Aran Sei

கர்நாடகாவின் கிசான் பஞ்சாயத்துகளில் – பழக்கமான, மனதை நொறுக்கும் கதை

image credit : thewire.in

ரேந்திர மோடி அரசு நிறைவேற்றிய சர்ச்சைக்குரிய மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தலைமையில் நடந்து வரும் கிசான் பஞ்சாயத்துகள் தொடர்பான பதிவு இது.

ஹுபாலி-தார்வாட்: மாலை 5 மணியளவில் பச்சை நிற விவசாயிகளின் கொடியால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வெள்ளை ஐ20 கார், ஒரு தலித் அமைப்பாளர், ஒரு வழக்கறிஞர், ஒரு பொறியாளர், இந்த பத்திரிகையாளர் என பலதரப்பட்ட பயணிகளால் நிரம்பியிருந்தது.

கர்நாடகாவில் தனது மூன்றாவது பெரிய பஞ்சாயத்துக்காக விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாயத்தை தார்வாடிற்கும் பின்னர் பெல்காமுக்கும் அழைத்துச் சென்ற ஒரு வாகன அணிவகுப்பில் எங்கள் கார் இருந்தது. ஹூப்லியின் மையப்பகுதியில் உள்ள கிட்டூர் சென்னம்மா சிலைக்கு மாலை அணிவதற்காக ஒரு துரிதமான இடைநிறுத்தத்துக்குப் பிறகு அணிவகுப்பு தொடர்ந்தது. விவசாயம், குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளின் புரட்சி ஆகியவை பற்றிய எங்கள் உரையாடல் தொடங்கியது.

image credit : thewire.in
‘நாங்கள் தார்வாடில் நுழையும் போது, விவசாயிகள், பெண்கள், தலித் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் காவல்துறையினர் ஆகியோரின் குழுக்கள் ராகேஷ் திகாயத்துக்காக காத்திருக்கிறார்கள்.’ – image credit : thewire.in

நாங்கள் ஹூப்ளி நகரத்தை தாண்டிச் செல்லும் போது, “பருத்தி, மிளகாய், பருப்பு, கம்பு, வெங்காயம், கோதுமை, மக்காச்சோளம் ஆகியவை எங்கள் பகுதியில் ஏராளமாக விளைகின்றன” என்று 42 வயதான விவசாயி வெங்கட் கவுடே பாட்டீல் கூறினார், .

“ஆனால் இங்கு இரண்டு விளைபொருட்களுக்குக் கூட குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

மேலும் தொடர்ந்து நாங்கள் பேசுவதற்கு முன்பு, அணி வகுப்பு ஹூப்ளி-தார்வாடின் புறநகரில் உள்ள அரை கிலோமீட்டர் நீளமான ஆனால் வெறிச்சோடி கிடக்கும் வேளாண் விளைபொருள் விற்பனை மையத்தைத் தாண்டிச் சென்றது. இது வடக்கு கர்நாடகாவின் மிகப்பெரிய மண்டிகளில் ஒன்றாகும், ஆனால் இங்கு விவசாயிகள் தமது விளைபொருட்களுக்கு அரசு நிர்ணயித்த விலைகளை பெறுவது அரிதானது.

“குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு நிமிடம் விட்டு விடுங்கள், கர்நாடக விவசாயிகள் மோசமான நெருக்கடியில் உள்ளனர். எடியூரப்பா அரசாங்கம் – ஆச்சரியப்படும் விதமாக ஐக்கிய ஜனதாதளம் ஆதரவுடன் – நிலச் சீர்திருத்த மசோதா-2020ஐ நிறைவேற்றியுள்ளது, இது விவசாயிகளுக்கு மரண அடியாகும், ஏனெனில் இது கார்ப்பரேட் மயமாக்கலையும் விவசாயம் சாராதவர்கள் நிலங்களை வாங்குதையும் அனுமதிக்கிறது” என்கிறார், தார்வாட் நீதிமன்றத்தில் செயல்படும் வழக்கறிஞர் கே.எச். பாட்டீல்.

“மெதுவாகவும், படிப்படியாகவும் விவசாயிகளுக்கான அனைத்து பாதுகாப்புகளும் நீக்கப்பட்டு விட்டன, நில உச்சவரம்பு வரம்புகள் கூட கர்நாடகாவில் தளர்த்தப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

வழக்கறிஞர்கள் கடந்த ஆண்டு முதல் விவசாயிகள் குழுக்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர், மோடி அரசின் மூன்று விவசாயச் சட்டங்கள் அவர்களை மேலும் நெருக்கமாக்கி விட்டன.

நாங்கள் தார்வாடுக்குள் நுழையும் போது, விவசாயிகள், பெண்கள், தலித் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், காவல்துறையினர் ஆகியோரின் குழுக்கள் ராகேஷ் திகாயத்துக்காக காத்திருக்கிறார்கள்.

அவர்களிடையே இருந்த, விவசாய பட்டதாரி ஆத்மானந்த், விவசாய பொருளாதார ரீதியாக தர்வாத் பகுதி ஒரு மாறிச் செல்லும் மண்டலமாக இருப்பது பற்றியும், இந்த முழு வட்டாரமும் விவசாயத்துக்கு உகந்தது என்பது பற்றியும் உரையாற்றுகிறார்.

“இங்குள்ள விவசாயிகள் தோட்டப் பயிர்களான வாழை, மாங்காய், மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை பயிரிடலாம். இந்தப் பகுதியில் பருத்திக்கு உகந்த கருப்பு மண்ணிலிருந்து துவரம் பருப்புக்கும் சோயா பீனுக்கும் கூட உகந்த சிவப்பு களிமண் வரை உள்ளது” என்று அவர் பேசினார்.

இங்கு நீர் வளமும், நல்ல பயிர் விளைச்சலும் உள்ளது. ஆனாலும் திகாயத்தை சந்திக்க வரும் பல விவசாயிகளின் கால்கள் வெடித்துள்ளன, செருப்புகள் பிய்ந்துள்ளன.

image credit : thewire.in
‘மேலும் கர்நாடகாவைப் பொறுத்தவரை, மாநிலத்தின் விவசாய சங்கங்கள் எங்கே உள்ளன. அவர்கள் இப்போதைய போராட்டத்தைப் பற்றி என்ன கருதுகிறார்கள்?” – image credit : thewire.in

 

ஏன் இந்த ஒத்திசைவு?

திகாயத்தின் மகா பஞ்சாயத்துகள் தொடர்பான ஒரு பொதுவான கேள்வி இதுதான்: பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் மத்தியில் அவரது செய்தி ஏன் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது?

கர்நாடகாவைப் பொறுத்தவரை, மாநிலத்தின் விவசாய அமைப்புகள் எங்கே, தற்போதைய கிளர்ச்சியைப் பற்றி அவர்கள் என்ன கருதுகிறார்கள்?

“1984 முதல் 1995 வரை விவசாய சங்கம் அரசியல் ரீதியாக மிகவும் சக்திவாய்ந்த, ஒன்றுபட்ட சக்தியாக இருந்தது, ஆனால் உள்மோதல்கள் காரணமாகவும், பதவி பேரங்கள் காரணமாகவும் இப்போது அதன் சுவடு மட்டும்தான் உள்ளது” என்று விவசாய சங்க உறுப்பினரான 46 வயதான அமின் பாஷா கூறுகிறார்.

இந்த பிரிவுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் கட்சிகள் தங்களுக்கான ஆதரவு தளங்களை உருவாக்கிக் கொண்டுள்ளன. இருப்பினும், டெல்லியின் எல்லைகளில் நடந்து வரும் விவசாயிகளின் புரட்சி கர்நாடகாவிலும் விஷயங்களைத் தூண்டிவிட்டிருப்பதாகத் தெரிகிறது.

“ராகேஷ் திகாயத் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, குறிப்பாக விவசாய அமைப்புகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறார். அவர்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது தலைமையின் கீழ் ஒன்றுபட்டு, வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துள்ளனர், ”என்று அமைப்பாளர்களில் ஒருவரான பச்சே நஞ்சுண்டசாமி கூறுகிறார்.

“விவசாயிகள் மட்டுமல்ல, தலித் குழுக்கள், தொழிற்சங்கங்கள், சோசலிச-சார்பு குழுக்கள், பெண்கள் இந்தப் பதாகையின் கீழ் ஒன்றிணைந்துள்ளனர், ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்று கோருகின்றனர்,” என்று அவர் கூறுகிறார், பெல்காம் இப்போது அதை காணப்போகிறது என்று மேலும் கூறினார்.

image credit : thewire.in
‘மாவட்ட நிர்வாகம், தந்திரமாக செயல்பட்டு கடைசி நிமிடத்தில்“ பந்தல் அல்லது ஷாமியானா ”போடுவதற்கான அனுமதியை ரத்து செய்தது, விவசாயிகளையும் பஞ்சாயத்தையும் வெயிலில் வாட விட்டது’. – image credit : thewire.in

 

பெல்காமை நோக்கி

பெல்காம் கரிசல் மண் கொண்ட கரும்பு நிலம். இந்தப் பகுதி மிக அதிக எண்ணிக்கையிலான கார்ப்பரேட் சர்க்கரை ஆலைகளையும் சுவையான நீரையும், நல்ல வானிலையும் கரும்புக்கு தரப்படும் குவின்டாலுக்கு ரூ 2,500 / என்ற சுரண்டல் விலையையும் கொண்டுள்ளது. கம்பு, சோளம் போன்ற பிற பயிர்களை பொறுத்தவரை, விவசாயிகள் சந்தையின் தயவில் உள்ளனர்.

ஏப்ரல் 17-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடும் ஒரு வெயில் நாளில், பயிர்களுக்கு நியாயமான விலையைக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகளின் அணிவகுப்பு மார்ச் 31 அன்று பெல்காம் வழியாக சென்றது. சேலை அணிந்த பெண்கள் முன்னணியில் இருந்தனர், அவர்களைப் பின் தொடர்ந்து ஒரு மாட்டு வண்டியில் ராகேஷ் திகாயத் சென்றார். அவர்கள் போகப் போவது உள்ளூர் கல்லூரி மைதானம் ஒன்றுக்கு. அது மகாபஞ்சாயத்துக்கான இடமாக இருந்தது.

மாவட்ட நிர்வாகம், தந்திரமாக செயல்பட்டு கடைசி நேரத்தில் ஒரு “பந்தல் அல்லது ஷாமியானா” போடுவதற்கான அனுமதியை வாபஸ் பெற்றது, விவசாயிகளையும் பஞ்சாயத்துக்களையும் வெயிலில் வாட விட்டது. ஆனால் இது அவர்களின் உறுதியை வலுப்படுத்தியது.

கூட்டம் உரைகளுடனும் முழக்கங்களுடனும் தொடங்கியது. ஒற்றை மரம் ஒன்றின் நிழலில், அப்பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் குழு ஒன்றை நான் கண்டேன்.

ராம்தூர் தாலுக்காவின் ஹலோல்லாலி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான விவசாயி பாலப்பா சுஞ்சானூர் தனது கதையை சொன்னார்: “நீர் மட்டங்கள் 600 அடிக்குக் கீழ் போய் விட்டன. கரும்பு பயிருக்கு கால்வாய் நீரைத்தான் நாங்கள் நம்பியுள்ளோம். நாங்கள் ஒரு ஏக்கருக்கு ரூ 50,000 செலவிட்டால், அதில் இருந்து 45-50 டன் கரும்பு கிடைக்கும். விலை மட்டும் பிரச்சினை அல்ல, சர்க்கரை ஆலைகள் எங்களுக்கு பணம் தருவதை தாமதப்படுத்துகின்றன, மேலும் எடையில் ஏமாற்றுகின்றன. ”

ஒவ்வொரு கிசான் பஞ்சாயத்திலும் இதுதான் செய்தி: இந்தியாவின் விவசாயிகள் சொற்ப ஊதியம், மோசமான கொள்கை, கார்ப்பரேட் சந்தை என்ற நச்சுக் கலவையுடன் போராடுகிறார்கள். சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் அரசியல் தேக்கத்தையும் இதில் சேர்க்கும் போது விஷயங்கள் மேலும் மோசமாகின்றன.

தி வயர் இணைய தளத்தில் வெளியான இந்திர சேகர் சிங்  எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்