Aran Sei

வெறுப்புப் பிரச்சாரமும் இனப்படுகொலையும் – இனப்படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றுகிறதா ஃபேஸ்புக்?

னப்படுகொலைகள் நேரடியாக வதை முகாம்களில் தொடங்குவதில்லை. வெறுப்பு பேச்சுகள் தான் இனப்படுகொலைகளின் ஊற்றுக்கண் என்பது ஐ.நாவின் வரையறை.

இனப்படுகொலை என்பது ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை. சமூகத்தின் எந்தப் பிரிவினருக்கு எதிராக இனப்படுகொலைகள் நிகழ்த்தப்படுகிறதோ அவர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களிலிருந்து தான் அவை தொடங்குகின்றன. அதில் ஊடகங்களும் ஒரு பங்கு வகித்த வரலாறு உலகம் முழுவதும் உள்ளன.

ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் நிகழ்த்திய ஹோலோகாஸ்ட் தொடங்கி உலகம் முழுவதும் பல்வேறு இனப்படுகொலைகளில் அந்நாட்டு ஊடகங்களுக்கு மிக முக்கியமான பங்கு இருந்துள்ளது. ருவாண்டாவில் நிகழ்ந்த இனப்படுகொலையில் அந்நாட்டின் ரேடியோ ருவாண்டாவுக்கு முக்கியப் பங்கு இருந்துள்ளது.

’பெண்ணுரிமை என்பது ஆணாதிக்க சிந்தனைக்கு எதிரான போர்’ – பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் கமலா பாசின் மறைந்தார்

தற்போது மியான்மரில் ரோஹிங்யாக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான ஆதாரங்களை ஃபேஸ்புக் நிறுவனம் தர மறுப்பதாக புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஃபேஸ்புக் செயல்படுகிறது என்கிற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

21-ம் நூற்றாண்டில் மிகக் கொடூரமான இனப்படுகொலைக்கு உள்ளாவனர்களில் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்யா முஸ்லிம்களும் அடங்குவர். மியான்மர் இராணுவம் அந்நாட்டின் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்திய இனப்படுகொலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரிலிருந்து வெளியேறிய ரோஹிங்யா அகதிகள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். வங்கதேசத்தில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்யாக்கள் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர்.

‘இராமே ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்’ – : காளை + விவசாயம் + அப்பாவி கிராமம் + ஊழல் அரசியல்வாதிகள் – ஆய்வே இல்லாத ஒரே பார்முலா!  

இராணுவத்தின் ஒடுக்குமுறைகளால் நாட்டைவிட்டு வெளியேறிய ரோஹிங்யாக்களை மீண்டும் அனுமதிக்க மியான்மர் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மியான்மரில் ரோஹிங்யாக்கள் மீது இன அழிப்பு நிகழ்ந்துள்ளதாக ஐ.நாவும் பதிவு செய்துள்ளது இந்நிலையில் மியான்மர் அரசு ரோஹிங்யாக்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்தியுள்ளது என ஆப்பிரிக்க நாடான காம்பியா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் மியான்மரில் ரோஹிங்யாக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்துள்ளது என்றும் அதனை தொடர்ந்து  விசாரிக்கபோவதாகவும் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கிய இடைக்கால தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

மேலும், ரோஹிங்யாக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் அழிக்கப்படாமல் சேகரித்து வைக்கப்பட வேண்டும் எனவும் மியான்மர் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் மியான்மரில் ஃபேஸ்புக் மூலம் ரோஹிங்யாக்கள் மீது வன்மம் கொண்ட வெறுப்பு பிரச்சாரம், போலிச் செய்திகள் தொடர்ந்து பகிரப்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

நின்று கிடைத்த நீதி – கண்ணகி – முருகேசன் வழக்கின் வரலாறும் தீர்ப்பும்

மியான்மர் அரசு அதிகாரிகள், இராணுவ தளபதிகள், இராணுவத்திற்குச் சொந்தமான முகநூல் பக்கங்கள் மூலம் தொடர்ந்து ரோஹிங்யாக்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தவறியதாக ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ரோஹிங்யா இனப்படுகொலையில் ஃபேஸ்புக்கின் பங்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இந்தக் குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் விசாரித்தது.

அந்த விசாரணையில் மியான்மர் இராணுவம் ஃபேஸ்புக் மூலமாக ரோஹிங்யாக்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்துள்ளது நிரூபணமானது. இதனைத் தொடர்ந்து அனைத்து முகநூல் கணக்குகளும் முடக்கப்பட்டு பதிவுகளும் நீக்கப்பட்டன. மியான்மரில் நிகழ்ந்த குற்றங்கள் கொடூரமானது என்றும் அது தொடர்பான போலி செய்திகளைத் தடுப்பதில் தாங்கள் தாமதமாக செயல்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனமே முன்னர் ஒப்புக் கொண்டிருந்தது.

சென்னை உயிர்ச்சூழலின் கடைசி நம்பிக்கை – பள்ளிக்கரணை சதுப்புநிலமும் குடிநீர் பிரச்சினையும்

தற்போது சர்வதேச நீதிமன்றத்தில் மியாம்னருக்கு எதிராக நடத்தப்பட்டு வருகிற வழக்கில் இந்த முகநூல் பதிவுகள் தான் மிக முக்கியமான ஆதாரங்களாக உள்ளன. எனவே விசாரணைக்காக ஃபேஸ்புக் நீக்கிய பதிவுகள், அந்நிறுவனத்தின் விசாரணை அறிக்கை உள்ளிட்ட தரவுகள் வேண்டும் என காம்பியா கோரியுள்ளது. ஆனால் இந்த ஆதாரங்களை வழங்க ஃபேஸ்புக் மறுப்பு தெரிவித்துள்ளது. இனப்படுகொலை செய்தவர்களைக் காப்பாற்ற அவர்களுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில் மியான்மர், ரோஹிங்யாக்கள் தொடர்பாக நீக்கப்பட்ட பதிவுகளின் ஆதாரங்களையும் ஃபேஸ்புக் நடத்திய விசாரணையின் அறிக்கையும் வழங்க வேண்டும் என காம்பியா அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து. இதற்கு ஃபேஸ்புக் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்றது. ’நீக்கப்பட்ட பதிவுகளை வழங்குவது அமெரிக்கச் சட்டங்களுக்கு எதிரானது மற்றும் சிரமமான பணி’ என ஃபேஸ்புக் வாதிட்டது.

சூழலியல் குற்றங்களில் சாதனை புரிந்த தமிழ்நாடு – பூவுலகின் நண்பர்கள்

’புதிதாக எந்தத் தகவல்களையும் நாங்கள் கேட்கவில்லை, ஃபேஸ்புக் ஏற்கனவே நடத்திய விசாரணையின் அறிக்கையையும் ஆதாரங்களையும் மட்டுமே கேட்கிறோம்’ என காம்பியா வாதிட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் காம்பியா கேட்கின்ற அனைத்து ஆதாரங்களையும் வழங்க வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் உள்ள கொலம்பியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. மியான்மருக்கு எதிராக இவை வலுவான ஆதாரமாக விளங்கும் என காம்பியா தெரிவித்துள்ளது.

கட்டுரையாளர்: மோகன், ஊடகவியலாளர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்