Aran Sei

கொரோனா – நாட்டை நெருக்கடியில் தள்ளிய மோடி வழிபாடு

image credit : thewire.in

கொரோனாவின் இரண்டாவது அலை “வலுவான தலைவர்” என்ற மாயையை மீண்டும் உடைத்துள்ளது. ஏப்ரல் 26-ம் தேதி கணக்கின்படி நாம் 1.98 லட்சம் விலை மதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம், ஆக்சிஜன் பற்றாக்குறையும் மருத்துவ அமைப்புகள் பற்றாக்குறையும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கின்றன.

இத்தகைய ஒரு பேரழிவு நாட்டை தாக்கிய போது, திகைத்துப் போன அரசு நிர்வாகம் கையாலாகாமல், என்ன செய்வது என்பதற்கான குறிப்புகளை தேடிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆக்சிஜன் பற்றாக்குறைக்கும் தடுப்பூசி பற்றாக்குறைக்கும் யார் பொறுப்பு? இந்திய அரசு எங்கே? நாட்டிலேயே முடிவெடுக்கும் உச்சபட்ச அமைப்பான மத்திய அமைச்சரவை இந்தப் பேரழிவு குறித்து விவாதிக்க ஒரு முறையாவது கூடியதா?

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏன் மௌனம் சாதிக்கிறது? முன்னர், தொலைதூர நகராட்சிகளில் உள்ள காய்கறி விற்பனை கூடங்களையும், முடிதிருத்தும் நிலையங்களையும் திறப்பது குறித்து நுணுக்கமாக மேலாண்மை செய்த உள்துறை அமைச்சர் ஏன் இப்போது மௌனமாக உள்ளார்? அரசின் நிறுவன அமைப்புகள் எங்கே? இன்று நிலவும் படுமோசமான குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் பாருங்கள்.

அமைச்சர்கள் அனைவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டார்கள். பிரதமர் அலுவலகத்தை மையமாகக் கொண்டு முடிவு எடுக்கும் முறை 2014-ல் அமல்படுத்தப்பட்டது முதல், முடிவெடுப்பதில் எந்த பாத்திரமும் இல்லாத அமைச்சகங்களும், துறைகளும் உத்தரவை எதிர்பார்த்து நிற்க மட்டுமே செய்கின்றன.

இது எதுவும் தற்செயலாக நடந்தது அல்ல.

பிரதமர் மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என்ற “வலுவான தலைவர்” என்ற ஆளுமை வழிபாட்டுக் கலாச்சாரம் வளர்க்கப்பட்டு, விதிகளின்படியான அரசு நிர்வாகமும், நிறுவன ரீதியான நிர்வாக அமைப்பும் செயலிழக்கச் செய்யப்பட்டன. ‘நாடு ஆடிப் போயுள்ளது” என்பதை அங்கீகரிப்பது கூட பிரதமரின் வானொலி உரை மூலமே வெளியிடப்பட வேண்டியிருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை பாருங்கள். ஒவ்வொரு நாளும் துறைச் செயலாளர்களை பிரதமர் கூட்டுகிறார். அவர்களது அறிக்கைகளை கேட்டு, ஆக்சிஜன் உருளைகளை விநியோகிப்பது பற்றியோ, தடுப்பூசி பற்றாக்குறை பற்றியோ வழிகாட்டல்கள் தருகிறார்; கார்ப்பரேட்டுகளை அழைத்து ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கச் சொல்கிறார்; மருத்துவர்களிடம் பேசுகிறார். அரசியலமைப்பு முறைப்படி அவரவர் துறைக்குப் பொறுப்பான அமைச்சர்கள் காட்சியிலேயே இல்லை.

அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பும், நீண்ட கால பார்வையும் எடுக்கப்பட்ட முடிவின் தொடர்ச்சியாக பிற நடவடிக்கைகளை எடுத்தலும் இதற்கு பலியாகி விட்டன. துறைசார் வல்லுநர்களின் அனுபவ ஆதரவுடன் கூடிய அமைப்பு விதிகள் அடிப்படையிலான நிறுவன செயல்பாடு அழியும் போது, அவசரகதியிலான எதி்ர்வினைகளும் பீதியும், குழப்பங்களும் நிலவ ஆரம்பிக்கின்றன.

தொலைக்காட்சியில் நடத்தப்படும் நீண்ட உரைகளும், மாநில அரசுகளுக்கு அளிக்கப்படும் செயலற்ற கட்டளைகளும் திறமையான நிர்வாகத்திற்கு மாற்று ஆகாது.

தனது குடிமக்களைப் பாதுகாப்பது என்ற முதன்மையான கடமையில் இந்திய அரசு தவறியுள்ளதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

image credit : thewire.in
image credit : thewire.in

அதற்குப் பதிலாக, பீதியடைந்த பிரதமர் அலுவலகம் அரசின் செயல்பாடுகள் அனைத்தையும் சந்தையிடமும், மாநில அரசுகளிடமும் விட்டுள்ளது. இத்தகைய கையாலாகாத நிலையையும், செயலிழந்த நிலையையும் இந்தியக் குடியரசு இதற்கு முன் ஒரு போதும் கண்டதில்லை.

நவம்பர் 1962-ல் சீன ஆக்கிரமிப்பு நடந்த போது நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருடன் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அடுத்து என்ன நடக்கும் என யாருக்கும் தெரியவில்லை. எனினும், அடுத்த சில நாட்களுக்குள், அகழிகளைத் தோண்டுவது, தாக்குதல் எதிர்ப்பு ஒத்திகைகள், போர் நிதிக்கு மக்கள் தங்கத்தை நன்கொடையாக கொடுத்தது, மத்திய, மாநில மற்றும் குடிமை அமைப்புகள் ஒருங்கிணைப்பிற்காக நடத்திய தொடர்ச்சியான உயர்மட்ட கூட்டங்கள் என நிர்வாகம் சுதாரித்துக் கொண்டது.

இந்தியக் குடியரசு இப்போது எதிர்கொண்டிருக்கும் இந்த மிகப்பெரிய, மனிதனால் உருவாக்கப்பட்ட மானிட பெருந்துயருக்கான காரணம் எங்கு உள்ளது? தனி மனிதர் ஒருவரே முடிவெடுப்பதிலும் ஆளுமை வழிபாட்டைக் கட்டமைப்பதிலும் இருந்த ஆட்டிப் படைப்பில் காணலாம்.

இது 2020, மார்ச் 24, ல் முதல் ஊரடங்கு அறிவிப்பை பிரதமர் அறிவித்திலிருந்து துவங்குகிறது. குறைந்தபட்ச முன்னேற்பாடுகளைச் செய்வதற்கு அரசு நிர்வாகத்துக்கு இரண்டு மணிநேரம் கூட கிடைக்கவில்லை.

பேரழிவை ஏற்படுத்திய நவம்பர் 8, 2016 அன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போலவே, முழு ஊரடங்கு அறிவிப்பும் மோடியின் தனிப்பட்ட முடிவாகத் காட்சியளித்தது. மத்திய உள்துறை அமைச்சகமும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் கூட இந்த அறிவிப்பு தொடர்பாக கலந்தாலோசிக்கப்படவில்லை. அப்போது இந்தியாவில் 519 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது, 8 இறப்புகள் மட்டுமே ஏற்பட்டிருந்தன.

அதைத் தொடர்ந்து மோடி எடுத்த எல்லா நடவடிக்கைகளுமே கற்பனையான கருத்துக்களால் தூண்டப்பட்டவையே தவிர துறைசார் அறிவு கொண்டவர்களின் அறிவார்ந்த ஆலோசனையின்படி செய்யப்படவில்லை.

2020-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மக்களிடம் விளக்குகளை அணைத்து விட்டு, அகல்விளக்குகளை ஏற்றி, தட்டுகளைத் தட்டச் சொன்னார். மார்ச் 25 அன்று, மகாபாரதப் போர் 18 நாட்களில் வெல்லப்பட்டதாகவும், கொரோனா வைரஸ் என்ற அரக்கனை வெல்ல அவருக்கு வெறும் 21 நாட்கள்தான் தேவை என்றும் கூறினார். “போ! கொரோனா போ!” பாடல் கொரோனா பேயை விரட்டும் மந்திரமாகியது. பிரதமர் முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்த போது, அரசின் மற்ற அனைத்து பிரிவுகளும் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியாகும் அறிவிப்புகளில் இருந்து தமக்கான குறிப்புகளை தேடும்படி விடப்பட்டன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதிய கொரோனா தொற்று எண்ணிக்கைகள் குறையத் தொடங்கிய போது கொண்டாட்டங்களும், சுய பாராட்டுதல்களும் ஆரம்பித்தன. 2021, ஜனவரி 17 அன்று, “மனித குலத்தின் மிகப்பெரிய நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொண்டதற்காக” மோடியை அமித்ஷா பாராட்டினார். 2021, பிப்ரவரி 16-ம் நாளன்று மோடியே கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றிகரமான போர், உலகம் முழுவதற்கும் ஊக்கமளித்தாக கூறிக் கொண்டார்.

கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் மோடியின் பங்கை மீண்டும் பாராட்டிய அமித்ஷா, “மோடியின் தலைமையிலான புதிய இந்தியா பேரழிவுகளை வாய்ப்புகளாகவும், சவால்களை சாதனைகளாகவும் மாற்றக் கூடியது” என்றார்.

இந்த அதீத நம்பிக்கை, “தடுப்பூசி நட்புறவு” என்ற சூதாட்டத்தினால் மேலும் குருடாக்கப்பட்டு மெத்தனத்துக்கும் அலட்சியத்துக்கும் வழிவகுத்தது.. மோடியின் வார்த்தை அரசின் கொள்கையாக மாறியது. “இது புரிந்து கொள்வதில் ஏற்படும் வழக்கமான சார்பு நிலை. கொரோனா தொற்று முடிவுக்கு வந்து விட்டது என்று நம்புவதற்கு நாங்கள் விரும்பினோம். எனவே, அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் தரவுகளுக்கு விளக்கம் அளித்தோம்.” என்று பெயரிடப்படாத ஒரு அதிகாரியின் கூற்றை மேற்கோள் காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது.

இவ்வாறு “வலுவான தலைவர்” என்ற வெகுமக்கள்வாதம் முழுமையாக நடைமுறையில் இருந்தது. இதன் வீச்சான தாக்கத்தின் காரணமாக, அரசின் துறைகள் அனைத்தும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை தடுப்பதற்கான ஏற்பாடுகளை முழுவதுமாக கைவிட்டன. அரசு வல்லுநர்கள் தங்களது சொந்த நலனை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக, வரவிருக்கும் ஆபத்துக்களை பற்றி தமது எஜமானர்களை எச்சரிக்கத் தவறினர். தேர்தல் ஆணையம் மாபெரும் தேர்தல் கூட்டங்களை அனுமதித்தது. தேர்தல் ஆணையத்தின் செயலை “கொலைகரமானது என்றும்” “பொறுப்பற்றது” என்றும் சென்னை உயர்நீதிமன்றம் சித்தரித்தது.

ஏப்ரல் 5-ம் தேதி வரை மோடி பெரிய கூட்டம் கூடிய 23 பொதுக்கூட்டங்களை நடத்தியிருந்தார். வருடாந்திர பொருளாதார அறிக்கை கூட “இரண்டாம் அலை வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன” என்று கூறியது. தடுப்பூசி உற்பத்தி மந்தமானது; உயிர்காக்கும் அமைப்புகளின் இருப்பு தேவைக்கு அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த அளவுக்கு மீறிய மகிழ்ச்சிக்கும் பரவசத்துக்கும் மத்தியில் ஆக்சிஜன் இருப்பை அதிகரிப்பது குறித்து யாரும் கவலைப்படவில்லை. பிப்ரவரி மாதம் சுகாதாரம் தொடர்பான நாடாளுமன்ற குழு எச்சரிக்கை விடுத்திருந்தும் இது நடந்தது.

“கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 3 லட்சமாக அதிகரிப்பதை எதிர் கொள்வதற்கு 1.6 லட்சம் அவசர சிகிச்சை பிரிவுகளும் அதற்கு இணையான ஆக்சிஜன் வழங்கலும் இருக்க வேண்டும்” என்று சென்ற செப்டம்பர் மாதம் ஒரு அதிகாரம் பெற்ற குழு கூறியது. இந்த முன்னெச்சரிக்கைகளுக்கு அரசு செவி மடுத்திருந்தால், பெருவாரியான மரணங்களையும், அழிவையும் தவிர்த்திருக்க முடியும்.

இந்த ஆரம்ப கால வெற்றிக் களிப்பு எவ்வளவு பரவி இருந்தது என்றால், சென்னையிலும், அகமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கத்திலும் இந்தியா இங்கிலாந்தை வெற்றிக் கொண்டதை பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் களித்தனர். பாலிவுட் படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கின. பெரிய ஆடம்பர இந்திய திருமணங்கள் களிப்புடன் நடத்தப்பட்டன. அதே போலவே தசரா மற்றும் துர்கா பூசை விழாக்களும் நடந்தன.

மூன்று மாத காலம் நடைபெறும் விழாவான ஹரித்துவார் கும்பமேளாவில் ஜனவரி 14-ம் தேதி 2.5 லட்சம் பயணிகள் கலந்து கொண்டனர். பொது மக்களைப் பொறுத்தவரை, இயல்புநிலை திரும்பிவிட்டதாகக் கருதி வணிக வளாகங்களிலும் நெருக்கடியான சந்தைகளிலும் தெருக்களிலும் கூடினர்; முகக்கவசத்தை கீழே இறக்கிக் கொண்டனர். இவை அனைத்தும் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தொற்று அதிகரிப்புக்கான காரணங்களாக இருந்தன.

www.thewire.in இணையதளத்தில் பி. இராமன் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்