Aran Sei

ஹைதராபாத் தேர்தல் – நிரூபித்த ஓவைசி; கால்பதித்த பாஜக; காணாமல் போன காங்கிரஸ்

நூறு வார்டுகளில் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்பட்ட தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி, 55 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. (ஹைதராபாத்) மாநகராட்சியில் 150 வார்டுகள் இருக்கும் நிலையில், 75 எனும் மந்திர எண்ணில் இருந்து டிஆர்எஸ் தூரத்தில் தான் உள்ளது.

துபக் இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது தற்செயலானதல்ல என்பதை நிருபிக்கும் விதமாக ஹைதராபாத் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றி விகிதம் இருக்கிறது. துபக்கின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் பாஜகவினருக்கு 50-ற்கு இரண்டு வார்டுகள் மட்டுமே குறைவாக (48 வார்டுகளில்) வெற்றி கிடைத்திருப்பது – அதாவது, ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கை வென்றிருப்பது – இரட்டை கொண்டாட்டமாக இருக்கும். 2016 ஹைதராபாத் உள்ளாட்சி தேர்தலோடு ஒப்பிடும் போது இப்போது பலமடங்கு அதிக வளர்ச்சி அடைந்திருப்பதால் இந்த வெற்றியை பாஜக-வினர் பிரம்மாண்டமானதாக நினைப்பார்கள்.

தேர்தலின் இறுதி முடிவுகள் வரும் போது, அது ஆளும் கட்சிக்கு ஒரு எச்சரிக்கையாகவே இருக்கும். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற இடங்களில் பாதியை (44 இடங்களை) எதிர்க்கட்சிகளிடம், குறிப்பாக பாஜகவிடம் இழந்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் தெலுங்கானா சட்டசபை தேர்தல்களில் ஒரு பிரதான கட்சியாக உருவெடுக்க வேண்டும் என செயல்படும் பாஜகவிற்கு 48 வார்டுகள் வெற்றி அக்கட்சியின் உத்வேகத்தை தூண்டுவதாக இருக்கிறது.

ஒவ்வொரு கட்சிக்கான தேர்தல் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து பார்க்கும் போது, உள்ளாட்சி தேர்தல் முடிவிற்கு பின் பல காரணங்கள் இருப்பது தெரிகிறது. முதல் காரணம், பாஜக இரண்டு வாரங்கள் பிரச்சாரம் செய்த போது, தேசியவாத உணர்வை தூண்டியது, டி.ஆர்.எஸ் மற்றும் எம்.ஐ.எம் நட்பை பகிரங்கமாக தாக்கிக் கொண்டிருந்தது.

இரண்டு கட்சிகளுக்குள் இருந்த அதிகாரப்பூர்வமற்ற ஒப்பந்தத்தை பாஜக தலைவர்கள் ‘புனிதமற்ற நட்பு’ என்றனர். இந்த யுக்தியை வைத்துக் கொண்டு பாஜக தலைவர் பண்டி சஞ்சய், தந்தை-மகன் கூட்டணியான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அமைச்சர் கே.டி.ராமா ராவ் ஆகியோரின் செல்வாக்கை காலி செய்தார்.

இனவாத வெறுப்பை தூண்டியதோடு, சமீபத்திய வெள்ளத்தின் போது மக்கள் முறையே பாதுகாக்கப்படாதது, வெள்ள நிவாரணம் சில பகுதிகளின் கொடுக்கப்பட்ட முறையின் மீதான விமர்சனங்கள் என அரசின் மீது மக்கள் கோபத்தை திருப்பியது அரசுக்கு சாதகமாக அமையவில்லை. பாஜக, தன் ஆக்ரோஷமான பிரச்சார பாணியை வைத்து வாக்காளர்களை ஈர்த்தது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா போன்றோர் மதவாதத்தை வைத்து சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்தார்கள்.

ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதிகளில் டி.ஆர்.ஆஸ்-ன் வெற்றி வாய்ப்பை குறைத்தது, நிலம் முறைபடுத்துதல் திட்டம் (எல்.ஆர்.எஸ்) . புறநகர்ப்பகுதிகளில் சில தொகுதிகளின் வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் வென்றிருக்கிறார்கள். எல்.பி.நகர் சட்டசபை தொகுதியின் சில பகுதிகளிலும், வெள்ள மீட்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்தாதற்கான விலையை டி.ஆர்.எஸ் கொடுத்துள்ளது.

பாஜகவின் ஆக்ரோஷமான பிரச்சாரத் திட்டத்துடன் டி.ஆர்.எஸ்-ன் வளர்ச்சித் திட்டங்கள் போட்டியிடமுடியவில்லை. பாஜக தலைவர்களின் சூழ்ச்சியான பிரச்சார வலைக்குள் விழுந்த டி.ஆர்.எஸ், அக்கட்சிக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விளக்கங்கள் கொடுக்க முயற்சித்துக் கொண்டே இருந்தது.

எல்.பி.நகர் மற்றும் மகேஷ்வரம் சட்டசபை தொகுதிகளில், ஒரு மேலாதிக்க, முன்னேறிய (forward caste) சமூகத்தினால் தான் டி.ஆர்.எஸ் தோற்றது. காங்கிரஸ் ஆதரவாளர்களான இந்த சமூகங்கள் பாஜகவிற்கு வாக்களிக்க முடிவு செய்ததாக பேசப்படுகிறது.

கட்சித்தாவல்கள்

காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் டி.ஆர்.எஸுக்கு கட்சித் தாவியதை வாக்காளர்கள் வரவேற்கவில்லை என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது. மஜ்லீஸ்-இ-இத்தேஹதுல் முஸ்லிமின் (எம்.ஐ.எம்) கட்சி, ஹைதராபாத் பழைய நகரின் வார்டுகளை தக்க வைத்துக் கொண்டது. ஆனால், 2016 ஆம் ஆண்டு வென்ற இடங்களை விட, இரண்டு வார்டுகள் குறைவாகவே வென்றுள்ளது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம் எனும் பாஜகவின் அச்சுறுத்தலை குறித்து திரும்ப திரும்பப் பேசி, சிறுபான்மையின மக்களை தன் கைக்குள் கொண்டு வந்தது.

இந்த தேர்தலில் படுமோசமாக தோற்றது, இரண்டே இரண்டு சீட்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் தான். அந்த இரண்டு சீட்களும், முக்கிய பிரச்சாரகர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மல்காஜ்கிரி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ரேவந்த் ரெட்டியின் பிரச்சாரத்தால் மட்டுமே சாத்தியப்பட்டது. தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு ”நான் தான் பொறுப்பு” என தெலுங்கானாவின் மாநில காங்கிரஸ் தலைவர் என்.உத்தம் ரெட்டி பதவி விலகியுள்ளார்.

எம்.ஐ.எம் ஆதரவு

ஒட்டுமொத்தமாக, தேர்தலின் முடிவுகள் டி.ஆர்.எஸ் கட்சியை ஒரு நெருக்கடி நிலைக்கு தள்ளியிருக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் உறுப்பினர்களின் உதவியோடு கூட, டி.ஆர்.எஸ் மற்ற கட்சிகளை விட அதிகளவு வாக்குகளை வென்றிருந்தாலும், உள்ளாட்சி தேர்தலுக்கு தேவைப்படும் பெரும்பான்மையை அக்கட்சியால் காட்ட முடியாது. நட்புக் கட்சியான எம்.ஐ.எம் உதவிக்கரம் நீட்டுமா? இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு இடையேயான போட்டு என பலமுறை டி.ஆர்.எஸ், எம்.ஐ.எம் சொல்லிக் கொண்டிருந்த போதிலும், இரண்டு கட்சிகளும் கை கோர்க்குமா? என்பது தான் இப்போதைய கேள்விகள்.

(தி இந்து -வில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்