Aran Sei

இந்திய வரலாற்றை சிதைக்க  முயற்சிக்கும் இந்துத்துவா – ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப் கண்டனம்

ரலாற்றை அரசியல் பரப்புரைக்காக பயன்படுத்துவதைத் தடுக்கப் புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை வரலாற்றாசிரியர்கள் கவனமாக ஆராய வேண்டும் என பிரபல வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் மற்றொரு புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான இர்ஃபான் ஹபீப்பின் 90 வது பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்ட போது கூறினார்.  “வரலாற்றைப் பாதுகாப்போம்” என்ற அந்த நிகழ்ச்சியில் ஹபீப், பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் இந்திய வரலாற்று காங்கிரஸ் (IHC) அமைப்பின் தலைவர் அமியா குமார் பக்சி வரலாற்றாளர் ஆதித்ய முகர்ஜி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

தாப்பர் தனது உரையில்,” அரசியல் சித்தாந்தத்தைப் பாதுகாக்க, தற்போது பிரபலமாகி உள்ள, சிதைந்த வரலாற்றை சட்டபூர்வமாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர் “இதில்  முதன்மையானது அதிகாரம் அல்ல ஆனால் நம்பகமான சான்றுகளும் அந்தச் சான்றுகளைப் படிப்பதும்தான் முதன்மையானது என்றும் வலியுறுத்த வேண்டிய நேரம் இது,” என்றும் கூறினார். ” இந்தக் கற்பனை வரலாறு பொய்மையிலிருந்து உண்மையைப் பிரித்துப் பார்ப்பது பற்றி யாரும் கவலைப்படாத தளங்களான சமூக ஊடகங்கள் தொலைகாட்சி மற்றும் பளபளப்பான இதழ்கள் ஆகிய பல வழிகள் மூலம்  முன்னிறுத்தப் படுகின்றன. மேலும் அவை திட்டமிட்டமிடப்பட்ட முறையில் கல்வி மூலம் பரப்பப்படுகிறது,” என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற முன்னோடி வரலாற்றாளர்களில் ஒருவரான தாப்பர் கூறினார்.

பாடத்திட்டத்தின் மீதும் பள்ளிப்பாடப் புத்தகங்கள் மீதும் அதிகார நிலையில் இருப்பவர்கள் அதிக அளவு கவனம் செலுத்துவதால் இதனை கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். மேலும் அவர், “கல்வி உறுதி செய்கிறது அல்லது உறுதி செய்ய வேண்டும் என்று நினைக்கும் சுதந்திரம் மறுக்கப்படுவது மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும்,” என்றும் கூறினார்.

ஒன்றிய அரசு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின்(என்சிஈஆர்டி) பாடப்புத்தகங்களை மாற்றுவதற்கான திட்டத்தை அறிவித்ததிலிருந்து அவர் தனது இந்த கருத்துக்களை வெளியிட்டார். ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில்   நாடாளுமன்ற மாநிலங்களவையின் செயலகக் குழுவின் பிரிவு அனுப்பியுள்ள அறிவிக்கையில்  கல்வி, பெண்கள், குழந்தைகள் இளம்வயதினர் மற்றும் விளையாட்டு ஆகியவற்றிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்பானத் துறை இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு, ” பள்ளிப் பாட நூல்களின் வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை சீர்திருத்துவது என்ற பொருளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்,” எனக் கூறி உள்ளது. அவர்களுடைய கவனம், “வரலாற்றுக்கு மாறான உண்மைகள் மற்றும் தேசியத் தலைவர்கள் பற்றிய சிதைவுகளை பாடப்புத்தகங்களிருந்து நீக்குதல் இந்திய வரலாற்றின் அனைத்து காலகட்டங்களின் சமமான அல்லது விகிதாச்சார அடிப்படையிலான குறிப்புகளை உறுதி செய்தல், கார்கி, மைத்ரேயி அல்லது ஜான்சிராணி, சின்னம்மா சந்த்பீபி மற்றும் ஜல்காரி பாய் போன்ற ஆட்சியாளர்கள் ஆகிய வரலாற்று பெருமைமிக்க பெண்களின் பங்கை உயர்த்திப் பிடித்தல் ஆகியவற்றில் இருத்தல் வேண்டும் என்றும், இது குறித்து ஜூன் மாதம் 15 ம் தேதிக்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வல்லுநர்களிடமிருந்து கருத்துக்களை வரவேற்பதாகவும் அது தெரிவிக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்திய வரலாற்று காங்கிரஸ்  கடுமையான சொற்களுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் தற்போதுள்ள என்சிஈஆர்டி பாடப்புத்தகங்களில் சீர்திருத்துவது என்ற பெயரில் திட்டமிட்டுத் தவறான தகவல் மற்றும் ஒரு பக்கச் சார்பு நிலையில் மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் மன உலைவை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அறிவித்தது.” வரலாற்றுக்கு மாறான உண்மைகள்” முன்னிறுத்தப்பட்டுள்ளதாக அது கூறுவது முற்றிலும் தவறானது. ஏனெனில் தற்போதுள்ள பாடப்புத்தகங்களில் 120 க்கும் மேற்பட்ட தேசியத் தலைவர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன”  மேலும் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களை போதுமான அளவில் அவை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. அத்துடன் அரசியல், மதம், சமூகம் ஆகியவற்றில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தியுள்ள மகத்தான பெண்களைப் பற்றிய ஏராளமான செய்திகள் உள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

சீர்திருத்தம் என்ற பெயரில் மறைமுகமாக பாடப்புத்தகங்களின் மீது வைக்கப்பட்டுள்ள இந்த விமர்சனங்கள் எந்த ஒரு தேசிய பன்னாட்டு அங்கீகாரம் பெற்ற வரலாற்றாய்வாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவால் கொடுக்கப்பட்டவையல்ல. அதற்கு மாறாக அது தவறான எண்ணங்களால் வழிநடத்தப்படும் கல்வி சாராத வாக்காளர்களால் ஆதரிக்கப்படும் ஒரு அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வந்தவை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. தில்லியைச் சேர்ந்த ஒரு வலதுசாரி சிந்தனை அமைப்பான பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையம்(PPRC) வெளியிட்ட அறிக்கையில் வாதிட்டுள்ள கருத்தும் அரசாங்கத்தின் கருத்தும் “மிகச் சரியாகவே பொருந்துகிறது.”பாஜக வின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான வினய் சகஸ்ரபுத்தே பிபிஆர்சியின் இயக்குநர் குழுவில் ஒரு உறுப்பினரும் ஆவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பாஜக அரசின் தற்போதைய முயற்சி, 2001-2002 ல் அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏற்கனவே உள்ள என்சிஆர்டி பாடப்புத்தகங்கள் சிலவற்றை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பேரினவாத மற்றும் வகுப்புவாத சார்பு கொண்டவர்கள் எழுதிய புத்தகங்களைக் கொண்டு நிரப்ப எடுத்த முயற்சிகளை நினைவூட்டுகிறது என இந்திய வரலாற்று காங்கிரஸ் அறிக்கை கூறுகிறது.  வாஜ்பாய் ஆட்சியின் போது தாப்பர் எழுதிய புத்தகங்கள் என்சிஈஆர்டியால் கைவிடப்பட்டன. இந்தப் பிரச்சினை குறித்து பேசும் போது தாப்பர், “வரலாற்றை அரசியல் பரப்புரைக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமெனில் பாடப்புத்தகங்களை விமர்சிக்கும் உரிமையையும் நாம் வலியுறுத்த வேண்டும். அதேபோல தேவைப்படும் இடங்களில் மாற்று விளக்கங்களை முன்வைக்க சுதந்திரத்தைக் கோரும் உரிமையும் இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களால் இது தேசவிரோத செயலாகக் கருதப்படுவதை ஏற்க முடியாது. ஆனால் என்ன கற்பிக்க வேண்டும் என்பது பற்றிய விவாதத்தில் இது மதிப்புமிக்கது. “ஆகவே, சுதந்திரத்தின் ஆரம்ப ஆண்டுகளில் நாம் முன்பு இருந்த நிலையான சிந்தனையுள்ள, மனிதாபிமான மற்றும் மதசார்பற்ற சமுதாயம் என்ற நிலைக்குத்  திரும்ப வேண்டும் என்றால் வரலாற்றைப் பாதுகாப்பது ஒரு கட்டாய மற்றும் உடனடித் தேவை ஆகும்,” என  பண்டைய வரலாறு குறித்த அவரது எழுத்துக்களுக்காக நன்கு அறியப்படும் அந்த 89 வயதான வரலாற்றாளர் கூறினார்.

முடிவில் பேசிய ஹபீப், இந்திய வரலாற்றில் எதிர்ப்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறி, தங்கள் இருப்பை நியாயப்படுத்த பேரினவாத அரசியல் என்று சொல்லப்படுவதைக் கொண்டு வரலாற்றின் மீது தங்கள் வண்ணத்தைப் பூச, இந்திய வரலாற்றில் குறிப்பாக, முஸ்லீம்களை அழிவின் சக்திகளாக சித்தரிப்பது உள்ளிட்ட வகுப்புவாத வன்முறைக்கு எதிராக பாதுகாப்பை உருவாக்குவது தேவை ஆகும் என்று கூறினார்.

“மேலாதிக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தவறான வரலாறுகள்”

தவறான நினைவுகள் ஏறத்தாழ ஒரு நோய் என்பது போலவே ஒரு நாட்டிற்கு தவறான வரலாறு ஒரு தனிநபரின் தவறான நினைவுகள் போன்றதுதான் என்கிறார் ஹபீப். ” நாட்டிற்கு அது ஒரு நோய். ஜப்பானும் ஜெர்மனியும் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும் என அந்த இடைக்கால வரலாறு குறித்த சிறப்பாக ஆய்வு செய்யும் அலிகார் பல்கலைக்கழகத்தின் முன்னோடி வரலாற்றாளர்களில் ஒருவரான ஹபீப் கூறினார். ” நீங்கள் ஒரு இயல்பான மனிதனாக இருந்தால் நீங்கள் உங்களைப் பற்றி சரியான நினைவுகளை வைத்துக் கொள்ள விரும்புவீர்கள். அது போலவே ஒரு நாடும் சரியான நினைவுகளை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

அண்மையில் ஜேஎன்யூவிலிருந்து ஓய்வு பெற்ற முகர்ஜி வரலாற்றின் ஒழுக்கத்தின் கம்பீரம் மீதான முழுமையான வன்முறை, அதன் நடைமுறை மற்றும் சான்றுகளின் வெளிப்படுத்தல், ஒட்டு மொத்த பொய்மைப்படுத்தல், உண்மைகளைக் கண்டு பிடித்து அந்த இடத்தில் அதற்கு பதிலாக மதப்பற்று, நம்பிக்கை மற்றும் புராணங்கள் ஆகியவற்றை பிரதியிடுவது போன்றவை குறித்தத் தன் கவலையை வெளிப்படுத்தினார்.

அவரைப் பொறுத்தவரை, “கருத்தியல் தாக்குதல் இப்போது கல்வித்துறையில் வரலாற்றின் வகுப்புவாத விளக்கத்திற்கு அப்பால் சென்று விட்டது என்றும், பெரும்பான்மை சமூகத்தினரை மட்டுமே அடையாளங்காட்டும், முற்றிலும் பெருமை பற்றிய புராண காலத்து தவறான ஒரு  கருத்து தற்போது இடைவிடாத பரப்புரை மூலம் பொதுக் கருத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.” என்றும் அவர் கூறினார்.

“கடந்த காலத்தின் பெரும் சாதனைகள் பின்னர் நடந்த தவறான பாதிக்கப்பட்ட உணர்வுடன் வேறுபடுகின்றன பெரும்பான்மையினர் சிறுபான்மையினரால் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்ற கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.  இவ்வாறுதான் பாசிசம் உலகெங்கும் செயல்படுகிறது,” என்று முகர்ஜி கூறினார். ‘ஆரியர்களை இந்தியாவின் பூர்வீக குடிகளாகக் காட்டுவது இந்துத்துவா கருத்தியலுக்கு மிகவும் முக்கியமானது’ பண்டைய வரலாற்றில் வல்லுநரான தாப்பர், ஆரியர்கள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதை நிரூபிப்பது இந்துத்துவா சக்திகளுக்கு அவர்களுடைய சித்தாந்தத்தைப் பாதுகாப்பதற்காக முக்கியமானது. ஆனால் வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் இந்தக் கருத்தை ஆதரிப்பதில்லை என்று அவர்  கூறினார். இந்திய வரலாற்றின் இந்துத்துவா பதிப்பு 1930 களின் இரண்டு முக்கிய காலனிய கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு அமைந்தது. ஒன்று இந்திய கலாச்சாரம் மற்றும் இந்துக்களின் ஆரிய தோற்றம். மற்றொன்று இந்து மற்றும் முஸ்லிம்களின் இரு நாடுகள் கோட்பாடு. இவை இரண்டுமே கடந்த 50 ஆண்டு கால வரலாற்று ஆய்வுகளால் நிராகரிக்கப்பட்டு விட்டன என்று கூறுகிறார்.

“வேத நூல்கள் மட்டுமே ஆய்வுக்கு மையமாக இருந்தன. ஆனால் தற்போது அவற்றிலிருந்து புதிய தகவல்கள், புதிய வழிகளில் கிடைக்கின்றன. புவியியல் தொல்பொருளியல் மொழியியல் மற்றும் தொல்பொருள் – மரபியல் ஆகிய பல வழிகளில் புதிய தகவல்களை பெற முடிவது மட்டுமின்றி வரலாற்று புலனாய்வு வடிவமும் மாறிவிட்டது,” என்கிறார் தாப்பர். புதிய கண்டுபிடிப்புகள் ஹரப்பிய நாகரீகம் ஆரம்பகால வேத கால நாகரீகத்தை விட மிக பெரிய அளவில் விரிவானது என்பது மட்டுமல்ல வேத கால நாகரீகத்திற்கு முந்தையது. மேலும் ஹரப்பிய அகழ்வாய்விடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள், வேத சமூகத்தைச் சேர்ந்த முழுமையான ஒரே கலாச்சாரமாக இருந்தது என்பதை உறுதி செய்வதற்கு பதிலாக, பல்வேறு கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்த பன்முகத்தன்மையுடன் இருந்ததாகவும் காட்டுகின்றன. ” ஹரப்பியர்களும் ஆரியர்களே என்று வலியுறுத்திக் கூற  எந்த வித ஆதாரமும் இல்லை என்றாலும், ஆரிய அடித்தளத்தினை முன்னிறுத்த  பல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன… ஆரியர்கள் இருப்பு அதையடுத்து வந்தது என்பதுடன் ஹரப்பிய கலாச்சாரத்துடன் எவ்வகையிலும் ஒத்ததல்ல,”  என்கிறார் அவர். மற்றொரு கண்டுபிடிப்பு ஹரப்பிய நாகரீகம் மேற்கு நோக்கி நகர்ந்ததாக புவியியல் நோக்கு உள்ளது. ஆனால் இது ஆரிய மொழி பேசுபவர்களின் இடப்பெயர்வு கிழக்கு நோக்கி இருந்ததாகக் கூறும் வேத கால பார்வையிலிருந்து மாறுபட்டது.

இந்துத்துவா வரலாற்றின் அடிப்படையில் ஆரியர்களை இந்தியாவின் பூர்வீக குடிகள் என வலியுறுத்துபவர்களும், இடப்பெயர்வை மறுப்பவர்களும் மரபணு சான்றுகளை நம்பத்தகுந்தவை அல்ல என்று கூறி மேற்கூறிய கருத்தை உதறித் தள்ளிவிடுகின்றனர்‌. இந்துத்துவாவிற்கு ஆரியர்கள் பூர்விகக் குடிகளாக இருக்க வேண்டும். அது போலவே அவர்களுக்கு எல்லா இந்துக்களும் கூட பூர்வீகக் குடியினர்தான்,” என்கிறார் தாப்பர்.

தாப்பரின் கூற்றுப்படி, 19 ம் நூற்றாண்டில் முதன்முதலில் ஆரியர்களின் மேலாதிக்கமானவர்கள் என்ற கருத்து உருவான போது, ஆரியர்கள் என்ற சொல் மொழியை வைத்தே அடையாளம் காட்டப்பட்டதே அன்றி இனத்தை வைத்து அல்ல என்பதை  இன்று வரை அவர்கள் மறந்து விட்டனர். “பல இன வேறுபட்ட கலாச்சாரங்கள் கொடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சூழ்நிலையில் ஒரே மொழியை கொண்டதாக இருக்க முடியும். இது வரலாறு முழுவதும் மீண்டும் மீண்டும் நடந்தது,” என்று தாப்பர் கூறினார்.

ஆரியர் பற்றிய கேள்வி குறித்து பேசிய ஹபீப்,” ஆரியர்கள் என்ற கேள்வி நடத்தப்படும் விதம் பெரும்பாலும் எப்போதும் ஆர்எஸ்எஸின் ஆரியர்கள் பற்றிய பார்வை அல்லது இந்திய அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பார்வை ஆகியவை ஜெர்மனியின் நாஜிக்களுடையது போன்றதுதான். ஜெர்மானியர்கள் ஆரியர்களை வழிபட்டனர். ஆர்எஸ்எஸ் ஆரியனாக இருப்பதை பெருமையாக கருதுகிறது.  திராவிடனாக இருப்பது ஏன் பெருமையுடையதாக இருக்கக் கூடாது? ஏனெனில் அது இந்தியாவிற்கு கடத்தப்பட்ட நாஜியின் கருத்து.

 

தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.

எழுதியவர்: ஸ்னிக்தெண்டு பட்டாச்சார்யா

 

 

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்