Aran Sei

சிங்கப்பெண்ணே சினிமா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

1. ஒரு ஏழை பெண் பணக்கார ஆண்களால் வல்லுறவுக்கு செய்யப்படுவது. அதற்கு நீதி கேட்டு போராட வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் அவளே நீதியை பெற்று விடக்கூடாது. ஒரு மாஸ் ஹீரோ ப்ரீ இண்டர்வலிலோ குறைந்தபட்சம் இண்டர்வலிலேயோ வந்து அவளுக்கு உதவதாக கதைக்களத்தை அமைக்க வேண்டும்.

இண்டர்வல் முதல் க்ளைமேக்ஸ் வரை அந்த பெண் அழுது கொண்டேதான் இருக்க வேண்டும். க்ளிசரின் மூன்று, நான்கு பாக்கெட் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. அதேநேரம் அந்த ஹீரோவை பார்க்கும்போது மட்டும் தான் அவளுக்கு கண்ணீர் எவாப்ரேட் ஆகி தைரியமே வர வேண்டும்.

2. ‘தன்’ லட்சிய கனவிற்காக போராடும் பெண். அதாவது ‘தன்’ அப்பாவின் கனவையோ (அதற்கு 80-களில் ஹீரோவாகவோ வில்லனாகவோ நடித்த நடிகர்களை தேர்வு செய்யவேண்டும்) அல்லது ‘தன்’ கணவனின் கனவையோ (90களின் இறுதியில் ஹீரோவாக அறிமுகமாகி, நாலரை படங்களில் நடித்தவர். ஹார்பிக் விளம்பரம், பிக் பாஸ் நிகழ்ச்சிகளுக்கு போனவர்களை தவிர்த்து) நிறைவேற்றும் பெண்ணாக இருக்க வேண்டும்.

a. திருமணமாகாத பெண்ணாக இருந்தால், கண்டிப்பாக அப்பாவின் கனவை நிறைவேற்ற வேண்டும். எ.க. விளையாட்டாக இருந்தால், செஸ், கேரம், பப்ஜி, லூடோ, பாண்டி, ஆடுபுலி போன்ற இண்டோர் விளையாட்டுக்களை தவிர்த்து, கிரிக்கெட், புட்பால், பாக்சிங் போன்ற டிவியில் டி.ஆர்.பி அதிகம் உள்ள விளையாட்டுக்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

1. பெண்ணை நடுராத்திரி 4 மணிக்கு எழுப்பி, ரன்னிங், ஜாக்கிங், ஜிம்மு, க்ரூப்ல டூப்பு, சிரிச்சா போச்சு, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற எல்லா எக்ஸஸைசுகளையும் செய்யவிட்டு, ஒரு மணி நேரத்துக்கு தேவையான புட்டேஜ் எடுக்க வேண்டும்.

2. அந்த புட்டேஜ்களை ஓடவிட்டு, டைனோசர் டாட்டரே, வாடி வெள்ளத்தாயி வெளிய என்று பெண்களுக்கு இரத்தக்கொதிப்பை ஏற்ற வைக்கும் பாடல்களை பின்னால் ஓடவிடவேண்டும். ஆச்சி மசாலாவில் வரும் எல்லா ரெடி மேட் பொடியையும் (இதில் 30 ரூபாய் குழம்பு மிளகாய் தூள் காம்போ ஆபர் சிறந்தது. கூடுதல் தகவல்களுக்கு விஜய் சேதுபதியை அணுகவும்) கலந்து தூவி விட்டு, பார்க்கிற பெண்கள் முதல் அவர்களின் பூனைக்குட்டி வரைக்கும், மூக்கு வழியாக நெடியேத்தி அடி குடல் வரைக்கு உணர்ச்சியை ஆழமாக இறக்க வேண்டும். பாடல் ஹிட் அடித்தால், வாட்சப்பிலிருந்து வாரணாசி வரைக்கும் உங்கள் பாட்டுதான் ரயிலாக ஓடும்.

3. பெண் எந்நேரமும் டவுசர், ஷூ மட்டுந்தான் அணிய வேண்டும். காலையில் ஷூட்டிங் வரும் போது வீட்டிலிருந்தே அணிந்து வர சொல்லவும். முடிந்தால் கோந்து போட்டு ஒட்டி விடவும்.

4. வேலையில்லா இஞ்சினியரிங் இளைஞன் ஊரில் இருப்பான். அவனை கூட்டிவந்து, பெண்ணை துரத்தி துரத்தி காதல் செய்ய வைத்து டார்சர் கொடுக்க வேண்டும்.

5. இண்டர்வெலுக்கு முன்னால் அந்த இளைஞன் பெண் கேட்க வர வேண்டும். இல்லையென்றால் பெண்ணின் அப்பாவிற்கு காதல் விஷயம் தெரியவர வேண்டும். ”லட்சியத்தோட வாழ்ற பொண்ணுக்கு காதல் ஒரு பெரிய தடை” என்று அப்பா அந்த பெண்ணுக்கு புரிய வைக்க வேண்டும்.

அடுத்த வேலையாக, அந்த பெண்ணை திருப்புவனத்திலிருக்கும் தாய்மாமன் திருப்பதிசாமிக்கோ, இல்லை மாங்காட்டிலிருக்கும் முறைப்பையன் மாணிக்கத்துக்கோ கட்டி வைக்க வேண்டும். ஏனென்றால், லட்சியத்திற்கு காதல் தான் தடையே தவிர கல்யாணம் (பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட) தடையே அல்ல.

6. பைனல் மேட்ச் நடக்கும் முந்தினநாள் மாலை தேநீர் இடைவெளியில், தினமும் 31 1/2 மணி நேரம் உடற்பயிற்சி செய்து வந்த (மீத நேரங்களில் காதல் செய்வதால் இந்த ஷாட்டேஜ்) பெண்ணை, வில்லனின் அடியாட்கள், ப்ரீ-கேஜி குழந்தைகளை ரிக்ஷா மாமாக்கள் ஸ்கூல் சவாரிக்கு தூக்கி வைத்துக்கொண்டு போவது போல அலேக்காக கடத்தி செல்ல வேண்டும்.

7. அப்பெண்ணின் பின்னால் சுற்றிய அந்த வேலையில்லா இஞ்சினியரிங் இளைஞன் இந்த கேப்பில் காதல் தோல்வி, வேலை இல்லாதது, சின்னம்மா மகள் கல்யாணத்திற்கு லால்குடி போகக் கூட காசு இல்லாதது என்று பல டிப்ரஷனிலிருக்கும் இளைஞன், அதிலிருந்து வெளியே வர லடாக் வரை ரோட் ட்ரிப் போகிறான். ஹிமாலயன், அவெஞ்சர் குறைந்தபட்சம் ராயல் என்பீல்ட் புல்லட் 350cc பைக்கை கொடுத்து அனுப்ப வேண்டும்.

இப்போது கடத்தல் சம்பவத்திற்கு வருவோம். கடத்தலை அறிந்த அந்த இளைஞன், ராபிடோவை பிடித்தாவது ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். அப்படி வரும் போதும் தேனாம்பேட்டை சிக்னலில் மாட்டிக்கொண்டால், ஓடி வந்தாவது (புட்டேஜ் எடுத்து வைக்கலாம். Sneakpeek-ல் போட்டுக்கலாம்) எதிரிகளை துவம்சம் பண்ணி, அவளையும் அதைவிட முக்கியமாக அவளின் கற்பையும் காப்பாற்ற வேண்டும்.

பின் ஆட்டோமெட்டிக்காக அந்த பொண்ணுக்கு அவன் மேல் காதல் வரும். அதற்கு முன்பாக தினமும் 80 கிலோவை தூக்கி, ஒர்க் அவுட் செய்த பெண், அன்றைக்கு மட்டும், தன் கையை கட்டிப் போட்டிருந்த பத்தாம் நம்பர் நூலை அறுக்க முடியாமல் சிரமப்பட வேண்டும்.

8. அடுத்த காட்சி அந்த பெண் பைனலில் விளையாடி வெற்றி பெறுகிறார். மேடையில் அவள் ”ஒரு பொண்ணோட வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆண் இருப்பாங்க” என்று சொல்லும் போது, அவளின் அப்பாவையும் அந்த வேலையில்லா இஞ்சினியரிங் இளைஞனையும் க்ளோஸ் அப்-ல் காட்ட வேண்டும்.

b. திருமணமான பெண்ணாக இருந்தால், கணவனுக்கு பெருமை சேர்க்க பாடுபடும் அதேநேரம், குழந்தை பராமரிப்பு, தாய்மையின் மகத்துவம், மகப்பேறின் மண்வாசனை போன்றவற்றின் பெருமைகளை ஆங்காங்கே மழைச்சாரல் மாதிரி தூவும் பெண்ணாக இருக்க வேண்டும்.

1.வேண்டாவெறுப்பாக கல்யாணம் செய்து வைக்கப்பட்டால், அந்த கணவன் அமைதியாகயும் அக்கறையாகவும் பெரும்பாலும் ஒயிட் அண்ட் ஒயிட், க்ளீன் ஷேவிலும் இருக்க வேண்டும். அப்பெண் அவர்மீது வெறுப்பை கக்கிக்கொண்டே இருக்க வேண்டும். எந்நேரமும் கோபமாகவும், படுக்கையில் கூடத் தன்னுடன் சேர்க்காமலும் இருக்க வேண்டும். பின் இந்த தவறை புரிந்துக்கொண்டு, வருந்தி, திருந்தி, அருந்தி மீண்டும் தன் கணவனோடு சேர்ந்துவிட வேண்டும்.

எ.கா காட்சி :

அந்த பெண்ணுக்கு இரவு பத்து பத்துக்கு, சென்னை ‘இரும்பு தேசத்து கரும்பு மனிதர் ஆல்பாஸ் அரியர்பாஸ் அரசன் ஐயா எடப்பாடி மாண்புமிகு மத்திய ரயில்நிலையத்திலி’ருந்து, ‘இந்தி தெரியாது போடா’ ராஜதானி எக்ஸ்பிரஸில் தாம்பரத்துக்கு ட்ரைன் இருக்கிறது. அப்போது ’சோ….’ என்று மழை கொட்ட வேண்டும். போன் வேறு சார்ஜ் இல்லாம போய்விட வேண்டும்.

அந்த நேரத்தில் கணவன் தன் போனை கொடுத்து, ஓலா புக் செய்து (ஊபர் ஆப்பர் இருந்தால் ஊபர் ஓகே), சென்னை ‘இரும்பு தேசத்து கரும்பு மனிதர் ஆல்பாஸ் அரியர்பாஸ் அரசன் ஐயா எடப்பாடி மாண்புமிகு மத்திய ரயில்நிலையத்தி’ற்கு கொண்டு வந்து விட வேண்டும். இதனால் அந்த பெண்ணுக்கு அவருடைய நல்ல மனசு புரிய வருகிறது. தான் எவ்வளவு மோசமானவளாக இருந்தோம் என்பதை உணர்ந்து கண்ணீர் வடிக்கிறார். ‘ஒரு பொண்ணோட வெற்றிக்கு பின்னாடி மட்டுமில்ல, ஓலா ரைடுக்கு பின்னாடியும் ஒரு ஆண் தான் இருக்கான்’ என்று புரிந்துக்கொள்கிறாள். ஓலா ட்ரைவரும் ஆண் தான் ஆனால் அவர் முன்னாடி இருப்பார்.

– அரவிந்ராஜ் ரமேஷ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்