Aran Sei

பாஜக நிர்வாகியாக இருந்தும் இஸ்லாமியர் என்பதால் கைவிடப்பட்டேன் – சிறைபட்ட பாஜக உறுப்பினரின் கதை

“மேலே உள்ள படம் கபில் மிஷ்ராவுடன் இருக்கும் புகைப்படம். இது ஜாபாராபாத் காவல் துறைக்கு உதவிய பொழுது. இது பாஜக கட்சி கூட்டத்தில் “அடுக்கடுக்காக புகைப்படங்களை தி வயர் பத்திரிகையாளர்களிடம் காண்பிக்கிறார் ஐம்பது வயதான ரைஸ் அஹமத். டெனிம் துணி வணிகம் செய்யும் அஹமத், சமூக செயல்பாடுகள் மற்றும் பாஜக கூட்டங்களில் தான் கலந்து கொண்டபொழுது எடுத்த புகைப்படங்களை ஜூன் 9 மாண்டொலி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் பகிர்ந்து கொண்டார்.

அஹமத் எப்பொழுதும் சமூக செயல்பாட்டில் ஈடுபாடு உள்ளவர். அவர் வசிக்கும் சுற்றம் உள்ள அனைவருக்கும் அஹமத் அறிமுகமானவர். அங்கு வசிக்கும் மக்களுக்கு படிவங்கள் நிரப்ப உதவுவது , ஓட்டுநர் உரிமம் பெற உதவுவது , பள்ளிக்கூடங்களில் சேர்க்க உதவுவது முதல் சுகாதார சீர்கேடுகளின் பொழுது மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டு அவற்றை சரி செய்வது என பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்.

சமூக அரசியல் ஈடுபாடு காரணமாக அங்குள்ள அரசியல் பிரமுகர்கள் தொடங்கி காவல் துறையினர் வரை நல்ல அறிமுகம் கொண்டவர். 2014 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். ஆனால் இன்றோ, 2014 முதல் இன்று வரை பாஜகவிற்காக உழைத்ததை நினைத்து வருந்தி வருகிறார்.

“நம் பிரதமர் ஒருவருக்காகவே நான் என்னை பாஜகவில் இணைத்துக் கொண்டேன். என் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கூட பாஜகவை சார்ந்தவர் தான். அதனால், இங்கு வாழும் மக்களுக்குத் தேவையானவற்றை இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் தான் பாஜகவில் என்னை இணைத்துக் கொண்டேன்” என்று கூறும் அஹமத் ஒரு நோட்புக் ஐ காண்பிக்கிறார். சிறையில் இருந்து வெளிவர ஜாமீன் , சிறையில் இருந்த காலத்தின் வாழ்வாதாரத்திற்காக குடும்பம் சந்திக்க நேர்ந்த கடன் என ஒரு பெரிய பட்டியலே அதில் குறிக்கப் பட்டிருந்தது. அனைத்தும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செய்யப்பட்ட உதவி.

செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட அனுபவ பாடத்தினால் ஒவ்வொருவரின் உண்மை முகத்தை உணர முடிந்தாதாக சொல்கிறார் அஹமத்.

என்ன நடந்தது :

ஒரு ஆண்டிற்கு முன், சீலாம்பூர் தொகுதிக்குட்பட்ட சவுகான் பங்கர் மண்டலத்தின் பாஜக பொது செயலாளராக இருந்திருக்கிறார். பிப்ரவரி 24 , 2004 அன்று இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வன்முறை டெல்லியை உலுக்கியபொழுது பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வந்தனர். அவர்களில் அஹமதும் ஒருவர். ஜாபாராபாத் பகுதியில் நல்ல அறிமுகமான அஹமத், அப்பகுதியில் உள்ள அக்கடே வாலி கல்லியில் எந்த வன்முறையும் நடந்து விடாமல் தடுக்க முயன்றுகொண்டிருந்தவர்களுள் ஒருவர். வன்முறையின் பொழுது 100 அவசர உதவியையும் நாடியுள்ளார்.

Ahmed with Jaffrabad police station SHO Lekhraj Singh.

 

” அது மிக பயங்கரமானதான ஒரு அனுபவம். எண்ணிலடங்கா முகமூடி அணிந்த நபர்கள் ‘ஹர ஹர மகாதேவ் ‘ ‘ ஜெய் ஸ்ரீராம்’ என வாள், இரும்பு கம்பிகளுடன் கூச்சலிட்டு கொண்டிருந்தததை கண்டபொழுது என் கைகளில் உள்ள முடிகள் சிலிர்த்துப் போய் நின்றன.

வன்முறைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்த பொழுது நூற்றுக்கும் மேலானவர்கள் பாதிக்கப் பட்டிருந்தனர். பலர் கொல்லப்பட்டிருந்தனர். எஞ்சியவற்றை சுதாரித்து எடுத்துக் கொண்டு மெதுவாக வடகிழக்கு டெல்லியும் அதன் மக்களும் மெல்ல இயல்பு நிலைமைக்கு திரும்ப ஆரம்பித்தனர். தேர்தல் நெருங்கிய நேரத்தில் மீண்டும் அதிகாரிகள் உஸ்மான்பூர் காவல் நிலையத்துடன் இனைந்து அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்ய ரைஸ் அஹமதை தொடர்பு கொள்ள தொடங்கினர். தேர்தல் முடிந்தவுடன் உஸ்மான்பூர் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் ஆஃபீசர் (SHO ) அஹமத் மற்றும் சிலரை அழைத்து நன்றியும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பதட்டத்துக்குரிய பகுதிகளில் மத நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட அமன் செயல் குழுவிலும் பல காலமாக உறுப்பினராக இருந்து வந்துள்ளார் அஹமத். இக்குழுவில் அப்பகுதிகளை சேர்ந்த காவல்துறையினர், சமூக பிரதிநிதிகள் முதல் பல அரசியல் கட்சி உறுப்பினர்களும் அடக்கம். குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்த பட்ட நேரம் அங்க வன்முறை நிகழாமல் இருக்க பல முறை அஹமதை ஜாபாராபாத் காவல் துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.

அமன் செயல் குழுவுடன் பணியாற்றிய வேளையில் பல காவல் துறை துணை ஆய்வாளர்களையும், கபில் மிஸ்ரா , மனோஜ் திவாரி போன்ற பாஜக நிர்வாகிகளையும் சந்தித்துள்ளார். மரியாதையுடனும் கண்ணியத்துடனும் எப்பொழுதும் நடத்தப்பட்ட பழக்கப்பட்ட காவல் நிலையத்தாலயே கைது செய்ப்படுவோம் என்று கனவிலும் அப்பொழுதும் நினைத்திருக்கவில்லை அஹமத்.

Rais Ahmed with Kapil Mishra.

 

தேர்தல் முடிந்த பின், 21 ஏப்ரல் 2020 அன்று இரண்டு காவல் துறையினர் அஹமதின் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் அஹமத் இல்லாததை கூறிய மனைவியிடம் ஜாபாராபாத் காவல் நிலையத்தின் புதிய SHO அஹமதை பார்க்க வர சொன்னதாக சொல்லி சென்றனர்.

சட்டத்தை மதிக்கும் அஹமத், தகவல் அறிந்தவுடன் மற்றொரு பாஜக நிர்வாகியான சர்தாஜ் அஹமதுடன் காவல் நிலையத்திற்கு சென்றார்.

காவல் நிலையம் சென்ற அஹமதை காவல் துறையினர், ஒரு சில காணொளியில் இருக்கும் நபர்களை அடையாளம் காண்பித்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் காண்பித்தது பிப்ரவரி 24 அன்று தன் தெருவினருக்கே அஹமத் நிற்கும் காணொளியை. அதனடிப்படையில் அஹமத் மூன்று நாள் தடுப்புக்கு காவலில் வைக்கப்பட்டார். பின்னர், அதையே ஆதாரமாக கொண்டு மாண்டொலி சிறைக்கு மாற்றப்பட்டார்.

ஒரு மாத சிறை வாசத்திற்கு பிறகு பெருந்தொற்று காரணமாக சிறைகளில் ஆட்குறைப்பு என்ற அடிப்படையில் பிணையில் விடுவவிக்கப் பட்டார். பின்னர் மீண்டும், ஜூலை 22 ஆம் நாள் குற்றவியல் துறை மூலம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திவாரகாவிலுள்ள குற்றவியல் துறைக்கு சென்ற அஹமதிடம் அதே முப்பது வினாடி காணொளியைக் காண்பித்துள்ளனர். தன் தெருவின் வாயிலில் கம்புடன் நிற்பது போன்ற ஒரு காணொளி. அவர் வைத்திருந்த கம்பு அங்கு வன்முறையில் ஈடுபட முயன்ற சிலரிடம் இருந்து கைப்பற்றியது என்றபோதிலும், முப்பது வினாடி காணொளியில் அடிப்படையில் கொலை குற்றம்சாட்டப்பட்டு ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார்.

துரோகம் :

மாண்டொலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்றும், வன்முறை மற்றும் கலவரத்தில் 19 மசூதிகள் தீயிற்கு இரையாக்கப்பட்டிருந்தன. ஒரு கோவில் கூட பாதிக்கப்படவில்லை, இருப்பினும் கைது செய்யப்பட்டதும் குற்றச்சாட்டப்பட்டதும் இஸ்லாமியர்கள் மட்டுமே என்றும் விரக்தியில் பதிவு செய்கிறார் அஹமத்.

அஹமதின் குடும்பம் தற்பொழுது பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. பிணைக்கான தொகை, மகளின் காசநோய்க்கான சிகிச்சை செலவு, ஒரு வருடத்திற்கான மனைவி மற்றும் மூன்று பதின்ம வயது பிள்ளைகளுக்கான செலவுகள் என அனைத்தும் பெரும் கடனுக்குள் தள்ளியுள்ளது.

“யாரும் எங்களுக்கு உதவவில்லை. இத்தனை காலம் நான் பணிபுரிந்த அதிகாரிகள் , கட்சிக்காரர்கள் முதற்கொண்டு யாரும். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமணத்துல்லாஹ் கான் மட்டும் ரூ 25 ,000 கொடுத்து உதவினார். பிணைத்தொகைக்கு உறவினர்களிடம் மன்றாடி பெற்றோம்.” என்கிறார் அஹமத்.

” சுற்றம், காவல் துறை, அரசியல்வாதிகள் என எல்லோருக்கும் தேடி தேடி சென்று உதவியதற்கு இதுதான் அவருக்கு கிடைக்கும் கைமாறா? ” என்று விரக்தியில் கேள்வி எழுப்புகிறார் அஹமதின் மனைவி ஷாஹினா. பிப்ரவரி 2020 கு பிறகான நிகழ்வுகள் நாட்டை நகர்த்தி கொண்டு இருக்கும் திசையைக் கண்டு மிகவும் வருத்தப்படும் ஷாஹினா, “முன்னெல்லாம் எல்லோரும் நட்புறவுடன் இருந்தோம், ஆனால் இன்று இவர்கள் மதம் என்ற பெயரில் வெறுப்பை விதைக்கின்றனர் ” என்கிறார் ஷாஹினா.

உண்மை உணர்தல் :

பாஜக உறுப்பினராக இருந்தும் மதம் என்ற ஒற்றை காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து 2014 கு பிறகான ஆட்சி ஹிந்து பெரும்பான்மையை மேலாதிக்கத்தை நோக்கியதாக மட்டுமே இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டதாக கூருகிறார். ” தொப்பியும் தாடியும் அணிந்து கொண்டு நடமாடவே பயமாக இருக்கிறது. இதுவா சுதந்திர இந்தியா? ” என்று கேள்வி எழுப்புகிறார் அஹமத்.

Ahmed’s membership cards for the BJP and Aman Action Committee

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின், உற்றார் உறவினர்களின் கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இயங்கும் ஒரு கட்சியில் இனைந்து பணியாற்றியதின் விளைவுதான் என்ற விமர்சனங்கள், பாஜகவில் ஒரு இஸ்லாமியரின் நிலை என எல்லாப்பக்கமும் துளைத்து எடுத்துக் கொண்டே இருக்கின்றன.

” நான் எப்பொழுதும் என் தேசத்தையே முதன்மையாக வைத்திருக்கிறேன். ஆனால் இந்த கைது சம்பவம் இங்கே எனக்கு என் மதம் தவிர வேற அடையாளம் இல்லை என்பது போல உணர வைக்கிறது. இஸ்லாம் என்னை என் நாட்டை நேசிக்க சொல்கிறது, அதன்படி நான் என் நாடை நேசிக்கிறேன். ஆனால் , இனிமேல் யாரை நம்புவது என்று தெரியவில்லை. ஆளும் அரசின் மீது நம்பிக்கை வைத்ததற்கு அவமானம், வஞ்சம், சிறை ஆகியவற்றை சந்தித்தது மட்டுமே மிச்சம்” என்கிறார் அஹமத்.

தி வயர் இணையதளத்தில் சுயாதீன பத்திரிகையாளர் தருஸ்ரீ அஸ்வானி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்.  

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்