Aran Sei

இழப்பீடு குளறுபடியில் ஜிஎஸ்டி கவுன்சில் – கூட்டாட்சி தத்துவத்துக்கு பின்னடைவு

ரக்கு மற்றும் சேவை வரி புதிதாக அறிமுகப்படுத்தப்பட போது அதனை “ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி தத்துவத்துக்கான” புதிய மாதிரி என்று அதன் ஆதரவாளர்கள் அழைத்தனர். அதைப் போலவே, ஜிஎஸ்டி கவுன்சில் மீது அத்தகைய பாராட்டு மழை பெருமளவு பொழியப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் என்பது இந்தியர்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தீர்மானிப்பதற்கு பதிலாக, மாநில நிதி அமைச்சர்களையும் ஒன்றிய நிதி அமைச்சரையும் கொண்ட ஒரு அவை தீர்மானிப்பதற்கானது.

“இந்தியாவின் முதல் உண்மையான கூட்டாட்சி தத்துவ நிறுவனம்” என்பதில் தொடங்கி “கூட்டுத்துவ இறையாண்மை” என்பது வரை ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்பட்டது இந்திய ஒன்றியம் தன்னைத் தானே ஒழுங்கமைத்துக் கொள்வதில் ஒரு புதிய சாதனை என்று போற்றப்பட்டது.

இந்த வாதங்கள் எவ்வளவு நம்பத்தகுந்ததாய் இருந்தன என்றால், ஜிஎஸ்டி கவுன்சிலின் மாதிரியைப் பயன்படுத்தி புதிய அமைப்புகளை உருவாக்குவதற்கான ஆலோசனைகள் புதிய வரியான ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே வரத் தொடங்கி விட்டன.

  • 2018-ல் ஒன்றிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜிஎஸ்டி கவுன்சில் போலவே மருத்துவம், கிராமப் புற வளர்ச்சி, விவசாயம் ஆகியவற்றை நிர்வாகம் செய்யவும் கவுன்சில்களை உருவாக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தார்.
  • 2019-ல் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் விவேக் ஓபராய், பொதுச் செலவினங்கள் தொடர்பாக ஒரு கவுன்சிலை உருவாக்க அழைப்பு விடுதாதர்.
  • 2020-ல் ரிசர்வ் வங்கி, நிலம், உழைப்பு, எரிசக்தி ஆகியவற்றை நிர்வாகம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் போன்ற அமைப்புகளை பரிந்துரைத்தது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் நடைமுறை செயல்பாடுகள் இந்த உயர்ந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியிருக்கின்றனவா?

கரடுமுரடான சாலை

ஜூலை 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி இந்தியாவின் சிக்கலான வரி விதிப்பு முறையை எளிமைப்படுத்தியது; அது, பல வகையான ஒன்றிய மற்றும் மாநில வரிகளை ஒரே அமைப்புக்குள் கொண்டு வருகிறது. இந்த புதிய ஆட்சிமுறையை மாநிலங்கள் ஏற்கச் செய்வதற்காக மத்திய அரசு, ஒரு புதிய ஜிஎஸ்டி இழப்பீடு கூடுதல் வரி மூலம் 5 ஆண்டுகளுக்கு வரி வருவாயில் ஏற்படும் பற்றாக்குறையை இழப்பீடு செய்வதாக உறுதி அளித்திருந்தது.

முதல் மூன்று ஆண்டுகளில் ஜிஎஸ்டி கவுன்சிலின் செயல்பாட்டில் பெரும்பகுதி சுமுகமாக இருந்தது. இந்த காலத்தில்தான் மாநிலங்களுக்கு கணிசமான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பதையும், அவை தமது வரி வருவாய் பற்றி கவலைப்பட வேண்டியிருக்கவில்லை என்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். விவாதித்து முடிவெடுப்பதற்கான ஒரு அமைப்பின் உண்மையான சோதனை மோதல்கள் வரும்போதுதான், அதை சமாளிப்பதில் அதன் பங்களிப்பு என்ன என்பதில்தான் இருக்கிறது.

இங்குதான் ஜிஎஸ்டி கவுன்சில் பற்றிய எந்த ஒரு சார்பற்ற மதீப்பிடும் மோசமான முடிவுகளைத் தருகிறது. சென்ற ஆண்டில், இந்தியாவின் மோசமான பொருளாதார செயல்பாட்டின் காரணமாக ஜிஎஸ்டி வருவாய் குறையத் தொடங்கியது. அப்போதுதான் ஜிஎஸ்டி அமைப்பு தீவிரமான சோதனைக்குள்ளாக்கப்பட்டது. 2019 இறுதி வாக்கில் ஜிஎஸ்டி இழப்பீடு தாமதமாகத் தொடங்கியது. மாநிலங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வர வேண்டிய நிதி சரியான நேரத்தில் வந்து சேரவில்லை. மார்ச் வாக்கில், இழப்பீடு வழங்குவதற்கு போதுமான அளவு நிதி இல்லை என்பது தெளிவானது, கூடுதலாக கடன் வாங்குவது பற்றிய திட்டங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கப்பட்டன.

கொரோனா நோய்த்தொற்று உலகைத் தாக்கிய போது இந்திய அரசின் சொதப்பலான எதிர்வினை பொருளாதார ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியாவை ஆக்கியது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), முதல் காலாண்டில் 24% சுருங்கிய போது, மாநிலங்கள் தமக்கு சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்ட இழப்பீட்டுத் தொகை பங்கை பெறாமல் போவது பற்றி, மோடி அரசு முதன் முதலாக பேசத் தொடங்கியது.

இதுவரை பார்த்திராத ஒரு கூட்டாட்சி நெருக்கடி இது. இப்போதுதான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டாட்சி தத்துவத்துக்கான புதிய சாதனை என்று போற்றப்பட்டதற்கு தகுதி படைத்ததாக காட்டிக் கொள்ள வேண்டிய நேரம். துரதிர்ஷ்டவசமாக, கவுன்சில் அப்படி எதையும் செய்யவில்லை.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

செயல்பாட்டில் இல்லை

இந்த இழப்பீட்டு நெருக்கடி பற்றி விவாதித்து, தீர்வுகளை வந்தடைவதற்கான ஒரு மன்றமாக ஜிஎஸ்டி கவுன்சில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, ஒன்றியம் ஜிஎஸ்டி கவுன்சிலை புறக்கணிப்பதை பார்க்க முடிந்தது. உதாரணமாக, இழப்பீட்டு சொதப்பலை தாண்டிச் செல்வதற்கு ஒன்றிய அரசு இரண்டு தேர்வுகளை முன் வைத்தது – இரண்டுமே  இழப்பீட்டு பற்றாக்குறையை சரிக்கட்ட மாநில அரசுகள் கடன் வாங்குவதை உள்ளடக்கியிருந்தன.

இந்த விவகாரத்தில் மிகத் தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என்பது தெளிவாக இருந்தாலும், இந்தப் பிரச்சினை ஒரு போதும் கவுன்சிலின் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. உண்மையில், வாக்கெடுப்பதைத் தடுப்பதற்கு ஒன்றிய அரசு தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்தது.

  • உதாரணமாக, அக்டோபர் 5 அன்று நடந்த 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தேர்வுகள் மீதான வாக்கெடுப்பை தவிர்ப்பதற்கு ஒன்றிய நிதிச் செயலர் கூட்டத்தை அதிரடியாக முடித்து வைக்க முயற்சித்தார் என்று தி டெலிகிராப் செய்தி வெளியிட்டது.
  • அடுத்த கூட்டம் அக்டோபர் 12-ம் தேதி கூட்டப்பட்ட போது, மாநிலங்கள் தீர்வுகள் வேண்டி மீண்டும் வலியுறுத்தினர். ஆனால், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தை அதிரடியாக முடித்து வைத்தார் என்று கூறுகிறார் காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம்.

நெருக்கடி கவிந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒன்றிய அரசு அனாமதேய தகவல்களை ஊடகங்களில் கசிய விட்டது. அதன்படி இழப்பீடு பற்றி வாக்கெடுப்பு நடத்துவது ஜிஎஸ்டி கவுன்சிலின் “அதிகார வரம்புக்கு” அப்பாற்பட்டது, என்றது ஒன்றிய அரசு. இது, அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சொல்லியிருந்ததற்கு நேர் மாறானது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 8-வது கூட்டத்தில் அதன் தலைவர் என்ற முறையில், இழப்பீட்டுத் தொகையில் பற்றாக்குறை ஏற்பட்டால், சந்தையிலிருந்து திரட்டுவது உள்ளிட்ட “கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்டுவதற்கான முறையை ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானிக்கும்” என்று அருண் ஜெட்லி உறுதியளித்திருந்தார்.

ஜிஎஸ்டி கவுன்சில் செயலற்றதாக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் நிலுவையில் இருக்கும் இழப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு சட்டரீதியாக உச்சநீதி மன்றத்தை அணுகப் போவதாக அச்சுறுத்த ஆரம்பித்தன.

இது போன்ற அச்சுறுத்தல்கள் ஒன்றிய அரசை ஓரளவுக்கு வளைந்து கொடுக்கச் செய்தன. சென்ற வியாழக்கிழமை  (அக்டோபர் 15-ம் தேதி) இழப்பீட்டுத் தொகையில் ஒரு பகுதியை கடன் வாங்கி மாநிலங்களுக்குக் கொடுப்பதாக அது ஒத்துக் கொண்டது. இந்த சமரச புள்ளியில் கூட ஜிஎஸ்டி கவுன்சிலின் பங்களிப்பை காண முடியவில்லை. மத்திய அரசு இந்த அறிவிப்பை ஒரு தரப்பாக ஒரு பத்திரிகை செய்தி மூலம் வெளியிட்டது.

இதற்கு எதிர்வினையாக, சில எதிர்க்கட்சி மாநிலங்கள், ஒட்டு மொத்த இழப்பீட்டுத் தொகையையும் கடன் வாங்கித் தர வேண்டும் என்று மீண்டும் கேட்டன. இந்த முறையும் கோரிக்கை பொதுவெளியில் வைக்கப்பட்டது. கூட்டாட்சி பேச்சுவார்த்தைகள் ஜிஎஸ்டி கவுன்சிலில் நடப்பதை விட டுவிட்டரில் அதிகமாக நடப்பது போலத் தோன்றியது.

ஜிஎஸ்டி ஆதரவு பேரணி
ஜூன் 2017ல் மும்பையில் நடந்த ஜிஎஸ்டி ஆதரவு பேரணி

மத்திய அரசுக்கு பக்கச் சார்பு

ஜிஎஸ்டி கவுன்சில் பற்றிய கண்டன விமர்சனங்கள் புதிதல்ல. “ஒத்துழைப்பின் கூட்டாட்சி தத்துவம்” என்ற போர்வையில் தன்னை சந்தைப் படுத்திக் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய அரசுக்கு பெருமளவு அதிகாரத்தைக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்று விமர்சகர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர். ஜிஎஸ்டி கவுன்சிலில் மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பகுதி (33%) ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மறுபக்கம், மற்ற மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சேர்ந்து 66.66% வாக்குகளைக் கொண்டிருக்கின்றன.

கவுன்சிலின் ஒவ்வொரு முடிவையும் நிறைவேற்றுவதற்கு செலுத்தப்படும் வாக்குகளில் நான்கில் மூன்று பங்கு (75%) வாக்குகள் தேவை. இதன் பொருள் என்ன?

  • முதலாவதாக, ஒன்றிய அரசு தனது கொள்கைகளை கவுன்சிலில் நிறைவேற்றுவது மிக எளிதானது. 21 மாநிலங்களின் வாக்குகள் மட்டுமே அதற்கு தேவைப்படும்.
  • இரண்டாவதாக, ஒன்றியம் எதிர்க்கின்ற எந்த ஒரு வாக்கெடுப்பையும் கவுன்சில் நிறைவேற்றுவது சாத்தியமே இல்லை. ஏனென்றால், ஒன்றிய அரசு மட்டுமே 33.33% வாக்குகளை கட்டுப்படுத்துகிறது. அது முடிவை நிராகரிப்பதற்குத் தேவையான 25%-ஐ விட அதிகமாக இருப்பதால் மத்திய அரசுக்கு கவுன்சிலில் ஒரு வீட்டோ அதிகாரம் இருக்கிறது.

இந்த சார்பு நிலையை இன்னும் மோசமாக்கும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் இந்திய அரசின் வருவாய்த் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. வருவாய்த் துறையோ ஒன்றிய நிதி அமைச்சரின் கீழ் வருகிறது. நிதி அமைச்சரோ, ஒன்றிய அரசை ஜிஎஸ்டி கவுன்சிலில் பிரதிநிதித்துவபடுத்துகிறார். இந்த நலன்களின் முரண்பாடு காரணமாக அதன் பரிந்துரைகளுக்கு வரம்புக்குட்பட்ட நம்பகத்தன்மையே உள்ளது என்று முன்னாள் அதிகாரிகளும் அரசு நிதி நிபுணர்களுமான வி பாஸ்கர், விஜய் கேல்கர் ஆகியோர் வாதிடுகின்றனர்.

மிக அடிப்படையாக பார்க்கும் போது ஜிஎஸ்டி கவுன்சில் வரி விதிப்பை, எந்த ஒரு ஜனநாயகத்திற்கும் அடிப்படையாக இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றங்களிலிருந்து எடுத்து, ஒரு குறுகிய அவைக்குள் அடைத்திருக்கிறது. இந்த இழப்பீட்டு கபட நாடகம் காட்டுவது போல, மறைமுக வரி போன்ற ஒரு முக்கியமான பிரச்சனையில் மிக முக்கியமான தகவல்கள் இந்திய மக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன.

சாத்தியமற்ற எதிர்காலம்

அப்படியானால் இந்தியாவின் நிர்வாக பிரச்சனைகளுக்கு பிரமாதமான தீர்வாக ஜிஎஸ்டி கவுன்சிலின் வடிவமைப்பு முன் வைக்கப்பட்டது ஏன்? கவுன்சில் மத்திய அரசுக்கு பெரும் அளவிலான அதிகாரத்தை வழங்குவதால் மத்திய அரசில் உள்ள அரசியல்வாதிகள், அதுவரையில் மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் இருக்கும் பொருட்களை தாம் நிர்வாகிப்பதற்கான வழியாக பார்த்தனர். மாநில தேர்தலில் வெற்றி பெறுவது போன்ற வழக்கமான ஜனநாயக வழிமுறையைத் தாண்டி அதைச் செய்ய முயற்சிக்கின்றனர்.

ஜிஎஸ்டியை நிர்வகிப்பதில் ஜிஎஸ்டி கவுன்சிலின் மோசமான செயல்பாடும் அதனால் தோன்றிய தொடர்புடைய கூட்டாட்சி தகராறுகளை நிர்வகிப்பதிலும் அதன் மோசமான செயல்பாடும், இத்தகைய  அமைப்புகளை மாநிலங்கள் ஏற்றுக் கொள்வதற்கான சாத்தியங்களை குறைத்து விட்டிருக்கின்றன.

– ஷோயப் தனியால்
நன்றி – கட்டுரை & படங்கள் : scroll.in

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்