்றுக் கொள்கிறார்.

thewire.in-ல் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்