Aran Sei

டீன்ஏஜர்கள் காந்தியை நெருங்குவது எப்படி? – கோ.கமலக்கண்ணன்

ரு நல்ல மனிதனைக் காயடிக்க அவரது தோற்றத்தில் மக்கள் செல்வாக்கில் கறைபடியச் செய்ய இரண்டு நிறுவப்பட்ட வழிமுறைகள் உள்ளன. அவற்றின் மூலம் மக்கள் திரள் அருகே அந்த மனிதரைச் செல்லவிடாமல் தடுக்க முடியும். அதனால் இலட்சோப இலட்ச வியாபாரிகள் இலாபமடையவும் முடியும்.

முதல் வழிமுறை, அவதூறுகளை அள்ளி வீசுவது. அந்தக் குறிப்பிட்ட மனிதரின் தனிப்பட்ட குடும்ப வாழ்வு குறித்து விமர்சித்தல், ஆணாக இருந்தால் அவரைப் பெண்பித்தன் என்றோ, பெண் எனில் நடத்தை ஒழுங்கற்றவள் என்றோ புனைதல், சாதிமத சாயம் பூசுதல், தேர்வு செய்யப்பட்ட மேற்கோள்கள் மூலம் அவரது நோக்கத்தைத் திசைதிருப்பி வேறொன்றாகக் காண்பித்தல் ஆகியவற்றின் மூலம் சமூகத்திற்கு நன்மை பயக்கும் ஒரு நபரை அழிக்க முனைதல்.

ஒப்புநோக்க இது கொஞ்சம் கடினமான வழிமுறைதான். பணம் செலவு செய்ய வேண்டும், கொடுத்த காசிற்கும் அதிகமாக கூவும் தொண்டர் படை ஒன்றைக் கட்டிக் காக்க வேண்டும், ஊடகங்களின் உதவி வேண்டும்.

ஆனால், இரண்டாவதாக ஒரு வழிமுறை இருக்கிறது, கொஞ்ச காலம் எடுத்தாலும் ஒரு நல்ல மனிதனை சமூகத்திலிருந்து மனதளவில் தனிமைப்படுத்தி வைப்பதற்குச் செலவே அற்ற எளியவழி இதுதான். அது, ஒரு மனிதனை புகழ்ந்தே பாதாளத்தில் தள்ளுவது. மெல்ல மெல்ல அவரை தெய்வத்தின் ஸ்தானத்தில் நிலைநிறுத்துவது. அப்படிச் செய்வதன் மூலம் ’அவர் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவர், அவர் சொல்லும் எதுவும் சாமான்யர்களுக்குச் சரிபட்டு வராது’ என்று சொல்லாமல் சொல்வது.

இது முந்தையதைக் காட்டிலும் வலுவானது. இதை அடியொற்றியே காந்தி, நோட்டுகளிலும் காந்தி ஜெயந்தி விடுமுறையிலும் சிலைகளிலும் மட்டுமே கவனிக்கப்படும் ஏலியன் ஆக்கப்பட்டுவிடுகிறார். ஆனால், ஊன்றி கவனிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் காந்தி எத்தகைய சாமான்யர் என்பது, அவர் அதை உணர்ந்து பழக்கத்திற்குக் கொண்டுவர முனைந்தவர் அவ்வளவுதான் வேறுபாடு. தான் சாமான்யன் என்பதை முற்றுணர்ந்தவர்களே அசாதாரணர்கள்.

2

என் டீன்ஏஜ் நண்பன் காந்தியின் பிம்பத்தின் மீது ஒரு உடைவை ஏற்படுத்துவதற்காக சிரிப்பாக ஒன்று சொன்னான். “மாதிரி கும்பலா வந்து எல்லாரையும் அடிக்கிறவன் ரெளடி இல்லடா, ஒத்தையா நின்னு என்ன மாதிரி அடிவாங்குறானே அவந்தான் ரெளடி அப்டிங்கிற ப்ரின்ஸிபில் தாண்டா காந்தியும் பயன்படுத்தினாரு, அது ஒர்க் அவுட் ஆகிப்போகவே, அதையே அகிம்சைத் தத்துவம் அப்படி இப்படின்னு எல்லாரும் பேசிப் பெருசாக்கிட்டானுங்க”

நானும் கூட சேர்ந்து சிரித்துக் கொண்டேன். அவன் காந்தியை பரிகசிப்பதற்காகச் சொன்னதே என் மனதில் அவர் குறித்த தேடலுக்கு உந்தமானது என்றும் சொல்லமுடியும். உண்மையில் அவர் சொன்ன செய்தியும் அதுதான், கிறிஸ்து சொன்னதும், சமண குருத்தொகையினர் சொன்னதும் கூட அதேதான். கிறிதஸ்துவையும் வடிவேலு இடத்தில் பொருத்திப் பார்க்க முடியும். இதில் மரியாதைக் குறைவு என்றெல்லாம் டீன்ஏஜர்ஸ் ‘முறையோ தகுமோ’ என்று கவலைப்படப் போவதில்லை. அனைத்து அறிவுமே அவர்களுக்குத் திரைப்படங்களின் மூலமாகவும் கலாய்ப்புகளின் மூலமாகவுமே வந்து சேர்கின்றன. கடந்த தசாப்தத்தில் செல்பேசி மற்றும் மீம்களின் மூலமாகவும்.

சிரிப்பும் மகிழ்விற்கும் இடையில் உண்மை எஞ்சி வளரக்கூடும். சொல்லப் போனால் வடிவேலு நகைச்சுவைக்கு அருகில் காந்தியைப் பொறுத்துவது அவருக்கு அருகில் செல்லும் நேர்மறை விளைவையே தரும். ஒருவரை புரிந்து கொள்ளும் பொருட்டு அணுகும் போது நக்கல் இருக்கலாம், வெறுப்பு மட்டும் அறவே கூடாது.

3

அடுத்து காந்தி பற்றிய திரைப்படங்களைப் பார்க்கலாம். அட்டன்பாரோ இயக்கிய காந்தி (1982) திரைப்படம் வருடா வருடம் காந்தி ஜெயந்தி அன்று தொலைக்காட்சியில் திரையிடப்படுகிறது. ஒருமுறையேனும் அந்தப் படத்தினை முழுதாகப் பார்க்கலாம். அது காந்தியை நெருங்குவதற்கு ஒரு நல்ல துவக்கமாக இருக்கக்கூடும். லூயி பிஷர் எழுதிய வாழ்க்கை வரலாற்றின் தழுவல் அது.
அதில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளுள் ஒன்றைப் பகிர்கிறேன்.

கலவரத்தில் தன் மகனை இழந்ததால் எதிர்த்தரப்பில் பலரைக் கொன்றும் தீராத தாங்கொணாத துன்பத்துடன் காந்தியிடம் வந்து கண்ணீர் விடுபவனிடம் பரிகாரமாக காந்தி ஒன்று சொல்வார். “நீ கொன்ற அதே சமூகத்தில் அநாதரவாய் விடப்பட்ட குழந்தை ஒன்றை மீட்டு அதே மதத்தில் வைத்து வளர்த்து விடு. அதுவே உன் காயங்களுக்கான அதிகபட்ச மருந்து”. சிலிர்ப்பேற்படுத்திய காட்சி. ஆன்மீகவாதி என்ற போதும், காந்தி தரும் பரிகார முறைகள் அடுத்த நூற்றாண்டின் உளவியல் கற்றலுக்கு உரியவையாக இருந்திருக்கின்றன.

4

காந்தியின் திடமான நெடும் சமூக பயணத்திற்கு வித்திட்டதாக பீடர்மெரிட்ஸ்பெர்க் சம்பவத்தைச் சொல்வார்கள். லூயி ஃபிஷரின் பிரபலமான புத்தகம்தான் அந்த சித்திரத்தை முன்வைத்தது. பின்னர் 1982-ல் வெளிவந்த காந்தி திரைப்படமும் அந்த காட்சியையே பிரதானப்படுத்துகிறது.

எந்த அளவுக்கு என்றால் என்றால், காந்தி கொலை செய்யப்பட்டு இறந்த மற்றும் சவ ஊர்வலக் காட்சிகள் ஆகியவை லூயி பிஷரின் நூலில் உள்ள முதல் அத்தியாயத்தை அப்படியே மேற்கோள்கள் கூட பிசகாமல் முன்வைக்கிறது. அந்தக் காட்சி முடியும்போது ஃப்ளாஷ்பேக்கில் ஒரு ரயில் ஓடுகிறது. அங்கு இளைய காந்தி பீடர்மெரிட்ஸ்பெர்கில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் திரையில் வருகிறது.

அந்த அவமரியாதையிலிருந்து காந்தி உத்வேகம் பெற்றிருக்கலாம் என்றும் அதுதான் அவரது வாழ்வின் அடிப்படைத் திருப்பம் என்றும் கூட தொடர்ந்து வர்ணிக்கப்பட்டு வருகிறது. அதில் உண்மையும் சற்று இருக்கிறது.

ஆனால் அதை விடக் கொடுமையான இருபது நாட்கள் தென்னாப்பிரிக்க கரையில் கப்பலிலேயே வைக்கபட்ட பல இந்தியர்களுள் ஒருவராக இருந்த காந்தி, தனியே ஒரு தினத்தில் இரண்டாம் முறை தென்னாப்பிரிக்காவிற்குள் நுழைகையில் ஒரு கூட்டத்திற்குள் சிக்கி வெகுவாய் அவமதிப்பிற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி இருக்கிறார். அவர் ஏறும் ரிக்சாவின் சக்கரங்களை பல குண்டர்கள் பிடித்து உலுக்குகிறார்கள். அவர் இறங்கிய பின் பிற ரிக்சாகாரர்கள் பயத்தில் அவரை ஏற்றிக் கொள்ள மறுக்கிறார்கள்.

அங்கிருந்து மூட்டை முடிச்சுகளைச் சுமந்தவாறே தன்னை ஏளனத்துடன் வசைபாடும் ஒரு கும்பலை மெல்லக் கடக்கிறார். அந்த ஒல்லியான மனிதன் இந்தியர்களுக்காக வாதாடுபவர் என்பது அவர்கள் கோபத்திற்கு விசையளிக்கிறது. அவரைத் தாக்க ஆரம்பிக்கிறார்கள். இரத்தம் வழிகிறது. அந்தப் பகுதியின் போலீஸ் கண்காணிப்பாளரது மனைவி தன் கைவிசிறியாலும் கத்தியும் அவர்களைத் தற்காலிகமாய் தடுத்து வைக்கிறார். விவரமறிந்த கண்காணிப்பாளர் அங்கு வந்து காந்தியை காவல் நிலையத்திற்குள் கொண்டு செல்கிறார்.

வெளியே பசித்தலையும் கழுதைப் புலி கூட்டமென காந்திக்காக காத்திருக்கும் கூட்டத்தைக் கண்டதும், கண்காணிப்பாளரது யோசனைப்படி காந்திக்கு பியூனின் சீருடை அளிக்கப்பட்டு முகம் கருமை பூசப்பட்டு மேலும் இரு பணியாளர்களுடன் பக்கவாட்டு கதவு வழியே காந்தி உயிருடன் வெளியேற்றப்படுகிறார். பிறகு காந்தி அங்கில்லை என்பதாலும் மழை பெய்ததாலும் அந்தக் கூட்டம் கலைகிறது. இல்லையெனில் காந்தி இறந்த தினத்திற்கு ஐம்பதாண்டுகள் முன்னரே அவருக்கு மரணம் சம்பவித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அச்சம்பவத்தை அடுத்து தென்னாப்பிரிக்காவின் முதன்மை பத்திரிகை அந்த கூட்டத்தின் நடைமுறை தவறுதான் என்று ஒப்புக் கொண்டாலும் அதற்கு காந்தியே காரணம் என்றும் அவரே அதைத் தூண்டினார் என்றும் சொல்லியது. அப்பட்டமான ‘விக்டிம் ப்ளேமிங்’ மனநிலை. இது போல பல சம்பவங்கள் வேற்றுமை பாராட்டும் மனநிலை கொண்ட தென்னாப்பிரிக்காவில் நடந்த வண்ணமே இருந்திருக்கின்றன.

அங்கு நிதானமாய் தன் சத்தியாகிரகத்தை சோதித்துப் பார்த்த காந்திக்கு இன்னும் நீண்ட பாதை இருப்பது தெரிய வந்தது. அத்தகைய பிரிட்டிஷாரையே தம் அகம் நோக்க வைத்து தலைகுனிய வைக்க முடிந்தவருக்கு அதைவிடக் குறைவான இனவாதம் நிலவும் இந்திய பிரிட்டிஷாரை எதிர்ப்பதும் இயன்றதே. ஒரே ஒரு வித்தியாசம் பூகோள அடிப்படையில் இந்தியாவின் நிலவிரிவும் இந்தியாவின் பன்முகமும்தான். அதையும் அவரால் நேர்மையால் கையாள முடிந்திருக்கிறது. இன்னும் பல திரைப்படங்கள் காந்தியைப் பற்றிய புரிதல் ஏற்படுத்திட தேவை.

5

இந்தியப் பிரிவினை துவங்கி இந்தியாவின் துயரங்கள் அனைத்திற்குமே காந்திதான் காரணம் என்ற ஒரு அவதூறு திட்டமிட்டுத் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. தகவல் புரட்சி யுகத்தில் அடித்தளமற்ற ஊகங்களும் வதந்திகளும் உண்மையை விட விரைவாகப் பரவிவருகின்றன. கோட்சே மற்றும் நண்பர்களைத் தேசபக்தர்களாக நிறுவ முனையும் ஆபத்தான வதந்தி.

எந்த ஒரு தீமை செய்பவனையும் அதனால் பாதிக்கப்பட்டவன் பொறுத்துக் கொண்டு எதிர்க்காமல் இருப்பதே சத்தியாகிரகத்தின் அடிப்படை. அதிலிருந்து தெரிந்தோ தெரியாமலோ தீங்கிழைப்பவரின் மனசாட்சி உறுத்தப்பட்டு அந்தச் செயலிலிருந்து பின்வாங்கிக் கொள்வார்கள் என்பதே அந்தப் போரின் தத்துவம். இதைப் பலரும் செய்து வருகிறோம்தான். ’போய்த் தொலை’ என்ற சொல்லை மனதில் உச்சரித்துக் கொண்டு பலரையும் பகைமையிலிருந்து விடுவித்து விட்டு விடுகிறோம்.

நாதுராம் கோட்சே ஜனவரி 1948-ற்கு முன்பே சில முறை காந்தியைக் கொல்லும் நோக்கத்துடன் அல்லது கொலைவெறிக் கூச்சல்களிட்டுக் கொண்டு நேரில் சந்தித்திருக்கிறான். காந்திக்கு மலேரியா நோய் வந்து மருத்துவரால் விதர்பா மலை கிராமத்தில் ஓய்வெடுக்க பரிந்துரைக்கப்படுகிறார். அப்போது ஒத்துழையாமை இயக்கத்திற்காக ஆகா கான் மாளிகையில் சிறையிலிருக்கும் அவரை பிரிட்டிஷார் விடுவித்திருந்தனர்.

அந்த ஓய்வெடுப்பு செய்தியைக் கேள்விப்பட்டதும் சொந்த காசில் வண்டியேறி மலைப்பிரதேசத்திற்குச் சென்று காந்தி குடியிருப்பின் முன் நின்று கடுமையான எதிர்ப் பிரச்சாரம் செய்கிறது ஒரு கும்பல். வெறுப்புச் சுற்றுலா! அதைக் கண்ட காந்தி ‘என்னதாண்டா உங்கள் பிரச்சனை’ என்று கோஷ்டியின் தலைவரை அழைக்கிறார். தனிமையில் பேச அந்தத் தலைவர் (சாட்சாத் கோட்சேவேதான்) ஏற்கவில்லை. கோசம் தொடர்ந்து பின்னர் தொண்டை வறண்டபின் கூட்டம் கலைந்து விடுகிறது.
வீராப்புடன் முறைத்துக் கொள்ளும் கோட்சேவின் மனது தவித்திருந்திருக்கும். கோஷம் போட ஓரிரு வார்த்தைகள் மட்டுமே கற்பிக்கப்பட்டு அனுப்பப்பட்டோம். இங்கு வந்து பேச்சு வார்த்தை செய்யும் அளவு சரக்கில்லையே என்று நெருடல் ஏற்பட்ட தருணம்!

இன்னொரு முறை காந்தியைக் கொல்லும் முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றியடையும் புள்ளிக்கு வந்து அங்கிருக்கும் காவலர்களால் மடக்கிப் பிடிக்கப்படுகிறான் கோட்சே. அப்போதும் காந்திதான் ‘போய் தொலைகிறான்’ மனநிலையில் விட்டு விடுகிறார்.

இங்கு இளைஞர்கள் கேட்க வேண்டிய முதன்மையான கேள்வி, ‘கோட்சே இந்திய தேசாபிமானியா அல்லது கொலைகாரனா?’ என்பதல்ல, மாறாக, ‘தனக்கெதிராக ஒருவர் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார் என்பதால் அவரைக் கொல்வதென்பது எத்தகைய குரூரம்?’ என்பதுதான்.

6

காந்தியின் மார்க் ஷீட் பற்றி.

ஆரம்பப் பள்ளி முதலே காந்தி மிகவும் சராசரியான மாணவனாக இருந்திருக்கிறார். அதிகபட்சம் ஐம்பது சதம் வரை அவரது மதிப்பெண் சராசரி இருந்திருக்கிறது. காந்தி படித்த பள்ளியின் தலைமையாசிரியர் ஜே.எம். உபத்யாய ’மாணவனாய் மகாத்மா காந்தி’ என்ற நூலினை எழுதியுள்ளார். கிண்டிலிலேயே இந்நூல் கிடைக்கிறது.

சோனிப்பையனான மோகனுக்கு மதிப்பெண் மட்டும் இன்றி வருகை பதிவிலும் அதிகக் குறைபாடே இருந்திருக்கிறது. அவரது ஒரே ஒரு குறிப்பிடத்தக்க படிப்பு சாதனை என்பது அவரை விட மோசமாகப் படிக்கும் தனது அண்ணனை மிஞ்சும் மதிப்பெண்கள் எடுத்ததுதான். அவரது அண்ணன் பலமுறை ஃபெயிலாகி காந்தியின் வகுப்பிற்கு இறங்கி வந்திருக்கையில் இது நடந்திருக்கிறது.

நடுநிலைப் பள்ளியிலும் நோயுற்ற தந்தையையும் இளம் மனைவியையும் மாறிமாறி கவனித்ததால் வருகையும் மதிப்பெண்ணும் கடுமையாகக் குறைந்து விட்டிருந்தது. அதனால் மனக்கிலேசமுற்றவர் வரும் ஆண்டுகளில் 60 சதம் வரை மதிப்பெண் எடுத்துவிட்டிருந்தார். இருந்தாலும் முதல்முறையாக அகமதாபாத் சென்று எழுதிய மெட்ரிகுலேசன் தேர்வில் தேர்ச்சியானவர்களுக்குள் இவரும் வந்து விடுகிறார், முக்கிதக்கி 40% மதிப்புடன்.

இங்கிலாந்தில் காந்தி photo Credit : https://medium.com/
இங்கிலாந்தில் காந்தி photo Credit : https://medium.com/

ஆங்கிலத்தில் ஓரளவிற்கு நல்ல மதிப்பெண் எடுத்தாலும் சமஸ்கிருதம் வடிவகணிதம் ஆகியவற்றில் தொடர்ந்து தடுமாறுகிறார். இலண்டனில் படிக்கையில் ஏதோ அல்ஜீப்ரா வகுப்பு ஒன்றை கவனிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. முட்டி மோதி பார்க்கிறார் முடியவில்லை. ஒரு முறை கரும்பலகையில் சமன்பாட்டை தீர்க்கச் சொல்லி ஆசிரியரே காந்தியை அழைக்கிறார். காந்தி அதை அறிந்திருந்தாலும் காது கேட்காததுபோல திருட்டுமுழியுடன் வலமும் இடமும் பார்க்கிறார். கடைசிவரை அந்த சமன்பாடு தீர்க்கப்படவே இல்லை.

பள்ளியில் குறைவான மதிப்பெண் எடுத்து அனைத்து ஆசிரியர்களாலும் ‘உதவாக்கரை’ பட்டம் பெற்ற இன்னொரு மேதையான ஐன்ஸ்டீனோ கணக்கில் பின்னி எடுத்தாலும் மொழிப்பாடத்திலும் உயிரியலிலும் தடவிக் கொண்டு இருப்பவராக காண்கிறோம். இருவரும் உலகின் முக்கியமான அதுவரையில்லாத பாதைகளை ஏற்படுத்தித் தந்தவர்கள் என்பதன் மூலம் வரலாறு எதையோ குறிப்புணர்த்துகிறது.

7

காந்தியின் பிழைகள் மிக முக்கியமானவை. அவருக்குத் தன்னை வானளாவப் புகழ்ந்து தனது செய்தியை மறைக்க முனையும் வருங்காலத்து வியாபாரிகள் பற்றித் தெரிந்திருக்கிறது. அதனாலேயே தனது பிழைகளை அப்பட்டமாக முன்வைக்கிறார். சத்திய சோதனையில் அவற்றுக்குச் செம்பாகம் உண்டு என்று நம்புகிறார். மேலும் தன் தோற்றத்தில் சாமான்யனை உடுத்தி அதை தேசத்தின் குறியீடாக்கிவிட்டிருக்கிறார். இதனால் எத்தனை புகழ்ந்து அவரை கருவறைக்குள் வைத்துப் பூட்டினாலும் மீண்டும் மீண்டும் சாமான்யர்களை நோக்கியும் வாசகர்களை நோக்கியும் வந்து சேர்ந்தபடியே இருக்கிறார். ‘அரை நிர்வாண பக்கிரி’யை எப்படி எந்நேரமும் பூஜையறைக்குள்ளேயே பூட்டி வைக்கமுடியும். அதனால் டீன்ஏஜர்கள் காந்தியை நெருங்குவது வெகு எளிது.

கோ கமலக்கண்ணன்
(
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்)

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்