Aran Sei

‘ஒருத்தரைக் கீழ இறக்கி மேல ஏற ஆசப் பட மாட்டேன்!’ – `கானா’ இசைவாணியின் வெளியேற்றமும், தட்டிக் கேட்காத `மய்யம்’ கமல் ஹாசனும்!

டந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு 100 நாள்கள் என்ற வகையில் சிறப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. `தப்புன்னா தட்டிக் கேட்பேன்’ என்று கமல் ஹாசன் சொல்வது போன்ற விளம்பரங்களுடன் பிரபலப்படுத்தப்பட்டது பிக் பாஸ். மேலும், சமூகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றமாக இந்த நிகழ்ச்சி இருக்கும் எனக் கூறப்பட்டாலும், பெரும்பாலும் எலைட்களின் சொகுசு விளையாட்டாகவே இருந்து வந்திருக்கிறது பிக் பாஸ்.

இந்த ஆண்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனின் போட்டியாளர்களுள் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் இசைவாணி. இயக்குநர் பா.ரஞ்சித் நடத்தி வரும் `தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற இசைக் குழுவின் மூலம் பிரபலமானவர் இசைவாணி. கானா பாடும் தமிழ்ப் பெண்ணான அவர் கடந்த 2020ஆம் ஆண்டு பிபிசியின் டாப் 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றார். சனாதனம், சாதி, மாட்டுக்கறி, சபரிமலை விவகாரம் முதலானவை குறித்த தனது துணிச்சலான பாடல்கள், மேடையில் அவரது உடல்மொழி முதலானவற்றின் அடிப்படையில் இசைவாணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே இருந்தது. பிற போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிறகு, இசைவாணி அனைவரையும் விட வயது குறைந்தவர் என்று தெரிய வந்தது.

ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்

தங்களைப் பற்றி அறிமுகப்படுத்தும் முதல் டாஸ்கில் மிகச் சிறப்பாகத் தன் வாழ்க்கையைக் குறித்து பிக் பாஸ் மேடையில் பதிவு செய்து, தன் வாழ்வின் சோகமான பக்கங்களைப் பார்வையாளர்களுக்குக் கடத்தினார் இசைவாணி. பொதுவாகவே பிக் பாஸ் வீட்டில், சற்றே எலைட் மனநிலை கொண்ட போட்டியாளர்கள் தங்களுக்குள் மட்டுமே பேசிக் கொள்வதும், பழகிக் கொள்வதும் வழக்கம். அது இந்த முறையும் தொடர்ந்தது. இசைவாணி, சுருதி, சின்னப் பொண்ணு, தாமரை செல்வி ஆகியோர் தங்களுக்கென்று நிரந்தரமான நண்பர்கள் இல்லாமல் பெரும்பாலும் தனித்து விடப்பட்டிருந்தனர். இமான் அண்ணாச்சி ராஜூ, சிபி முதலானோருடன் இருந்தது அவருக்குப் பாதுகாப்பாக அமைந்துவிட்டது.

போட்டியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, போட்டியாளர்கள் தங்களை அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க கடுமையாக முயன்றனர். தொடக்கத்தில் இருந்த இசை படிப்படியாக மாறத் தொடங்கினார். நாணயத்தைக் கைப்பற்றும் விளையாட்டில் இசையிடம் அண்ணாச்சி, ராஜூ ஆகியோர் நாணயத்தை எடுத்துக் கொடுப்பதாகக் கூறி, பிறகு அவரை நம்ப வைத்து ஏமாற்றினர். தொடர்ந்து ஒவ்வொருவரிடமும் நம்பி ஏமாந்து கொண்டிருந்த இசைக்கு இறுதியில் சிபி நாணயத்தைக் கொடுத்தார். இசையிடம் இருந்து நாணயத்தைப் பறித்த அபிஷேக் வெளிப்படையாகவே இசைக்கு எதுவும் தெரியாது என்ற ரீதியில் பேச, இசை அபிஷேக்கை எதிர்த்து தன் நாணயத்தை மீண்டும் பெற்றுக் கொண்டார்.

ஆளுமை டாஸ்க் முதலில் அறிவிக்கப்பட்ட போது, அதில் முதல் போட்டியாளராக இசைவாணிக்கு ஆளுமை வழங்கப்பட்டது. எனினும் போட்டியின் விதிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்படாமல் இருந்ததால், இசைவாணி தடுமாறினார். `எச்சில் துப்பாதீர்’ என்று எழுதினால் மட்டுமே எச்சில் துப்பாமல் இருப்போம் என்ற ரீதியில் ஆட்ட விதிகளைத் தங்களுக்கேற்ப மாற்றி மாற்றி விளையாடும் இந்த சீசனின் போட்டியாளர்கள், இசைவாணியையோ, அவரது ஆளுமையையோ துளியும் மதிக்கவில்லை. உணவுப் பொருள்களைப் பாதுகாக்கும் பொறுப்பு என்பதால் இசைவாணி மீது கடுமையாகக் கோபம் கொண்டனர் சில போட்டியாளர்கள்.

பெரியார் : இந்துத்துவத்திற்கு எதிரான பாதுகாப்பு அரண் – ர.முகமது இல்யாஸ்

இதன் உச்சமாக, இசைவாணியைச் சர்வாதிகாரி என்று அழைத்தார் இமான். விளையாட்டு தொடங்கிய சில நாள்களிலேயே, இமான் இசைவாணியைக் குறிவைத்தவாறே இருந்தார். இசைவாணி பாடும் போது கேலி செய்வதில் தொடங்கி, அவரைப் பற்றி புறம் பேசுவது என அவரது விளையாட்டு முழுவதுமாக இசைவாணியை ஒடுக்குவது மட்டுமே என்ற புள்ளியில் வந்து நின்றது. போட்டியில் எப்போதும் கோபப்படுவதையும், அழுவதையும் மட்டுமே பணியாகக் கொண்டிருக்கும் பாவ்னி ரெட்டி, அக்‌ஷரா ரெட்டி ஆகியோர் கோபப்பட்ட போது அவர்களை யாரும் `சர்வாதிகாரி’ என்றோ, அழுத போது `தொட்டால் சிணுங்கி’ என்றோ விமர்சிக்கவில்லை. இந்த விமர்சனங்கள் இசைவாணிக்கு நேரடியாக இமான் அண்ணாச்சியால் கொடுக்கப்பட்டவை.

இசைவாணியைப் பேச விடாமல் பேசுவதில் தொடங்கி, தன்னை ஏழரை கோடி தமிழ் மக்களுக்குத் தெரியும் என்றும், உன்னை யாருக்குத் தெரியும் என்ற ரீதியிலும் இசைவாணியை நோக்கிப் பேசிய இமான் நிகழ்ச்சி தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கையில், தன் வன்மத்தைக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இசைவாணியின் மீது வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். அதன் உச்சமாக, கீழே அமர்ந்திருந்த இசைவாணியின் முகத்திற்கு நேராக கால் நீட்டி அவரைக் கடுமையாக அவமானப்படுத்தினார் இமான். வழக்கமாக, பிக் பாஸ் வீட்டிற்குள் இப்படியான அத்துமீறல்கள் நிகழ்ந்தால், அவை நிகழ்ச்சியின் விளம்பரமான ப்ரோமோக்களில் இடம்பெறும்; பேசுபொருளாக மாறும். ஆனால் இந்த அவமானப்படுத்தல் நிகழ்வு பெரிதாகக் கண்டுகொள்ளப்படவே இல்லை. இசைவாணி தனக்கு அது பிடிக்கவில்லை என்று வெளிப்படுத்திய போதும், போட்டியாளர்கள் ஒருவரும் அவருக்கு ஆதரவாக நிற்காமல் இருந்ததும் கவனிக்கத்தக்கது. இந்தச் செயல்பாடுகளின் பின்னணியில், சாதிய பாகுபாடு இல்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது.

சில வாரங்களுக்கு முன் வெளியேறிய நாட்டுப்புறப் பாடகி சின்னப்பொண்ணு, பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த வரை இசைவாணியின் மீது பொறாமை கொண்டவராகவே இருந்தார். இசைவாணியைப் பற்றி புறம் பேசுவதற்காகவே அவரும், இமான் அண்ணாச்சியும் இணைந்து கொள்வார்கள். இசையைப் பாட விடாமல், அவரது சூழலை மன அழுத்தம் நிறைந்ததாக மாறியதில் இவர்கள் இருவருக்கும் பெரும்பங்கு உண்டு.

இசைவாணி வெளியேறிய வாரத்தில், அவருக்கும் தமிழ்நாட்டு இல்லத்தரசிகளின் பிரதிநிதியாகக் கருதப்படும் தாமரை செல்விக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியது. இசைவாணியின் உடல்மொழி தாமரை செல்விக்குப் புரியாததாலும் இந்தச் சிக்கல் மேலும் அதிகமானது. பிம்பம் காட்டும் கண்ணாடியாக, இசைவாணி குறித்து தாமரை பேசியவற்றில் வன்மம் வெளிப்பட்டிருந்தாலும், இசைவாணியை வெறுப்பேற்ற அவர் பாடிய பாடல்கள், அவற்றில் இடம்பெற்றிருந்த வரிகள் முற்றிலும் தவறானவை. இசைவாணியை நோக்கி `சிறுக்கி’ என்று அழுத்திப் பாடினார் தாமரை. பிற போட்டியாளர்கள் யாரும் இதிலும் தலையிடவில்லை. தாமரை இவ்வாறு செயல்பட்டும், அவரைப் பழிவாங்கும் விதமாக இசைவாணி நடந்துகொள்ளவில்லை. நிரூப் – அபினய் ஆகியோரைப் போல இல்லாமல், இசைவாணி `வெற்றி பெறுவதற்காக என்னால் கேவலமாக நடந்துகொள்ள முடியாது’ என்று வெளிப்படையாகவே கூறினார். தன் பிம்பமாக இருந்த தாமரை செல்வியைப் பெரிதாக எந்த வேலையும் செய்ய விடாமல் இருந்த இசைவாணி, அதற்காகவும் தாமரையால் குறிவைக்கப்பட்டார்.

கடந்த வாரம் நடந்த இந்த விவகாரங்கள் எதையுமே கண்டுகொள்ளாமல் தன் காந்திய முகத்தைக் காட்டி, இமானை வைத்து சிரிப்பு விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன். தொடர்ந்து இசைவாணி நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். இசைவாணி வெளியேறியதும், அபிஷேக் ராஜா மீண்டும் உள்ளே நுழைந்ததும் தற்செயல் என்று கருதவில்லை. இந்த விளையாட்டு இன்னும் மோசமாக மாறப் போகிறது என்பதையும், இதில் இருந்து இசைவாணி தப்பிவிட்டார் என்பதையும் இது உணர்த்துவதாகத் தோன்றுகிறது.

`சர்தார் உத்தம்’ – பிற தேச பக்தி திரைப்படங்களில் இருந்து ஏன் மாறுபடுகிறது?

இசைவாணி வெளியேற்றப்படுகிறார் என்று தெரிந்தவுடன், ராஜுவிடம் இரண்டு முறை சிக்னல் கொடுத்து வெற்றிக் களிப்பைக் கொண்டாடினார் இமான். இத்தனை கேமரா இருந்தும், அந்த நிமிடங்களில் அவரது சாதிய வன்மம் மறையாமல் வெளிப்பட்டது. முதல் முறை கண்டுகொள்ளாத ராஜு, இரண்டாவது முறை இமானை வெளிப்படையாகக் கண்டித்தார். இமான் மழுப்பலாகப் பேச, விவகாரம் அதோடு முடிந்து போனது. அபினயிடம் இசைவாணி வெளியில் செல்லும் போது, தன் நாணயத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார். ஆனால் அது விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்று கூறப்பட்டு, அபினய் மீண்டும் இசைவாணியிடமே நாணயத்தைத் தர வேண்டியிருந்தது. நடந்த இந்த விவகாரங்கள் எதுவும் தெரியாத இமான், இசைவாணி வெளியேறிய பிறகும் தன் வன்மத்தைக் கக்கியபடி, இசைவாணி குறித்து அவதூறு பேசிக் கொண்டிருந்தார்.

இசைவாணி இடம்பெற்றிருந்த பிக் பாஸ் ப்ரோமோக்களின் கமெண்ட்களில் அவரைக் குறித்து சாதி வெறியர்கள் கடுமையாக `ருத்ர தாண்டவம்’ ஆடிக் கொண்டிருந்தார்கள். வெளியில் நிலைமை இப்படியிருக்க, உள்ளே இசை தான் ஒடுக்கப்படுகிறோம் என்பதுகூட தெரியாமல், வெள்ளந்தியாக இத்தகைய மனிதர்களோடு பழகிக் கொண்டிருந்தார். குழப்ப மனநிலையில் இசைவாணி இருப்பதாகத் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருந்தவர்களிடம் தான் குழம்பவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு வெளியேறும் போதும், தாமரை செல்வியை `நீயும் நானும் ஒரே செட்டு’ என்று தங்களை எலைட் அல்லாதவர்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லி, பகையை மறந்து வெளியேறினார்.

ஒருபக்கம் இமான், சின்னப் பொண்ணு, தாமரை ஆகியோரால் ஒடுக்கப்பட்டாலும், மற்றொரு பக்கம் ப்ரியங்கா, சிபி, சுருதி முதலானோர் இசைவாணிக்கு ஆதரவாகப் பல சந்தர்ப்பங்களில் உடனிருந்தார்கள். பிக் பாஸ் டைட்டிலை வெல்வதை விட, இத்தகைய மனிதர்களிடம் இருந்து தப்பி, தன் மனநலத்தை இசைவாணி பாதுகாத்துக் கொண்டதே ஆசுவாசம் தருவதாக இருக்கிறது. நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போது, இசைவாணி பாடிய கானா பாடல் இந்த நிகழ்ச்சியைப் பற்றியது அல்ல என்று அவர் கூறினாலும், அவரது பாடல் அவருக்கு நேர்ந்த அனைத்து பிரச்னைகளைக்கும், பிக் பாஸ் வீட்டிற்கும் பொருந்துவதாகவே இருந்தது.

சர்வதேச அளவில் நடைபெறும் பிக் பாஸ் போட்டிகளில் இதுவரை ஒரே ஒரு கறுப்பினத்தவர் மட்டுமே வென்றிருக்கிறார். வெள்ளையினப் போட்டியாளர்களால் மிகச் சிறப்பாக விளையாடிய கறுப்பினப் போட்டியாளர்கள் பலர் விளையாட்டின் பாதியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டின் வடிவமே இத்தகைய மறைவான ஒடுக்குமுறையை ஊக்குவிப்பதாகவே இருந்திருக்கிறது. வயதில் மிகக் குறைந்த பெண்ணாக இருந்தும், இதில் 50 நாள்கள் வரை, தாக்குப்பிடித்து சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார் இசைவாணி.

இசைவாணியின் குரல் ஒலிக்க வேண்டிய மேடை பிக் பாஸ் வீடு மட்டுமே அல்ல. அந்த மேடை மக்களின் முன் பரந்து விரிந்திருக்கிறது. இசைவாணியின் இசையை மேலும் கொண்டாடக் காத்திருக்கிறது.

கட்டுரையாளர் – ர. முகமது இல்யாஸ்.

ஊடகவியலாளர், தமிழின் முன்னனி பத்திரிகைகளில் எழுதி வரும் இவர் தற்போது ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்