Aran Sei

” கார்ப்பரேட் வேலையை நேசிக்கக் கூடாது என கூகுள் கற்பித்த பாடம் ” – பெண் பொறியாளர்

image credit :nytimes.com

கூகுளில் வேலை பார்த்த அனுபவத்துக்குப் பிறகு, நான் ஒரு போதும் எனது வேலையை நேசிக்கப் போவதில்லை.

– எமி நீட்ஃபெல்ட் ஒரு மென்பொருள் பொறியாளர். அவர் கூகுளில் 2015 முதல் 2019 வரை வேலை செய்தார்.

நான் ஒரு கூகுள் பொறியாளராக இருந்தேன். அது என்னுடைய வாழ்க்கையை வரையறுக்கும் ஒரு விஷயமாக இருந்தது என்று அடிக்கடி உணர்கிறேன். 2015-ல் என் கல்லூரி படிப்பை முடித்த பிறகு கூகுளில் சேர்ந்த போது, கூகுள், ஃபோர்ப்ஸின் மிகச்சிறந்த பணியிடங்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தது.

நான் கூகுள் கனவில் முழுமையாக ஆட்பட்டு விட்டேன். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது, வீடற்றும், பாதுகாவலர் பராமரிப்பிலும் இருந்திருக்கிறேன். அப்போது புத்தக புழுவாக இருப்பதாக அடிக்கடி ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறேன். ஒரு முன்னணி கார்ப்பரேட் வேலை தரும் அந்தஸ்துக்காகவும் அதனால் கிடைக்கும் பாதுகாப்பு உணவிற்காகவும், என்னைப் போலவே முனைப்பு கொண்ட சக ஊழிர்களுடன் வேலை செய்வதற்கான ஒரு தோழமையான சூழ்நிலைக்காகவும் நான் ஏங்கிக் கொண்டிருந்தேன்.

கூகுளில் நான் எனக்கான ஒரு மாற்று குடும்பத்தை கண்டு கொண்டேன். வார நாட்களில் எல்லா வேளைகளிலும் அலுவலகத்திலேயே சாப்பிட்டேன். கூகுள் மருத்துவரிடம் சிகிச்சை பார்த்துக் கொண்டேன்., கூகுள் உடற்பயிற்சி மையத்தை பயன்படுத்தினேன். நானும் எனது சக ஊழியர்களும் தொழில்முறை பயணங்களில் ஏர்-பிஎன்பி-களில் தங்கிக் கொண்டோம்; ஒரு முக்கியமான மென்பொருள் வெளியீட்டுக்குப் பிறகு ஹவாய் தீவுகளில் ஒன்றான, அழகிய மௌயி தீவுக்குச் சென்று கைப்பந்து விளையாடினோம். வார இறுதி நாட்களைக் கூட ஒன்றாகவே கழித்தோம். ஒருமுறை 170 டாலர் (ஏறத்தாழ 12,000 ரூபாய்) கட்டணம் செலுத்தி, உறைய வைக்கும் மழையில், நீண்ட தூரம் பயணம் செய்து, பணியில் எதிர்கொள்ளும் தடைகளை கையாளுவது குறித்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டோம்.

image credit :nytimes.com
image credit :nytimes.com

எனக்கு இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்பிய தந்தை போலவே எனது மேலாளரை நான் உணர்ந்தேன். அவர் எனது உள்ளார்ந்த திறமைகளில் நம்பிக்கைக் கொண்டிருந்தார். எனது உணர்வுகள் மீது அக்கறை கொண்டிருந்தார். நிறுவனத்தில் அவரது பதவி உயரும் போது நானும் அவருடனே சேர்ந்து வேலை செய்யும் வகையில் பதவி உயர்வு பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன்.. எவ்வளவு கசக்கிப் பிழிவதாக இருந்தாலும், எவ்வளவுதான் கடுமையானதாக இருந்த போதும், ஒவ்வொரு பணிக்கும் அது ஒரு நோக்கத்தைக் கொடுத்தது.

பிற நிறுவனங்களில் வேலை செய்திருந்த சிலர் வேறு எங்கும் இதை விடச் சிறப்பாக இல்லை என்பதை நினைவு படுத்தினார்கள். எனது தினசரி பணிகளை வழிநடத்தும் எனது தொழில்நுட்ப மேற்பார்வையாளர் (எனது மேலாளர் அல்ல) என்னை “அழகி”, “பேரழகி” என்று அழைத்த போதும், அவ்வாறு அழைப்பதை நிறுத்துமாறு நான் அவரிதம் கூறிய பிறகும், நான் அவர்களை நம்பினேன். .(இறுதியில், அவர் ‘என் ராணி’ என்று என்னை அழைப்பதை ஏற்றுக் கொண்டேன்). எங்கள் இருவருக்குமிடையே நடக்கும் பல அலுவல் ரீதியான நேரடி சந்திப்புகளில், அவர் என் நண்பர்களுடன் அவரை இணைத்து விடுமாறு கேட்டுக் கொண்டிருப்பார். பிறகு, தனக்கு “ஒரு பொன்னிற தலைமுடி கொண்ட பெண் வேண்டும். ஒரு உயரமான பொன்னிற தலைமுடி கொண்ட பெண் வேண்டும்” என்றார். அதாவது என்னைப் போல தோற்றம் கொண்ட ஒருவர்.

அவர் நடந்து கொள்வதைப் பற்றி வெளியில் சொல்வது என்பது கூகுளின் தனிச்சிறப்பைப் பற்றி எங்களுக்கு நாங்களே சொல்லிக் கொண்டிருந்த கதையை கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கும். நிறுவனம், சொகுசான சாய்வு படுக்கைகள், மசாஜ் இருக்கைகள், குளியலறைகளில் பட்ஸ்கள், சான்ஃபிரான்சிஸ்கோ நகரின் பே பகுதியின் மோசமான பொது போக்குவரத்துக்கு மாற்றாக வேலைக்கு போய் வர எங்களுக்கென தனி பேருந்து வசதிகள் என எங்கள் ஒவ்வொரு தேவையையும் முன் அனுமானித்து நிறைவேற்றி வைத்தது. அது வெளி உலகமே விரோதமானது என்று தோன்றத் தொடங்கும் அளவுக்கு இருந்தது. கூகுள் எங்களது ஈடன் தோட்டமாக இருந்தது; அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விடுவேன் என்ற பயத்திலேயே நான் வாழ்ந்து வந்தேன்.

நான் எதிர்கொள்ளும் பணியிட பாலியல் துன்புறுத்தல் பற்றி நிறுவனத்துக்கு வெளியில் உள்ளவர்களிடம் பேசிய போது அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை: உலகத்திலேயே மிக கவர்ச்சியான ஒரு வேலையில் நான் இருந்தேன். அது எப்படி மோசமாக இருக்க முடியும்? நான் எனக்குள்ளேயும் இதை கேட்டுக் கொண்டேன். நான் விஷயங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்வதாகவும், நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று யாருக்காவது தெரிந்தால் இந்த தீவிரமான சூழலில் வேலை செய்யும் அளவுக்கு நான் வலுவாக இல்லை என்று நினைக்கக் கூடும் என்று நான் கவலைப்பட்டேன்.

இதனால் ஒரு ஆண்டிற்கும் மேலாக நான் எனது தொழில்நுட்ப மேற்பார்வையாளரின் நடத்தையைப் பற்றி எனது மேலாளரிடம் கூறவில்லை. நடப்பதை பொறுத்துக் கொள்வது, அந்த உலகில் பொருந்தி கொள்வதற்கான விலை என்று தோன்றியது. எனது தொழில்நுட்ப மேற்பார்வையாளர், நான் போற்றிய மேலாளரின் இடத்தில், எனது அதிகாரபூர்வ மேலாளராக ஆகப் போகிறார், என் மீது இன்னும் அதிக அதிகாரத்தை பெறப் போகிறார் என்று தெரிந்த போதுதான், நான் இந்தப் பிரச்சினை குறித்து புகார் செய்தேன். குறைந்தது இன்னும் நான்கு பெண்கள் அவர் தங்களை சங்கடமாக உணர வைத்ததாகக் கூறினர். மேலும், இரண்டு மூத்த பொறியாளர்கள் அவரோடு வேலை செய்ய மாட்டோம் என்று தெளிவுபடுத்தியிருந்தனர்.

மனிதவள அதிகாரியிடம் எனது புகார் சென்றதும் கூகுள் மிகச்சிறந்த பணியிடம் என்ற நிலையிலிருந்து, மற்ற எல்லா நிறுவனங்களையும் போன்ற நிலைக்கு மாறி விட்டது, அதாவது அது தன்னைத்தான் முதலில் பாதுகாத்துக் கொள்ளும். அவர்கள் விரும்பியது போலவே என் வேலையை ஒட்டியே என் வாழ்க்கையை நான் கட்டமைத்திருந்தேன். ஆனால், நான் போற்றி கொண்டிருந்த பணியிடம் என்னை வெறும் ஊழியராக, பலரில் ஒருவராக, எப்போது வேண்டுமானாலும் வெளியில் அனுப்பி விடக் கூடியவராக வைத்திருந்தது என்பதை நான் உணர்ந்ததை அது இன்னும் மோசமாக்கியது.

புகாரை விசாரிக்கும் நடைமுறை ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு நீடித்தது. இதற்கிடையில் நான் என்னை துன்புறுத்தியவருடன் தனியாக அலுவல் ரீதியான சந்திப்புகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு அருகிலேயே உட்கார்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. எனது புகார் மீதான நடவடிக்கை பற்றிய நிலவரத்தை கேட்டு என்னை துன்புறுத்தியவருக்கு அருகிலேயே தொடர்ந்து பணியாற்றுவதில் உள்ள சிரமங்களை கூறிய போது எனது புகாரை விசாரிப்பவர், நான் மனநல ஆலோசகர் உதவியை கோரலாம் அல்லது வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் அல்லது விடுமுறையில் செல்லலாம் என பரிந்துரைத்தார். இனபாகுபாடு, பாலியல் பாகுபாடு குறித்து புகார் கொடுத்த மற்ற ஊழியர்களையும் கூகுள் இதே போலத்தான் நடத்தியது என்று எனக்கு பின்னர் தெரிய வந்தது.

2018-ல் வெளிநடப்புப் போராட்ட அமைப்பாளர்களில் ஒருவரான க்ளேர் ஸ்டாப்லிட்டன் விடுப்பில் போகுமாறு அறிவுறுத்தப்பட்டார். கூகுளின் நெறிமுறை செயற்கை நுண்ணறிவு குழுவின் முன்னணி ஆராய்ச்சியாளரான டிம்னிட் கெப்ரூ வலுக்கட்டாயமாக பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன் மனநல மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

நான் விடுப்பில் போவதை தவிர்த்தேன். எனது சக ஊழியர்கள், நண்பர்கள், ஆதரவு அமைப்பு ஆகியவற்றிலிருந்து விலகி, நாள் முழுவதும் தனியாக இருப்பது எந்த வகையில் உதவும்.? நான் விடுப்பு எடுத்தால், நிறுவனம் எனது புகார் மீதான விசாரணையை தொடராது என்று நான் பயப்பட்டேன்.

இறுதியில் விசாரணையாளர்கள் எனது புகார்களை உறுதி செய்தனர். எனது தொழில்நுட்ப மேற்பார்வையாளர் நடத்தை விதிமுறைகளையும், துன்புறுத்தலுக்கு எதிரான கொள்கையையும் மீறியதாக முடிவு செய்தனர். இருப்பினும் என்னைத் துன்புறுத்தியவர் இன்னும் எனக்கு அடுத்த மேசையில்தான் வேலை செய்தார். அவரை வீட்டிலிருந்தே வேலை செய்ய வைப்பது அல்லது விடுமுறையில் செல்ல வைப்பது என்பதை எல்லாம் செய்யாவிட்டாலும் அவரது மேசையைக் கூட வேறு இடத்துக்கு மனிதவளத் துறை மாற்றவில்லை. என்னை துன்புறுத்தியவர் கடுமையான பின்விளைவுகளை எதிர்கொண்டுள்ளார் என்றும் அது என்னவென்று தெரிந்தால் நான் சற்று ஆறுதல் அடைவேன் என்றும் விசாரணை செய்தவர் என்னிடம் கூறினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை என்றே தோன்றியது.

நான் புகார் தெரிவித்த பிறகான நிகழ்வுகள் என்னை முறித்து விட்டன. தொழில்நுட்பத் துறைக்குள் செல்வதன் மூலம் நான் கடக்க முயற்சி செய்த எனது கடந்த கால துரோகங்களை அது தோண்டி எடுத்தது. எனது மேலாளரிடமும் விசாரணை செய்பவரிடமும் என்னை வெளிப்படுத்திக் கொண்ட பிறகும் அதற்கு பதிலாக எனக்கு பருண்மையாக எதுவும் கிடைக்கவில்லை. வராந்தாக்களிலும் உணவகத்திலும் என்னை துன்புறுத்தியவரை தொடர்ந்து பார்ப்பதால் நான் பதற்றத்திலேயே இருந்தேன். எனது மேசைக்குப் பின்னால் யாராவது வந்தால் எனது அலறல் திறந்த-தள- திட்ட அலுவலகம் முழுவதும் எதிரொலிக்கும் வகையில் நான் மேலும் மேலும் எளிதாக திடுக்கிட்டேன். நான் மோசமான செயல்திறன் மதிப்பாய்வை பெறுவேன் என கவலைப்பட்டேன். அது என் மேல் நோக்கிய பயணத்தை குலைத்து, எனது பணிவாழ்வை இன்னும் பின்னடைவுக்கு உள்ளாக்கி விடும்.

நான் பல வாரங்கள் இரவு முழுவதும் தூங்காமலேயே கழித்தேன்.

மூன்று மாதங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க நான் முடிவு செய்தேன். ஆனால், எல்லோருடைய முன்னேற்றமும் வெளிப்படையாகத் தெரியும், பதவி உயர்வுதான் ஒரு பொறியாளரின் மதிப்பையும் திறமையையும் அளவிடுகிறது என்று பார்க்கப்படும் ஒரு இடத்தில், விடுப்பில் செல்வது எனது பதவி உயர்வை பின்னடைவுக்கு உள்ளாக்கும் என்று நான் கவலைப்பட்டேன். பெரும்பாலான எனது சக ஊழியர்களைப் போலவே நான் எனது வாழ்வை நிறுவனத்தைச் சுற்றியே அமைத்துக் கொண்டு விட்டேன். அது மிக எளிதாக பிடுங்கப்பட முடியும். நான் உடற்பயிற்சி நிலைத்துக்குச் சென்ற, எனது ஒட்டு மொத்த சமூக வாழ்வும் இருந்த அலுவலகத்துக்குள் விடுப்பில் இருப்பவர்கள், வரக் கூடாது.

நல்வாய்ப்பாக, நான் விடுப்பிலிருந்து திரும்பி போது எனது வேலை இன்னும் இருந்தது. எதுவாக இருந்தாலும், கடந்த காலத்தில் இழந்ததை ஈடு செய்யும் வகையில், சிறப்பாகப் பணியாற்ற நான் முன்னெப்போதையும் விட ஆர்வமாக இருந்தேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஒரு உயர்ந்த செயல்திறன் தர மதிப்பீட்டை என்னால் பெற முடிந்தது. ஆனால் பதவி உயர்வுக்கான பட்டியலில் நான் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. விடுப்பு முடிந்து நான் திரும்பிய பின் நான் மிகவும் நேசித்த மேலாளர் என்னை பலவீனமானவளாக நடத்த ஆரம்பித்தார். நான் அளவுக்கு அதிகமாக காஃபின் குடிப்பதாகவும், போதுமான அளவு தூங்கவில்லை என்றும், மேலும் கூடுதல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லி அவர் என்னை பகுப்பாய்வு செய்ய முற்பட்டார்,

புகார் தெரிவித்தது நான் மிகவும் மதித்த உறவுகளில் ஒன்றை சரி செய்ய முடியாத அளவுக்கு சிதைத்து விட்டது. நான் வேலைக்குத் திரும்பிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, எனது பதவி உயர்வு பற்றி நான் அவரிடம் கேட்ட போது அவர் “மரவீட்டில் வாழ்பவர்கள் தீக்குச்சியை பற்ற வைக்கக் கூடாது” என்று கூறினார்.

எனக்கு பதவி உயர்வு கிடைக்காததால் எனது பங்கு மானியங்கள் காலாவதியாகி போயின. (கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பணி நியமன அடிப்படையில் நிறுவனத்தின் பங்குகளை குறிப்பிட்ட பணிக் காலத்திற்குத் தரும். இடையில் பணியை இழந்து விட்டால் அந்த பங்குகள் தரப்படாது) இதன் விளைவாக எனது ஊதியம் குறைந்தது. இருப்பினும் நான் கூகுளில் தொடரவே விரும்பினேன். இவை எல்லாவற்றிற்கும் பிறகும் கூகுள்தான் உலகிலேயே தலைசிறந்த நிறுவனம் என நான் நம்பினேன்.

எனது முடிவெடுக்கும் திறன் குழப்பமாக இருந்திருக்கிறது என்பது இப்போது எனக்கு புரிகிறது. ஆனால் பல ஆண்டுகளாக எனது பணியிடத்தை மிக உயர்வாக உருவகித்தபின், அதற்கு வெளியில் ஒரு வாழ்க்கையை என்னால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.

நான் நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்று வேறு இரண்டு சிறந்த நிறுவனங்களில் பணி நியமன ஆணைகளை பெற்றேன். கூகுள் அதற்கு ஈடான ஊதியத்தைத் தர முன்வரும் என நம்பினேன். கூகுள் ஏற்கனவே நான் வாங்கிக் கொண்டிருந்ததை விட சற்று அதிகமாக ஊதியத்தை உயர்த்தியது. ஆனால் அது போட்டி நிறுவனங்கள் தர முன்வந்ததை விட குறிப்பிடத்தக்க அளவு குறைவாகவே இருந்தது. நான் எந்த அளவு நிறுவனத்திற்கு மதிப்புடையவள் என்பதை கூகுளின் நிதித் துறை கணக்கிட்டது என்று எனக்கு சொல்லப்பட்டது. இந்த கணக்கீட்டில் நான் பதிவு செய்த புகாரும், அதன் விளைவாக நான் எடுத்த விடுப்பு காலமும் அடங்கும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

வெளியேறுவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை என உணர்ந்தேன். இம்முறை ஒரேயடியாக. கூகுள் தர முன்வந்த சொற்ப ஊதிய உயர்வுதான், இந்த வேலை ஒரு வேலை மட்டுமே என்பதற்கும், வேறு எங்காவது சென்றால் நான் இன்னும் அதிகமாக மதிக்கப்படுவேன் என்பதற்கும் ஆன இறுதி சான்றாக இருந்தது.

நான் வேலையை விட்ட பிறகு, இனிமேல் ஒரு போதும் வேலையை நேசிக்கப் போவதில்லை என்று எனக்கு நானே உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். அதிலும் கூகுளை நான் நேசித்து போல ஒரு போதும் கூடாது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் மிக அடிப்படைத் தேவைகளான உணவையும் உடல்நலத்தையும் வழங்குவதன் மூலம் தூண்ட முயற்சிக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு கூடாது. எந்த ஒரு பொதுப் பங்கு நிறுவனமும் ஒரு குடும்பம் இல்லை. அப்படி இருக்க முடியும் என்ற கனவில் நான் வீழ்ந்திருந்தேன்.

எனவே எந்த ஒரு உணர்ச்சி ரீதியான பிணைப்பும் இல்லாமல் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். நான் எனது சக ஊழியர்களை விரும்புகிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களை ஒரு போதும் சந்திப்பதில்லை. எனக்கான மருத்துவரை நான் தேடிக் கொண்டேன். எனது உணவை நானே சமைத்துக் கொள்கிறேன். எனது மேலாளருக்கு வயது 26. பெற்றோரின் அரவணைப்பை எதிர்பார்க்க முடியாத அளவு அவர் என்னை விட மிகவும் இளையவர்.

புதிய வேலை எப்படி இருக்கிறது என்று பிறர் என்னிடம் கேட்கும் போது, அது ஒரு வேலை மட்டுமே என்று நான் அதை ஒதுக்கித் தள்ளி விடுகிறேன்.

nytimes .com தளத்தில் எமி நீட்ஃபெல்ட் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்