1805 ல் ஜாம்ஷெட்ஜி ஜெஜீபாய் தனது 22 வது வயதில் சீனாவுக்கு தனது நான்காவது பயணத்தில் இருந்தார். அவரது 16 வது வயதில் தனது பெற்றோரை இழந்த அவர், தனது சிறிய திறமையால் மும்பையில் இருந்த தனது பரந்த குடும்பத்தினருக்காக வேலை செய்து வந்தார். இதற்கு முந்தைய சீனப் பயணங்கள் அவரது வாழ்வில் எந்த ஒரு முக்கிய நிகழ்வையும் ஏற்படுத்தா விட்டாலும் இந்தப் பயணம் அவரது வாழ்க்கையை முழுவதுமாக மாற்றப் போகிறது. 1805, ஜூலை 11 ம் தேதி அவரது 22 வது பிறந்தநாளுக்கு நான்கு நாட்கள் முன்பு, ஜெஜீபாய் தொடுவானத்தில் ஒரு பிரான்சு கப்பல் கண்ணுக்குத் தெரிந்த செய்தி அறிந்த போது, பிரன்ஸ்விக் என்ற கப்பலில் ஏறினார். நெப்போலியப் போர்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் இந்தியப் பெருங்கடலில் உலவிக் கொண்டிருந்த பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர்களின் கப்பல்களைக் தாக்கிக் கொண்டிருந்தனர். ப்ரன்ஸ்விக் மும்பையில் நிறுத்தப்பட்டிருந்தபோது, அதைப் பழுது பாராக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பிரஞ்சு போர் கைதிகளைக் கொண்டு அந்தப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சிறைக் கைதிகள் பின்னர் ஆங்கிலேய சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக பரிமாற்றம் செய்து கொள்ள படகில், சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். பிரான்சுக்கு செல்லும் வழியில், சிறைக் கைதிகளை ஏற்றிச் சென்ற அந்தக் கப்பல், மிகப் பெரிய பிரெஞ்சு கப்பலான மாரெங்கோவில் வந்த பிரெஞ்சு அட்மிரல் சார்லஸ் அலெக்சாண்டர் லியோன் டுராண்ட் என்பவரால் இடைமறிக்கப்பட்டது. டுரான்ட் சிறைக் கைதிகளிடமிருந்து பிரன்ஸ்விக் எதற்காக அனுப்பப்பட்டது என்பதை அறிந்துக் கொண்டார். அவர் மிக விரைவாக ஒரு திட்டத்தை வகுத்தார்.
தென் இலங்கையின் காலே முனையிலிருந்து டுரான்ட் பிரன்ஸ்விக்கை பதுங்கி இருந்து தாக்கியபோது அந்தக் கப்பல் தலைவருக்கு வேறு வழி இல்லாமல் போய்விட்டது. மாரெங்கோ 74 துப்பாக்கிகளைக் கொண்டிருந்தது. ஆனால் அடிப்படையில் பிரன்ஸ்விக் ஒரு வணிகக் கப்பல். கிரான்ட் ஒருமுறை துப்பாக்கியால் சுட்டார். ஆனால் அவரது மனம் அதில் இல்லை. விரைவில் அவர் தனது கப்பலில் பறந்து கொண்டிருந்த ஆங்கிலக் கொடியை இறக்கி விட்டுச் சரணடைந்தார். லினாய்ஸ் என்றழைக்கப்பட்ட டுராண்ட் அந்தக் கப்பலில் ஏறி அதிலிருந்த பெரும்பாலான அதிகாரிகளைக் கைது செய்து மாரெங்கோவில் ஏற்றினார். பிரன்ஸ்விக்கை ஒரு புதிய பிரெஞ்சு கப்பல் ஊழியர்களை வைத்து, இயக்கச் செய்து, இரண்டு கப்பல்களையும் நன்னம்பிக்கை முனையே நோக்கிச் செலுத்தினார். சீனாவுக்குச் செல்ல வேண்டிய பிரன்ஸ்விக் புவியில் அதற்கு நேர் எதிர் திசையில் உள்ள தென் ஆப்ரிக்காவிற்குச் செல்வது ஜெஜீபாயையும், பிற பயணிகளையும், கப்பல் ஊழியர்களையும் கலவரப்படுத்தி இருக்க வேண்டும்.
இந்தச் சோகம் நிகழும் முன், ஜெஜீபாய் கப்பலில் இருந்த ஸ்காட்லாந்து மருத்துவ உதவியாளரான 21 வயதான ஜார்டின் என்ற மற்றொரு இளைஞருடன் நட்புக் கொண்டார். அவர் அந்தக் கடைசி இரண்டு ஆண்டுளாக அந்தக் கப்பலில் இருந்தவர். தற்போது பிணைக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளது அந்த இருவரையும் மேலும் நெருக்கமாக்கிவிட்டது. அவர்கள் செப்டம்பரில் தென் ஆப்பிரிக்காவை அடைந்த போது தங்கள் நட்பின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தனர். பின்னர் அந்த நட்பு வாழ்நாள் முழுவதும் நீடித்து உலகின் முகத்தையே மாற்றிவிட்டது.
வில்லியம் ஜார்டின் 1832 ல், 19 ம் நூற்றாண்டின் மிக முக்கிய வணிக நிறுவனத்தின் எதிர்கால கூட்டாளியான ஜேம்ஸ் மேத்சனை கண்டார். மேத்சன் ஒரு வணிக நிறுவனத்தின் பயிற்சியாளராக இந்தியாவிற்கு வந்த மற்றொரு ஸ்காட்லாந்துக்காரர் . அவர்கள் இருவரும் கான்டனில் சந்தித்து இறுதியில் வணிக நிறுவனமான ஜார்டின் அண்டு மேத்சன் நிறுவனத்தை உருவாக்கினர். ஏறக்குறைய 30 ஆண்டுகள் அவர்கள் மற்ற அபின் கடத்தல்காரர்களை விட மிக முக்கிய அபின் கடத்தல்காரர்களாக மாறி அபின் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். 1834 ல் அவர்கள் ஏறத்தாழ ஒட்டு மொத்த அபின் வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கைப்பற்றினர். இந்தப் பங்கு உயர்ந்துக் கொண்டே சென்று 1860 களில் உச்சத்தை அடைந்தது. தங்களது இலாபத்தால், சீனாவில் ஆங்கில ஆட்சியின் விரிவாக்கத்திற்கு ஒரு உந்துசக்தியாக மாறத் தொடங்கினர். மேத்சனைப் பொறுத்த வரை சீனர்கள்,” வியக்கத் தக்க அளவு முட்டாள்தனம், வெறி, அகந்தை மற்றும் பிடிவாதம் ஆகிய பண்புகளைக் கொண்ட மக்கள்.” கடத்தலை ‘சுதந்திர வர்த்தகம்’ என ஊதிப்பெருக்கிக் காட்டிய செய்தித்தாள்களுக்கு அவர்கள் நிதியளித்தனர். அத்துடன் இங்கிலாந்து சீனாவுக்கு எதிராக போரில் ஈடுபடுமாறு கூவினர். ஜார்டின் தங்களுக்கு குயிங் அரசாங்கத்துடன் உள்ள அனுபவத்தைப் பயன்படுத்தி, வெளியுறவு அமைச்சர் பால்மர்ஸ்டனுக்கு தீவிரமாக ஆலோசனைகள் வழங்கி, முதல் அபின் போரில் தாக்குதலுக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். போருக்குப்பின் அபின் சட்டபூர்வமாக்கப்படவில்லை என்ற உண்மையை அவர்கள் கொண்டாடினர். ஏனெனில் அது அவர்களுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுத்தது. அது ஜார்டின் கூறியது போல ” சிறிய மூலதன மனிதர்கள்” என்பதை வைத்துக் கொண்டது.
மார்டின் அண்டு மேத்சன் அபின் கிளிப்பர்களுக்கு முன்னோடியாக இருந்தனர். பாரம்பரியமான சீன வர்த்தகம் பருவ காலத்தின் கடைக்கண் பார்வையில்தான் இருந்தது. வடகிழக்கு பருவமழை மலாக்கா நீரிணைப்பு வழியாக வரும் பாதையின் ஒவ்வொரு அங்குலத்தையும் காற்றினாலும், மழையினாலும் தடுத்தது. இந்தியர்களால் சீன வர்த்தகத்திற்காக பாரம்பரியமாக சூரத், மும்பை மற்றும் கல்கத்தாவில் கட்டப்பட்ட கப்பல்கள் மிகப் பெரியதாகவும் டன் கணக்கில் சரக்குகளைக் கொண்டு செல்லும் வகையில் இருந்தன. பருவகாலத்தில் பயணத்தைத் துவங்கி ஒரு முறை சென்றுவர இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டன. அபின் கிளிப்பர்கள் ‘ ஒப்பீட்டளவில் குறைந்த அளவு சரக்குகளுக்கான இடத்தையும், அகலக் குறைவானதாக, நெறிப்படுத்தப்பட்ட முகப்பு மற்றும் கப்பலை கவிழ்த்து விடாமல் ஓட்டிச் செல்லும் பாய்மரங்களையும் (கேன்வாஸ்களையும்) கொண்ட புதிய வகை கப்பல்களாகும். அபின் வர்த்தகத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்தக் கிளிப்பர்கள் மூலம் பருவமழைக்கு எதிராக கான்டனுக்கு அளவு குறைவாக இருந்தாலும் அதிக மதிப்புள்ள சரக்குகளை எடுத்துச் செல்ல முடியும். ஹௌராவில் கட்டப்பட்ட அத்தகைய முதல் கிளிப்பருக்கு ” ரெட் ரோவர்” எனப் பெயரிடப்பட்டது. இது ஜார்டின் அண்டு மேத்சனுக்கு பகுதி அளவு சொந்தமானது. அது அந்த சமயத்தில் இருந்த எல்லா கப்பல்களின் வேக சாதனைகளையும் முறியடித்தது. கல்கத்தாவிலிருந்து லின்டின் செல்லும் அனைத்துக் கப்பல்களையும் முந்திக் கொண்டுச் சென்றது.
அவர்கள் இருவரும் கற்பனைக்கெட்டாத அளவு செல்வந்தர்களாகினர். புதின எழுத்தாளரும் அரசியல்வாதியுமான பெஞ்சமின் டிஸ்ரேலி ஜார்டினை ஒரு புத்தகத்தில் ,” குரோயிசசை(செல்வ கொழிப்பிற்கு பெயர் பெற்ற பண்டைய லிடியா நாட்டின் அரசன்) விட பணக்காரரான திரு ட்ரகி, கான்டனிலிருந்து புதிதாக வந்தவர். அபினால் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தை தனது ஒவ்வொரு சட்டைப்பையிலும் வைத்திருப்பவர்,” என்று மேற்கோள் காட்டுகிறார். இங்கிலாந்துக்கு அருகில் உள்ள லூயிஸ் தீவையே வாங்கும் அளவு மிகப்பெரிய பணக்காரராக ஜேம்ஸ் மேன்சன் மாறினார். ஒரு சமயத்தில், இங்கிலாந்தில் இரண்டாவது மிக்கப் பெரிய நில உடைமையாளராகவும், 5,00,000 டாலரில் தனது தீவில் கோடை வாழிடமாக ஒரு கோட்டையையும் கட்டினார். இன்று அந்த நிறுவனத்தின் வழிவந்த ஜார்டின் மேன்சன் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய் ஏறத்தாழ 2,90,000 கோடி ரூபாய்கள் ஆகும். இன்று உலகத்தின் மிகவும் மதிப்புமிக்க பொது வணிக நிறுவனமாகவும் அது உள்ளது.
ஜெஜிபாயும் கூட கண்மூடித்தனமாக வளர்ந்த பணக்காரராகிவிட்டார். 40 கோடி மதிப்பிடத்தக்க சொத்துக்களுடன் தனது வணித்திலிருந்து ஓய்வு பெற்ற அவர், இங்கிலாந்து அரசின் பாம்பேவின் முதல் இளங்கோமகன் பட்டத்தைப் பெற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இந்த அளவு சொத்து மிக எளிதாக வந்து விடவில்லை. இதற்கு சக்தியைக் கொடுக்க ஒரு இயந்திரமும், அதனை அடைய ஒரு அமைப்பு முறையும் தேவை. அந்த இயந்திரம் அபின். அமைப்பு, ஒரு பேரரசு உருவாக முட்டுக் கொடுத்த, உலகளாவிய போதை மருந்துகளைப் கடத்திய நடவடிக்கை.
www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்
எழுதியவர்: தாமஸ் மனுவேல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.