Aran Sei

‘இதயமே இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே இதயமே’ – பிறைசூடனுக்கு அஞ்சலி

தயமே இதயமே உன் மௌனம்  என்னை மௌனம் என்னைக் கொல்லுதே இதயமே என்று எழுதிய பிறைசூடன் மௌனமாகிவிட்டார்.  மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களோடு பணியாற்றிய சில பாடலாசிரியர்களில் அவரும் ஒருவர். காதலின் தாபத்தை, மோகத்தை, பிரிவை, ஆற்றாமையை, வலியை, மகிழ்வை மொழியினூடே வரைந்து காட்டிய ஓவியர் அவர். மரபில் வேர்விட்டு புதுமையில் கிளை பரப்பி தென்றலாய் விசியவர். இளையராஜாவோடு சேர்ந்து பணியாற்றிய பாடல்கள் எல்லாம் காலத்தைக் கடந்து நிற்பவை. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.ஆர்.பாப்பா, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், சங்கர் கணேஷ், உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பாடல்கள் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையில்  பல விளம்பரப் படங்களுக்கும் எழுதியிருக்கிறார்.

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது டாடா சன்ஸ் குழுமம் – ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இன்று வளரும் பாடலாசிரியர்கள் எல்லோருக்கும் பல மில்லியன், பில்லியன் பார்வையாளர்களுக்காகவும் வணிகத்திற்காகவும் ஏதேதோ புரியாத வரிகளையும்  தெரியாத வரிகளையும் இட்டு நிரப்பும் சூழ்நிலை இருக்கிறது. ஆனால் அன்று திரையிசை பாடலின் வழி மொழிக்குள் நிகழ்த்தப்பட்ட மாயங்களை வானொலியிலும், வலைத்தளங்களிலும் ,நெடுந்தூரப் பயணங்களும் கேட்கும் பழையப் பாடல்களின் வழி நாம் அறியலாம். எண்பதிற்குப் பின் தமிழ்த் திரை உலகில் பல பாடலாசிரியர்கள் சங்கமித்திருந்தாலும் அதில் கோலோச்சியவர்கள் சிலப் பாடலாசியர்கள்தான்.அந்த வகையில்  1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்னும் பாடலை எழுதியதன் மூலம் தமிழ்த் திரைப்படத் துறையில் பாடலாசிரியராக தடம் பதித்தவர் கவிஞர் பிறைசூடன்.  இவர் எழுதியப் பாடல்கள் பல நம் இளமைக் காலத்தை மீட்டுக்கொள்ள வழிசெய்யும்.  ’அவள் நின்று நிமிர்ந்த்தும் வானில் விழா அது வானவில்லா இல்லை வசந்த வில்லா’ என்று அவர் எழுதியதைக் கேட்கும்போது நம்முடைய இளம்பிராயத்து தேவதை ஆடிக் கொண்டிருக்கிறாள்.

இதயமே இதயமே

என் விரகம் என்னை வாட்டுதே

நிலவில்லாத  நீல வானம் போலவே

உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

எஸ்.பி.பி யின் குரலும் ராஜாவின் இசையும் பிறைசூடனின் வரிகளும் கைகூடா காதலின் வலியை ஒரு வீணைபோல் மீட்டுகிறது.

லக்கிம்பூர் வன்முறை: உ.பி அரசின் விசாரணை ஆணையத்தை நிராகரித்த விவசாயிகள்

இவர் நன்னிலத்தில் பிறந்து கலை நிலத்தில் வளர்ந்தவர் என்பதாலோ என்னவோ இவர் எழுதிய வரிகள் எல்லாம் சொற்ச்சித்திரங்களாய் விளைந்து விரிந்து நிற்கின்றது.சங்க இலக்கியக்கியங்களில் தலைவனைப் பிரிந்த தலைவி பசைலை நோயால் வயப்பட்டு தவிக்கிறாள் அச்சூழலை இசைக்கு மடை மாற்றுகிறார் பிறைசூடன்

நோய் கொண்டு நான்

சிறு நூலாகிறேன்

தேயாமலே பிறை போல் ஆகிறேன்

தாங்காது இனி தாங்காது  என்று எழுதுகிறார்.

கம்பனில் தோய்ந்த அவர் கம்பனின் மகன் அம்பிகாவதி தன்னுடைய காதலி எழுதிய

‘இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கு அசைய….” என்ற காதல் வரிகளை ரஜினியின் படத்தில் பயன்படுத்துகிறார்.

அம்பிகாவதி சொல்கிறான் அமராவதியே நீ நடந்தால்  உன் பாதங்கள் நோகும் மீண்டும் அடி எடுத்து வைத்தால்  கொப்புளங்கள் ஏற்படும் அவ்வளவு மென்மையானவை உன் பாதங்கள்.

‘காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுக’ – பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தல்

இதையே  கவிஞர் பிறைசூடன்  இளையராஜா இசையில் உருவான இராஜாதி இராஜா படத்தில் “மீனம்மா மீனம்மா’ பாடலில்

இட்ட அடி நோகும்மமா பூவை அள்ளி தூவுங்கள் என்று  எழுதுகிறார் மரபை மீண்டும் பாடலுக்குள் மறுவார்ப்பு செய்தவர் பிறைசூடன்.

இதுவரை 400 திரைப்படங்களில் 1,400 பாடல்களும் , 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார்.

தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல் ‘என் ராசாவின் மனசிலே’ பாடல்களுக்காகவும் பெற்றார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் “கலைச்செல்வம்” விருதையும் பெற்றிருக்கிறார்.மேலும் இவர் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்கொல்லி புலியும் அரசு செய்ய வேண்டியவையும் – சந்துரு மாயவன்

காதல் பாடலுக்கான சூழல் தமிழ் சினிமாவில் வழமையான ஒன்றாக இருக்கிறது. இயக்குனர் வேண்டுமானால் காதலன் காதலியை பார்க்கிறான் அந்த இடத்தில் ஒரு பாடல் என ஆதிக்கால கதைச் சூழ்நிலையைச் சொல்லலாம். ஆனால் எப்படி எழுதுகிறோம் என்பதில்தான் பாடலாசிரியரின் திறன் உள்ளது. தங்க மனசுக்காரன் படத்தில்

மணிக்குயில் இசைக்குதடி மனம் அதில் மயங்குதடி

சிறகுகள் விரிந்ததடி இளம் குருவிகள் பறந்ததடி

அடி மானே மயங்குவதேனோ

உனைத்தானே உருகுவதேனோ

இளம் காற்றே கைகள் வீசி வா

இதம் தேடும் கதைகள் பேச வா

என்று தென்றலாய் வருடியிருப்பார். பார்ப்பதற்கு வேண்டுமானால் பாடல்களில் எளிமையான வரிகள் இருக்க கூடும். ஆனால் மெட்டுக்கு அவ்வார்த்தைகளை கண்டு பிடிப்பதற்குத்தான் பாடலாசிரியர்கள்  படாதப்பாடு பட வேண்டும்.

நான் என்பது நீதான் என்று காதல் பாடல்கள் பல வந்துள்ளன. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பார் கண்ணதான். நான் என்பது நீயல்லவோ தேவதேவி என்று எழுதியுள்ளார் கங்கை அமரன் அதிப்போல “என்ன மறந்த பொழுதும் நான் உன்ன மறக்க வில்லையே”  என்று எழுதுகிறார்.

கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம்பெற்ற “ஆட்டமா தேரோட்டமா” பாடல் இன்றளவும் கிராமபுற திருவிழா கச்சேரி தொடங்கி பல இடங்களில் பார்க்கலாம். ராஜா துள்ளல் இசையில் அட்டகாசம் செய்திருப்பார். எதிர் நாயகனின் கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட பெண்ணொருத்தி பாடுவதாக எழுதியிருப்பார்.

ஏறாத மேடை இங்கு இளமானும் ஏறி

ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி

யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி

என்று பிறைசூடனும் பாடல் வரியில் அட்டகாசம் செய்திருப்பார். சில பாடல்கள் மட்டுமே வாழ்வின் அங்கமாக மாறும். அந்த வகையில் இளையராஜா  இசையில் 1990 வெளிவந்த பணக்காரன் படத்தில் “நூறு வருசம் ” பாடல் இன்றும் எல்லா திருமணத்திலும் இசைக்கப்படுகிறது. ஒரு இணையர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதுகிறார்.

புருஷன் பொஞ்சாதி

பொருத்தம் தான் வேணும்

பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும்

அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு

இல்ல நீ வாழு தனி ஆழா நின்னு

மொதலில் யோசிக்கனும் பிறகு நேசிக்கணும்

மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு

சொத்து வீடு வாசல் இருந்தாலும்

சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்

அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா

கல்யாணம் தான் கசக்கும் என்கிற அவரின் வர்கள் காலம் கடந்தும் நிற்பவை

காதல், திருமணம் மட்டும் இல்லால் ஒப்பாரி பாட்டிலும் தன் திறனைக் காட்டியுள்ளார்.  இணையர் இழந்த சோகத்தை ஒப்பாரியாய் எழுதியிருப்பார்.

சோலப் பசுங்கிளியே

சொந்தமுள்ள பூங்கொடியே

ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா என்று பாடல் தொடங்கி சரணத்தில்

கண்ணுபட போகும்

என்று பொத்தி வச்ச பூங்குயிலே

மண்ணு பட்டு போகும் என்று

நெஞ்சம் இன்று தூங்கலியே

இந்த வரியைக் கேட்கும் போதெல்லாம் மனம் கணமாகிவிடுகிறது. பிரிவின் வலியை ஆற்றாமையை வரிகளில் சுமந்து வருகிறார் பிறைசூடன்.

காலம் கடந்தும் அவரின் பாடல்கள் காற்று மண்டலத்தை இனிப்பாக்கக் கூடியவை. காதல் இருக்கும் வரை காற்று இருக்கும்வரை இதயமே இதயமே என்று இளையராஜவின் இசையோடு சேர்ந்து நமோடு பாடலாய் இருப்பார் பிறைசூடன்.

 

கட்டுரையாளர் – இரா.லாவரதன், திரைப்படப் பாடலாசிரியர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்