Aran Sei

மாப்ளா போராட்ட வரலாறும் ஒன்றிய அரசின் வரலாற்று இருட்டடிப்பும் – பகுதி 1

ந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (ஐசிஎச்ஆர்) இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளின் களஞ்சியத்தில்’ உள்ள 1857-1947 வரையிலான மகத்தான தியாகிகள் பட்டியலிலிருந்து ‘மாப்ளா போராட்டத்தில்’ கலந்துக் கொண்டு உயிர் நீத்த 387 தியாகிகளின் பெயர்களை நீக்கிவிட கடந்த ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில் முடிவு செய்துள்ளது. மலபார் கிளர்ச்சி என பரவலாக அறியப்படும்  ‘1921 மாப்ளா எழுச்சி’  தேசிய நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக இடம் பிடிப்பதும், அரசியல் ரீதியாக விவாதிக்கப்படுவதும், ஒன்றிணைக்கும் நிகழ்வாக மாறுவதும் இது முதன்முறை அல்ல.

உண்மையில் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் இந்த அறிவிப்பு, பல ஆண்டுகளாக வலதுசாரி தீவிரவாதிகள் மாப்ளா எழுச்சியை, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் அல்ல என்றும் இந்தியாவில் இஸ்லாமிய அரசை ஏற்படுத்த நடந்த கலகம் என்றும் கூறி வந்த சர்ச்சைக் கருத்துக்களின்  கலவைதான்.

1921 எதிர்ப்புப் போராட்டத்தில் மதமும் ஒரு பங்கு வகித்தது உண்மை என்றாலும் மாப்ளா எழுச்சிக்கான (1849 ற்கும் 1921 ற்குமிடையே ஏறத்தாழ 35 தீவிர போராட்டங்கள்) காரணங்கள் மிகவும் ஆழமானவை என்பது மட்டுமல்ல முக்கியமாக இயல்பான விவசாயிகளின் எழுச்சியும் ஆகும். இந்த இயக்கம் நிலப்பிரபுத்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் ஆங்கில காலனித்துவ அரசின் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஏழைகளின் போராட்டத்தை பதிவு செய்தது. இதன் காரணமாகவே 387 தியாகிகள் அந்த களஞ்சியத்தில் முதலில் சேர்க்கப்பட்டனர். அவர்களை பட்டியலிலிருந்து நீக்குவது, அந்த சுதந்திரப் போராட்ட எழுச்சியை பெருமளவில் வகுப்புவாத கலவரமாக தரம் தாழ்த்துவதுடன், அப்போதைய  காலனிய ஆங்கில அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குச் சேவை செய்வதாகவும் ஆகிவிடும்.

தமிழ்நாடு நாள்: தமிழ் நிலத்தின் எல்லைகள் சுருக்கப்பட்ட அரசியல் வரலாறு – சூர்யா சேவியர்

தியாகிகளின் களஞ்சியம்

தொழில்முறை வரலாற்றாளர்கள் ஒன்றிய கலாச்சார அமைச்கத்துடன்  இணைந்து, 1857 மற்றும் 1947 ம் ஆண்டுகளுக்கு இடையில் காலனிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி உயிர் நீத்தத் தியாகிகள் 14,000 பேரை அடையாளங் கண்டு ‘இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் களஞ்சியம் 1857-1947’ ல் சேர்த்ததன் நோக்கம், பெரிதும் பேசப்படாத, இந்திய விடுதலை என்னும் உயர்ந்த இலட்சியத்திற்காக எவ்வித இன்னல்களையும், ஏன் உயிரையும் கூட துறக்க முடிவு செய்த வீரர்களை பரந்துபட்ட இந்திய மக்களின் கவனத்திற்குக்  கொண்டு வருவதாகும்.

இந்த அகராதியின் ஐந்தாவது தொகுதியில் பதிப்பாசிரியர் குறிப்பில் ஐசிஎச்ஆரின் தற்போதைய தலைவர் அரவிந்த் பி. ஜாம்கெட்கர்,” இயன்ற அளவு இந்திய சமூகத்தின் அனைத்துப் பிரிவையும் சேர்ந்த தியாகிகளை உள்ளடக்குவதும், அத்துடன் நன்கு அறிமுகமானவர்களை மட்டுமின்றி, ஓரளவு தெரிந்த, மறந்துவிட்ட தியாகிகளையும் கவனத்திற்கும் கொண்டு வந்து (குறிப்பாக சமுதாயத்தின் கீழ் மட்டத்திலிருக்கும்), அவர்களை விடுதலை அடைந்த இந்தியாவின் மரியாதைக்குரியவர்கள்  வரிசையில் பட்டியலிடுவதுமே எங்கள் நோக்கம் ஆகும்,” என்று எழுதி உள்ளார்.

இவ்வாறு, அந்த களஞ்சியத்தின் ஐந்து தொகுதிகளும், வரலாற்றுத் தரவிலிருந்து துல்லியமான ஆதாரங்களைக் கொண்டு அதன் நம்பகத்தன்மையை நிறுவுவதை குறிக்கின்றன. ஒவ்வொரு பதிவும் தொடர்புடைய தியாகியின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பை வழங்குகிறது. இது முடிந்த அளவு நம்பகத்தன்மையுள்ள ஆவண காப்பகம் மற்றும் சமகால ஆவணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு பதிவும், கூறப்பட்டுள்ள தியாகியின் முடிவு வெற்று ஆவேசத்தால் அன்றி, முற்றிலும் வெளிப்படையாக எடுக்கப்பட்டது என்பதையும், அந்த குறிப்பிட்டத் தியாகி தனது செயல்களின் பின்விளைவுகளைப் பற்றி முழுமையாக அறிந்தே அந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்றும் காட்ட முயற்சித்துள்ளது. இன்னல்களை ஏற்றுக் கொள்வதால், அந்தத் தியாகி ஆவேசமாகவோ அல்லது ஆவேசத்திற்கு பதிலளிக்கும் விதத்திலோ செயல்பட முடியாது. ஆனால் குறிப்பிட்ட கருத்தியல் அல்லது அரசியல் நம்பிக்கைக்காக உயிரைக் தியாகம் செய்யவும் தயாராக இருந்தார்.

தியாகிகளின் இன்னல்கள் மற்றும் இறப்பின் பதிவு, நாட்டின் கூட்டு நினைவகத்தின் ஒரு பகுதியாக மாறி, கடந்த காலத்தை பொருளுடையதாக்கும்  என்பதற்காகவே அவர்களுடைய பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பதிவின் முதன்மை ஆதாரங்கள், இந்த நினைவக வேலையை நிர்வகிக்கும் அதிகாரத்தின் இயக்கவியல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றைச் சார்ந்தது. இந்தத் திட்டத்தில் ஆராய்ச்சி உதவியாளர்கள் பின்பற்றும் முறை கூட்டு நினைவகம் மற்றும் வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட அறிவு ஆகியவற்றிற்கிடையே ஒரு உறவை உருவாக்குகிறது. இந்த களஞ்சியத்தில் இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தின் போது பல்வேறு இயக்கங்களில், அமைப்புகளில் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்றவர்களின் பெயர்களை முடிந்த அளவு உள்ளடக்கி இருக்கிறது.

‘நச்சைக் கக்கும் தமிழ்நாட்டு அனல்மின் நிலையங்கள்’ – பூவுலகின் நண்பர்கள்

இந்தத் திட்டம் 2007 ம் ஆண்டு, 1857 எழுச்சியின் 150 வது நிறைவு மற்றும் இந்திய சுதந்திரத்தின் 60 ம் ஆண்டு விழா கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் தேசிய செயல்படுத்தல் குழுவால் தொடங்கப்பட்டது. இது “தியாகிகளின் தேசிய பதிவேட்டைத்” தொகுக்க விரும்பியது. இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு இந்தத் திட்டத்தையும், இதற்குத் தேவையான நிதியையும், வரலாற்றாளர்கள், ஒன்றிய கலாச்சார அமைச்சகத்தின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய ஆவணத்துறை  பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய ஒன்றிய கலாச்சார அமைச்சகம் மற்றும் ஆலோசனைக் குழுவின் வேண்டுகோளின் படி ஏற்றுக் கொண்ட இந்தத் திட்டம் ‘இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகள் களஞ்சியம் 1857-1947’ என்ற தலைப்பிலான தொகுப்புகளை வெளியிட முடிவு செய்தது.

1980 ல் பரிசுகளையும் ஓய்வூதியத்தையும் வழங்க  இந்திய அரசு பின்பற்றி வந்த “தியாகி” என்பதற்கான வரையறையை இந்தத் திட்டத்திற்காக குழு ஏற்றுக் கொண்டது. அந்த வரையறையின் படி, ஒரு தியாகி என்பவர்,  ஆங்கிலேயருடனான சண்டையில் உயிர்த்தியாகம் செய்த முன்னாள் தேசியப் இராணுவ வீரர், முன்னாள் இராணுவ வீரர் ஆகியோர்  உள்ளிட்ட இந்தியாவின் எழுச்சிக்காக தேசிய இயக்கத்தில் இயக்கத்தில் பங்கேற்று அதில் உயிரிழந்த அல்லது கொலை செய்யப்பட்ட அல்லது சிறையில்  அடைக்கப்பட்ட அல்லது கடுந்தண்டனை விதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்.

ஆதாரங்களுக்கான தேடல்

1976 முதல் 2003 ம் ஆண்டு வரை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முக்கிய வரலாற்றாசிரியரும் குறிப்பிடத்தக்க வரலாற்று ரீதியான தனிக் கட்டுரைகளின் ஆசிரியருமான சபியாச்சி பட்டாச்சார்யா, அப்போதைய ஐசிஎச்ஆரின் தலைவராக இருந்தார். அவர் மகாத்மா காந்தியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றியல் களஞ்சியத்தில் இருந்த இடைவெளிகளை சுட்டிக்காட்டினார். ‘யார் யார் இந்திய தியாகிகள்’ என்ற தலைப்பில் 1969, 1972 மற்றும் 1973 ஆகிய ஆண்டுகளில் முனைவர் பி.என்.சோப்ரா பதிப்பாசிரியராக இருந்து வெளியிடப்பட்ட தொகுப்புகளில், சுதந்திரப் போராட்டத்தின் போது கொல்லப்பட்ட அல்லது தூக்கிலிடப்பட்ட நாட்டுப்பற்று உடையவரே “தியாகி” எனப்படுவார் என வரையறுக்கப்பட்டிருந்தது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு – பொய்யான தகவலை அளித்த ஒன்றிய அமைச்சர் – அரண்செய் உண்மை அறியும் ஆய்வில் அம்பலம்

சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் மாநில அரசுகளால் வெளியிடப்பட்ட தியாகிகளின் பட்டியலிலும் அல்லது வாழ்க்கை வரலாற்று  களஞ்சியத்திலும் இடைவெளிகள் இருந்தன. 1975 ல் ‘கேரள சுதந்திரப் போராட்ட வீரர்கள் யார்யார்’ என்ற  625 பக்க தனிக்கட்டுரையை கருணாகரன் நாயர் சரி பார்த்தார். இதில் பெரும்பாலான வெளியீடுகள்  சுதந்திரப் போராட்டத்தில் தியாகிகளின் பங்கு அல்லது தியாகம் குறித்த ஆரம்ப ஆதாரங்கள் இல்லாததால்  நம்பகத்தன்மை குறைவாக இருந்தன. மறுபுறம், ஐசிஎச்ஆரின் ‘ இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் களஞ்சியம் 1857-1947’ ஆவணக் காப்பகம் மற்றும் சமகால ஆவணங்கள் போன்ற முதன்மை  ஆதாரங்களை பயன்படுத்தியிருந்தது. அவற்றை ஒவ்வொரு வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளையும் அடுத்து இறுதியில் பார்வைக்காக பட்டியலிட்டு இருந்தது. இந்தத் திட்டத்தின் பரந்த எல்லையை கவனத்தில் கொண்டு முதல் தொகுதியின் பகுதி ஒன்றை வெளியிட்டவுடன் பட்டாச்சார்யாவும், மைய ஆலோசனைக் குழுவும் ஒரு ஆராய்ச்சி ஆலோசகரை நியமித்துக் கொள்ள முடிவு செய்தனர். அதன்படி தனது நூல்களில்  பல்வேறு விவசாயிகள் போராட்டங்களையும், சுதந்திரப் போராட்டங்களையும் ஆவணப்படுத்திய முன்னணி வரலாற்றாசிரியரான பேராசிரியர் அமித் குமார் குப்தா (இவர் ஜூலை 2021 ல் காலமாகிவிட்டார்) நியமிக்கப்பட்டார். 2015 களில் பத்தொன்பதாம் நூற்றாண்டு காலனித்துவமும், மாபெரும் இந்திய போராட்டம் மற்றும் விவசாயிகளின் நாடகம், 1934 – 1951 இடதுசாரிகளும்  இந்தியாவின் ஏழ்மை கிராமப்புறங்களும் (1996) என்ற நூல்களை எழுதியவர்.  அவரது மிக நீண்ட  அனுபவமும், ஆராய்ச்சிக்கு வழிகாட்டும் திறமையும் மதிப்பிடற்கரியவை. அவர் ஆராய்ச்சிக் குழுவினரிடம் எல்லா வரலாற்று இயக்கங்களைப் பற்றிய போதுமான தகவல்களை முதன்மை ஆதாரங்களை கவனமாக படிக்கும் வரலாற்று ரீதியான நடைமுறையை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

முதன்மை ஆதாரங்களிலிருந்து ( ஆவணக் காப்பகங்களில் உள்ள ஆவணங்கள், அதிகார பூர்வ மற்றும் அதிகாரபூர்வமற்ற)  தியாகிகளைப் பற்றியும் அவர்களுடைய தியாகங்களைப் பற்றியும் எழுத, நான் உட்பட ஆராய்ச்சி குழுவினர் தேசிய ஆவணக் காப்பகத்திற்கும், நேரு நினைவு நூலகம் மற்றும் அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு வழக்கமாக செல்வதுடன், பலவேறு மாநில ஆவணக் காப்பகங்களுக்கும் பலமுறைச் சென்று வந்தோம்.

கேரளாவிலிருந்து பதிவு செய்தவற்றிற்காக, ஆராய்ச்சிக் குழு சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகத்திற்கும், கோழிக்கோடு மாநில ஆவணக் காப்பகத்திற்கும், திருவனந்தபுரத்தில் உள்ள மாநில ஆவணக் காப்பகத்திற்கும் பெயர், பிறந்த தேதி, அல்லது உயிர்தியாகம் செய்த போது வயது, பிறந்த இடம் அல்லது இருப்பிடம் போன்ற ஒருவரது அடையாளத்தை நிறுவத் தேவையானத் தகவல்களை சேகரிக்க சென்றது. 19ம் நூற்றாண்டின் பெரும்பாலான மக்கள் மரண பதிவேடுகளில் சாதி அடையாளம் முக்கியமாக பதியப்பட்டிருக்குமாதலால் அதுவும் தியாகிகள் பற்றிய குறிப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த அனைத்து தரவுகளைத் தொடர்ந்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த தனிமனிதரின் பங்கு,  அவருடைய மரணம் அல்லது உயிர் தியாகத்திற்கு காரணமான நிகழ்வுகளின் போக்கு ஆகியவை குறித்த கிடைத்த தகவல்களின் சுருக்கமும் தரப்பட்டது. இதன்மூலம் அறிஞர்கள் காப்பகத் தகவல்களை பின் தொடரலாம்.

கேரளாவைச் சேர்ந்த தியாகிகளுக்கான காப்பகப் பணிகளைச் செய்யும் போது, குறிப்பாக 1849 மற்றும் 1921 ற்குமிடையில் மாப்ளா எழுச்சி மற்றும் புன்னப்புரா- வயலார் இயக்கத்தின் தியாகிகளை அடையாளம் காண, ஆராய்ச்சிக் குழு பல்வேறு முதன்மை ஆதாரங்களைப் படித்தது. காலனித்துவ அதிகாரிகள் அல்லது  ஆங்கில-இந்திய கவர்னர் ஜெனரலின் மலபார் ஆட்சியர் அல்லது அன்றைய மெட்ராஸிலிருந்த அவரது ஏகாதிபத்திய முகவர் ஆகியோர் பொதுவாக உள்ளூர் மோதல்கள் பற்றி அனுப்பிய 15 வார அறிக்கைகளும் அதில் அடங்கும். உள்துறையின் அரசியல் மற்றும் வெளிநாட்டுக் கோப்புகள்; குற்றவியல் விசாரணைகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள விடயங்களில் நீதித்துறை முடிவுகள் அல்லது தண்டனை பெற்ற கைதியின் விவரங்கள் மற்றும் அவரது மரணம் தொடர்பான பதிவுகள் அடங்கிய நீதித்துறையின் நடவடிக்கைகள், மேலும் வெளிநாட்டு அரசியல், உள்துறை நிர்வாகம், காவல்துறை, நீதிமன்ற நடைமுறைகள்,சிறைகள் இன்னும் இது போன்று பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட, அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பாளரால் மொழி பெயர்க்கப்பட்ட உள்நாட்டு செய்தித்தாள்களின் சாராம்சத்தின் வாராந்திர தட்டச்சு சுருக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய  அறிக்கை அது.  இவையாவும் தமிழ்நாடு மாநில ஆவணக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

ஆராய்ச்சிக் குழு தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து உள்நாட்டு அரசியல் துறை நடவடிக்கைகள் தொடர்பான கோப்புகளையும், கோழிக்கோட்டில் உள்ள கேரள மாநில ஆவணக் காப்பகத்திலிருந்து மலபார் ஆட்சியர் அலுவலக பதிவேடுகள், காவல்துறை  கோப்புகள், அரசியல் (உள்துறை) கோப்புகள் ஆகியவற்றையும், திருவனந்தபுரம் கேரள மாநில ஆவணக் காப்பகத்திலிருந்த விடுதலைப் போராட்ட இயக்கம் தொடர்பான கோப்புகளையும் ஆராய்ந்தது. தியாகிகளின் களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ள கேரளா தொடர்பான உள்ளீடுகள் முதன்மை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை. இதனால் களஞ்சியத்தின் செயல் திட்டத்தில் உள்ள சுருக்கமான வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளில் திருப்தி அடையாதவர்கள் மேலும் அதிக தகவல்களை சேகரிக்க இது அனுமதிக்கிறது.

மேலும், தியாகிகளின் களஞ்சியத்தின் தொகுதிகளை வெளியிடுவதற்கு முன் இரண்டு வல்லுநர்கள் அவற்றை ஊன்றிப் படித்து, மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளையும், மேலும் சிலரது பெயர்களைச் சேர்ப்பதற்கான பரிந்துரைகளையும் வழங்கும் கடுமையானப் பணியை மேற்கொண்டனர். ஆராய்ச்சிக் குழு சரிபார்ப்பிற்காக இரண்டாம் நிலை ஆதாரங்களையும் ஆராய்ந்து, தேவையான இடங்களில் முதன்மை ஆதாரத்  தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதிச் செய்தது. எடுத்துக்காட்டாக தியாகிகளின் களஞ்சியத்திலிருந்து ஒரு உள்ளீடு

 

 அப்பன்குளம் மொய்தீன் அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்