Aran Sei

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக போலி செய்தி – ஏஎன்ஐ நிறுவனம் மீது குற்றச்சாட்டு

பிரசல்ஸைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பான ‘ஐரோப்பிய ஒன்றிய டிஸ்இன்ஃபோ லேப்’ (EU DisinfoLab), இந்திய அரசு மற்றும் அதன் பிரதமர் நரேந்திர மோடியின் நலனுக்காக, இந்தியப் பங்குதாரர்கள் ஐரோப்பாவில் நடத்திய பிரமாண்டமான போலிச் செய்தி பிரச்சாரத்தைக் குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தப் போலிச் செய்திப் பிரச்சாரத்தில் முக்கியப் பங்காற்றியவர்களாக இந்தியாவின் பிரதான வீடியோ செய்தி நிறுவனமான ‘ஏசியன் நியூஸ் இண்டர்நேஷனல்’ (ANI) மற்றும் ஸ்ரீவஸ்தவா குழுமம் உள்ளன.

இதில் ஸ்ரீவஸ்தவா குழுமம், 2019 ஆம் ஆண்டு, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இருக்கும் வலது சாரி உறுப்பினர்களின் காஷ்மீர் பயணத்தை ஒருங்கிணைத்துக் கொடுத்ததால் சமீபத்தில் பிரபலமானது. ‘இண்டியன் க்ரானிக்கல்ஸ்’ (Indian Chronicles) எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, டிஸ்இன்ஃபோ லேப் அமைப்பு ஒரு வருடம் நடத்திய புலனாய்வை வைத்து, ஃப்ரான்ஸின் செய்தி நிறுவனமான லெ ஜூரால் பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது. போலிச் செய்திகளை ஆய்வு செய்யும் நிபுணர் ஒருவர் , “ அமெரிக்காவில் 2016ல் ரஷ்யா நடத்திய ஆப்ரேஷனுக்கு இருந்த தாக்கத்தோடும், அதற்கு இருந்த வரையெல்லையோடும்” இந்த இணையத்தின் போலிச் செய்திகள் பிரச்சாரத்தை ஒப்பிடலாம் என்றதாகத் தெரிவித்துள்ளது.

ஸ்ரீவஸ்தவாவால் நடத்தப்பட்ட போலி ஊடக இணையதளங்களும், அரசு சாரா அமைப்புகளும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைக் (MEP) கைக்குள் போட்டுக் கொண்டு, இந்தியாவிற்கு ஆதரவாக (அவ்வபோது பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக) தலையங்கங்களை எழுத வைத்து, அதை இணையதளங்களில் பதிவு செய்ததைக் குறித்து இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. ஏ.என்.ஐ இச்செய்திகளை ஐரோப்பிய ஊடகத்தில் இருந்து வரும் நம்பத்தகுந்த செய்திகள் என மேற்கோள் காட்டியது, இந்திய ஊடக நிறுவனங்கள், செய்தி சேனல்கள் செய்திகளின் உண்மைத்தன்மையைப் பரிசோதிக்காமலேயே அதைப் பரப்பின. இந்த மொத்த ஆப்ரேஷனுக்கும், இந்தியப் புலனாய்வுத் துறைக்கும் தொடர்பிருக்க வாய்ப்புள்ளது என லே ஜூர் அறிக்கை சொல்கிறது.

ஐரோப்பியத் தலைவர்களை வைத்து மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு திரட்ட இந்தப் பிரச்சார இணையம் அடிக்கடி பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது. 2019ம் ஆண்டு பொதுத் தேர்தல்களுக்கு முன் பாகிஸ்தானில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது இதற்கோர் உதாரணம். ஸ்ரீவஸ்தவா குழுமத்தால் நடத்தப்பட்ட ஈபி டுடே (EP today) எனும் போலி இணையதளம், ஐரோப்பிய பாரளுமன்றத்தைச் சேர்ந்த வலது சாரி தலைவர் ரைஸார்ட் ஸார்னெக்கி என்பவர் எழுதிய தலையங்கத்தை வெளியிட்டிருந்தது. ஸார்னெக்கி சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதரவாக எழுதியிருந்தார். ஏ.என்.ஐ – நிறுவனமோ இதைத் திரித்து, ஐரோப்பிய ஒன்றியம் மோடிக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்டிருப்பதாகச் சொன்னது. இதை எகனாமிக் டைம்ஸ் உட்பட பல ஊடகங்கள் வெளியிட்டன. அந்தச் செய்தி கோடிக்கணக்கான இந்தியர்களைச் சென்றடைந்தது.

பதினைந்து வருடங்களாக, ஸ்ரீவஸ்தவா குழுமத்தோடு தொடர்புடைய நிறுவனங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில், குறிப்பாக பாகிஸ்தானை அதிகாரமிழக்கச் செய்யும்படியான புகார்களைப் பதிவு செய்வதாக டிஸ்இன்ஃபோ லேப் அறிக்கை சொல்கிறது. ஸ்ரீவஸ்தவா குழுமத்தினர், இறந்து போன மனிதர்கள் மற்றும் அழிந்துபோன அரசு சாரா அமைப்புகளின் பெயர்களைப் பயன்படுத்தி தங்கள் வட்டாரத்தில் நம்பகத்தன்மையை உருவாக்கியதாகவும் அறிக்கை சொல்கிறது.
ஈபி டுடே தளத்தின் செயல்பாட்டை 2019 ஆம் ஆண்டு அம்பலப்படுத்திய அறிக்கையை அடித்தளமாக வைத்தே தற்போதைய அறிக்கை இயற்றப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் போலிச் செய்திகளைக் கையாளும் பணிக்குழுவான, ’ஐரோப்பிய வெளிநடவடிக்கை சேவை’யின் கிழக்கு திட்ட தகவல்தொடர்பு அமைப்பு, ரஷ்யா டுடே மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா நிறுவனங்களின் செய்திகளில் இருந்து நிறைய செய்திகளை நேரடியாக வெளியிடுவதை அம்பலப்படுத்தியது. இது குறித்து டிஸ்இன்ஃபோ லேப் விசாரணை செய்த போது, ஈபி டுடே இணையதளத்தில், “பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினர் குறித்தும், இந்தியா தொடர்பான வேறு விஷயங்கள் குறித்தும் தலையங்கங்கள் இருப்பது தெரிந்தது”.

மேலும், ஈபி டுடே, “ஸ்ரீவஸ்தவா குழுமத்தின் கொள்கை அமைப்பு குழுக்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களோடு தொடர்பில் இருப்பது ” புலனாய்வில் தெரிய வந்தது. ஸ்ரீவஸ்தவா குழுமத்தின் அரசு சாரா அமைப்பு ஒன்று தான் ஈபி டுடேவின் ஐ.பி முகவரியை பதிவு செய்திருக்கிறது. அறுபது நாடுகளில் குறைந்தபட்சமாக 265 போலி செய்தி தளங்கள் இந்திய அரசின் நலனுக்காக இயற்றப்படுவதை டிஸ்இன்ஃபோ லேப்பின் 2019 டிசம்பர் அறிக்கை அம்பலப்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஈபி டுடே தளமும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பிற தளங்களும் காணாமல் போயின.

2020-ன் புதிய அறிக்கையில், ஈபி டுடே இப்போது ஈயூ க்ரோனிக்கல்ஸ் (EU Chronicles) ஆக மாறியிருக்கிறது. 2020 ஆகஸ்ட் 14 அன்று, ஈயூ க்ரோனிக்கல்ஸின் ட்விட்டர் தளத்தில், தீவிர வலது சாரியான ஃப்ரெஞ்சு தலைவர் தியெரி மரியானி பேசும் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில், “ இந்திய சுதந்திர தினமான இன்று நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா உங்கள் தலைமையின் கீழ் சிறப்பாக இயங்குவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

இதே போல பிற வலது சாரி தலைவர்களான ஸார்னெக்கி மற்றும் இத்தாலியை சேர்ந்த ஃபுல்வியோ மார்டுசியெல்லோ ஆகியோர் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவையும் அந்த டிவிட்டர் கணக்கில் பார்க்க முடிந்தது. ஒரு மாதத்திற்கு பிறகு, நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கு மரியானி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ ஒன்று அப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. ஈயூ க்ரோனிக்கல்ஸில் எழுதப்பட்டிருந்த செய்திகள் பல பத்திரிக்கை அறிக்கைகளை அப்படியே எழுதியது போலவும், ரோபோட்களால் எழுதப்பட்டவை போலவும் இருந்தன.

 

குறைவான அளவிலேயே செய்திகள் வெளியிட்டிருந்தாலும், ஸார்னெக்கி மற்றும் மார்டுசியெல்லோ ஆகியோர் எழுதிய பல கட்டுரைகள் வெளியிடப்பட்டிருப்பது தெரிந்தது. காஷ்மீருக்கு பயணம் செய்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களில் மரியானி, ஸார்னெக்கி மற்றும் மார்டுசெல்லியோ ஆகிய மூவரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.என்.ஐ ஸ்ரீவஸ்தவாவுடன் இணைந்து வேலை செய்வதற்கு ஏதேனும் சாட்சிகள் இருக்கின்றனவா எனக் கேட்டதற்கு, டிஸ்இன்ஃபோ குழுவின் தலைவர் அலெக்ஸாண்ட்ரே ஆலஃபிலிப்பே, “அதைப் பற்றி நான் எதுவும் சொல்வதாக இல்லை. ஆனால், இந்த தகவல்களை நீங்கள் பார்க்க வேண்டும். மே மாதம் 6 ஆம் தேதி ஈயூ க்ரோனிக்கல்ஸ் தொடங்கியது. மே 11-ற்கு முன்னரே 3 ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுதிய 3 தலையங்கங்கள் வெளியிடப்பட்டிருந்தது. மே 12 ஆம் தேதி, ஈயூ க்ரோனிக்கல்ஸ் நம்பத்தகுந்த சுயாதீன செய்தி நிறுவனம் என்று ஏ.என்.ஐ சொல்கிறது” என்றார்.

ஸ்ரீவஸ்தவா எப்படி ஐரோப்பிய அரசியல்வாதிகளை இந்திய அரசின் நலன்களுக்கு ஆதரவளிக்க செய்கிறது என்பதை லே ஜூர் அறிக்கை காண்பிக்கிறது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஆங்கில உறுப்பினரனான ஜூலி வார்ட் என்பவை மடி ஷர்மா என்பவர் அணுகி சவுதி அரேபியாவில் பெண்களின் உரிமைகள் குறித்து ஒரு கட்டுரைக்கு இணை எழுத்தாளராக இருக்க முடியுமா எனக் கேட்டிருக்கிறார். (காஷ்மீர் பயணத்தை ஒருங்கிணைத்தவர்களின் ஒருவர் ஷர்மா). பின்னாட்களில், ஷர்மா அறிவுறுத்தியபடி ஒரு கேள்வியை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் முன் வைத்திருக்கிறார். “பிறகு, பாகிஸ்தானின் பலோசிஸ்தானில் இருக்கும் மனித உரிமை மீறல் குறித்து ஒரு கட்டுரையை இணைந்து எழுதும்படி கேட்டார். அது மிக பாரபட்சமானதாக இருந்தது, அசௌகரியமாக இருந்தது” என லே ஜூர் பத்திரிக்கையாளர்கள் ஆண்ட்வான் ஹஸ்தே மற்றும் நிகோலை க்வெனெல் ஆகியோரிடம் ஜூலி வார்ட் தெரிவித்துள்ளார். “நான் பாகிஸ்தான் அரசை விமர்சித்தாலும் கூட, நரேந்திர மோடியின் தேசியவாத, ஏதேச்சதிகார ஆட்சியை தான் அச்சுறுத்தலாக நினைக்கிறேன்” என்றும் கூறியுள்ளார். இந்த கட்டுரை ஷர்மாவிற்கும் ஈயூ க்ரோனிக்கலிற்கும் இருக்கும் இணைப்பை காண்பிக்கிறது.

இது குறித்து டிஸ்இன்ஃபோ லேப்பின் இயக்குநர் ஆலஃபிலிப்பே, ப்ரசெல்ஸில் இது போன்ற தலையங்கங்களை அடிக்கடி பார்க்க முடிந்தது என்று சொல்லியுள்ளார். “இதனால் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களுடைய அதிகாரத்தை முன்னிலை படுத்த முடியும், அதே சமயம் தலையங்கத்தை வெளியிடும் நிறுவனம் நம்பகத்தன்மையும் பெறும். இப்படி செய்வதனால் பாராளுமன்றத்தில் கேள்விக் கேட்கச் சொல்லி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் முன், அவர்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்கிறார்கள்” என்று கூறியுள்ளார். ஐரோப்பாவில் மென் – அதிகாரத்தை நிலைநாட்ட இந்திய ஏஜெண்டுகள் பயன்படுத்தும் தந்திரம் இது.

ஸ்ரீவஸ்தவாவின் போலிச் செய்திகள் பிரச்சாரத்திற்கு பின்னே இந்திய உளவுத்துறை இருக்கலாம் என லெ ஜூரின் அறிக்கை சொல்கிறது. இதை நிரூபிக்க பல உதாரணங்களை மேற்கோள் காட்டியுள்ளது. ஸ்ரீவஸ்தவா குழுவை நிறுவியவரின் மனைவியும், ஸ்ரீவஸ்தாவின் இயக்குநர்கள் குழுவில் ஒருவருமான ப்ரமிளா ஸ்ரீவஸ்தவா தொடர்புடைய ஒரு நிகழ்வில் பஞ்சாப்பை சேர்ந்த மனித உரிமை நிர்வாகமான சர்வதேச மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழு ஒரு அறிக்கை வெளியிட்டது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில், பஞ்சாப்பில் சிசுக்கொலை குறித்து பேசிய ஒரு குழந்தைநல மருத்துவரை ப்ரமிளா அச்சுறுத்தியதாக வழக்கறிஞர்கள் அமைப்பு சொன்னது. மருத்துவரின் ப்ரெசெண்டேஷனை பார்த்த ப்ரமிளா “இது இந்தியாவை குறித்து தவறான பிம்பத்தை உருவாக்குகிறது”, இதனால் “என்ன நடக்கப் போகிறது” என்பதை பார்ப்பீர்கள் என்று அச்சுறுத்தியிருக்கிறார். பிறகு, குழந்தைநல மருத்துவர் நாடு திரும்பிய பிறகு, அவரை உளவுத்துறையினர் விசாரித்திருக்கின்றனர்.

அங்குர் ஸ்ரீவஸ்தவா நடத்தும், ஸ்ரீவஸ்தவா குழுமத்தின் நிறுவனம் ஒன்று, இந்திய புலனாய்வு துறைக்கென சிறப்பாக நச்சுநிரலி (பிற கணினிகளை தாக்கும் மென்பொருள்) விற்பனை செய்கிறது. மேலும், சோசலிஸ்ட் வீக்லி, கல்சா அக்பர் லாஹூர், டைம்ஸ் ஆஃப் ஆசாத் காஷ்மீர் போன்ற போலி செய்தி இணையதளங்களையும் ஸ்ரீவஸ்தவா குழுமம் நடத்துவதாகவும், இவை இந்திய புலனாய்வு துறையோடு இணைப்பில் இருப்பவையாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் டிஸ்இன்ஃபோ அறிக்கை சொல்கிறது.

இது குறித்துக் கேட்ட போது ஆலஃபிலிப்பே, “இந்த ஆப்ரேஷனின் இயல்பு எங்களுக்கு இன்னமும் தெரியவில்லை. ஆனால், ஜெனீவாவிலும், ப்ரசெல்ஸிலும் இது மிக சௌகரியமாக இருப்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி ஒரு நடவடிக்கையை தக்க வைத்துக் கொள்ள சில கணினிகள் மட்டுமே போதுமானதாக இருக்காது என்பது உறுதி.

2020 டிஸ்இன்ஃபோ அறிக்கையில், ஈயூ க்ரோனிக்கல்ஸ் மற்றும் ஸ்ரீவஸ்தவாவுடன் தொடர்பிருக்கும் பிற நிறுவனங்களின் தளங்களில் வெளியாகும் செய்திகளை எல்லாம் திரித்து, ஐரோப்பாவில் மோடிக்கு ஆதரவிருப்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏ.என்.ஐ எப்படி உருவாக்குகிறது என்பது குறித்து விரிவாக உள்ளது. ஈயூ க்ரோனிக்கல்ஸில் வெளியாகும் செய்தியை ஏ.என்.ஐ திரித்து வெளியிடுவதை அடிப்படையாக வைத்து, ஜீ 5 நிறுவனம் ஒன்பது செய்திகளையும், யாஹூ நியூஸ் இண்டியா மற்றும் பிபி பிசினஸ் வேர்ல்டு நிறுவனங்கள் குறைந்தபட்சமாக 8 செய்திகளையும் வெளியிட்டிருக்கின்றன.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாள் மற்றும் டைம்ஸ் ஆஃப் இண்டியாவும் இதைப் போன்ற செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. ஆறு மாதங்களில் 13 முறைகள் ஈயூ க்ரோனிக்கல்ஸில் வெளியான செய்திகளை ஏ.என்.ஐ வெளியிட்டிருப்பதாக அறிக்கை சொல்கிறது. இப்படியான (யாருக்குமே தெரியாத ஒரு நிறுவனத்தின்) செய்திகளை ஏன் ஏ.என்.ஐ மறு வெளியீடு செய்கிறது என தெரியவில்லை – இது குறித்து லெ ஜூர் கேட்ட கேள்விகளுக்கு ஏ.என்.ஐ பதிலளிக்கவில்லை.

ஸ்ரீவஸ்தாவின் அரசு சாரா அமைப்புகளும், புதிதாக உயிர்ப்பிக்கப்பட்ட சர்வதேச நிறுவனங்களும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தில், இந்திய அரசின் அராஜகத்தை மறைத்து, பாகிஸ்தான் வன்முறையை மட்டுமே காட்ட முறைகேடு செய்திருக்கிறது. இந்தியாவின் போலிச் செய்தி இணையத்தின் பங்காக குறைந்தபட்சம் பத்து அரசு சாரா அமைப்புகள் இருப்பதாக டிஸ் இன்ஃபோ லேப்பின் அறிக்கை சொல்கிறது. இவற்றில் சில அமைப்புகள் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கின்றன, சில அமைப்புகள் இந்தியாவின் தேவைகளுக்காக செயல்படத் தொடங்குவதற்கு முன்னரே மூடப்பட்டிருக்கின்றன.

கேனர்ஸ் சர்வதேச நிரந்தர பழைமைவாத கழகம் எனும் ஃப்ரெஞ்சு அரசு சாரா அமைப்பு ( 2007ல் மூடப்பட்டது), பாகிஸ்தானை குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் தவறாக பேசவே ஸ்ரீவஸ்தவா அமைப்பால் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது.

இதைப் போலவே, 1970களில் அத்தனை நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொண்ட சமாதானம் குறித்து ஆய்வு செய்யும் கழகம் எனும் சர்வதேச அமைப்பை, ஜெனீவாவில் பாகிஸ்தானை விமர்சிக்க வேண்டும் என்பதற்காகவே உயிர்ப்பித்திருக்கிறது ஸ்ரீவஸ்தவா. இந்திய இணையத்தோடு தொடர்பிருக்கும் இணையதளங்களை பதிவு செய்ய இந்த அமைப்பின் மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெனீவாவில், இதைப் போன்ற அமைப்புகளை “அரசால் நடத்தப்படும்” அரசு சாரா அமைப்புகளை என்பர்கள் எனவும், இவை ஒரு நாட்டின் நலனிற்காகவோ, எதிரி நாட்டை பற்றிய பிம்பத்தை சேதம் செய்யவோ அரசால் நடத்தப்படுபவையாக இருக்கும் என அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும், இது ஐக்கிய நாடுகள் அல்லது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தின் எந்த விதிகளையும் மீறுவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஏ.என்.ஐ மட்டுமே ஜெனீவாவில் இந்த சந்தேகத்திற்குரிய அரசு சாரா அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வெளியிடுகிறது” எனும் டிஸ்இன்ஃபோ அறிக்கை, ஏ.என்.ஐ ஏஜென்சி வேலையே செய்திகளை திரித்தல் தான் என்கிறது. இப்படி ஜெனீவாவில் இருக்கும் அரசு சாரா அமைப்புகள் தொடர்பான செய்திகளை தாங்கள் திரிப்பதை தெரிந்தே தான் செய்கிறார்கள் என லே ஜூரின் செய்தியாளர் குனெல் விவரிக்கிறார். செப்டம்பர் மாதம், லகு லுஹானா எனும் நபர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில், உலக சூழல் மற்றும் வளங்களுக்கான கழகத்தின் சார்பாக பேசினார்.

இந்த அமைப்பு மேற்சொன்ன அமைப்புகளை போலவே ஸ்ரீவஸ்தவாவால் உயிர்ப்பிக்கப்பட்டது. லகு லுஹானாவின் உரை பாகிஸ்தானில் இருக்கும் சிந்தி சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுதல் குறித்ததாக இருந்தது. அதைப் பற்றி செய்தியும், ட்வீட்டும் ஏ.என்.ஐ வெளியிட்டது. “ஏ.என்.ஐ-யின் ட்வீட்டில் உலக சூழல் மற்றும் வளங்களுக்கான அமைப்பு குறிப்பிடப்பட்டிருந்தாலும், செய்தியில் வேறு ஒரு அமைப்பின் பெயர் இருந்தது. அந்தப் அமைப்பின் பெயர் உலக சிந்தி காங்கிரஸ்” எனும் குனெல், “ உலக சிந்தி காங்கிரஸ் குறித்து தேடிப் படித்து பார்த்தால், லகு லுஹானா தான் அதன் பொதுச் செயலாளர் என்பது தெரிகிறது. இப்படி செய்தியில் வேறு ஒரு அமைப்பின் பெயரை ஏ.என்.ஐ குறிப்பிட்டுள்ளதை பார்த்தால், உலக சூழல் மற்றும் வளங்களுக்கான அமைப்பின் இரட்டை வேடத்தை குறித்து ஏற்கனவே தெரிந்துள்ளது புரியும்.”

2019 ஆம் ஆண்டில், ப்ரசல்ஸை சேர்ந்த கொள்கை அமைப்புக் குழுவான தெற்காசிய ஜனநாயகக் குழுவின் அழைப்பின் பேரின், மரியானி ஜெனீவா சென்றிருக்கிறார் என்கிறார் லே ஜூரின் அறிக்கை. இந்த அமைப்பு முன்னர் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான பவுலோ கசகாவினால் உருவாக்கப்பட்டது. ஸ்ரீவஸ்தவா அலுவலகத்தின் முகவரியில் தான் இந்த அமைப்பின் முகவரியும் இருக்கிறது. இந்த அமைப்பின் டொமைன் பெயரும் நேரடியாக ஒரு இந்திய நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2019 செப்டம்பரில் மரியானியை விமானத்தின் முதல் வகுப்பில் ஜெனீவாவிற்கு அனுப்பிய தெற்காசிய ஜனநாயகக் குழு அவர் பயணத்திற்கும் போரைவேஜ் எனும் பிரம்மாண்ட விடுதியில் தங்குவதற்கும் ஆன செலவை ஏற்றுள்ளது. இத்தனை செலவும், ஜம்மு காஷ்மீர் குறித்து தெற்காசிய ஜனநாயகக் குழு ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக மட்டுமே. இந்த நிகழ்வு குறித்து, “ஸ்ரீவஸ்தவாவின் ஊடக குழுக்களும், ஏ.என்.ஐயும் செய்தி வெளியிட்டிருந்தன” என குனெல் தெரிவித்துள்ளார்.

“வெவ்வேறு பங்குதாரர்கள் இப்படி ஒருங்கிணைவதை இதற்கு முன் நாங்கள் எந்த ஆய்விலும் பார்க்கவில்லை. கடந்த பதினைந்து வருடங்களாக, ஒரு முறை அம்பலமான பிறகும் கூட, இவர்களால் இந்த ஆப்ரேஷனை தொடர்ந்து நடத்த முடிகிறது என்பது இண்டியன் க்ரோனிக்கல்ஸிற்கு பின்னே இருக்கும் நடிகர்களின் வசதியையும், உத்வேகத்தையும் தான் காண்பிக்கிறது. நாங்கள் அம்பலப்படுத்தியிருக்கும் மிகப் பெரிய இணையம் இது தான்” என்று அலஃபிலிப்பே சொல்கிறார்.

அனைத்து நாடுகளும் “போலிச் செய்திகளை தந்திரமாக பயன்படுத்தியிருக்கிறது” எனும் அலஃபிலிப்பே, “ உதாரணமாக, இதே போல பாகிஸ்தான் நலனிற்காக ஜெனீவாவில் இயங்கும் ஒரு ஆப்ரேஷனையும் கண்டுபிடித்தோம். எப்படி ஒரு நாடு மற்றொரு நாட்டிடம் இருந்து கற்றுக் கொண்டு, மாறிக் கொண்டு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இதே போன்றொரு பிரச்சாரத்தை சீனாவோ ரஷ்யாவோ செய்திருந்தால் என்ன ஆகும் என யோசித்துப் பாருங்கள். எப்படியான தலைப்புச் செய்திகள் வெளியாகும்?”

என கேள்வி எழுப்புகிறார். ஐரோப்பிய அமைப்புகள் இதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லும் ஆண்ட்வான் அலஃபிலிப்பே, “இதே நடிகர்கள், இதே தந்திரம் என இன்னும் ஒரு அறிக்கை அடுத்த வருடம் வெளியாகும் என்றால், அது ஐரோப்பிய ஒன்றியத்தின் தோல்வியே. வெளிநாடுகள் இப்படி இடையூறு செய்வது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரச்சினை இல்லை என்று தெரிந்துவிடும்” என்று கூறியுள்ளார்.

(தி கேரவன் இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்