Aran Sei

ஊடகங்கள் மீதான பாஜக தாக்குதல் – பின் விளைவுகள் என்ன? – சிறப்புக் கட்டுரை

Image Credit : caravanmagazine.in

க்டோபர் மாதம் நியூஸ்-18-ல் பணி செய்யும் ஒரு மூத்த ஊழியருடன் பேசிய போது, மொத்த நிர்வாகமும் சிதைந்துகொண்டிருப்பதாக அவர் சொன்னார். பல ஊழியர்கள் பணி விலகக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாகவே நியூஸ்-18 தொலைக்காட்சி செய்திகளை வெளியிடும் தொனி மாறியிருக்கிறது. தூரத்தில் இருக்கும் டெல்லி தலைமை, நிர்வாகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கிறது. சில மாதங்களுக்கு முன் வரை வெற்றிகரமாக வளர்ந்துகொண்டிருந்த நியூஸ்-18 தொலைக்காட்சி இப்போது பார்வையாளர்களையும் மதிப்பீடுகளையும் கணிசமாக இழந்திருக்கிறது.

இதைவிட கொடுமையானது என்னவென்றால், சென்னை நியூஸ்-18 அலுவலகத்தில் இருக்கும் அச்ச அலைகள். “என்னை ஒரு தேச விரோதி என்று குற்றம்சாட்டும் ஒரு சமூக வலைத்தளப் பதிவு போதும், என்னை இவர்கள் வேலையை விட்டு நீக்கி விடுவார்கள்” என்றார் அந்த ஊழியர். “ எங்களை வேலையை விட்டு நீக்குவதற்குச் சில மணி நேரங்கள் மட்டுமே இருந்தால் கூட எங்களுக்கு அது தெரியாது. ஒரு விஷயத்தில் கருத்து சொன்னதற்காக மட்டுமே நாங்கள் பணி நீக்கம் செய்யப்படலாம். நீண்ட காலமாகவே நான் இந்தத் துறையில்தான் வேலை செய்து வருகிறேன். தமிழ் ஊடகத்திற்கு இப்படி ஒரு அச்சுறுத்தலான காலம் இருந்ததே இல்லை என்று நினைக்கிறேன்” என்கிறார், அவர்.

மாரிதாஸ் மலைச்சாமி எனும் இந்து தேசியவாத யூட்யூபர், ‘தமிழ்நாட்டின் பல பிரதான ஊடகவியலாளர்கள், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக மற்றும் பெரியாரால் தொடங்கப்பட்ட சாதி-எதிர்ப்பு சுயமரியாதை இயக்கமான திராவிடர் கழகத்தின் பிரதிநிதிகளாக இருப்பதாக’, குற்றம் சாட்டி ஜூலை மாதம் ஒரு வீடியோ வெளியிட்டதுதான், பிரச்சினைகளுக்கு எல்லாம் தொடக்கப்புள்ளியாக இருந்தது.

நியூஸ்-18-ல் பணி செய்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் திக ஆதரவாளர்கள் என்றும் அவர்களின் பாரபட்சமான சிந்தனைகளைத்தான் அந்தத் தொலைக்காட்சி பிரதிபலிக்கிறது என்றும் மாரிதாஸ் எந்த அடிப்படையும் இல்லாமல் குற்றம்சாட்டியிருந்தார். நியூஸ் 18-இன் முதன்மைச் செய்தி ஆசிரியர் எம் குணசேகரன்தான் முக்கியக் குற்றவாளி என்றும் அவர் சொல்லியிருந்தார்.

நியூஸ்-18 “நடுநிலைமையோடு” இயங்க வேண்டும், “நடுநிலைமையான ஊடகவியலாளர்கள்” இருக்க வேண்டும் என்று இதே குற்றச்சாட்டுகளை ஒரு இணையவழி மனுவில் மாரிதாஸ் மறுபடியும் பதிவு செய்திருந்தார். தமிழ்நாடு பாஜகவின் முதன்மைத் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர், திராவிட அனுதாபிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேனலுக்குக் கடிதங்கள் அனுப்பினர்.

மாரிதாஸுக்கும் பாஜகவிற்கும் இருக்கும் தொடர்பு ரகசியமானது ஒன்றும் அல்ல. 2019-ம் ஆண்டு திமுக குறித்த போலிச் செய்திகளைப் பரப்புவதாக திமுக தலைவர் ஒருவர் காவல்துறையில் வழக்கு பதிவு செய்த போது, உள்ளூர் பாஜகவினர் மாரிதாஸுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் களத்தில் குதித்தனர்.

நியூஸ்-18 சேனலின் மின்னஞ்சலுக்கு வந்த கடிதங்களை எல்லாம் பார்த்ததாகச் சொல்லும் நியூஸ்-18 ஊழியர், அவை பெரும்பாலும் மாரிதாஸின் மனுவையே மீண்டும் எழுதியது போலவே இருந்தன என்கிறார். “அதைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பே வந்து விட்டது” என நினைவுகூர்கிறார். “பாஜக தலைவர்கள், பாஜக அல்லாத கட்சியினர் விவாதங்களுக்கு வரும் போது தேநீர் கொடுக்கப்படுகிறது, பாஜகவினருக்குத் தேநீர் கொடுக்கவில்லை என்பது போன்ற அற்பமான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர்”, என்கிறார்.

“குணா சார் அவர்களிடம் கஷ்டமான கேள்விகளைக் கேட்டிருந்ததாகவும் புகாரளித்திருந்தனர். ஆனால், நாங்கள் எல்லாரிடமும் அப்படியான கேள்விகளையே கேட்டோம். ஒவ்வொரு மின்னஞ்சலின் முடிவிலும், அவர்கள் ஒவ்வொருவரும், ‘நிறைய தமிழ் சேனல்களில் கிறிஸ்தவர்களும், அரசு சாரா அமைப்புகளின் ஆட்களும் திகவினரும் தொகுப்பாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருமே நீக்கப்பட வேண்டும்’ என எழுதியிருந்தார்கள்” என்கிறார்.

நியூஸ்-18-ஐ நடத்தும் நெட்வொர்க்-18 எனும் ரிலையன்ஸ் குழுமத்திற்கும் மாரிதாஸ் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு, நெட்வொர்க்-18-ன் நிர்வாக ஆசிரியர் வினய் சரவாகி “தக்க நடவடிக்கை” எடுக்கப்படும் என்று மின்னஞ்சலில் உறுதியளித்ததாக ட்விட்டரில் ஒரு ட்வீட்டையும் வீடியோவையும் பதிவு செய்திருந்தார்.

அந்த மின்னஞ்சல் “போலியாக ஜோடிக்கப்பட்டது” என்று கூறிய சரவாகி காவல்துறையில் புகாரளித்தார். நான் நெட்வொர்க்-18-ற்கு வைத்த கேள்விகளுக்குப் பதிலாக அக்குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “சேனலை அவமரியாதை செய்யும்படியோ, அச்சுறுத்தும்படியோ எந்தச் செய்தியையும் படத்தையும் மாரிதாஸ் பதிவு செய்யக் கூடாது” என்று தடை உத்தரவு பெற்றிருப்பதாகச் சொன்னார்.

2016-ம் ஆண்டு நியூஸ்-18 தொலைக்காட்சி தொடங்கப்பட்டத்தில் இருந்து அது வெற்றிப்பாதையை எட்ட உடனிருந்த குணசேகரன், இது தொடர்பாகச் செய்தி அறையில் இருந்த தனது சக ஊழியர்களுக்கு தைரியம் கூறினார். “சமூக வலைத்தளங்களில் எதற்கும் பதிலளிக்க வேண்டாம், நிர்வாகம் அவருக்கும் எங்கள் எல்லாருக்கும் ஆதரவளிக்கும்” என்று அவர் சக ஊழியர்களிடம் கூறினார்.

ஜூலை மாதம் மாரிதாஸ் வீடியோ வெளியிட்டுச் சில வாரங்கள் ஆன போது, நிர்வாகப் படிநிலையில் சில மாற்றங்களை நியூஸ்-18-இல் கொண்டு வந்தது. சமூக வலைத்தளங்களில் அரசியல் குறித்து கருத்து பதிவு செய்திருந்ததற்காக இளையபாரதி எனும் மூத்த செய்தி ஆசிரியர் பணி விலகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். தலைமைச் செய்தியாளராக இருந்த அசீப் முகமது பணி நீக்கம் செய்யப்பட்டார். குணசேகரன் அம்மாதத்தின் இறுதியில் ராஜினாமா செய்தார்.

முதன்மைச் செய்தி ஆசிரியரைத் தவிர மேலும் 20 பேர் நேர்மையில்லாதவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுப் பட்டியலிடப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இப்போது நியூஸ்-18-இல் இல்லை என இப்போது நியூஸ்-18-இல் வேலை செய்து கொண்டிருப்பவர்களும், முன்னாள் ஊழியர்களும் சொல்கிறார்கள்.

“பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் நம்மை நடுநிலைமையானவர்கள் என்றே கருதினார்கள் என்பது உலகிற்குத் தெரியும்” எனத் தம் ஊழியர்களுக்கு எழுதியிருந்த பிரியாவிடை கடிதத்தில், ஒருசார்பு குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு குணசேகரன் பதிலளித்திருந்தார். தன்னுடைய சக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “நம்முடைய கருத்துச் சுதந்திரமும் சில நேரங்களில் பறிக்கப்பட்டது என்பதை நாம் மறக்க முடியாது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நெட்வொர்க்-18-இன் செய்தித் தொடர்பாளர், “பணி விலகல்களுக்கும் மாரிதாஸின் வீடியோவிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ராஜினாமாக்களுக்குப் பிறகு ஊழியர்களை நியமிப்பதில் எந்த அசாதாரணச் சூழலும் இல்லை” என்று சொன்னார். “நெட்வொர்க் 18-இன் ஊழியர்கள் நடத்தை விதிமுறைகளை, சமூக வலைத்தள விதிமுறைகளை அனைத்து நேரங்களிலும் பின்பற்ற வேண்டும். அது மீறப்படும் போது நடவடிக்கை எடுக்கப்படும்”, என்ற அவர், நியூஸ்-18-இல் யாரும் பதவி குறைப்பு செய்யப்படவில்லை, பணி நீக்கமும் செய்யப்படவில்லை என்றும், குணசேகரன் அவருடைய “தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களுக்காகப் பதவி விலகினார்” என்றும் கூறினார்.

தமிழக ஊடகங்களோடு பாஜக எப்போதும் அசௌகரியமான உறவிலேயேதான் இருக்கிறது. தமிழகத்தில் தங்களை திணித்துக்கொண்டு, பொது மக்களுக்குத் தொடர்பானவர்கள் போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. பாஜகவின் முதன்மைப் பிரச்சாரகர் நரேந்திர மோடியே வந்து வாக்கு சேகரித்தும், கடந்த சட்டசபை தேர்தலில் மொத்த வாக்குகளில் மூன்று சதவிகிதத்தைக் கூட பெற முடியவில்லை, ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. 2017-ல் சென்னைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தல் ஒன்றில் “நோட்டா” தேர்வு, பாஜக உறுப்பினரைவிட அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது.

தமிழகச் செய்தித்தாள்களிலும், செய்தி சேனல்களிலும் “தேசியவாத, இனவாத” பிரச்சாரங்கள் எடுபடாமல் போவது பாஜகவிற்கும், பொதுவாகவே இந்து வலது சாரிகளுக்கும் வருத்தமளிப்பதாக இருக்கிறது. நாட்டின் ஊடகங்களில் பெரும்பான்மையானவற்றை, அவை எப்படிச் செய்தியளிக்க வேண்டும், எந்த மாதிரிச் செய்திகளை வெளியிட வேண்டும் எனக் கட்டுப்படுத்தும் பாஜகவிற்குத் தமிழக நிலைமை பழக்கமில்லாதது.

2021-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல்களுக்குத் தமிழ்நாடு தயாராகிக்கொண்டிருக்கும் போது, தங்கள் கருத்துகளை ஏற்காத ஊடகவியலாளர்களை எல்லாம் தாக்கி, ஒதுக்கி, தீயவர்கள் எனச் சித்திரிக்கும் உத்தியை இந்து வலதுசாரி கையில் எடுத்திருக்கிறது.

முகேஷ் அம்பானியால் நடத்தப்படும் நியூஸ்-18 சேனல்தான் தமிழர்-அல்லாத ஒருவர் நடத்தும் பிரதான தமிழ்ச் செய்தி சேனல். நியூஸ்-18-இன் ஊழியர்கள்தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டார்கள் என்றாலும், பிற நிறுவனங்களின் ஊடகவியலாளர்களும் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

புதிய தலைமுறையின் கார்த்திகைச் செல்வன் மற்றும் நியூஸ்-7 தமிழின் நெல்சன் சேவியர் இதில் அடக்கம். மாரிதாஸ் பட்டியலில் பெயர் வந்த பிறகு, புதிய தலைமுறை சேனலின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வனின் முடிவெடுக்கும் அதிகாரம் குறைப்பட்டது.

நெல்சன் சேவியர் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்கனவே பாஜகவினரால் தாக்கப்பட்டதால் நியூஸ்-7 சேனலில் அவருடைய பொறுப்புகள் குறைக்கப்பட்டிருந்தன. மாரிதாஸ் அவரைப் பற்றிப் பேசிய பிறகு, அவர் மேலும் ஒதுக்கப்பட்டார். இது தொடர்பான கேள்விகளுக்குப் புதிய தலைமுறையும் நியூஸ்-7-ம் பதிலளிக்கவில்லை.

பாஜகவின் மாநிலச் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதியை இது குறித்துப் பேச தொடர்புகொண்ட போது பதிலளிக்கவில்லை. ஆனால், பாஜகவின் மாநில அறங்காவலர் எஸ்.ஆர் சேகர், தந்தி டிவியைத் தவிர, “மற்ற சேனல்களில் இருக்கும் ஐம்பது சதவிகித ஊடகவியலாளர்கள் இந்து-எதிர்ப்பு, பாஜக-எதிர்ப்பாளர்களாக இருக்கின்றனர்” என்றார். குணசேகரன், கார்த்திகை செல்வன், நெல்சன் சேவியர் உட்பட பல ஊடகவியலாளர்கள் தங்களை அவமரியாதை செய்ததாகச் சொல்லும் அவர், “நாங்கள் அந்த நிர்வாகங்களோடு எல்லாம் பேசவில்லை” என்றும் சொன்னார்.

தமிழர்களின் கவனத்தைப் பெறுவதற்கான இந்து வலது சாரியின் முயற்சியில் புதியதொரு காலகட்டத்தின் தொடக்கமே பத்திரிகையாளர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது எனப் பல ஊடகவியலாளர்கள் என்னிடம் சொன்னார்கள்.

2014-ல் பாஜகவிற்கு ஒரு திருப்புமுனை உண்டானது : அதுவரை எல்லாச் செய்தி சேனல்களிலும் நடந்த விவாதங்களில், பாஜகவும், பிற வலது அமைப்புகளும் இடம்பெறுவதற்குத் திணறி வந்தன. ஆனால், அந்த ஆண்டு மோடி மத்தியில் அதிகாரத்தை வென்றதால், அப்போது இருந்து பாஜக எல்லா இடங்களிலும் இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக எவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்பதற்கும் ஊடகங்களில் எவ்வளவு தூரம் அறியப்படுகிறது என்பதற்கும் வித்தியாசங்கள் இருந்தாலும், பாஜக மக்களால் அறியப்படுவது அக்கட்சிக்கு எப்படியும் உதவியாக இருந்ததில்லை.

மூத்த அரசியல் மற்றும் சமூகச் சிந்தனையாளர் ஜே ஜெயரஞ்சன், “தொலைக்காட்சி விவாத நிகழ்வுகள் தமிழ்நாடு தொடர்பான பிரச்சினைகளை சுற்றியே இருக்கும், அவை குறித்து பாஜகவிற்கு எந்த நிலைப்பாடும் இருக்காது என்றார். அதே சமயம், தமிழகத்திற்கு வெளியே, பாஜக ஈடுபடும் தேசிய அளவிலான அரசியலுக்கோ நிகழ்வுகளுக்கோ தமிழ்ப் பார்வையாளர்கள் திரள்வதில்லை. பாஜக பேச்சாளர்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லாமல் போகிறது. இதன் விளைவாக தமிழக அரசியலுக்கும் பாஜகவிற்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது.” என்று கூறுகிறார்.

ஃபிரண்ட்லைன் பத்திரிகையின் ஆசிரியர் ஆர் விஜய சங்கர், மக்களின் வாக்குகளை வெளியிடும் நியூஸ்7 சேனலின் கேள்வி நேரம் எனும் விவாத நிகழ்வு குறித்து விளக்குகிறார். “ஒவ்வொரு விவாதத்தின் முடிவிலும் பாஜக எடுக்கும் நிலைப்பாடு வாக்கெடுப்பில் தோற்கும். அவர்களுடைய ஆட்களை மேடையில் வைத்தால் மட்டும் போதாது என்று புரிந்துகொண்டு, இப்போது செய்தி அறையையே மாற்ற நினைக்கிறார்கள்” என்கிறார்.

பாஜகவின் பார்வையில், தமிழகத் தொலைக்காட்சி ஊடகம் ஒரு பழக்கப்படுத்தப்படாத மிருகம். டெல்லியில், மத்திய அரசினால் கட்டுப்படுத்தப்படும் தொலைக்காட்சிகளைப் போல, மத்திய அரசுக்கு ஜால்ரா அடிப்பதைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்களைப் போல இவர்கள் இல்லை. தமிழ்த் தொலைக்காட்சி ஊடகத்தின் தொகுப்பாளர்களும், ஆசிரியர்களும் வெளிப்படையாக விமர்சனம் செய்பவர்களாக இருக்கிறார்கள்.

இதை எல்லாம் கடந்து குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமே தாக்கப்படுவதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. டெல்லியில் இருக்கும் மேல்சாதி மேல்தட்டு ஊடகவியலாளர்களைப் போல அல்லாமல், மாரிதாஸின் பட்டியலில் வேறுபட்ட சமூகப் பின்புலங்களில் இருந்து வரும் ஒரு குறிப்பிட்ட தலைமுறையின் ஊடகவியலாளர்களான கார்த்திகை செல்வனும், நெல்சன் சேவியரும், குணசேகரனும் இருக்கின்றனர். அவர்களின் செயல்பாட்டில் பிரதிபலித்த அவர்களின் பின்புலம் இந்து வலது சாரி அமைப்புகளில் அவநம்பிக்கையைத் தோற்றுவித்தது.

இந்திய ஊடகத்துறையில் சாதிப் பிரிவினைகள் எப்போதுமே இருந்து வருகின்றன. 2019-ம் ஆண்டு ஆக்ஸ்ஃபாம் எனும் அரசு சாரா அமைப்பு நடத்திய ஆய்வில், இந்திய ஊடகத்துறையில் செய்தியறைகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்கள், பட்டியலின மக்கள், பழங்குடியினர் குறைவாகவே இருப்பது தெரியவந்தது. குறிப்பாக தலைமைப் பதவிகளில்.

இதற்கு தமிழ்நாடு விதிவிலக்கு. “மெட்ராஸ் மாநிலத்தில் பெரிய அளவில் அச்சு ஊடகம் தொடங்கப்பட்டதில் இருந்தே பார்ப்பன ஆதிக்கம் இருக்கும் ஊடகத்தின் அபாயத்தை அறிந்த பார்ப்பனர்-அல்லாத செயற்பாட்டாளர்கள், அதை எதிர்த்தார்கள்” என்றார் ஜெயரஞ்சன்.

பார்ப்பன ஆதிக்கம் இருக்கும் பல பத்திரிகைகள் இருந்தன – உதாரணமாக தி ஹிந்து மற்றும் தினமலர். ஆனால், “1960-களிலேயே பார்ப்பன ஊடகம் வெளியிடாத செய்திகளை வெளியிட திகவினாலும், திமுகவினாலும் தொடங்கப்பட்ட ஐநூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இருந்தன” என்றார் ஜெயரஞ்சன். எனினும், முற்போக்கு ஊடகவியல் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டது.

“இப்போது தமிழ்நாட்டில் பெரிய பத்திரிகையாக இருக்கும் தினத்தந்தி, நாடார் (இப்போது ‘பிற பிற்படுத்தப்பட்ட சாதி’ என்றிருக்கும்) சமூகத்தின் உடைமையாக, அவர்களால் நடத்தப்பட்டது. சாதி ஒடுக்குமுறை அல்லது சமூக நீதி குறித்த எந்த விஷயமும் சர்ச்சைக்குள்ளாகும் என அவற்றின் பக்கம் அப்பத்திரிகை போகவே இல்லை”.

1990-களில் நாட்டின் பிற பகுதிகளை விட தமிழ்நாட்டில் ஊடகங்கள் முற்போக்கானவையாக இருந்தாலும், தலையங்கமும் கருத்துகளும் பெரும்பாலும் பார்ப்பனர்களால்தான் எழுதப்பட்டன. “எந்த விஷயத்தைக் குறித்துப் பேச வேண்டும் என்றாலும் சோ ராமசாமி போன்ற ஒருவரை அழைப்பார்கள். பார்ப்பனக் கட்டுரையாளர்கள், ஆசிரியர்கள், செய்தி தொடர்பாளர்கள், அறிவுஜீவிகள் என ஒரு பட்டியலை வைத்திருந்தார்கள். ஒரு நிகழ்வு எப்படி புரிந்து கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் செய்திகளை வடிகட்டி மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள்”.

1990-களில் பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு வந்த தனியார் தொலைக்காட்சிகளால், ஊடகவெளி முற்றிலுமாக மாறியது. திமுகவுடன் தொடர்புடைய மாறன் குடும்பம் கட்சிக்காக சன் டிவியை தொடங்கியது. அதனுடைய வெற்றி காரணமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஜெயா டிவி தொடங்கப்பட்டது. இப்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது.

பார்ப்பனர்-அல்லாத ஒரு குழு தான் சன் டிவியில் இருந்தது. “சென்னையின் பணக்கார பகுதிகளை சேர்ந்தவர்களாக மட்டும் இல்லாமல், முதன்முறையாக தமிழ் நாட்டின் சிறு கிராமங்களில் இருந்தும் செய்தியாளர்களும் தொகுப்பாளர்களும் வந்தார்கள். அரசுப் பள்ளிகளில் போராடி படித்து, இட ஒதுக்கீட்டால் கல்லூரிகளுக்கு சென்று, சமூக நீதியினால் கிராமப்புறங்களில் உண்டான மாற்றத்தைப் பார்த்த முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருந்த ஆண்களும் பெண்களும் சன் டிவியில் வேலை செய்தார்கள்” என்கிறார் ஜெயரஞ்சன்.

செய்திகள் சேகரிக்கும், வெளியிடும் முறையுமே வித்தியாசமாகவே இருந்தது. “கிராமங்களைப் பற்றிய செய்திகள் வந்தன, இட ஒதுக்கீட்டை குறித்த புரிதல் இல்லாத மங்கிப் போன கருத்துக்கள் எல்லாம் வெளியிடப்படவில்லை” என்று ஜெயரஞ்சன் விவரிக்கிறார். “நிறைய பேர் இதை ‘பெரியாரிஸ்டுகள் செய்தி அறையை காலூன்றுகிறார்கள்’ என்றனர். ஆனால், அவர்கள் கொண்டு வந்த மாற்றம் சிறியதுதான். சில வேற்றுமைகள் தொடரக் கூடாது என்று உறுதி செய்யப்பட்டதே தவிர, கொள்கையை பரப்பும் வகையில் செயல்படவில்லை”.

பார்ப்பன ஆதிக்கம் இருக்கும் சேனல்களைப் போலவே, “காலையில் ஜோதிடம் குறித்த நிகழ்ச்சி இருக்கும். ஆனால், அதில் பார்ப்பனர் இருக்கக் கூடாது என்று முடிவு செய்தார்கள். முன்னர் செய்யப்பட்டது போல, கோவிலுக்குள் ஒரு நிகழ்வை படம்பிடிக்க வேண்டும் என்றால் பிற ஊடகவியலாளர்களை போல சட்டையை கழற்றிவிட்டு உள்ளே செல்ல மாட்டார்கள்”. “வெகு சிலரே நாத்திகவாதிகளாக இருந்தாலும், இந்து மதத்தைப் புனிதம் என அணுகுவது நிறுத்தப்பட்டு. இந்து மதம் வணிகம் என அணுகப்பட்டது”. “இன்றைய தமிழ் ஊடகவியலாளர்களில் பலர் ஊடகவியலின் இந்த முக்கியமான தலைமுறையில் இருந்து வந்தவர்கள்தான்” என்கிறார் ஜெயரஞ்சன்.

2000-ன் பத்தாண்டுகள் கடந்தவுடன், அரசியலுக்காக இல்லாமல் லாபத்திற்காக தொழிலதிபர்கள் சேனல்கள் தொடங்க ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு அரசியல் கட்சிகளோடு தொடர்பிருந்தாலும், தங்கள் தொலைக்காட்சிகளை அரசியல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தவில்லை.

தொலைக்காட்சி ஊடகத்திற்கு ஈடான வேகத்தில் இல்லையென்றாலும், அச்சு ஊடகத்திலும் மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. சன் டிவி ஊழியர்களைப் போன்ற பின்புலங்கள் கொண்ட பார்ப்பனர்-அல்லாத ஊடகவியலாளர்கள் செய்தித்தாள்களிலும், பத்திரிக்கைகளிலும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி, தனியே தடம் பதித்தார்கள். மாரிதாஸின் வீடியோவினால் பணி நீக்கம் செய்யப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் அசீப், பாரம்பரிய அச்சகமான விகடன், இதற்கொரு நல்ல உதாரணம் என்கிறார்.

“விகடனின் வரலாற்றை பார்த்தால், அது பார்ப்பனர்கள் ஆதிக்கம் நிறைந்ததாக இருப்பது தெரியும். ஆனால், ஆண்டுகள் போகப் போக, அந்த அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரும்பாலும் இருந்தார்கள். நகரங்களில் மட்டுமே வாசிக்கப்பட்ட அந்த பத்திரிக்கை, கிராமங்களிலும் பிரபலமாக அவர்கள் கிராமங்களின் கதைகளை கொண்டு வந்தார்கள். (தற்போது, பாஜகவின் எழுச்சியின் காரணமாக “இது மறுபடியும் மாறிக் கொண்டிருக்கிறது. ஒன்று மேல்சாதியாகவோ அல்லது வலது சாரியாகவோ இருக்கும் புது செய்தி ஆசிரியர்கள் இப்போது வந்திருக்கிறார்கள்” என அசீப் சொன்னார்.)

குணசேகரன், தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றான தர்மபுரியில் வளர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி. அவர் தினமணி எனும் பத்திரிக்கையில் தன் ஊடகவியல் வாழ்க்கையை தொடங்கினார். பிறகு, தி ஹிந்துவிலும், வேறு இரண்டு ஆங்கில செய்தி நிறுவனங்களிலும் வேலை செய்தார்.

ஃப்ரண்ட்லைனின் துணை ஆசிரியரான இளங்கோவன் ராஜசேகரன், முன்பெல்லாம் இப்படி தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு தாவுவது சாத்தியமற்ற ஒன்றாக இருந்ததாக சொல்கிறார். “1990-களின் மத்திக்கு முன், வெகுமக்கள் தொடர்பு (மாஸ் கம்யூனிகேஷன்) அல்லது ஊடகவியல் போன்ற பட்டப்படிப்புகள் இருக்கவில்லை. ஆங்கில பத்திரிகைகளுக்கு ஆங்கில பட்டதாரிகளோ, அல்லது புத்தகம்-வாசிக்கும் வேறு துறை பட்டதாரிகளோ தான் தேர்ந்தெடுக்கப்படுவர்”.

ஆனால், தமிழ் ஊடகத்தில் வேலை செய்யவோ, “எந்த முறையான கல்வியும் எதிர்பார்க்கப்படவில்லை, தைரியம் இருப்பவர்கள் பிழைத்துக் கொள்ளலாம். உள்ளூர் பார்வையாளர்களுக்கு செய்திகளை வழங்கி, அவர்களுக்கு ஒரு புது உலகையே அறிமுகப்படுத்த வேண்டும். உள்ளூர் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். பொருளாதாரம், சமூகவியல் என படித்துக் கொண்டே இருக்கும் போதும் தமிழ் நாட்டின் எந்த மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். இது ஒரு வகையான அறிவை வளர்த்தது” என்கிறார்.

தமிழ் அச்சு ஊடகத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு, பிறகு தொலைக்காட்சிக்கு போன கார்த்திகை செல்வனும், தி ஹிந்துவில் இளங்கோவனோடு சேர்ந்து வேலை பார்த்த குணசேகரனும், “அப்படியானவர்கள்தான். கடுமையான உழைப்பாளிகள், தொடர்ந்து கற்றுக் கொண்டே இருப்பவர்கள்” என்கிறார்.

“ஆங்கில ஊடகத்தில் இருக்கும் பொதுவான சோம்பலில் இருந்து மாறுபட்டு அவர்கள் பெரும் கனவுகளுடன் இருந்தவர்கள்” என இளங்கோவன் சொன்னார். “தமிழ்நாட்டைக் குறித்த அவர்களுடைய ஆழ்ந்த புரிதலுக்கு இணை எதுவும் இருக்காது. இதனால் தான் புது சேனல்கள் தொடங்கப்பட்ட போது அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.”

2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கார்த்திகை செல்வனும், குணசேகரனும் இணைந்தனர். தொழில்முறை சுதந்திரம் இருந்த இந்த சேனலில், பிற சேனல்களைப் போலவே, பார்ப்பனர் -அல்லாதோரின் செய்தி அறைகளில் பயிற்சி பெற்ற இளம் ஊடகவியலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். கடுமையான விமர்சனங்கள் வந்தாலும் ஏற்கத் தயாரென, போட்டியாக இருந்த தொலைக்காட்சிகளை விட துணிகரமான முடிவுகளை புது தொலைக்காட்சிகள் எடுத்தன.

2015-ம் ஆண்டு ‘தாலி’ ஆணாதிக்கத்தின் அடையாளமா எனும் தலைப்பில் நடந்த விவாதத்திற்கான விளம்பரம் ஒன்றை புதிய தலைமுறை ஒளிபரப்பியது. பெரியாரின் திராவிட இயக்கம், தாலியை பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமாக பார்த்தது. இது பல ஆண்டுகளாக பல மேடைகளில் விவாதிக்கப்பட்ட சாதாரணமான தலைப்பாகவே இருந்தது.

ஆனால், இந்து வலது சாரியினர் இதை இந்து-எதிர்ப்பு என்றனர். பாஜகவும் பிற வலது சாரிகளும் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்னரே கண்டனம் தெரிவித்தனர். இந்து தேசியவாதிகள் புதிய தலைமுறை அலுவலகத்தில் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசினர். குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்ட போது, அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என பாஜகவினர் போராடினர்.

2017-ம் ஆண்டு வறட்சி மற்றும் பயிர் உற்பத்தி பாதிப்பின் காரணமாக உதவி கோரி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகள் குழு ஒன்று மத்திய அரசின் மெத்தனத்தை கண்டிக்கவும், ஊடகங்களின் கவனத்தைப் பெறவும் டெல்லிக்குச் சென்றது. புதிய தலைமுறை ஒரு நாள் முழுக்க வேறு செய்திகள் ஒளிபரப்பாமல் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து மட்டுமே நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. மாநிலம் முழுக்க அறுபதிற்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் விவசாயக் கடன்கள், தண்ணீர் பற்றாக்குறை, கிராமப்புறங்களில் வேலையில்லா நிலை மற்றும் அவர்கள் வாழ்வில் இருக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவசாயிகளைப் பேட்டி எடுத்தனர்.

அந்த சமயத்தில், குணசேகரன் வளர்ந்து கொண்டிருந்த நியூஸ்-18 தமிழ் தொலைக்காட்சிக்கு மாறிவிட்டார். “நாங்கள் நியூஸ்-18-இல் வேலை செய்யத் தொடங்கியதில் இருந்து, பயன்படுத்தப்படும் வார்த்தைகள் உட்பட பலவற்றை குணசேகரன் மாற்றினார். ‘கற்பழிப்பு’ எனும் வார்த்தைக்கு பதிலாக முற்போக்கான ‘பாலியல் கொடுமை’ எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இப்படி விதிகளை உடைப்பதில் அவர் ஆர்வமாக இருந்தார்” என நியூஸ்-18-இன் மூத்த ஊழியர் சொன்னார். பின் தங்கிய பின்புலங்களில் இருந்து வந்த இளம் ஊடகவியலாளர்களுக்கு, அவர்கள் வேறு நிறுவனங்களில் வேலை செய்து கொண்டிருந்தாலும் கூட, வழிகாட்டியாக இருந்தார்.

நியூஸ்-18 தமிழுக்கும் நெட்வொர்க்-18 குழுமத்திற்கும் இடையே “நிர்வாக முடிவுகளை எடுப்பதில் எப்போதும் சிக்கல் இருந்து கொண்டே இருந்தது” என ஹசீஃப் கூறினார். பிற மாநிலங்களில் இருக்கும் நெட்வொர்க்-18-இன் சேனல்கள் ஒவ்வொரு காலையும், சமஸ்கிருத மந்திரங்களாக சுப்ரபாதத்தை ஒளிபரப்பும். “2016-ம் ஆண்டு இதை எங்கள் சேனலின் நிகழ்ச்சிகளோடு சேர்க்க வேண்டும் என திணித்துப் பார்த்தார்கள். அது சரிப்பட்டு வராது என்றோம். அதை வைத்து பரிசோதனை செய்து பார்த்து, இதனால் எந்த நன்மையும் இல்லை, தமிழ் பார்வையாளர்களுக்கு மத்தியில் இது வருவாய் இழப்பை தான் உண்டாக்கியிருக்கிறது என்று காண்பித்தோம்” என்றார் அசீப்.

மோடியின் ஒவ்வொரு உரையையும் முழுமையாக ஒளிபரப்ப வேண்டும் என நெட்வொர்க்-18 சொல்லியதாக அசீப் சொல்கிறார். “அப்படி சில முறை ஒளிபரப்பு செய்த போது, தமிழ்நாட்டில் யாருமே அதைப் பார்க்கவில்லை என எங்கள் பார்வையாளர்கள் தரவு காண்பித்தது – தமிழக மக்கள் பார்க்க விரும்பும் ஆளுமையாக மோடி இல்லை” என்றார்.

மோடியுடனான பேட்டிகள் தமிழ் சப்டைட்டில்களுடன் ஒளிபரப்ப வேண்டும் என்று சொல்லப்பட்டது. “ஒரு வாரத்தில் பத்து தடவை அந்தப் பேட்டிகளை ஒளிபரப்பச் சொன்னார்கள், இது எங்கள் மதிப்பீடுகளையும் வணிகத்தையும் கடுமையாக பாதிக்கிறது என்று எதிர்த்தோம்.” பாஜக ஆதரவு நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு இல்லை என்பது தெளிவானதும், அப்படி திணிப்பதை நிர்வாகம் நிறுத்திக் கொண்டது.

இது குறித்து நெட்வொர்க்18 செய்தி தொடர்பாளரிடம் கேட்கப்பட்ட போது, “நிகழ்ச்சிகள் தொடர்பான அத்தனை முடிவுகளையும் ஆசிரியர் குழுக்கள் தான் எடுக்கின்றன. செய்தியின் மதிப்பு தான் முக்கியமான காரணி” என்றார்.

2017 செப்டம்பர் மாதம், எஸ்.அனிதா எனும் தலித் மாணவி, தற்கொலை செய்து கொண்டார். மாநில பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண் காரணமாக மருத்துவப் படிப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. நீட் தேர்வு பின் தங்கிய மாணவர்களை பாதிப்பதாக இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார் அனிதா. ஆனால், மருத்துவப் படிப்பிற்கு அனுமதிக்கப்படுவதற்கான அடிப்படை அது என்று சொல்லி நுழைவுத் தேர்வை உச்சநீதிமன்றம் ஆதரித்திருந்தது.

“அதை கேட்டவுடன், குணசேகரன் சார் அங்கு ஒரு குழுவை அனுப்பி செய்தி சேகரிக்கச் சொன்னார்” என்றார் ஹசீஃப். சக ஊழியராக இருந்த ஒரு பார்ப்பனர், “அது தேவையில்லாத வேலை, நேர விரயம்” என்று சொன்ன போது, குணசேகரன் அழுத்தமாக “அனிதாவின் கதை தலித் மக்களை உயர் படிப்புகளில் அனுமதிப்பதற்கான நீண்ட போராட்டத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது, அதனால் அது மிக முக்கியமானது” என்று சொன்னார். “முற்போக்கான செயல்பாட்டு திட்டங்களால் மட்டுமே உயர முடிந்த தமிழ்நாட்டின் மக்கள் பலருக்கும் இந்தக் கதை நெருங்கியதாக இருக்கும்” என்று சொன்னார்.

அனிதாவின் கதை அந்த ஆண்டு நியூஸ்-18-ற்கு மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடந்தன என நினைவுகூரும் ஹசீஃப், “இந்த மாதிரியான செய்திகள் தமிழ்ப் பார்வையாளர்களின் வாழ்வுகளில் பெரிய தாக்கங்களை உண்டாக்கும் என மேல்சாதி, மேல்தட்டு பின்புலங்களில் இருந்து வரும் ஊடகவியலாளர்களுக்குப் புரியாது” என்கிறார்.

ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றை தடுக்க முழு அடைப்பு அவசரகதியில் அமல் செய்யப்பட்ட போது, நியூஸ்-18 மறுபடியும் தாங்கள் எப்படி தனித்துவமானவர்கள் என்பதை காண்பித்தது. மற்ற சேனல்கள் கட்சி உறுப்பினர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும், கல்வியாளர்களையும் வைத்து நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்த போது, முழு அடைப்பு எப்படி தங்கள் வாழ்க்கைகளைப் பாதித்திருக்கிறது என சாதாரண மக்கள் “நிபுணர்களான” நிகழ்ச்சி ஒன்றை ஒரு மாலை ஒளிபரப்பியது. “ஒரு நடைபாதை கடைக்காரர், தையல்காரர், பெயிண்டர், இல்லத்தரசிகள்… என 12 பேர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அது தனது மனதிற்கு நெருக்கமான எபிசோட்” என குணசேகரன் ட்வீட் செய்திருந்தார்.

“அவர்களுக்கு என்னோடு இருக்கும் பிரச்சனை என்னுடைய சித்தாந்தமோ அரசியல் சார்புகளோ அல்ல. அது நான் எங்கிருந்து வருகிறேன் என்பது குறித்தது. அவர்களுக்கு குணசேகரன் மீதும் என் மீதும் வெறுப்பு இல்லை, எங்கள் பின்புலங்களில் இருந்து வருபவர்கள் எப்படி இதைப் போன்ற கேள்விகளை கேட்கலாம் என்பதைத் தான் வெறுக்கிறார்கள்” என்றார் மாரிதாசின் பட்டியலில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர்.

“கார்த்திகை செல்வனும், குணசேகரனும் மேல்-சாதி, மேல் தட்டு ஆட்கள் அல்ல. அவர்கள் திராவிட கூட்டத்தினர். இது பாஜகவிற்கு அசௌகரியமாக இருக்கிறது. திராவிட-கூட்டத்தினர் அனைவரும் பெரியாரிஸ்டுகளாக இருப்பார்கள் என்பதால் அவர்கள் ‘தங்கள் ஆட்கள்’ இல்லை என்று பாஜகவினர் நினைக்கின்றனர்” என்கிறார் இளங்கோவன்.

குணசேகரனுக்கு எதிரான பிரச்சாரத்திற்குப் பிறகு “நிர்வாக முடிவுகள் எல்லாம் டெல்லியை சேர்ந்த டிபி சதீஷ் என்பவரால் எடுக்கப்படும், குணசேகரன் வெறும் தொகுப்பாளராக மட்டுமே இருப்பார்” என்று அறிவிக்கப்பட்டதாக நியூஸ்-18 செய்தி அறையில் இருந்த ஒரு ஊடகவியலாளர் சொல்கிறார். குணசேகரன் சில நாட்களிலேயே ராஜினாமா செய்தார்.

“பிறகு அவர்கள் செந்திலை குறி வைத்தார்கள். அவர் காலையில் ‘முதல் கேள்வி’ எனும் நிகழ்ச்சியை நடத்தி வந்தார்” “செந்தில் கேட்க வேண்டிய கேள்விகள் எல்லாம் கூட டெல்லியில் இருந்து அனுப்பப்படும். விவாத நிகழ்வு டெல்லியில் இருந்து மேலாண்மை செய்யப்படும் – அதில் பங்கேற்க யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதையும் டெல்லி அலுவலகம் தான் தீர்மானிக்கும். அதிமுக, திமுக, பாஜக தவிர, மேலும் ஒரு வலது சாரி சிந்தனையாளர் ஒருவர் எல்லா விவாதங்களிலும் இருக்க வேண்டும் என்றனர்.”

சேனலின் பிற செயல்பாடுகளும் மாறிப் போனது. “எந்தச் செய்திகளை சேகரிக்க வேண்டும் என்பதையும் சதீஷ் தான் முடிவு செய்தார். வழக்கமாக, எங்களுடைய செய்திகளின் பட்டியல் மாலை 4 மணிக்கு முடிவு செய்யப்படும், அப்படி செய்தால் அந்த நாள் முழுக்க நடந்தவற்றை எல்லாவற்றையும் சேர்க்க முடியும். ஆனால் இப்போது, செய்திகளின் பட்டியல் சீக்கிரமாகவே டெல்லிக்கு அனுப்பப்பட வேண்டும், அவர்கள் செய்திகளைக் கூட்டி, கழித்து, அனுமதி தந்தால் தான் மாலை செய்திகள் முடிவு செய்யப்படும்.”

சதீஷிற்கு, “தமிழ்நாடு குறித்து எதுவும் தெரியவில்லை, உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் செய்தி அறிவு இருக்கவில்லை. சம்பந்தமே இல்லாத தலைப்புகளில் எல்லாம்தான் செய்திகளைச் சேகரிக்கச் சொல்வார். இப்படி இருக்கும் போது பார்வையாளர்கள் குறைவது ஒன்று ஆச்சரியத்திற்குரியது அல்ல. செய்தி அறிக்கைகளைத் திரும்பத் திரும்ப வெளியிடுவதைத் தான் டெல்லி அலுவலகம் செய்து கொண்டிருந்தது, அப்படி செய்தால் எந்த தமிழ் தொலைக்காட்சியும் பிழைக்க முடியாது” என்றார் அந்த பத்திரிகையாளர்.

குணசேகரன் மற்றும் பணி விலகிய பிற ஊழியர்கள் போல ஆழமான அனுபவம் இல்லாத சதீஷ் கர்நாடகாவை சேர்ந்த ஹவ்யக பிராமணர், இக்கட்டுரைக்காக எங்களுக்குப் பேட்டியளிக்கவோ, கேள்விகளுக்கு பதிலளிக்கவோ செய்யவில்லை. நெட்வொர்க்18-இன் செய்தி தொடர்பாளர், “சதீஷிற்கும் நியூஸ்-18 தமிழ் நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் குழுமத்திற்கு ஆசிரியர் குழு ஆலோசகராக வேலை செய்கிறார். டிஜிட்டல் மற்றும் நேரியல் தொலைக்காட்சி செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதில் வேலை செய்கிறார்” என்றார். நவம்பர் மாத இறுதி நிலவரப்படி, சதீஷின் ட்விட்டர் குறிப்பில், “நான் நெட்வொர்க்18-இன் தென்னிந்திய இயக்கத்தை கவனித்துக் கொள்கிறேன்” என்றிருந்தது.

அக்டோபர் மாதம் விவேக் நாராயணன் என்பவரை தென்னிந்திய சேனல்களின் நிர்வாக ஆசிரியராக பணியமர்த்தியிருக்கிறது நெட்வொர்க்18. “தமிழ்நாடு நியூஸ்-18-இன் முதன்மைத் தலைவர்கள் குழுவின் உதவியோடு, சென்னையைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொள்கிறார்” என்றார் நெட்வொர்க்18 செய்தி தொடர்பாளர்.

“பல்வேறு அரசியல் தரப்புகளின் ஆதாயங்களுக்காக தமிழ்நாட்டில் நிறைய ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. நியூஸ்-18-ஐ பொறுத்தவரை, தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை செய்திகளையும் நேர்மையாக சேகரித்து வெளியிட வேண்டும் எனும் கடமைக்கு உண்மையாக இருக்கிறோம். எந்த அரசியல் குழுவோடும் சார்ந்து இருக்காத நடுநிலைமையான சேனல் எங்களுடையது” என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக செய்தி அறைகளை மாற்ற நினைப்பதாக சொன்ன விஜய சங்கர், ஒருவேளை அவர்கள் அதில் வெற்றி பெற்றாலும் அக்கட்சி திணறிக்கொண்டே தான் இருக்கும் என்றார். “தமிழ்நாட்டில், ஒரு ஊடக நிறுவனத்தின் நம்பகத்தன்மை மிக முக்கியமானது. தினமணி ஒரு காலத்தில் வெற்றிகரமான, பெரிதும் மதிக்கப்பட்ட செய்தித்தாளாக இருந்தது, அவர்கள் நிர்வாகம் வலது சாரியாக மாறியவுடன் வாசகர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது” என்றார். நியூஸ்-18-ம் இதே பாதையில் பயணித்துக்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது.

“பாஜக ஊடகத்தில் என்ன மாற்றங்களை கொண்டு வந்தாலும் அவை மேல்பூச்சான மாற்றங்களாகவே இருக்கும். இது தமிழ் மக்களை பாதிக்காது. அவர்களால் பேச முடியாத, பெரிய அளவிலான சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களைக் குறித்து பேச பாஜக முயற்சிக்கவில்லை என்றால் அவர்கள் தமிழ்நாட்டில் வெற்றிபெற மாட்டார்கள்” என்றார்.

பாஜக எழுப்பும் பிரச்சினைகள் “தமிழ்நாட்டுச் சூழலோடு சம்பந்தமே இல்லாதது”, மற்றும் பாஜக வளர்ச்சிக்கு எதிரானது என்கிறார் விஜய சங்கர். அதில் சமீபத்திய நிகழ்வு தமிழ்நாடு பாஜக தலைவர் நடத்திய ‘வேல் யாத்திரை’ எனும் மாநில அளவிலான கோவில் சுற்றுலா. பாஜக கூட்டணிக் கட்சியான அதிமுக கூட இதை எதிர்த்தது. “தமிழ்நாட்டு மக்கள் இதை எல்லாம் ரசிப்பதில்லை. அரசுப்பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது குறித்து தான் அவர்கள் பேசுவார்கள்”, என்றார் அவர். மூத்த ஊடக சிந்தனையாளரான ஜெயரஞ்சனும், செய்தித் தொலைக்காட்சிகள் இதே போன்ற கருத்தை தெரிவித்தார். “செய்தி ஊடகங்களை விட தமிழக மக்கள்தான் இந்து வலது சாரிகளை ஓரம் கட்டுகிறார்கள்” என்று அவர் சொன்னார்.

ஆனாலும், பாஜக செய்தி அறைகளைக் கைப்பற்ற நினைப்பதை அது தடுத்து நிறுத்தப் போவதில்லை.

(www.caravanmagazine.in இணையதளத்தில் அபய் ரெகி மற்றும் கெவின் இளங்கோ எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்