Aran Sei

இந்து ராஷ்ட்ரா – இந்துஃபோபியா; ஒன்றிய அரசின் இரட்டை சவாரிக்கான காரணம் என்ன? – மு.அப்துல்லா

ந்தியாவை ஒற்றை  அடையாளத்துக்குள் சுருக்குவது பாஜகவின் இலக்காக உள்ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ போன்ற அரசியல் சொல்லாடல்கள், ஒற்றை அதிகாரம் என்ற பொருளை நோக்கி முடிகிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் ஆதிக்கத்தை உறுதி செய்யும் அதன் கருத்தியலாக ‘இந்து ராஷ்டிரா’ உள்ளது. ‘நாம் இந்த தேசத்தை மறுநிர்மாணம் செய்ய உள்ளோமே தவிர ஒழுங்கற்ற அரசியல் உரிமைகளைக் காக்க அல்ல. நாம் சுயராஜ்யம் எனச் சொல்வது என்ன?, ‘சுயம்’ என்பதற்கான அர்த்தம் என்ன என்பதை வரையறுத்துக்கொள்ள வேண்டும். ‘நமது ராஜ்யம்’ – அதில் நாம் யார் என்பதையும் உறுதி செய்வோம்’ எனக் குறிப்பிட்டார் ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் கோல்வாக்கர். அரசியலமைப்பிற்கு மாற்று கோரிய கோல்வாக்கர் இங்கு ‘நாம்’ என்று குறிப்பிடுவது ‘இந்து ராஷ்டிராவை’ கட்டமைக்க வேண்டிய இந்துத்துவர்களைத்தான். இன்று பாஜக தலைவர்கள் இதை வெளிப்படையாக ஏற்றுப் பிரச்சாரம் செய்கிறார்கள். ‘இந்து ராஷ்டிரா’ என்று கூறுவதில் என்ன தவறு என்று கூறும் அவர்கள் மதரீதியான பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் சட்டப்பூர்வமாக்கி வருகின்றனர்.

பொதுமக்களை குற்றவாளியாக்கும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – மக்களவையில் மஹுவா மொய்த்ரா ஆவேசம்

உள்நாட்டில் இந்த நிலையிலிருக்க உலகளாவிய அளவில் பாஜக அரசு கையிலெடுத்ததிற்கும் ஒன்றாக ‘இந்து வெறுப்பு பிரச்சார அரசியல்’ (இந்துஃபோபியா) உள்ளது. இந்துமதம் மற்றும் சீக்கிய புத்த மதங்களுக்கு எதிரான வெறுப்புகளுக்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ‘இந்துஃபோபியாவை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்’ என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் (ஜனவரி 18) ஐநாவில் பேசினார் இந்தியப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி. சமீப காலங்களில் வளர்ந்து வரும் மத வெறுப்பாக இந்துக்களுக்கு எதிரான மனநிலை உள்ளது. இதை உறுப்பு நாடுகள் உரிய விதத்தில் கவனம் செலுத்த வேண்டும். இஸ்லாம், கிறிஸ்துவம், யூத வெறுப்பு போன்ற ஆப்ரகாமிய மதங்களைப் பற்றி மட்டுமே பயங்கரவாதங்களுக்கு எதிரான அமைப்புகள் அக்கறை கொள்கின்றன. உலகளாவிய நடவடிக்கைகள் பிராந்திய வேறுபாடுகளைக் கவனிக்காமல் இருந்துவிட முடியாது. செப்டம்பருக்கு பிறகான ‘எனது எதிரி இனி உங்கள் எதிரி’ போன்ற பொதுவான நிலைப்பாடுகளைக் கைவிட வேண்டும். பயங்கரவாதம் எந்த விதத்திலிருந்தாலும் அது பயங்கரவாதமே போன்ற விஷயங்கள் அவரது வாதமாக இருந்தது.

இதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை மற்றொரு இடத்தில் எடுக்கிறது இந்திய அரசு. ஒவ்வொரு வருடமும் மார்ச் 15ம் தேதியை இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு (இஸ்லாமோ ஃபோபியா) எதிரான நடவடிக்கை தினமாக அனுசரிக்கக் கடந்த மாதம் ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியல் முக்கிய இனவெறுப்பாக (Racism) உருவெடுத்தது. இஸ்லாமிய வாழ்வியலை எதிர் கலாச்சாரமாகவே உலகம் முழுக்க அணுகினர் குறிப்பாக மேற்கத்திய நாடுகள் இந்தப் போக்கை கொண்டிருந்தன. தேர்தல்களில் ஆதரவைப் பெறுவது போன்ற அரசியல் ஆதாயமாகவும் மேற்கில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் மாறியது. இதற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகள் மட்டும் எதிர்த்தனர். நவீனத்தின் பெயரில் பன்முக கலாச்சாரங்கள் மீது வெறுப்பு கொண்ட  அடிப்படைவாத நாடான பிரான்ஸ் இதை எதிர்த்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், பெருகிவரும் புதிய பிராந்திய மதவெறுப்புகளுக்கு அங்கீகாரம் கேட்ட இந்தியா எதிர்த்துள்ளது.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

‘ஐக்கிய நாடுகள் சபை ஒட்டுமொத்த மதவெறுப்புக்கும் (Religiophobia) எதிராகச் செயல்பட வேண்டுமே தவிரத் தனித்த எந்த மதத்திற்கும் எதிராக அல்ல. சமீப காலங்களில் ஆப்ரகாமிய அல்லாத மதங்களுக்கு எதிரான வெறுப்புகள் பரவலாக இருப்பதைக் காண்கிறோம். குறிப்பாக, இந்து மற்றும் சீக்கிய மதங்கள் இலக்காகி வருகின்றன. அப்படியிருக்கையில், தனித்த ஒரு மத்திற்காக மட்டும் சிறப்புத் தினம் அனுசரிப்பது மற்றவற்றைப் புறம் தள்ளுவதாகும். ஐநாவின் தீர்மானம் வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டும். யாரையும் பிரிக்கக் கூடாது’ என்று இந்தியத் தூதுவர் திருமூர்த்தி கூறினார். மதவெறுப்பு என்று பொதுமையாகப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, இந்துமதம் போன்ற பிராந்திய கவனம் கேட்கப்பட்டது பொதுத்தன்மையின் கீழ் நீர்த்துப்போகிறது. இரண்டாவது, மதவெறுப்பை முக்கிய பிரச்சனையாகக் கொண்டுவந்த காரணியைக் கவனிக்கத் தவறியது. தேசிய அரசுகள் உருவான பிறகு மதம் தேசியவாதத்தின் அங்கமாக மாறியது. அதன்படியே இன்று மையப்படுத்தப்பட்ட மதவெறுப்பு வன்முறைகள் நிகழ்கின்றன.

உதாரணத்திற்கு, யூத வெறுப்பை (Anti-Semitism) எடுத்துக்கொள்வோம். யேசு கிறிஸ்துவின் கொலைக்கு முக்கிய காரணம் யூதர்கள் என்று தொடங்கிய நூற்றாண்டு காலங்களாக அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக இருந்தனர். ஆனால், நவீனக் காலத்தில் அது தேசியவாதத்தில் உள்ளடக்கப்பட்டது. யூதர்கள் ஒரு நாட்டில் பூர்விகமாக வாழ்ந்து வந்தபோதும் அவர்கள் அந்த நிலத்திற்கு அந்நியமானவர்களாகவே கருதப்பட்டனர் (கிறிஸ்துவ பெரும்பான்மை மேற்கு நாடுகள் இதை உறுதியாகக் கடைப்பிடித்தனர்). பிறகு, இவை நாஜி யூத இன ஒத்துக்களுக்கு வழிவகுத்தன. யூத மதவெறுப்பிற்கான தீர்வு யூத தேசமே என்று அன்றைய ஆதிக்க அரசுகளும் ஐநாவும் இணைந்து இஸ்ரேலை உருவாக்கினர். இன்று, சர்வதேச சட்ட விதிகளை மீறி ஐநாவால் அதிக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாடாகவும் இஸ்ரேல் இருக்கிறது.

அயோத்தியும் ஆம் ஆத்மியும்: கெஜ்ரிவாலும் இந்துத்துவாவும்

ஒரு பெரும்பான்மை மதத்தைக் கொண்ட நாடு தனது அரசின் அதிகாரத்தைக் காக்க வேண்டி மற்ற சிறுபான்மை மதம் மற்றும் இனக்குழுக்கள் மீது வெறுப்பைக் கட்டவிழ்த்துவிடும். அரசு பலவீனப்படும்போதெல்லாம் இது போதுமான அம்சமாக இருக்கும். இந்து வெறுப்பிற்கு அங்கீகாரம் கேட்கும் இந்திய அரசு அண்டை நாடுகளில் பாதிக்கப்படும் சிறுபான்மை இந்துக்களையே ஐநாவில் வாதமாக வைக்கிறது. தாலிபன் ஆளுகையில் ஆப்கனில் பாமியன் புத்த சிலை தகர்ப்பு, சீக்கிய வெளியேற்றம், பாகிஸ்தானில் இந்துக்கள், வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த துர்கா பூஜை கலவரம் போன்ற வெகுசில குறிப்பிட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் நியாயமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும். ஆனால், இந்துஃபோபியா என்ற வரையறைக்குள் உள்ளடக்க இவை போதுமானவையா என இதுகுறித்து இந்திய அரசு முன்பு எடுத்த நிலைப்பாடுகளிலேயே காணலாம்.

பாமியன் புத்த சிலை தகர்ப்புக்குச் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்காத அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இரான் போன்ற இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து தாலிபன்களின் அடிப்படைவாத செயலாகவே அதைக் கண்டித்தது. நிதியுதவி வழங்காத மேலை நாடுகளை எதிர்ப்பதற்காகவே சிலையைத் தகர்த்தோம் அன்றி, மதரீதியான காரணம் இல்லை என்று தாலிபன்களின் விளக்கம் இருந்தது. கலாச்சார சின்னங்களைக் காக்கத் தவறியதற்காக மொத்த நாடுகளும் அதைக் கண்டித்தனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் பல மனித உரிமை மீறலுக்கு ஆளாகிறார்கள் என்பதை ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ போன்ற அமைப்புகள் பதிவு செய்து வருகின்றன. இதனை ஏற்கும் இன்றைய இம்ரான் கான் அரசு அதைக் களைய நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவருவதன் மூலம் ஒருவிதத்தில் நிலவும் பிரச்சனையை அங்கீகரிக்கிறது. மேலும், இந்திய அரசு வாய்ப்பளித்த குடியரசு திருத்தச் சட்டம் போன்ற சலுகைகளைப் பாகிஸ்தானில் உள்ள இந்து கவுன்சில் தலைவர் ராஜா அசர் மங்கலானி போன்றவர்கள் நிராகரித்துப் பேசியதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த துர்கா பூஜை பண்டிகையில் குர்ஆனை இந்துக்கள் அவமதிக்கிறார்கள் என்று கிளம்பிய வதந்தியின் மூலம் ஏற்பட்ட கலவரம் மறுப்பின்றி கண்டிக்க வேண்டியது. இந்தப் பிரச்சனையில் இந்துக்களுக்கு ஆதரவாகத் துணை நின்றார் வங்காள பிரதமர் ஷேக் அசினா. இதைவிடச் சிறப்பான விஷயம் இதை முற்றிலுமாக ஆதரித்து ஷேக் அசினா நடவடிக்கையைப் பாராட்டியது இந்திய அரசு.

கஜினி முகம்மதும் சோமநாதபுர படையெடுப்பும் – சூர்யா சேவியர்

இந்துஃபோபியா என்ற முழுமையான அரசியல் நிலைப்பாட்டிற்கு இந்த முரண்பாடான குழப்பங்கள் மட்டும் காரணமாக இருக்க முடியாது. உலக ஊடகங்களில் இந்து தேசிய அரசு (Hindu extreme government) என்றே குறிப்பிடப்படும் மோடி அரசின் ஆளுகையில் பெரும்பான்மை இந்து மதத்திற்கு அச்சுறுத்தல் என்பதை ஏற்பதும் கடினம். அப்படியிருக்கையில், பாஜக அரசுக்கு இன்று ஏன் இந்த நிலைப்பாடு தேவைப்படுகிறது. இதனை ஆர்எஸ்எஸ் பிரச்சார ஏடுகளான ‘சுயராஜ்யா’ போன்றவை தெளிவாக எடுத்துரைக்கின்றன.

நரேந்திர மோடியின் இந்துத்துவ ராஜ்யத்தை மதச்சார்பற்ற தாரளவாதிகள் எதிர்க்கிறார்கள். அரசின் எதேச்சதிகார இந்துத்துவ சார்பை விமர்சித்து சர்வதேசிய அளவில் விவாதங்கள் நடக்கின்றன. அதில், கடந்தாண்டு நடைபெற்ற குறிப்பிட வேண்டிய கருத்தரங்காக ‘சர்வதேச இந்துத்துவத்தை அகற்றுதல்’ (Dismantling global Hindutva) இருந்தது. இந்துவத்தை அகற்றுவோம் என்ற பெயரில் இந்துமதம் மீது மேற்கத்தியக் கல்விச் சூழலில் வெறுப்பு பரப்பப்படுகிறது. சிலர், இந்து மதமும் இந்துத்துவமும் ஒன்றல்ல என்று கூறி அதனைத் தாக்குகிறார்கள். இதனைப் பற்றிக் குறிப்பிடும் சுயராஜ்யா இதழ் 1995ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பொன்றைக் காரணம் காட்டுகிறது. ‘இந்து, இந்துயிஸம், இந்துத்துவா போன்ற சொற்களுக்கு எந்த அர்த்தமும், குறிப்பிட்ட வரைவு எல்லையும் கிடையாது. அவை இந்நாட்டின் பண்பாட்டு மரபுக்குரியது’ என்கிறது அந்த தீர்ப்பு. இதன்மூலம், இந்துத்துவ அரசியல், மோடி அரசின் செயல்பாடு என எதை விமர்சித்தாலும் அது இந்து வெறுப்பாகவே அர்த்தமாகும் எனக் கூறுகிறது சுயராஜ்யா.

உலகளவில் இந்துமதத்தின் மீது வெறுப்பு பிரச்சாரம் என்று சொல்லும் அளவிற்கு ‘சர்வதேச இந்துத்துவத்தை அகற்றுதல்’ போன்ற நிகழ்ச்சிகள் இந்துக்கள் அல்லாதவர்களால் மட்டும் நடத்தப்படவில்லை. குறிப்பாக, இந்த குறிப்பிட்ட நிகழ்வின் சிறப்புப் பேச்சாளர்களாக ஆனந்த் பட்டவர்தன் (ஆவணப்பட இயக்குநர்), பன்வர் மெக்வன்சி (ஆர்எஸ்எஸிலிருந்து விலகியவர்), கவிஞர் மீனா கந்தசாமி உட்பட்ட இந்துக்களே அதிகம் இருந்தனர். இந்த கருத்தரங்கை எதிர்ப்பதன் மூலம் இந்துத்துவ ஒற்றை அதிகாரம், சாதிய சமூகத்தை விமர்சிப்பதெல்லாம் இந்து வெறுப்பாகக் குறுக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் எனச் சிறுபான்மை மக்களை இன ஒதுக்கள் செய்துவரும் பாஜக அரசிற்கு ‘இந்துஃபோபியா’ என்ற ஆயுதம் தேவைப்படுகிறது. காரணம், இந்து இறையியலுக்கு எழுந்த அச்சுறுத்தலால் அல்ல. மாறாக, பாஜக அரசின் மதவாதத்தைக் கண்டித்து எழும் முற்போக்கு இந்துக்களை அடக்க அது எளிதில் சாத்தியப்படும். கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், அறிவுஜீவிகள் என இந்த அரசைக் கேள்விக்குள்ளாக்குபவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். உலகளவில், அவர்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறலை அது மறைக்கச் செய்யும். கோல்வாக்கர் அழைப்பு விடுத்த இந்து ராஷ்டிராவில் மறுக்கப்பட்டவர்களாக சனாதனத்தை மறுத்த ‘இந்துக்களும்’ அடங்குவர் என்பது நினைவுகூரத்தக்கது.

கட்டுரையாளர்: மு.அப்துல்லா, ஊடகவியலாளர்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்