Aran Sei

மாநில சுயாட்சி குறித்து சிந்திக்க வேண்டிய காலம்: பிரவீண் ராஜ்

credit:skytrendconsulting.com

ந்தியா மீது கொரோனா தொற்றானது, மருத்துவ நெருக்கடி, பொருளாதாரச் சுருக்கம் என பல முனைகளிலிருந்து தாக்கம் செலுத்தியுள்ளது. இந்த நோய்த் தொற்று காலத்திலும் மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான சச்சரவுகளுக்கு பஞ்சமில்லை.

சரக்கு மற்றும் சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) இழப்பீட்டுத் தொகையை வழங்காதது, மத்திய-மாநில அரசுக்களுக்கிடையில் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஜி.எஸ்.டி அமல் செய்யப்பட்டதினால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பீடுகள் ஈடுகட்டப்படும் என்று உத்தரவாதம் வழங்கப்பட்டது. இந்த இழப்பீடுகள் 5 ஆண்டுகள் வரையில் தொடரும் என்றும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வாக்குறுதியளித்தது.

ஜி.எஸ்.டி அமலாக்கியதினால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருமான இழப்புகளை ஈடுகட்டுவதற்கு கூடுதல் வரி (cess) விதிக்கப்பட்டது. இந்த கூடுதல் வரியிலிருந்து ஈட்டப்பட்ட தொகையைக் கொண்டு மாநிலங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படுகிறது.

ஜிஎஸ்டி இழப்பீடு எப்படி கணக்கிடப்படுகிறது?

மாநிலங்கள் 2015-16-ம் ஆண்டில் ஈட்டிய வருவாய் அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. அதாவது 2015-16-ம் ஆண்டு அடிப்படை ஆண்டு (base year) ஆகும். ஜிஎஸ்டி முறைக்குள் கொண்டு வரப்பட்ட மாநில வரிகள் ஆண்டொன்றுக்கு 14 விழுக்காடு வரையில் வளரும் என்று எடுகோளாக (assumption) எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதை ஒரு எடுத்துக்காட்டைக் கொண்டு புரிந்துகொள்வோம்:

ஒரு மாநிலம் 2015-16-ம் ஆண்டு ரூ.1000 கோடி ஈட்டியது என்று வைத்துக்கொள்வோம், 2016-17-ஆம் ஆண்டில் அதன் வரி வருவாய் ரூ.1000 கோடிX14%= 1140 கோடியாக இருக்க வேண்டும் என்று  கருதப்படுகிறது. ஒருவேளை அம்மாநிலம் 2016-17-ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல் செய்ததினால் 1000 கோடிX10%=1110 கோடி ஈட்டுகிறது என்றால் 1140-1110=30 கோடியை இழப்பீடாக மத்திய அரசு அம்மாநிலத்துக்கு வழங்கும்.

ஜி.எஸ்.டி வரி முறைக்குள் கொண்டு வரப்பட்ட மாநில மறைமுக வரிகள் எப்போதுமே ஆண்டொன்றுக்கு 14 விழுக்காடு அளவுக்கு வளர்ந்தது கிடையாது என்றும் மாநிலங்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவதற்கே இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டது என்று சுதிப்தோ மண்டல் ”Honour Jaitley’s grand bargain on GST compensation for states” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்

நிதியமைச்சகத்தின் பரிந்துரையும் அதை மறுத்தலும்:

கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருமான நெருக்கடியை சமாளிப்பதற்கு இந்த ஆண்டு மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகை வழங்க போவதில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் பேசினார்.

இந்த ஆண்டு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை ரூ 3 லட்சம் கோடி ஆகும். இதில் ஜி.எஸ்.டி. கூடுதல் வரியிலிருந்து ரூ 97,000 கோடி பற்றாக்குறை ஏற்படும். எனவே, மாநிலங்கள் ரூ 3 லட்சம் கோடியை மொத்தமாக கடன் வாங்கிக் கொள்ளலாம் அல்லது ரூ 97,000 கோடியை கடனாக பெற்றுக்கொள்ளலாம நிதியமைச்சர் பரிந்துரை செய்தார்.

இதற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் தெலங்காணா ஆகிய மாநிலங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தன.

சரி இந்த பிரச்சனையில் மத்திய அரசு இழப்பீடு வழங்கமால் கைவிரிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. உண்மையில், அவ்வாறு முடியாது ஏனென்றால், ஜி.எஸ்.டி வரியில் ஏற்படும் பற்றாக்குறையை ஜி.எஸ்.டி இழப்பீடு கூடுதல் வரியைக் கொண்டு ஈடுசெய்ய வேண்டும் என்று ஜி.எஸ்.டி இழப்பீடு சட்டம் 2017, தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

ஜி.எஸ்.டி மன்றத்தின் 7-வது மற்றும் 8-வது கூட்டத்தின் போது, ஜி.எஸ்.டி இழப்பீட்டு வரியிலிருந்து ஈட்டப்படுகிற தொகையாலும் பற்றாக்குறையை அடைக்க முடியாத பட்சத்தில் ஜி.எஸ்.டி மன்றம் சந்தையில் கடன் பெற்று கூட அதை ஈடுகட்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அவ்வாறு வெளியில் கடன் வாங்கி இழப்பீடு வழங்கப்படும் சூழலில் ஜி.எஸ்.டி இழப்பீடு கூடுதல் வரியை 5 ஆண்டுகளுக்கு மேலும் தொடரலாம் என்று ஜி.எஸ்.டி இழப்பீடு சட்டம் உட்பிரிவு 8(1) குறிப்பிடுகிறது.

இந்நிலையில், 20 மாநிலங்கள் ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை கடனாக பெற்று கொள்ளும் முடிவை எடுத்துள்ளன. ஜி.எஸ்.டி மன்றத்தில் நிதி அமைச்சகம் தனது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இது போதுமானது. இந்தத் திட்டத்துக்கு ஆதரவளிக்காத மாநிலங்கள் என்ன செய்ய போகின்றன என்பதை அக்டோபர் 5-ம் தேதி கூடவிருக்கும் கூட்டத்தில் தெரியவரும். மாநிலங்கள் ஜிஎஸ்டி வரிமுறையை ஏற்றுக்கொண்டதினால் ஏற்படும் நிதிப் பிரச்சினைகளை உணர்ந்துகொள்ள தொடங்கியிருக்கின்றன.

மாநில சுயாட்சி பற்றிய கோட்பாட்டு மற்றும் நடைமுறை பிரச்சினைகளைக் குறித்து மீண்டும் சிந்திக்கவும் செயல்படவும் வேண்டிய காலம் இது.

– பிரவீண் ராஜ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்