Aran Sei

பீமா கோரேகான் வழக்கு – பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக கூறப்படும் மடிக்கணினி ஹேக் செய்யப்பட்டது : புதிய அறிக்கை

Image credit : washingtonpost.com

பீமா கோரேகான் வழக்கில், குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக முன்வைக்கப்படும், பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்ட செயல்பாட்டாளர் ரோனா வில்சனுடைய மடிக்கணினியில், ஒரு ஹேக்கர் சட்ட விரோதமாக புகுந்து, 30-க்கும் மேற்பட்ட ஆவணங்களை வைத்திருக்கிறார் என்று ஒரு புதிய தடயவியல் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை விமர்சிக்கும் செயல்பாட்டாளர்கள் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு பற்றிய கவலையை இந்த அறிக்கை அதிகரித்துள்ளது.

பீமா கோரேகான் வழக்கு : பழங்குடி உரிமைகள் செயல்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமிக்கு பிணை மறுப்பு

மசாச்சுசெட்சைச் சேர்ந்த ஆர்சனல் என்ற மின்னணு தடயவியல் நிறுவனம், பீமா கோரேகான் வழக்கில் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையின் பேரில் மடிக்கணினியின் மின்னணு நகல் ஒன்றை ஆய்வு செய்துள்ளது. இந்த அறிக்கையின் ஒரு நகலை வாஷிங்டன் போஸ்ட் பரிசீலித்துள்ளது.

முழு அறிக்கையை படிக்க (ஆங்கிலத்தில்)

பிப்ரவரி மாதம் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியாக வெளியிட்ட, ஆர்சனலின் முந்தைய பகுப்பாய்வு ஒன்றில், மோடியை கொலை செய்வதற்கான சதித்திட்டம் என்று கூறப்படுவதைப் பற்றிய ஒரு கடிதம் உட்பட 10 கடிதங்கள், ஒரு ஹேக்கரால் அந்த மடிக்கணினியில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்தது. தற்போதைய ஆர்சனல் அறிக்கையின்படி, இன்னும் 22 ஆவணங்கள் அதே ஹேக்கரால் கணினிக்குள் வைக்கப்பட்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட செயல்பாட்டாளர்கள் இந்திய அரசுக்கு எதிராக பல பத்தாண்டுகளாக கிளர்ச்சி நடத்தி வரும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் போராளிக் குழுவுடன் இணைந்து செயல்பட்டதற்கான ஆதாரங்களாக இந்த 32 ஆவணங்களைத்தான் இந்திய அரசு முன்வைத்துள்ளது.

பீமா கோரேகான் வழக்கு இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியின் நடக்கிறதா என்பதைக் காட்டுவதற்கான முக்கியமான வழக்காக உள்ளது. இந்த வழக்கு, விமர்சகர்களை ஒடுக்குவதற்கான அரசின் ஒரு முயற்சி என்று மனித உரிமைகள் குழுக்களும், சட்ட நிபுணர்களும் கருதுகின்றனர்.

இந்திய அரசு ஊபா சட்டத்தை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது – அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை

மோடியின் இந்தியாவில் மாற்றுக் கருத்துக்கான வெளி குறைந்திருக்கிறது. அங்கு ஊடகவியலாளர்களும், செயல்பாட்டாளர்களும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களும் கைதுகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செயல்பாட்டாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். அவர்களில், ஒரு முன்னணி கல்வித்துறையாளர், ஒரு தொழிலாளர் வழக்கறிஞர், ஒரு இடதுசாரி கவிஞர், ஒரு ஏசுசபை பாதிரியார், இரண்டு பாடகர்கள் அடங்குவர். அனைவருமே நாட்டின் மிகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள், ஆளும் கட்சியை கடுமையாக எதிர்ப்பவர்கள். அவர்களில் பலர் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்நோக்கி, சிறையில் உள்ளனர்.

ஆர்சனலின் இரண்டு அறிக்கைகளும் டெல்லியைச் சேர்ந்த செயல்பாட்டாளரான ரோனா வில்சனுக்குச் சொந்தமான மடிக்கணினி தொடர்பானவை. பிப்ரவரி மாதம், ஆர்சனலின் முதல் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரோனா வில்சனின் வழக்கறிஞர்கள், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யும்படி நீதிபதிகளை வலியுறுத்தினர். அந்த மனுவின் மீது நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘அரசின் தடயவியல் ஆய்வகம் ஒன்று செய்த பகுப்பாய்வு, மடிக்கணினி நச்சுநிரல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் காட்டவில்லை’ என்று, தேசிய புலனாய்வு முகமையின் செய்தித் தொடர்பாளரான ஜெயா ராய் கூறியுள்ளார். அரசின் தடயவியல் ஆய்வகம் இந்த முடிவை எப்படி வந்தடைந்தது என்பது தொடர்பான விபரங்களை அவர் தரவில்லை.

“எங்களது புலனாய்வு முடிந்து விட்டது. ஒரு தனியார் ஆய்வகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழக்கில் மறுபடியும் புலனாய்வு நடத்த முடியாது” என்று ஜெயா ராய் கூறியுள்ளார்.

வட அமெரிக்காவில் உள்ள, நச்சுநிரல், மற்றும் மின்னணு தடயவியல் நிபுணர்கள் மூவரிடம் வாஷிங்டன் போஸ்ட், ஆர்சனலின் முதல் அறிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டது. அதன் கண்டுபிடிப்புகள் செல்லுபடியாகத்தக்கவை என்று அவர்கள் கண்டறிந்தனர். நான்காவது நிபுணர் ஒருவர் இரண்டு அறிக்கைகளையும் பரிசீலித்து அவற்றின் முடிவுகள் வலுவானவை என்று கூறினார்.

ஆர்சனல் தனது சமீபத்திய அறிக்கையில், கணினி மீது தாக்குதல் நடத்தியவர் அதில் ஒரு மறைக்கப்பட்ட அடைவில் ஆவணங்களை வைப்பதற்கான கட்டளைகளை தட்டச்சு செய்தது பற்றிய தரவுகளை சேர்த்துள்ளது. இவை அந்த மடிக்கணினியில் இருந்து மீட்கப்பட்ட தரவுகள். “குற்றம் நிகழ்வதைப் பற்றிய வீடியோ பதிவுக்கு” இணையானது இது என்று ஆர்சனல் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸ்பென்சர் கூறியுள்ளார்.

இதுவரையில், இந்த அறிக்கைகள் தொடர்பான பணியை ஆர்சனல் பொதுநலன் அடிப்படையில் செய்துள்ளது என்று மார்க் ஸ்பென்சர் கூறியுள்ளார். 2009-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்சனல், நிறுவனங்கள், சட்ட அலுவலகங்கள், அரசு முகமைகள் போன்றவற்றுக்கு தடயவியல் பகுப்பாய்வுகளை செய்து கொடுக்கிறது. போஸ்டன் மாரத்தான் குண்டு வெடிப்பு போன்ற வழக்குகளில் ஆர்சனல் நிபுணர் சாட்சியம் அளித்துள்ளது.

இந்திய வழக்கில், தாக்குதல் நடத்தியவர்,  வணிகரீதியாகக் கிடைக்கும் நெட்வயர் என்ற நச்சு நிரலை பயன்படுத்தி, ரோனா வில்சனின் கணினிக்குள் புகுந்து, 2016 முதல் இரண்டு ஆண்டுகளாக அதைத் தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று ஆர்சனல் கூறியுள்ளது.

ரோனா வில்சனின் கணினியில், ஒரு மறைக்கப்பட்ட அடைவில் 22 கூடுதல் ஆவணங்கள் வைக்கப்பட்டன என்று சமீபத்திய அறிக்கை காட்டுகிறது. மாவோயிஸ்ட் போராளிகளின் சந்திப்பு என்று சொல்லப்பட்டவை பற்றிய விபரங்கள், மாவோயிஸ்ட் தலைவர்களுடனான தகவல் தொடர்பு என்று சொல்லப்பட்டவை, தடைசெய்யப்பட்ட அந்த அமைப்பு பெற்றுக் கொண்ட நிதி பற்றிய விபரங்கள் ஆகியவை அவற்றில் அடங்கியுள்ளன.

மடிக்கணினியின் விண்டோஸ் அடைவில் இன்னும் இரண்டு கோப்புகள் சேமிக்கப்பட்டுள்ளன. மற்ற 22 கோப்புகளைப் போல இல்லாமல், இந்த இரண்டு கோப்புகளும் குறிப்பாக நெட்வயரால்தான் வைக்கப்பட்டவையா என்பதை ஆர்சனலால் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், இந்த இரண்டு ஆவணங்களையும், கணினிக்கு சொந்தக்காரரான ரோனா வில்சன் பயன்படுத்தியது தொடர்பாக எந்த ஒரு தடயத்தையும் அது காணவில்லை. வழக்கமான பயன்பாட்டில் இல்லாத ஒரு செயலி அடைவில் இந்த இரண்டு ஆவணங்களும் இருப்பது “சந்தேகத்துக்குரியது” என்று ஆர்சனல் கூறியுள்ளது.

22 ஆவணங்களும் எவ்வாறு மடிக்கணினிக்குள் வைக்கப்பட்டன என்பது பற்றிய ஆர்சனலின் படிப்படியான விளக்கம் மிகத் தெளிவாக உள்ளது. இந்தத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் அனைவரும் “இதே முடிவுகளைத்தான் வந்தடைவார்கள்” என்று கிரேசன் குழும நிறுவனங்களின் தலைவரும், மின்னணு தடயவியல் நிபுணருமான கெவின் ரிபா கூறியுள்ளார்.

ரோனா வில்சனின் கணினிக்குள் புகுந்து அதைத் தவறாகப் பயன்படுத்தியது, அதை விட விரிவான நச்சுநிரல் இயக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே. தாக்குதல் நடத்திய அதே நபர், ரோனா வில்சனின் சக குற்றம் சாட்டப்பட்டவர்களையும் குறி வைத்துள்ளார் என்று ஆர்சனல் கூறுகிறது. செயல்பாட்டாளர்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கும் 8 பேருக்கு, நெட்வயரை கணினியில் நிறுவும் சுட்டிகளுடன் கூடிய மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று அம்னஸ்டி இன்டர்நேஷனலின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

ஒரே இணைய முகவரிகள், கணினி நெறிமுறை முகவரிகள் பலவற்றை பயன்படுத்தி, செயல்பாட்டாளர்கள், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் என இருதரப்புமே குறி வைக்கப்பட்டுள்ளனர்.

இணைய நெறிமுறை முகவரிகளில் பெரும்பாலானவை, ஹோஸ்ட்செய்லர் என்ற வெப் ஹோஸ்டிங் மற்றும் விர்ச்சுவல் பிரைவேட் சர்வர் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டவை. ஹோஸ்ட்செய்லர் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்தது என்று அதன் இணையதளம் தெரிவிக்கிறது. இந்த அறிக்கைகள் பற்றி அதற்குத் தெரியுமா, அவற்றின் அடிப்படையில் ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க ஹோஸ்ட்செய்லர் மறுத்து விட்டது.

செயல்பாட்டாளர்களுக்கு எதிரான இந்த வழக்கு ஜனவரி 1, 2018 அன்று பீமா கோரேகான் என்ற கிராமத்தில் இந்தியாவின் சாதிய படிநிலை வரிசையில், கீழ்தட்டில் வைக்கப்பட்டிருக்கும் தலித்துகளால் கொண்டாடப்பட்ட ஒரு நினைவுநாள் நிகழ்வைத் தொடர்ந்து வெடித்த மோதலை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் கொல்லப்பட்ட இந்த வன்முறை தொடர்பான புலன்விசாரணை விரைவில், இந்திய அரசுக்கு எதிரான சதித்திட்டம் பற்றிய விரிவான விசாரணையாக விரிவடைந்தது.

இந்த மோதல், மத்திய இந்தியாவின் காடுகளில் முதன்மையாக செயல்படும், தடை செய்யப்பட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உடன் தொடர்புடையது என்று அரசு குற்றம் சாட்டியது. இந்த மாதத் தொடக்கத்தில், போராளிகளின் பொறியில் சிக்கி 22 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். கடந்த 4 ஆண்டுகளில் நடந்த மோசமான நிகழ்வு இது ஆகும்.

பீமா கோரேகான் வழக்கில், சமீபத்தில் சிறையிடப்பட்ட செயல்பாட்டாளர் 83 வயதான ஏசு சபை பாதிரியார் ஸ்டேன் சுவாமி. இந்தியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட மிக வயதான நபர் அவர்தான். பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டேன் சுவாமி, குளிக்கவும் கடிதங்கள் எழுதவும் பிறர் உதவி தேவைப்படுகிறது என்று பாதிரியாரும் அவரது நெருங்கிய நண்பருமான ஜோசப் சேவியர் கூறுகிறார். கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் போது ஸ்டேன் சுவாமி ஆறு மாதங்களுக்கு மேல் சிறையில் கழித்துள்ளார்.

ஸ்டேன் சுவாமி, இந்தியாவின் மிக ஏழ்மையான ஜார்கண்ட் மாநிலத்தில் வசிக்கிறார், அங்கு அவர் பழங்குடி சமுதாயங்களின் உரிமைகளுக்காக பணியாற்றி வருகிறார். பழங்குடி நிலங்களை கைப்பற்றுவதற்கு எதிராகவும், பழங்குடி இளைஞர்கள் அற்ப ஆதாரங்களின் அடிப்படையில் அல்லது ஆதாரங்களே இல்லாமல் கைது செய்யப்படுவதற்கு எதிராகவும் அவர் இயக்கங்களை நடத்தி வந்தார்.

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு பதிவு செய்த ஒரு காணொளியில், தானும் பிற செயல்பாட்டாளர்களும், இந்தியாவின் ஆளும் கட்சிக்கு எதிராக “தங்களது எதிர்க்கருத்தை சொன்னதாலும், கேள்விகளை எழுப்பியதாலும்” குறி வைக்கப்படுகிறோம் என்று சுவாமி கூறியிருந்தார்.

சமீபத்தில், சிறையிலிருந்து தொலைபேசியில் பேசிய போது, சுவாமியின் முக்கிய கவலை அவரது தோழர்களின் நலனும், அவர் நடத்திய அமைப்பின் நலனும்தான் என்று சேவியர் கூறுகிறார். தனது கடினமான, வலிமிகுந்த தருணங்களிலும் ஸ்வாமி “புகார் சொல்ல மாட்டார். அப்படிப்பட்ட மனிதர் அவர்” என்கிறார் அவரது நண்பர்.

washingtonpost.com ல் வெளியான நிஷா மசி, ஜோன்னா ஸ்லேட்டர் எழுதிய அறிக்கையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்