Aran Sei

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் – குற்றவாளியையே திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் நீதிமுறை

Image Credit : article-14.com

பாலியல் வன்கொடுமை குற்றங்களில் குற்றம் புரிந்தவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையிலான திருமணத்திற்கு வழிவகுக்கும் தீர்வுகள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவையல்ல. காவல்துறை, நீதிமன்றங்கள், பஞ்சாயத்துகள் மற்றும் பெற்றோர்களால் ஆதரிக்கப்படும் இத்தகைய திருமணங்கள், பெரும்பாலும் தண்டனை விதிக்கப்பட்ட அல்லது குற்றம் சாட்டப்பட்ட வன்கொடுமையாளர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் தவிர்ப்பதற்கான ஒரு சூழ்ச்சியாகவே அமைகின்றன. மேலும், இவை நீங்கள் நினைப்பதை விட மிகச்சாதாரணமான நிகழ்வுகளாக நடந்தேறுகின்றன.

16 ஜூன் 2020 அன்று, தண்டனை விதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றவாளியும், கேரள மாநிலத்தைச் சார்ந்த முன்னாள் பாதிரியாருமான ராபின் வடக்கஞ்சேரி, தான் பாலியல் வன்கொடுமை செய்து கருவுறச்செய்த 16 வயது சிறுமியினைத் திருமணம் செய்துகொள்ள இரண்டு மாதப் பிணை விடுப்பு வேண்டுமென்று கேரள உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

52 வயதான இம்முன்னாள் பாதிரியார், “குழந்தையின் நலனை உறுதி செய்வதற்காக” தற்போது சட்டபூர்வ திருமண வயதை எட்டியுள்ள அச்சிறுமியினைத் திருமணம் செய்து கொள்வதாக தனது பிணை விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளார். தற்போது 20 வயதினை எட்டியுள்ள அச்சிறுமியும் அவரது பெற்றோரும் அத்திருமணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

கேரள உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வடக்கஞ்சேரியின் பிணை விண்ணப்பம் முன்னுதாரணமின்றி இல்லை. இந்தியா முழுமைக்கும், பாலியல் வன்கொடுமை குற்றமிழைக்கப்பட்டவர்கள், பெரும்பாலும் தங்களை வஞ்சித்தவர்களுடனான திருமணத்திற்கு நிர்பந்திக்கப்படுகின்றார்கள். இது சட்ட அமலாக்க முகவர்கள், பஞ்சாயத்து மற்றும் பெற்றோரின் ஆதரவோடு நிகழ்கின்றது.

24 ஜூலை 2020 அன்று ஒடிசா உயர்நீதிமன்றம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டப்பிரிவின் கீழ் பதியப்பட்ட வழக்கொன்றில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, தான் குற்றமிழைத்த, தற்போது 18 வயதைக் கடந்துள்ள சிறுமியினைத் திருமணம் செய்துகொள்வதற்காக, பிணை வழங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், 30 நாட்கள் இடைக்காலப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் மாதமே இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மற்றொரு வழக்கில், உத்தரபிரதேச மாநில பரேலியில், கடந்த 2017-ம் ஆண்டு, 14 வயது சிறுமியினைப் பாலியல் வன்கொடுமை செய்து கருவுறச் செய்த நபரையே கிராமப் பெரியவர்களும், அச்சிறுமியின் பெற்றோர்களும் திருமணம் செய்து வைத்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் தினக்கூலித் தொழிலாளர்களாதலால் சிறுமியையும் அவரது சிறு குழந்தையையும் கவனித்துக்கொள்ள போதிய வசதியிருக்கவில்லை என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்திருந்தன. உள்ளூர் நிர்வாகத்திடம் அவர்கள் வைத்திருந்த நிதியுதவிக் கோரிக்கையும் புறந்தள்ளப்பட்டிருந்தது.

பாலியல் வன்கொடுமை வழக்குகள் எப்படி திருமணத்தில் முடிகின்றன?

“பாலியல் வன்கொடுமை குற்றமிழைக்கப்பட்டவர்கள் தங்களை வஞ்சித்த ஆண்களையே திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலைகள் பலவாறாக உள்ளன” என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கீதா ராமசேசன் கூறினார்.

முதலாவதாக, சில வழக்குகளில், ஒரு இணை ஒருமித்த உறவில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவர்கள் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்களாக இருக்கும் போதோ அல்லது பெற்றோர் உறவை ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையிலோ, பெண் சட்டபூர்வமான திருமண வயதினை எட்டாத நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றமிழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.

“விசாரணையின் போது, குற்றம் சாட்டப்படும் ஆண், அப்பெண்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்கிறார். திருமண உறுதிமொழியுடன் ஒருமித்த உடலுறவின் ஒரு கூறு இருக்கக்கூடும். அப்பெண்ணும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக ஒப்புதல் வழங்குகிறார்.” என்று ராமசேசன் கூறினார்.

இரண்டாவது வகையில், ஒரு சில வழக்குகளில், “திருமணம் செய்துகொள்வதாக பொய்யான வாக்குறுதி” பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளன. இங்கு குற்றவாளிகள் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிப்பதன் மூலம் உடலுறவு கொள்ள சம்மதிக்க வைக்கின்றனர், ஆனால் அவ்வுறுதியினை மதிப்பதில்லை.

2018-ம் ஆண்டின் தேசிய குற்ற ஆவணப் பணியகத் (என்.சி.ஆர்.பி) தரவுகள், இதுபோன்று 12,568 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. 2017-ம் ஆண்டில், “திருமணம் செய்துகொள்வதாக பொய்யான வாக்குறுதி” பிரிவின் கீழ் 10,553 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2013-ம் ஆண்டில், தரவு ஊடகவியலாளர் ருக்மிணி சீனிவாசன், புது டெல்லியின் மாவட்ட நீதிமன்றங்களில் விசாரணையிலிருந்த 460 வழக்குகளை ஆராய்ந்தார். இவற்றில், 109 வழக்குகள் “திருமணம் செய்துகொள்வதாக பொய்யான வாக்குறுதி” பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தன. மேலும், 460 வழக்குகளில் 12 வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டிருந்தன.

மேலும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில், மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலான வழக்குகளில், இளைஞர்கள் திருமணத்திற்கு அப்பாற்பட்ட ஒருமித்த உடலுறவில் ஈடுபட்டனரெனவும், இவ்வழக்குகளை சட்ட ரீதியில் திருமண வயதினை எட்டாத சிறுமிகளின் பெற்றோர்கள் தாக்கல் செய்திருந்தனரெனவும் ருக்மணி சீனிவாசனின் ஆய்வு கண்டறிந்தது.

“இதுபோன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்ய காவல்துறையினர் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் இப்போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களும் சட்டங்களும் மிகவும் கடுமையாக்கப்பட்டிருப்பதால், காவல்துறையினர் இந்த வழக்குகளை இணங்கி பதிவு செய்ய வேண்டும்.”

குற்றம் சாட்டப்பட்டவர் மூன்று-நான்கு மாதங்கள் சிறைக்குச் செல்கிறார், அதன் பிறகு ஒரு தீர்வு எட்டப்படுகிறது. குற்றமிழைக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் தனது அறிக்கையை மறுதலித்து பிறழ்வறிக்கை வழங்குகிறார்.

பல “திருமணம் செய்துகொள்வதாக பொய்யான வாக்குறுதி” வழக்குகளும் உடன் வாழ்தல் வழக்குகளும், நிதித் தீர்வு அல்லது திருமணம் என்ற நிலையை அடைகின்றன. இது நமது சட்ட அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் அமைகின்றது.” என்று சக்தி வாகினி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ரவி காந்த் கூறினார்.

மேலே சொன்ன வகையிலான வழக்குகளுக்கு அப்பாற்பட்ட மூன்றாம் வகையான பாலியல் வன்கொடுமை வழக்குகளில்தான், குற்றமிழைத்தவரை திருமணம் செய்துகொள்ள அழுத்தம் தரப்படுகின்றது. இது நயவஞ்சகமானதும், சட்டத்தின் எல்லைக்கு புறம்பான ஒன்றாகவும் இருக்கின்றது.

ஒரு நீதிபதியானவர், வேண்டாத கருவுறுதல் வரை இட்டுச்செல்லும் பாலியல் வன்கொடுமைகளுக்கு, திருமணமே ஆகச்சிறந்த தீர்வு எனக் கருதக்கூடும். சமூககளங்கம் குறித்தான வாதங்களில் நீதிபதிகள் தங்களை திசை திருப்பிக் கொள்கின்றனர்.

“பெண்ணுக்கு என்ன நடக்கும்? அவரை யார் கவனித்துக்கொள்வார்கள்? பாலியல் வன்கொடுமை காரணமாக ஒரு குழந்தை பிறந்தால் சமூகக்களங்கங்கள் பலப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குற்றமிழைத்தவர் அப்பெண்ணத் திருமணம் செய்து கொள்ள முன்வருவது அல்லது அவரை திருமணம் செய்து கொள்ள நீதிபதி முன்னிலையில் ஒப்புக் கொள்வது ஆகியன தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக மட்டுமே.” என்றார் கீதா ராமசேசன்.

ஆனால், “பாலியல் வன்கொடுமை என்பது சமரச தீர்வினை எட்டக்கூடிய குற்றமல்ல. மேலும் நீதிமன்றங்களில் எட்டப்படும் இத்தகைய தீர்வுகள் நிலையானவை அல்ல.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், ஒரு வழக்கில் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படும்போது, மற்ற சந்தர்ப்பங்களில் இது ஒரு விதிமுறையாக மாறும் அபாயம் உள்ளது.

சிறையிலிருந்து வெளிவர, தான் குற்றமிழைத்தவரையே திருமணம் செய்து கொள்ளும் முறைமை எந்தவொரு சட்டத்தின் கீழும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆயினும்கூட, இது முறையாக நீதிமன்றங்களுக்குள்ளும், முறைசாரா முறையில் குடும்பங்கள் மற்றும் கிராம சபைகளுக்குள்ளும் தொடர்கிறது.

பல சந்தர்ப்பங்களில், தண்டனை விதிக்கப்பட்ட அல்லது குற்றவாளிகளென குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையைத் தவிர்ப்பதற்கான ஒரு மீட்பு சூழ்ச்சித் திட்டமாகத் திருமணங்கள் அமைகின்றன. நீதிமன்றங்கள் இத்தகைய தீர்வுகளில் ஒரு அங்கமாக இருக்க முடியாது.” என்று வடக்கஞ்சேரி பாலியல் வன்கொடுமை வழக்கின் அரசுத் தரப்பு வழக்குரைஞர் சுமன் சக்ரவர்த்தி கூறினார்.

இழந்த மரியாதைக்குத் தீர்வாக திருமணம்

டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில், 23 வயது பெண் ஒருவர், 2017-ல் தன்னை (அப்போது அவருக்கு வயது 19) திருமணம் செய்துகொள்வதாக பொய்யான வாக்குறுதியளித்து ஒரு நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டினார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக புகார் அளிக்க உடனடியாக பெண்களுக்கான ஹெல்ப்லைன் மற்றும் டெல்லி மகளிர் ஆணையத்தின் (டி.சி.டபிள்யூ) ஹெல்ப்லைனை அழைத்ததாக அந்தப் பெண் ஆர்டிகிள்-14 ஊடகத்திற்கு தெரிவித்தார். மேலும், “நான் அவருக்கு எதிராக புகார் பதிவு செய்ய காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அவர் இரண்டு ஆண்டுகளில் என்னை திருமணம் செய்து செய்துகொள்வதாக காவல்துறை அதிகாரிகளிடம் கூறினார்.” என்று தெரிவித்தார்.

“அவர் காவல் உதவி ஆணையாளர் (ஏ.சி.பி) முன் அழத் தொடங்கினார், பின்னர் அவ்வதிகாரி என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான் நீதி வேண்டும் என்று சொன்னேன். நான் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழ விரும்பினால், நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவ்வதிகாரி கூறினார். ஆதலால் நான் ஒப்புக்கொண்டேன், புகார் கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் நான் மிகவும் வலிமையாக இருந்தேன், நான் போராடத் தயாராக இருந்தேன். ஆனால் அவரும் அவரது குடும்பத்தினரும் என்னை கட்டாயப்படுத்தினர். நான் அவரைத் திருமணம் செய்ய ஒப்புக் கொள்ளாவிட்டால் என் பெற்றோரை அடித்து துன்புறுத்துவோம் என மிரட்டினர்.” என்று கூறினார்.

இறுதியாக, ஜூன் 2019-ல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அந்த நபர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க மட்டுமே தான் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி அவரை விட்டு விலகினார். அந்தப் பெண் இப்போது 1860-ம் ஆண்டு புழக்கத்தில் வந்த இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498 ஏ (கணவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் கொடுமை) வின் கீழ் ஒரு வழக்கை தொடுத்து போராடுகிறார்.

“எனது மற்றும் என் குடும்பத்தின் மரியாதை மீதான இந்தக் கறையுடன் நான் எப்படி வாழ்கிறேன் என்பதை நான் மட்டுமே அறிவேன். எனது கணவரால் நான் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டேன் என்பது எனது உறவினர்கள் மற்றும் சுற்றத்தார் அனைவருக்கும் தெரியும். என்னை முழுமையாக ஆதரிக்கும் என் பெற்றோருக்காக மட்டுமே நான் வாழ்கிறேன். நீதியைப் பெற நான் தினமும் போராட வேண்டும் என்று எனக்குத் தெரியும்.” என்று கூறினார்.

பெரும்பாலும், கிராம பஞ்சாயத்துகள் பாலியல் வன்கொடுமைகளைத் தொடர்ந்து திருமணத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றன.

“கிராம பெரியவர்களும் பாலியல் வன்கொடுமையால் குற்றமிழைக்கப்பட்டவரின் உறவினர்களும் அவரை வஞ்சித்தவரையே திருமணம் செய்து கொள்ளும்படி அழுத்தம் கொடுக்கிறார்கள். இது மனிதநேயமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். அரசாங்கம் இந்தப் பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், ஏனெனில் இந்த சூழ்நிலை பெரும்பாலும் மிகவும் அடிமட்டத்தில் இயங்குகிறமையால் இதுபோன்ற வழக்குகளில் சட்டத்தின் தலையீடு இல்லாமலேயே தீர்வு காணப்பட்டு விடுகின்றது.” என்று ரவி காந்த் கூறினார்.

“அரசாங்கமும் இதுபோன்ற திருமணங்களை சட்டவிரோதமாக்கும் வகையில் ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும்”, என்றார், அவர்.

ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டால் அவர் தனது ‘மரியாதை’யையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் இழக்கும் அளவிற்கு ஆணாதிக்க சமூகம் பாலியல் வன்கொடுமைக்கு களங்கம் கற்பிக்கின்றது. பாலியல் வன்கொடுமையால் குற்றமிழைக்கப்பட்டவரை நீதிமன்றங்களும் பாதிக்கப்பட்டவர், வீழ்ந்தவர் என்னும் வழமையான கருத்தாக்கங்களின் அடைவுக்குள்ளேயே வைத்து தீர்ப்புகள் எழுதுகின்றன. இந்நோய்க்கான எதிர்ப்பு சக்தி நீதிமன்றங்களுக்கும் இல்லை.

“ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அக்கம்பக்கத்தினரும் அவரது உறவினர்களும் அறிவது அந்தப் பெண்ணுக்கு அவமானமாக அமைகின்றது. நமது சமுதாயத்தில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு பெண் ‘தூய்மையற்றவர்’ என்று பிற்போக்கு எண்ணங்களை மக்கள் தொடர்ந்து கொண்டுள்ளதால் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவரையே கணவராக ஏற்றுக்கொள்வதைத் தவிர அப்பெண்ணிற்கு வேறு வழியில்லாமல் போகின்றது.” என்று வழக்குரைஞர் சீமா சம்ரிதி கூறினார்.

கிராமப்புறங்களில் குறிப்பாக, பாலியல் வன்கொடுமை களங்கம், குற்றமிழைக்கப்பட்டவரின் வாழ்க்கையை மட்டுமே பாதிக்கிறது, ஏனெனில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமை என்ற கொடூரமான குற்றத்தை ஒரு ஆண் செய்த சிறு ‘தவறு’ என்று மதிப்பிடுகிறார்கள். ஆகவே, குற்றமிழைக்கப்பட்டவரைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் அவரைக் கவனித்துக் கொள்வதே அவருக்கு பொருத்தமான “தண்டனை” என்று அவர்கள் நம்புகிறார்கள்.

“பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டோர் தங்களுக்குத் தாங்களே முகமையாக உருக்கொள்ளும் பொருட்டு மறுவாழ்வு வழங்கச் செய்வதில் அரசிடமிருந்து எத்தகைய உதவியும் கிடைப்பதில்லை.” என்று அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் (AIDWA) பொதுச் செயலாளர் மரியம் த்வாலே கூறினார்.

“குற்றமிழைக்கப்பட்டவர் தன்னை வஞ்சித்தவரை மணந்தாலும் பரவாயில்லை, ஏனென்றால் அவருடைய வாழ்க்கை எப்படியும் சிதைந்துவிடும். குற்றமிழைக்கப்பட்டவர் ஒரு குற்றவாளியை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகையில், அத்தகைய வழக்கில் அவரது பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம்? குற்றமிழைக்கப்பட்டவர் ஒரு நல்ல வாழ்வைப் பெற்றாரா இல்லையா என்பதைச் சரிபார்க்க நீதிமன்றத்திற்கு ஏதேனும் வழிமுறை உள்ளதா?”

பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் திருமணம் செய்துகொள்வதாக பொய்யான வாக்குறுதியளிக்கும் குற்றங்கள் ஆகியனவற்றில் குற்றவாளிக்கும் குற்றமிழைக்கப்பட்டவருக்கும் இடையிலான திருமணங்கள் பொதுவான ஒன்றாகக் காணப்படுவதைப்போல், ஒரு அமிலத் (ஆசிட்) தாக்குதல் வழக்கிலும் இது காணப்படுகிறது. 2018-ம் ஆண்டில், தான் ஆசிட் வீசிய பெண்ணை மணந்த பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை பம்பாய் உயர் நீதிமன்றம் விடுவித்தது. தாக்குதல் நடத்தியவர் எட்டு ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றமிழைக்கப்பட்டவரின் உரிமைகளைப் பாதுகாத்தல்

“பாலியல் வன்கொடுமை செய்தவர்களைத் திருமணம் செய்து கொள்ளுமாறு காவல்துறையும் நீதிமன்றங்களும் வழங்கும் ‘அறிவுரை’ ஆவணப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். தீர்வானது குற்றமிழைக்கப்பட்டவரின் சுய விருப்பத்தின்படி உள்ளதா என்பதை நீதிபதி அப்பெண்ணிடம் கேட்க வேண்டும். நீதிபதிகள் தங்கள் அறைகளில் வேறு யாரும் இல்லாத பொழுது குற்றமிழைக்கப்பட்டவரிடம் இக்கேள்வியினை கேட்பதினை கண்டுள்ளேன். ஒரு சில தருணங்களில் தங்களுக்கு விருப்பமில்லை, ஆனால் அவர்களது குடும்பத்தினரால் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று பெண்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு தீர்வு பாலினம், ஆணாதிக்கம் மற்றும் சாதி பதட்டங்கள் குறித்த பயிற்சி அமர்வுகளை அதிகரிப்பதாகும். பல நீதிபதிகளும் காவல் துறையினரும் இந்தப் பிரச்சினைகள் குறித்து அறிந்திருந்தாலும், அதை புறக்கணிப்பதையே தேர்வு செய்கின்றனர். காவல் துறை ஆய்வாளர்களுக்கான ஒரு பயிற்சியின் போது, இந்த பிரச்சினையை நான் எழுப்பியபோது, இதுபோன்ற திருமணங்கள் நடைபெறாவிட்டால், அப்பகுதியில் சாதிக் கலவரம் ஏற்படும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய பதட்டங்களையும் சிக்கல்களையும் கவனிக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமையால் குற்றமிழைக்கப்பட்டவரை பாதுகாப்பதில் மிக முக்கியமான அம்சம் மேற்பார்வை. மனித உரிமை வழக்குரைஞர்களும் பெண்கள் உரிமைகள் தொடர்பாக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எந்தவொரு அநீதியும் மேலும் இழைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய அனைத்து நிலைகளிலும் வழக்கைப் பின்தொடர வேண்டும்.” என்று கீதா ராமசேசன் கூறினார்.

“பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இதுபோன்ற அனைத்து தீர்வுகளையும் தடை செய்ய, பாலியல் வன்கொடுமை சட்டத்தை திருத்துவது ஒரு சாத்தியமான வழி அல்ல. குற்றமிழைக்கப்பட்டவர், குற்றம் சாட்டப்பட்டவர் உட்பட எந்தவொரு நபரையும் திருமணம் செய்துகொள்ளக்கூடிய சுதந்திரத்துடனேயே எப்போதும் இருக்கிறார். இது ஒவ்வொரு வழக்கின் உண்மைகளையும் சூழ்நிலைகளையும் பொறுத்தது. இருப்பினும், அத்தகைய திருமணத்தை அரசுத் தரப்புக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது. பாலியல் வன்கொடுமை வழக்கு என்பது குற்றம் சாட்டப்பட்டவர், தான் இழைத்த குற்றத்திற்காக எதிர்கொள்ள வேண்டிய ஒன்றாகும். குற்றமிழைக்கப்பட்டவருடனான திருமண ஒப்பந்தம் செய்வதன் மூலம், அவர் நன்மைக்காக தப்பிக்க முடியும் என்ற எண்ணத்தை ஒருவர் பெறக்கூடாது.” என்று சுமன் சக்ரவர்த்தி கூறினார்.

ஆனால் ஒடிசா பாலியல் வன்கொடுமை வழக்கு போன்ற பல வழக்குகளில், குற்றமிழைக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப்பட்ட பாலியல் வன்கொடுமையாளருக்கும் இடையிலான திருமணத்திற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடுமையான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களும், போக்ஸோ சட்டமும் இருக்கலாம், இது மரணத்தை பாலியல் வன்கொடுமைக்கான தண்டனையாகப் பரிந்துரைக்கலாம், ஆனால் இவ்வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட விகிதம் 27.2% (முன்னர் குறிப்பிட்ட 2018 என்.சி.ஆர்.பி அறிக்கையின்படி) மட்டுமேயாகும், பல மட்டங்களிலும் நடைமுறை படுத்தப்படும் இத்தகைய திருமண தீர்வுகள் மற்றும் சமரசம் காரணமாக.

(கட்டுரையாளர் பூர்வி குப்தா ஒரு சுதந்திர ஊடகவியலாளர், பாலின நீதி, அரசியல் மற்றும் கலாச்சாரம் குறித்து எழுதுகிறார்.)

ஆர்டிகிள்-14 என்னும் சட்டம் குறித்தான இணைய ஊடகத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்