Aran Sei

ஹத்ராஸ்: சாதிய, பெண் விரோதப் பாரம்பரியங்களின் குவியல் : உண்மை அறியும் அறிக்கை

ஹத்ராஸ் உண்மை அறியும் குழு

த்தரப்பிரதேசம்  ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் கூட்டுக் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டணி (NAPM) தனது உண்மையறியும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மாவட்ட துணை நீதிபதியின் எழுத்து பூர்வமான அனுமதியுடன், அக்டோபர் 9-ம் தேதி அந்தக் குழு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் பேசியது‌.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமமான புல்கார்கிக்கு நேரில் சென்ற குழுவில், என்ஏபிஎம் இயக்கத்தின் மேதா பட்கர், ஃபைசல்கான், எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான மணிமாலா, சோசலிச கட்சி (இந்தியா) யின் சந்தீப் பாண்டே, தலைமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஏஹ்தேஷம் ஹாஷ்மி, குதாய் கிட்மட்கர், டெல்லி ஒற்றுமை குழுவின் ஜோ அத்தியாலி, அமித் குமார், நர்மதாவைக் காப்பாற்றுவோம் அமைப்பின் ஹன்ஸ்ராஜ் மற்றும் ஆனந்த் அத்தியாலி என்ற மாணவரும் இடம் பெற்றிருந்தனர்.

மகாராஷ்டிரா, சந்திராபூர் மாவட்டம் கயர்லாஞ்சி படுகொலையை நினைவுகூர்ந்த உண்மை அறியும் அறிக்கை, ”சரியாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதே செப்டம்பர் 29-ல் மற்றுமொரு தலித் பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். இந்த அத்துமீறல்கள் சாதி, பாலினம், சமத்துவமின்மை, அநீதி ஆகியவற்றின் குவியலாகும்” எனக் கூறுகிறது.

அந்தக் கிராமத்தில் சிறுபான்மையினராக இருப்பதாலேயே, தலித் மக்கள் பல பத்தாண்டுகளாகப் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருவதாக அறிக்கை கூறுகிறது.

அங்குள்ள உயர்சாதி தாக்கூர் இனத்தவர் தலித் குடும்பங்களின் பணிகளை தங்கள் விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆடு, மாடு மேய்ப்பதன் மூலம்தான் தலித் மக்களுக்கு வருவாய் கிடைக்கிறது.

“1990-களில் மாயாவதி அரசு தஸ்யாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடும்பத்துக்கு 5 பிகா (சுமார் ஒன்றரை ஏக்கர்) நிலம் வழங்கியது. ஆனால் இதில் மூன்றரை பிகா (சுமார் ஒரு ஏக்கர்) நிலம்தான் அவர்கள் வசம் உள்ளது. மீதமுள்ள நிலம் அங்குள்ள ஒரு பார்ப்பனக் குடும்பத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கால் நடை வளர்ப்பு, பால் விற்பனை மூலம் இவர்கள் கூடுதல் வருவாயை ஈட்டி வருகின்றனர்.”

“கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாத்தா கால்நடை தொடர்பான ஒரு பிரச்சனையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தாக்கூர்களின் தாத்தாவால் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது கைவிரல் வெட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் பிறகு 20 ஆண்டுகாலமாக இரண்டு குடும்பங்களுக்கும் இடையே எந்தவித மோதலும் ஏற்படவில்லை. எனவே செப்டம்பர் 14-ம் தேதி நடந்த சம்பவம் முற்றிலும் எதிர்பாராததும் தேவையற்றதும் கூட“ என்கிறது அறிக்கை.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டு வாசல்
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டு வாசல்

“மாவட்ட மருத்துவமனையின் பரிந்துரைப்படி பாதிக்கப்பட்ட பெண் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, மருத்துவமனை ஊழியர்கள் சரியாக ஒத்துழைக்கவில்லை. இதற்குக் காரணம் இந்த வழக்கு தொடர்பாக தொடக்கத்திலிருந்தே கொடுக்கப்பட்ட அழுத்தம்தான்” என்கிறது உண்மை அறியும் குழுவின் அறிக்கை.

“மருத்துவமனையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை அறியும் சோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணே உண்மையைக் கூறும்வரை அவளது குடும்பத்தினரிடம் கூட எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. காலம் கடந்து எடுக்கும் சோதனைகள் பாலியல் வன்முறைக்கான தடயங்களை தராது என்பதால் இந்தக் காலம் கடத்துதல், உண்மையில் காலத்தை வீணடித்தல் ஆகும். அது, வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்கிறது அறிக்கை.

தனது பெண்ணுறுப்பில் ஆணுறுப்பு திணிக்கப்பட்டது பற்றிய அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த எம்எல்சி பதிவையும் உண்மை அறியும் அறிக்கை குறிப்பிடுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் தாக்கூர் சாதியைச் சேர்ந்த சந்தீப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் இது தொடர்பாக கடந்த ஆறு மாதமாக அவளது குடும்பத்தினர் அவளை அச்சுறுத்திக் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படும் கதையை உண்மை அறியும் அறிக்கை மறுக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் ஆறு மாதங்களாகவே தாக்கூர் குடும்பத்தின் சந்தீப் உள்ளிட்ட ஆண்களால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்ததாக உண்மை அறியும் அறிக்கை கூறுகிறது. ஒரு முறை வயல் அருகில் அவள் சந்தீப்பால் இழுக்கப்பட்டிருக்கிறாள், அப்போது தப்பியிருக்கிறாள்.

சந்தீப்புடன் பாதிக்கப்பட்ட பெண் கைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் கட்டுக்கதைகளையும் அவரது குடும்பத்தினரே அவளைக் கொன்று விட்டனர் என்றும் சொல்லப்படும் கட்டுக் கதையையும் மறுப்பதில் அவளது குடும்பத்தினர் உறுதியாக உள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சியோராஜ் ஜீவன் உட்பட ஒரு சில உள்ளூர் அரசியல் தலைவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்க்க வந்திருக்கின்றனர். தலைநகர் லக்னோவில் உலவிக்கொண்டிருக்கும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் ஒருவர் கூட இந்த வழக்கின் மீது கவனம் செலுத்தவில்லை.

அந்த காங்கிரஸ் தலைவர் ஜீவனையும் காவல்துறை கைது செய்துள்ளதைக் கண்டித்துள்ள அந்த அறிக்கை, ”உண்மையில் பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து, கோபமாகவும், ஆவேசமாகவும் ஜீவன் மட்டுமே ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். தலித் பெண்கள் மீது தவறான நோக்குடன் யாராவது கண் வைத்தால் அவர்களது கண்கள் வெளியே வந்து விழச் செய்யப்படும்” என்று அவர் கோபத்துடன் பேசியதாக அறிக்கை தெரிவிக்கிறது.

“சாதிய, மத வாத கொடூரங்கள் தண்டிக்கப்படாமல் போகும் போது அரசியலில் இருப்பவர்களின் இது போன்ற வன்முறையான கருத்துகளை நாம் கேட்கிறோம்” என்று அறிக்கை குறிப்பிடுகிறது. “இருந்தாலும், ஜீவன் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில்தான் உள்ளார்.“ என்கிறது அறிக்கை.

கேரளாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் உட்பட மூன்று பத்திரிகையாளர்களை கிராமத்திற்குச் செல்லும் வழியிலேயே தடுத்துக் காவல்துறை கைது செய்துள்ளதையும் இந்தக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாலையில் எரியூட்டப்பட்டிருக்கிறது. எனவே, பெருமளவு ஊடக வெளிச்சமும், கண்டனங்களும் தவிர்க்க முடியாதவை என்கிறது அறிக்கை.

இத்தகைய எதிர்ப்புக் குரல்களின் விளைவாகத்தான் வேறுவழியின்றி உ.பி அரசு 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அறிவித்துள்ளது. அதிலும் அந்தக் குடும்பத்தாருக்கு இதுவரை 8-10 லட்சம் வரைதான் தரப்பட்டுள்ளது.

“காவல்துறையின் நடவடிக்கைகள் மிகவும் சந்தேகத்துக்குரியவை. பல்வேறு தரப்பிலும் எழுந்த விமர்சனங்களுக்குப் பிறகே அரசு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. இறந்த உடலை வைத்து கலவரம் உருவாவதைத் தடுக்கவே தாம் உடலை எரித்ததாகக் காவல்துறை கூறுவதை யாரும் நம்பவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணைப் பாதுகாக்கவும், விபரீதமான சம்பவங்களைத் தடுக்கவும் தம்மால் முடியாது என்று போலீசே அறிவிக்க முடியாது” என்கிறது அறிக்கை.

“இந்த மோசமான, மனிதாபிமானமற்ற குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து, எந்தவிதக் குற்ற உணர்ச்சியோ, நடந்த கொடுமைகளுக்கு வருத்தம் தெரிவிக்கும் மனித மனப்பான்மையோ இல்லாத உ.பி.அரசு, எங்களின் நியாயமான சட்டரீதியான கேள்விகளுக்கும் பதில் தர மறுத்துவிட்டது. சட்டரீதியான கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.”

“இதிலிருந்து காவல்துறையும் அரசும் திட்டமிட்டு இந்தப் பிரச்சனையை மூடி மறைக்கின்றன. அதன் மூலம் இந்தப் பிரச்சனையிலும் உன்னாவ், பலராம்பூர், மற்றும் ஆசம்கர் குற்றங்களிலும், அதற்கு முன்னும் பின்னும் நடைபெற்ற பல குற்றங்களிலும் சாதிய, மனுவாத, மனிதத் தன்மையற்ற, பெண் விரோத சக்திகள் அம்பலமாவதைத் தடுக்க முயற்சித்திருக்கின்றன.” என்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

படங்கள் & கட்டுரை – நன்றி : thewire.in/
மொழியாக்கம் செய்யப்பட்டது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்